மதுரை விமான நிலைய விரிவாக்கத்துக்காக நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, சின்னஉடைப்பு கிராம மக்கள், பெட்ரோல் கேனுடன் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மீது ஏறி நின்று ஞாயிற்றுக்கிழமை அன்று (நவம்பர் 17) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை விமான நிலைய விரிவாக்கத்துக்காக விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து 633.17 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் மதுரை மாவட்டம் பெருங்குடியை அடுத்த சின்னஉடைப்பு கிராமத்தில் வாழும் 146 பேரின் நிலங்களும் அடங்கும். குறிப்பாக, சுமார் 300 ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்கள், வீடுகள், மயானம் உள்ளிட்டவை கையகப்படுத்தப்பட உள்ளன.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சின்ன உடைப்பு கிராம மக்கள் தங்களுக்கு மாநகராட்சி எல்லைக்குள் அடிப்படை வசதிகளுடன் 3 சென்ட் நிலத்தை வழங்க வேண்டும், வீடு கட்டித் தர வேண்டும், கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, கடந்த நான்கு நாள்களாகக் கிராமத்தின் நுழைவுவாயில் பகுதியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். ஆனால், மாவட்ட நிர்வாகமானது வீடு எல்லாம் கட்டித்தர முடியாது, பணத்தை வாங்கிக் கொள்ளுங்கள் என்று திமிருத்தனமாக தெரிவித்து வந்தது.
இந்நிலையில், நேற்று (நவம்பர் 17) வீடுகளை இடிப்பதற்கும் நிலங்களைக் கையகப்படுத்துவதற்கும் மக்களின் போராட்டத்தை ஒடுக்குவதற்கு 1,000 போலீஸ், புல்டோசர் உள்ளிட்டவற்றுடன் வருவாய்த்துறை அதிகாரிகள் சின்ன உடைப்பு கிராமத்திற்கு வந்துள்ளனர். நிலம் கையகப்படுத்தும் அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தங்களது கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மூன்று பெண்கள் உட்பட கிராம மக்கள் ஏழு பேர் பெட்ரோல் கேனுடன் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மீது ஏறி நின்று போராட்டம் நடத்தினர்.
போராட்டத்தின்போது விரகனுர் ரிங் ரோட்டில் உள்ள இமானுவேல் சிலை முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களில் சிலர் மயக்கம் அடைந்தனர். அதனைப் பயன்படுத்திக் கொண்ட வருவாய்த்துறை அதிகாரிகள் மக்களுக்குப் பணம் கொடுக்க முனைந்துள்ளனர். ஆனால், மக்கள் “எங்களுக்கு பணம் எல்லாம் வேண்டாம், எங்களுக்கு நிலம் கொடுத்தால் போதும்” என்று தெரிவித்துள்ளனர்.
படிக்க: பரந்தூர் விமான நிலையம் கார்ப்பரேட் சேவையில் தீவிரம் காட்டும் திமுக அரசு!
ஆனால் ஒரு கட்டத்தில் அதிகாரிகள் தங்களின் போராட்டத்தையும் மீறி வீடுகளை இடித்து விடுவார்கள் என்ற அச்சத்தில் தங்களுக்கு ஆறு நாட்கள் அவகாசம் வேண்டும் என்று மக்கள் கேட்டுக்கொண்டனர். இதனையடுத்து, வருவாய்த்துறை அதிகாரிகள் வருகிற 23-ஆம் தேதி வரை வீட்டை காலி செய்வதற்கு அவகாசம் கொடுத்தனர். ஆனாலும், மக்கள் தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
உண்மையில், வளர்ச்சி திட்டங்கள் என்ற பெயரில், மக்களுக்கு போதிய மாற்று ஏற்பாடுகளைச் செய்து தராமல் அவர்களை அடித்து விரட்டிவிட்டு நிலங்களைக் கையகப்படுத்துவது தொடர்கதையாகி வருகிறது. நெய்வேலி நிலக்கரி நிறுவனமானது மூன்றாம் நிலக்கரி சுரங்க விரிவாக்கத்திற்காக நிலங்களையும் வீடுகளையும் விவசாய நிலங்களையும் வழங்கிய மக்களுக்கு வீடும் கட்டித்தராமல் போதிய இழப்பீட்டையும் தராமல் மக்களைக் கையறு நிலைக்குத் தள்ளியது. தி.மு.க. அரசும் உரிய பணத்தைப் பெற்றுத்தர எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
அதேபோல், சாலை விரிவாக்கம், மெட்ரோ ரயில் திட்டம் போன்றவற்றிற்காக உழைக்கும் மக்களின் வீடுகளை இடிக்கும் அரசு, அம்மக்களின் வாழ்வாதாரத்திற்காக மாற்று ஏற்பாடுகளைச் செய்து கொடுப்பதில்லை; சில நேரங்களில் சொற்ப பணத்தைக் கொடுத்து மக்களின் எதிர்ப்பை அடக்கி விடுகிறது. இவற்றையெல்லாம் உணர்ந்தே மக்கள் தங்களுக்குப் பணம் எல்லாம் வேண்டாம் நிலமும் வீடும் வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துப் போராடி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் நடப்பது மக்களுக்கான ஆட்சி என்று பெருமை பேசிக்கொள்ளும் தி.மு.க. அரசு, பரந்தூர் விமான நிலையத்திற்காக கிராம மக்களின் நிலங்களை அபகரிப்பது தொடங்கி தற்போது மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்காக மக்களின் வீடுகளை இடிப்பது என தொடர்ந்து மக்கள் விரோதத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது.
இன்குலாப்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram