ஸ்ரேல் இராணுவம் பாலஸ்தீன மக்களைக் கொன்று குவித்துக் கொண்டிருக்கிறது. மக்கள் தங்கள் உயிர்களைக் காப்பாற்றிக் கொள்ள தொடர்ந்து இடம் பெயர்ந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இனப்படுகொலையினால் பாதிக்கப்பட்டுள்ள காசாவில் குளிர்காலம் நெருங்கி வந்து கொண்டிருக்கிறது. இதனால் போதிய தங்குமிடம் இல்லாத பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ஆபத்தை எதிர்நோக்கி நோக்கி உள்ளதாக, பேரிடர் காலங்களில் மீட்புப் பணியில் ஈடுபடும் தனியார் நிறுவனமான நார்வேஜியன் ரெஃயூஜு கவுன்சில் (Norwegian Refugee Council- NRC) தெரிவித்துள்ளது.

இஸ்ரேலின் ஓராண்டுக்கும் மேலான இனவெறி தாக்குதலால் காசாவில் உள்ள மக்களின் வீடுகள் அழிக்கப்பட்டு ஆங்காங்கே சிறிய கட்டிடங்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் மக்கள் கூடாரங்களிலும் தற்காலிக தங்குமிடங்களிலும் வாழ்ந்து வருகின்றனர். பலர் அரிசி சாக்குகளை ஒன்றாகத் தைத்து கூடாரம் போல் அமைத்து தங்குமிடம் உருவாக்கிக் கொள்கின்றனர் என NRC-ன் தங்குமிட நிபுணர் அலிசன் எலி (Alison Ely) தெரிவித்துள்ளார்.

கோடைக் காலத்தை விட குளிர்காலத்தில் காசாவின் வெப்பநிலை 6 டிகிரி செல்சியஸ் வரை குறையும் என்பதால், ஏற்கெனவே போரினால் உடல் ரீதியாக பல்வேறு நோய்களை எதிர்கொண்டுள்ள மக்களுக்கு, அதிலும் முக்கியமாகச் சுவாச தொற்று நோய் உள்ளவர்களுக்கு, மேலும் அதிக பாதிப்புகள் ஏற்படுவதுடன், தொற்று நோய்கள் ஏற்படும் அபாயமும் உள்ளது.

மேலும் மக்கள், மரம் மற்றும் எரிபொருட்களை உணவுகள் சமைப்பதற்கும் குளிரிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்வதற்கும் பயன்படுத்துகின்றனர். சில குடும்பங்கள் குளிரைச் சமாளிப்பதற்கான பொருட்கள் ஏதும் இல்லாததால் பிளாஸ்டிக் போன்ற பொருட்களைப் பயன்படுத்துகின்றனர். இதனால் சுகாதாரம் தொடர்பான அபாயங்களும் ஏற்படும் நிலையில் பாலஸ்தீன மக்களின் வாழ்நிலை உள்ளதாக NRC தெரிவித்துள்ளது.

மேலும் இந்நிறுவனம் கடந்தாண்டு போர் தொடங்கியது முதல் 1,20,000-க்கும் மேற்பட்ட மக்களுக்குத் தங்குமிடம், போர்வைகள், மெத்தைகள் மற்றும் சமையலறைப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களைக் கொடுத்து உதவியுள்ளதாகக் கூறுகிறது.

இருப்பினும் உதவிகளை விடத் தேவைகள் அதிகமாக இருப்பதால் லட்சக்கணக்கான மக்கள் கடுமையான குளிர்காலத்தை எதிர்கொள்வதற்கு அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாமல் இருக்கின்றனர்.


படிக்க: அக்டோபர் 7 – காசா மீதான இனப்படுகொலை | இஸ்ரேலையும் ஏகாதிபத்தியங்களையும் முடக்குவோம்! தோழர் ரவி


அவர்களில் ஒருவரான 19 வயது நாகம் என்ற இளம்பெண், “தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலினால் மற்ற மாணவர்களைப் போல தானும் பள்ளிப்படிப்பை இடையிலே நிறுத்திவிட்டு குண்டுவெடிப்பு தாக்குதலிலிருந்து தப்பிப்பதற்கு ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்ந்து கொண்டே இருக்கிறேன். சில நேரங்களில் வெளியில் தூங்குகிறேன்” என்று கூறியுள்ளார்.

மேலும் “இதை ஒரு வாழ்க்கை என்றே கூற முடியாது. நாங்கள் உணவுக்காகவும் தண்ணீருக்காகவும் தினமும் போராடிக் கொண்டிருக்கிறோம். எங்களிடம் மெத்தைகள் இல்லை, பாயில் தூங்குகிறோம். இரவு நேரங்களில் குளிரினை எதிர்கொள்வதற்கு எங்களிடம் போர்வைகள் இல்லை” என்று தன்னுடைய இன்னல்களைத் தெரிவித்துள்ளார்.

குளிர்காலத்தினால் லட்சக்கணக்கான மக்கள் உணவு, கம்பளி இல்லாமலும், தங்குவதற்கும், குண்டு வெடிப்புகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கும் வீடுகள் இல்லாமலும் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டு வாழ்வதற்கே போராடிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையிலும் இனவெறி இஸ்ரேலானது தன்னுடைய இன அழிப்புப் போரை நிறுத்தாமல் 44,000-க்கும் மேற்பட்டோரைப் படுகொலை செய்துள்ளது.

கடந்த வாரம் சர்வதேச நீதிமன்றமானது (International Criminal Court) காசா மக்களைப் படுகொலை செய்த குற்றத்திற்காக பாசிஸ்ட் நெதன்யாகுவிற்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது. இதனையடுத்து நெதன்யாகு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “நெதன்யாகு எந்த அழுத்தத்திற்கும் அடிபணியமாட்டார். ஹமாஸ் ஆயுதக்குழுவை முழுவதுமாக அழிக்கும் வரை பின்வாங்க மாட்டார்” என்று தெரிவித்துள்ளது.

சர்வதேச நீதிமன்றத்தின் பிடிவாரண்டும், சர்வதேச சட்டங்களும் பாசிஸ்ட் நெதன்யாகுவை கைது செய்யவோ, காசா மீதான இன அழிப்புப் போரையோ தடுக்கப் போவதில்லை. இனவெறி இஸ்ரேலுக்கு எதிராக தேசம் கடந்த போராட்டங்கள் முன்னெடுக்கப் பட வேண்டும். அதுதான் பாசிஸ்ட் நெதன்யாகுவை அடிபணிய வைக்கும். அதன்மூலமே காசா மக்களின் மீதான இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்தவும் முடியும்.


இன்குலாப்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க