ஐயம் சாரி ஐயப்பா… ஆறு வருசமாச்சப்பா!

பாலிமர், தந்தி போன்ற ‘கோடி’ மீடியாக்கள், கிறிஸ்தவ நிறுவனங்களின் மேடையில் நின்று கொண்டு இந்த ஐயப்ப பாடலை பாடுவது போலச் சித்தரித்து வீடியோ வெளியிடுவது அப்பட்டமான அயோக்கியத்தனமாகும்.

கோயில்கள் தான் தீண்டாமையைக் கடைப்பிடிக்கக் கூடிய மையங்களாக இன்றும் உள்ளன. யார் எங்கு நின்று வழிபட வேண்டும், கோபுர தரிசனம் யாருக்கானது, கருவறை நுழைவு யாருக்கானது என்பதெல்லாம் அவரவர் சாதியைப் பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது.

இந்தத் தீண்டாமை பாகுபாடுகளை எதிர்த்துத்தான் ஆலய நுழைவுப் போராட்டம் முதல் கருவறை நுழைவுப் போராட்டம்  வரை பல்வேறு வீரியமான போராட்டங்கள் கடந்த காலங்களில் முற்போக்காளர்களால் முன்னெடுக்கப்பட்டன. அந்த வகையில், சபரிமலை கோயிலில் கடைப்பிடிக்கப்படும்  பெண்கள் மீதான பாலின தீண்டாமையை எதிர்த்து கேரளப் பெண்களே பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளனர்.

உச்ச நீதிமன்றமும், ‘இது வெறும் மத சார்ந்த விவகாரம் அல்ல; மதத்தின் பெயரால் பெண்களின் மீதான தீண்டாமையை அனுமதிக்க முடியாது’ என்று கூறி, சபரிமலையில் பெண்கள் வழிபடத் தடை இல்லை என தீர்ப்பும் வழங்கியுள்ளது. ஆனால், இந்துமத விவகாரத்தில் நீதிமன்றங்கள் தலையிடக்கூடாது எனக்கூறி இந்துத்துவ சக்திகள் உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை இதுவரை நடைமுறைப்படுத்தவிடாமல்  தடுத்து  வருகின்றனர்.

நீலம் பண்பாட்டு மையம் சார்பில் 2018 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் ஐயம் சாரி ஐயப்பா… உள்ள வந்தா தப்பாப்பா… என்ற பாடல் வெளியானது. ஆறு வருடங்களுக்கு முன்பு இசைவாணியால் பாடப்பட்ட இந்த பாடல் தற்போது தமிழ்நாட்டு சங்கிகளால் சர்ச்சையாக்கப்பட்டு வருகிறது.

2018 இல் பாடப்பட்ட பாடலால் தற்போது இந்துக்களின் மனம் புண்பட்டுள்ளதாக சங்கிக் கும்பல் ஏன்  கதறுகின்றனர்? மதவெறியைத்  தூண்டி விடுவதன் மூலம் மோதலை உருவாக்கும் இந்துத்துவ நிகழ்ச்சிநிரலின் அடிப்படையில் தான் மாரிதாஸ், ரங்கராஜ் பாண்டே, அர்ஜுன் சம்பத் என சங்கிக் கும்பலின் வெவ்வேறு பிரிவினரும் ஒரே குரலில்  இந்த சர்ச்சையைக் கிளப்பி வருகின்றனர்.


படிக்க: இந்து மதத்தை இழிவுபடுத்துவது இசைவாணியா? இல்லை சனாதனமா?


தமிழ்நாட்டில் பார்ப்பனர்களுக்கு எதிராகச் சாதிய ஒடுக்குமுறை உள்ளது, வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்பிரிவு  பார்ப்பனர்களுக்கும் வேண்டும் என  அர்ஜுன்  சம்பத் சமீபத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினான். இந்தப் போராட்டம் ‘இந்துக்கள்’ மத்தியில் எந்த சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. மாறாக, தெலுங்கு மொழி பேசும் மக்களை இழிவாகப் பேசியதற்காக நடிகை கஸ்தூரி கைது செய்யப்பட்டது தான் மிச்சம்.

இந்துக்கள் மத்தியில் தங்களது செல்வாக்கு குறைந்து விட்ட அச்சத்தில், இந்துக்களின் மனம் புண்பட்டு விட்டது, ஒட்டுமொத்த இந்துக்களுக்கும் ஆபத்து என இந்த கும்பல் இப்போது ஐயப்பனை எடுத்துக் கொண்டு கிளம்பியுள்ளது.

அதானி லஞ்ச முறைகேடு விவகாரத்தில், அமெரிக்க நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ள இந்தத் தருணத்தில், பழைய விவகாரத்தைக் கிளறிவிட்டுப் பேசு பொருளாக்குவது என்பது சங்கப் பரிவார கும்பலுக்கு ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் நோக்கம் கொண்டது. அதானி ஊழல் விவகாரத்தைப் பெருமளவில் பேசு பொருளாக்காத ‘மெயின்ஸ்ட்ரீம் மீடியா’க்கள் எல்லாம் இசைவாணியின் ஐயப்பப் பாடல் குறித்து கவர் ஸ்டோரி எழுதி வருகின்றன.

பாலிமர், தந்தி போன்ற ‘கோடி’ மீடியாக்கள், கிறிஸ்தவ நிறுவனங்களின் மேடையில் நின்று கொண்டு இந்த ஐயப்ப பாடலை பாடுவது போலச் சித்தரித்து வீடியோ வெளியிடுவது அப்பட்டமான அயோக்கியத்தனமாகும்.


படிக்க: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் சென்ற இரு பெண்கள் : கதறும் சங்கிகள் !


சமூக ஊடகங்களில் உயிர்வாழும் சங்கிகளோ, வழக்கம் போல இயேசுவைப் பாட முடியுமா, நபிகள் நாயகத்தைப் பாட முடியுமா என மத வெறுப்பை உமிழ்ந்து வருகிறார்கள். இந்தப் பாடலின் குறிப்பிட்ட இந்த வரி தவறாக உள்ளது என குறிப்பிடாமல், சிலுவை செயின் போட்ட பெண் எங்கள் நம்பிக்கைக்கு எதிராக எப்படிப் பாடலாம் என்று பொங்குவதோடு, இசைவாணி மீது சாதிய வன்மத்தையும் கக்கி வருகின்றனர்.

இங்கு இந்து மதமே சாதியாகத் தானே இருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராகப் பாடல், திரைப்படம் என்ற கலை வடிவங்களைப் பயன்படுத்தினால் சாதியவாதிகள் கொதிக்கிறார்கள்.

இதையெல்லாம் கண்டிக்க வேண்டிய திராவிட மாடல் அரசோ, ‘மனம் புண்பட்டுள்ள’ இந்துக்களின் பாதுகாவலனாக மாறியுள்ளது தான் தற்போதைய யதார்த்தம். ஒருபுறம் கஸ்தூரி மீது எடுத்த நடவடிக்கையை இசைவாணி மீது எடுக்காததது ஏன் என்ற அயோக்கியத்தனமான கேள்வியை சங்கிகள் எழுப்பி வருகின்றனர்.  மறுபுறம், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில், இந்தப் பாடல் குறித்து விரைவில் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கருத்து தெரிவிக்கிறார். முருகன் மாநாடு நடத்தி பள்ளி, கல்லூரி மாணவர்களைக் கந்த சஷ்டி கவசம் பாராயணம் பாட வைக்கும் திமுக அரசிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்?

இப்போது வரை, ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடும் ஜனநாயக சக்திகள் மட்டுமே ரஞ்சித், இசைவாணிக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருகின்றனர். ஐயம் சாரி ஐயப்பா… போன்ற பலநூறு பாடல்களை வரவேற்போம், உருவாக்குவோம். கலை, இலக்கியம் யாவும் மக்களுக்கானது; ஏனெனில் கலை என்பது மக்களின் மீதான ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்ட வடிவம் என்பதை மீண்டும் மீண்டும் உரத்துச் சொல்வோம் சங்கிகளின் செவிப்பறை கிழியும்வரை!


அசோக்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க