04.12.2024
உரிய முறையான அறிவிப்புகள் இன்றி
தென்பெண்ணை – சாத்தனூர் அணையை திறந்து விட்டதே
கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில்
ஏற்பட்ட வெள்ளத்திற்கு காரணம்!
உரிய அலுவலர்கள் மீது உடனடியாக
தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!
பேரழிவுக்கு தமிழ்நாடு அரசு பொறுப்பு ஏற்று உதவித்தொகையை உயர்த்தி வழங்கிட வேண்டும்!
மக்கள் அதிகாரம் கோரிக்கை!
வங்கக் கடலில் உருவான பெஞ்சல் புயல் தாக்குதலால் புதுச்சேரி, கடலூர், விழுப்புரத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தென்பெண்ணை ஆற்றில் உரிய அறிவிப்புகள் இன்றி திடீரென்று ஒரு இலட்சத்து அறுபது ஆயிரத்துக்கும் மேற்பட்ட கன அடி நீர் திறக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் உள்ள பல நூற்றுக்கணக்கான கிராமங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு ரேஷன் கார்டுக்கு ரூ 2000 ஆயிரமும் வெள்ளாடு, செம்மறி ஆடு உயிரிழந்திருந்தால் தலா ரூ 4 ஆயிரமும், கோழி இறந்திருந்தால் தலா ரூ 100, மேலும் எருது, பசு இறந்திருந்தால் ரூ 37,500 வழங்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
வரலாறு காணாத மழை, இயற்கை சீற்றம், அரசு என்ன செய்ய முடியும்? உதவித்தொகை தான் வழங்க முடியும்! இப்படி எல்லாம் பல கேள்விகளைக் கேட்டு அரசு தப்பித்துக் கொள்வது என்பது ஜெயலலிதா ஆட்சி முதல் மு.க.ஸ்டாலின் ஆட்சி வரை நீடித்து வருகிறது.
இயற்கை பேரழிவுகளில் இருந்து காப்பாற்றுவதற்கு தான் அரசு என்ற கட்டமைப்பு உள்ளது. பன்னாட்டு நிறுவனங்களுக்கு லட்சக்கணக்கான கோடி ரூபாயை வரிச்சலுகையாக வழங்கும் அரசு, ஒரு குடும்பத்துக்கு 2000 ரூபாய் உதவித்தொகை என்ற அறிவித்திருப்பது மிகக் கேடானதாகும்.
மூன்று மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு ஒரு குடும்ப நல அட்டைக்கு ரூபாய் 15,000 வழங்க வேண்டும். மேலும் இறந்து போன ஆடு, மாடு மற்றும் கோழிகளுக்கு உரிய சந்தை விலையில் உதவித்தொகை அளிக்கப்பட வேண்டும்.
மேலும் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மற்றும் அழிந்துபோன நெற்பயிர்களுக்கும் சந்தை விலையில் உதவித்தொகை வழங்கப்பட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.
மேலும் தென்பெண்ணை ஆற்றில் உரிய முறையான அறிவிப்புகள் இன்றி லட்சக்கணக்கான கன அடி நீரைத் திறந்து விட்ட அதிகாரிகள் மீது தமிழ்நாடு அரசு கிரிமினல் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.
தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
9962366321
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram