இனவெறி இஸ்ரேலின் போரால் படுகாயங்களாலும் நோய்களாலும் பாதிக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான மக்களை மருத்துவத் தேவைக்காகக் கூட காசாவை விட்டு வெளியேற அனுமதிக்காமல் இஸ்ரேல் அரசுக் கொன்று வருகிறது மனதை உலுக்குகின்ற செய்தி வெளியாகியுள்ளது.
கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி யூத இனவெறி இஸ்ரேல் அரசு காசா மீது இனவெறி போரைத் தொடுத்தது. அன்று முதல் காசாவின் முக்கிய நகரங்கள், மருத்துவமனைகள் மற்றும் நிவாரண முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி ஆயிரக்கணக்கான மக்களைப் படுகொலை செய்து வருகிறது.
காயமடைந்தவர்களுக்குச் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த ஏராளமான மருத்துவமனைகளைச் சிதைத்ததுடன் மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்தி மருத்துவ பணியாளர்களையும் படுகொலை செய்து வருகிறது. இக்கொடிய தாக்குதல்கள் காரணமாகப் போருக்கு முன்பாக இயங்கிவந்த 36 மருத்துவமனைகளில் தற்போது 17 மருத்துவமனைகள் மட்டுமே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. காசாவில் இருந்த ஒரே ஒரு புற்றுநோய் மருத்துவமனையும் இஸ்ரேல் படையினரால் அழிக்கப்பட்டதால் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் உயிரைக் காப்பாற்ற முடியாத நிலை உருவாகியுள்ளது.
இயங்கிக்கொண்டிருக்கும் மருத்துவமனைகளிலும் குறைவான மருத்துவ உபகரணங்களே இருப்பது, மருந்துப் பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் மருத்துவ பணியாளர்கள் இல்லாமை போன்ற காரணங்களால், தாக்குதலில் படுகாயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடிவதில்லை. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் இறந்து கொண்டிருக்கின்ற துயரச் சம்பங்கள் நாள்தோறும் அரங்கேறி கொண்டிருக்கிறது.
போதிய மருத்துவ உபகரணங்கள் இல்லாததால் இனவெறி தாக்குதலினால் உடல் பாகங்களை இழந்து மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்ய முடியாமல் மருத்துவர்கள் போராடி வருகின்றனர். மேலும், மருந்து பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக காயமடைந்தவர்களின் உயிரைக் காப்பாற்றுவதற்காக, எளிய சிகிச்சைக்கு பதிலாக காயடைந்த உடல் பாகங்களை அவர்களின் உடல்களிலிருந்து வெட்டி எடுக்குமளவிற்கு கொடூரமான சூழல் உருவாகியுள்ளது.
படுகாயமடைந்த பல குழந்தைகளின் உயிர்களைக் காப்பாற்றுவதற்காக கை, கால்கள் அகற்றப்பட்டுள்ள பல குழந்தைகள் காசாவில் உள்ளனர். காயமடைந்த குழந்தைகளின் உடல் பாகங்களை வெட்டி எடுக்கும்போது வலி தாங்க முடியாமல் தாங்கள் பெற்றெடுத்த குழந்தைகள் தங்கள் கண் முன்னே இறக்கும் காட்சியை கண்டு தினந்தோறும் ஆயிரக்கணக்கான தாய்மார்கள் மனதளவில் செத்துக் கொண்டிருக்கின்றனர்.
இவ்வாறு காசாவின் சுகாதார கட்டமைப்பு குறிவைத்து அழிக்கப்பட்டு அங்கு போதிய மருத்துவவசதி இல்லாததால், ஆயிரக்கணக்கான மக்கள் மருத்துவ தேவைக்காக காசாவை விட்டு வெளியேறுவதற்கு இஸ்ரேலிடம் விண்ணப்பித்துள்ளனர். இருப்பினும், பல மாதங்களாக இனவெறி இஸ்ரேல் அரசு அம்மக்களுக்கு அனுமதி மறுத்து வருவதால் ஆயிரக்கணக்கானோர் ஆபத்தான நிலையில் உள்ளனர். காத்திருக்கும் காலத்திலேயே பல குழந்தைகள் செத்து மடிகின்றன.
படிக்க: பாலஸ்தீன பள்ளிகளைக் குறிவைத்துத் தாக்கும் பாசிச இஸ்ரேல்!
அனுமதி மறுக்கப்படுவதால் உயிரிழக்கும் குழந்தைகளைப் பற்றி காசாவில் பணியாற்றி வரும் ஐக்கிய நாடுகளின் சர்வதேச குழந்தைகள் அவசர நிதியத்தின் (United Nations International Childrens Emergency Fund – UNICEF) அதிகாரியான ரோசாலியா போல்லென் கூறுகையில், “லியுக்மியா நோயினால் பாதிக்கப்பட்ட 13 வயது சிறுவனான இஸ்லாம்–அல-ரெய்ஹானின் மருத்துவத்திற்காக காசவை விட்டு வெளியேறுவதற்கு அவனது குடும்பத்தினரால் இஸ்ரேலிடம் ஆறு முறை விண்ணப்பிக்கபட்டது. ஆனால் இஸ்ரேல் நாட்டின் ‘பாதுகாப்பை’ காரணம்காட்டி ஆறு முறையும் விண்ணப்பத்தை நிராகரித்ததால் போதிய மருத்துவ வசதி கிடைக்காமல் அச்சிறுவன் உயிரிழந்தான். இவனை போன்று மருத்துவ தேவைக்காக காத்திருக்கும் ஆயிரக்கணக்கான் குழந்தைகள் இறந்துவருவது வேதனையளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீனத்திற்கான மனிதாபிமான விவகாரங்களைக் கையாலும் இஸ்ரேலிய ராணுவ பிரிவைச் சேர்ந்த கோகாட் அமைப்பு, “பாதிக்கப்பட்ட குழந்தைகளின் குடும்பத்தினருக்கு ஹமாஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பு இருக்கிறதா என்று விசாரிக்கப்பட்டப் பின்னரே அனுமதியளிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளது. ஆனால், சில நோயாளிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டாலும், பாதுகாப்பை காரணமாகக் கூறி அவர்களை கவனித்துக் கொள்ளும் உறவினர்களின் விண்ணப்பங்களை மறுத்து வருகிறது.
மேலும், கடந்தாண்டு அக்டோபர் மாதத்திலிருந்து 5,230 பேர் மருத்துவ தேவைக்காக காசாவை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டனர். ஆனால், இந்தாண்டு மே மாதம் ரக்பா எல்லை மூடப்பட்டதனால் 342 நோயாளிகளுக்கு மட்டுமே வெளியேறுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு (World Health Organization) தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மருத்துவ தேவைக்காக காசாவை விட்டு உடனடியாக வெளியேற வேண்டிய நிலையில் உள்ள 22 ஆயிரம் பேரில் ஏழாயிரம் பேரை உடனடியாக வெறியேற அனுமதித்தால்தான் அவர்களின் உயிரைக் காப்பாற்ற முடியும் என்ற சூழல் உள்ளது. அவர்களில் 2,500 குழந்தைகளும் இருப்பதாக காசாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
காசா மக்களை போரின் மூலமாகவும் உணவு பொருட்கள் வழங்காமலும் படுகொலை செய்துவந்த இனவெறி இஸ்ரேல், தற்போது மருத்துவ தேவைக்காக மக்களை காசாவை விட்டு வெளியேற அனுமதிக்காமல், அம்மக்களை சத்தமில்லாமல் படுகொலை செய்து வருகிறது. மக்கள் குவிந்துள்ள இடங்களில் தாக்குதல் தொடுப்பது, காயமடைந்த மக்களை காப்பாற்றுவதற்கான மருத்துவக் கட்டமைப்பை சிதைப்பது, மருத்துவத் தேவைக்காக வெளியேற வேண்டிய மக்களை முடக்குவது என பாலஸ்தீன மக்களை இனவெறி இஸ்ரேல் பகிரங்கமாக இனப்படுகொலை செய்து வருகிறது. உழைக்கும் மக்களாய் ஒன்றிணைந்து பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பது மட்டுமே இந்த இனப்படுகொலையை தடுத்து நிறுத்தும்.
ஆசாத்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram