டிசம்பர் 25, 2024 அன்று இந்திய கம்யூனிச இயக்கம் 100ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. ஆயிரக்கணக்கான தோழர்களின் தியாகங்களும் உழைக்கும் மக்களின் குருதியும் சமத்துவத்திற்கான வேட்கையும் நிறைந்ததே இந்திய கம்யூனிச இயக்க வரலாறு.
இந்த நூறாண்டுகளில் இந்தியாவில் புரட்சியை சாதிப்பதற்கு பல்வேறு தருணங்கள் அமைந்தாலும் இந்திய கம்யூனிச இயக்கத்தில் பீடித்துள்ள திரிபுவாதம், சந்தர்ப்பதாவதம், இடது, வலது திசைவிலகல்கள் காரணமாக அவை கைநழுவி போயின. இடதுசாரி அமைப்புகள் சிதறி போயின.
ஆனால், ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிசம் இந்தியாவில் அரங்கேறிவரும் இன்றைய சூழலில், பாசிச சக்திகளுக்கு எதிராக இந்தியாவில் உள்ள புரட்சிகர சக்திகள் ஒன்றிணைய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. மார்க்சிய சித்தாந்தத்தின் கீழ் மாற்று கட்டமைப்பை முன்வைத்து போராட வேண்டியுள்ளது.
இத்தருணத்தில், இந்திய கம்யூனிச இயக்கத்தின் வரலாற்றை தெரிந்துகொள்வதற்கும் அதுகுறித்த விவாதத்தை துவங்குவதற்கும் இந்திய கம்யூனிச இயக்க வரலாறு தொடர்பான கட்டுரைகளை மீள்பதிவு செய்கிறோம்.
இக்கட்டுரை ஆகஸ்ட் 16, 2018 அன்று வினவு தளத்தில் வெளியிடப்பட்டது.
***
இன்று வரை தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை நமது தொலைக்காட்சி நெறியாளர்கள் எப்படி சொல்கிறார்கள்? “மே 22 ஏற்பட்ட கலவரத்தை அடுத்து…” இதுதான் அவர்கள் சூட்டியிருக்கும் காரணப் பெயர். பா.ஜ.க.வினரோ ரஜினியோ, மற்றவர்களோ கலவரம், சமூகவிரோதிகள், விஷமிகள், பயங்கரவாதிகள் என்று போராடும் மக்களை கொச்சைப் படுத்துவது, மிரட்டுவது, போலீசாரின் வன்முறையை நியாயப்படுத்துவது ஆகிய நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இவை அனைத்தும் இன்று நேற்று நடக்கும் ஒன்றல்ல.
ஓட்டுக் கட்சி அரசியல்வாதிகள், ஊடகங்கள், பொதுப்புத்தி அனைத்திலும் இந்த மதிப்பீட்டிற்கு ஒரு தொடர்ச்சி இருக்கிறது. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பம் தொட்டு ஆங்கிலேய ஏகாதிபத்தியம், காங்கிரசுக் கட்சியினரால் தலைமை வகிக்கப்பட்ட இந்திய அரசியல் வெளியிலேயே இந்த அடிமைக் கருத்து மனோபாவம் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுவிட்டது.
உண்மையில் 1947 ஆகஸ்டு 15-ம் நாளில் நாம் பெற்றது அரசியல் சுதந்திரமல்ல! அது ஆங்கிலேயர்கள் தமது இந்திய வாரிசுகளிடம் அதிகாரத்தை கைமாற்றிக் கொடுத்த நிகழ்வு மட்டுமே! நமது கல்வி முறை போதிக்கின்றபடி காந்தியும், காங்கிரசும் நாட்டுக்காக போராடி சுதந்திரத்தைப் பெற்று தந்துவிடவில்லை. சொல்லப்போனால் ஆங்கிலேயர்கள் மனங்கோணாமல் அவர்களுக்குரிய அனைத்து நலன்களையும் பாதுகாப்பதாக உறுதி ஏற்படுத்திக் கொண்டு ஆட்சி அதிகாரத்தை பெற்றுக் கொண்ட ஒரு அடிமை நிகழ்வுதான் ஆகஸ்டு 15 அதிகார மாற்றம்.
இந்திய அரசியல் வானில் வசந்தத்தின் இடிமுழக்கமாக வந்த நக்சல்பாரி இயக்கதோடு உருவான, இந்திய பொதுவுடமைக் கட்சி (மா.லெ)யின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினராகப் பணியாற்றிய காலஞ்சென்ற தோழர் சுனிதி குமார் கோஷ் (Suniti Kumar Ghosh, 1918-2014) அவர்களின் ஆய்விலிருந்து இந்த நிகழ்வைப் பார்ப்போம். அவர் எழுதிய “நக்சல்பாரி முன்பும் பின்பும்” என்ற வரலாற்று நூலில் இதற்கு ஏராளமான சான்றுகள் இருக்கின்றன.
ஒரு காலனியாதிக்க நாட்டின் சுதந்திரம் என்பது காலனியவாதிகள் கட்டியமைத்த அரசியல், பொருளாதார அமைப்பை முற்றிலும் மாற்றியமைத்து அரசியல் அதிகாரத்தை கட்டியமைப்பது. இதுதான் விடுதலை அடையும் ஒரு நாட்டின் தேசியப் புரட்சி என்றழைக்கப்படுகிறது.
(கருப்பு வண்ணத்தில் இருக்கும் பத்திகள் சுனிதிகுமார் கோஷின் நூலில் இருந்து எடுத்தாளப்பட்டவை)
”1947-ம் ஆண்டில் நடந்த “காலனியமுறை ஒழிப்பு உண்மையானதா அல்லது ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தால் மேற்கொள்ளப் பட்ட சூழ்ச்சிகரமான ஏய்ப்பு நடவடிக்கையா என்பதும், அது தனது நேரடி ஆட்சியைத் தொடரவியலாமல் இருந்த காரணத்தால் தேசிய விடுதலைப் போராட்டத்தின் முனையை மழுங்கச் செய்வதற்காகப் போலியாக பின்வாங்கியதா…”
என்று கேட்கும் கோஷ்,
”ஆங்கிலேய ஏகாதிபத்தியம் மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு இந்திய மக்கள் ஆகியோருக்கு இடையில் நிலவிய ஒப்பீட்டளவிலான பலத்தையும், இவ்விரு சக்திகளுக்கு இடையிலான போராட்டத்தின் வெற்றி, தோல்வியையும் சார்ந்திருந்தது”
என்கிறார். ஐரோப்பாவில் இருந்து உலகெங்கும் காலனிகளை உருவாக்கிய ஐரோப்பிய அரசுகள் அந்தந்த நாடுகளின் உள்ளூர் அதிகார வர்க்கத்தினரைக் கொண்டே ஆட்சி அமைப்பைக் கட்டி அமைத்தனர். உள்ளூர் மக்களின் எதிர்ப்பை தவிர்ப்தற்கு இந்த உள்ளூர் பிரமுகர்களின் ஆதரவு தேவையாக இருந்தது.
ரொனால்டு ராபின்சன் சரியாகவே கூறினார்: ”…. தொடக்கம் முதலே அந்த ஆட்சியானது தொடர்ச்சியாக எதிர்க்கப்பட்டது. அதுபோலவே எதிர்ப்பைத் தவிர்ப்பதற்கும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கும் தொடர்ச்சியாக உள்ளூர் ஒத்துழைப்புத் தேவையாக இருந்தது ஏகாதிபத்தியத்தின் பொருளாதார பலமும், இராணுவ மற்றும் ஆட்சி முறைக் கட்டமைப்பும் கைப்பற்றப்பட்ட நாடுகளில் உள்ள உள்ளூர் அதிகார வர்க்கத்தினரின் ஒத்துழைப்போடுதான் கட்டியமைக்கப்பட்டது.1
காலனிய நாடுகளில் மக்களில் யார் ஏகாதிபத்தியங்களை எதிர்க்கிறார்கள்? யார் ஆதரிக்கிறார்கள்? இது வர்க்க ரீதியாக பிரிந்திருக்கிறது. காங்கிரசு உள்ளிட்ட கட்சிகளை நாம் அப்படி ஆய்வு செய்து பார்த்தால் அவர்களின் உண்மை நிலை புரியும். தோழர் மாவோ அதை சரியாக குறிப்பிடுகிறார்.
”மேற்கத்திய முதலாளித்துவ வர்க்கம் கிழக்குலகில் இருவகைப்பட்ட மக்கள் பிரிவினரை உருவாக்கியது. ஒன்று, குறுகிய சிறுபான்மையினரான ஏகாதிபத்தியத்தின் அடிமைச் சேவகர்கள். மற்றொன்று ஏகாதிபத்தியத்தை எதிர்த்த பெரும்பான்மையினரை உள்ளடக்கிய உழைக்கும் வர்க்கம், உழவர்கள், நகர்ப்புறக் குட்டி முதலாளித்துவ வர்க்கம், தேசிய முதலாளிகள் மற்றும் இவ்வர்க்கங்களின் பின்னணி கொண்ட அறிவுஜீவிகள்.”
இந்நிலையில் இந்தியாவில் பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்தை ஆதரித்த சமூகப்பிரிவினர் யார்?
அந்தக் குறுகிய சிறுபான்மையானது மன்னர்கள், நிலப்பிரபுக்கள் உள்ளிட்ட நிலப்பிரபுத்துவ வர்க்கத்தினரையும், தேசிய முதலாளிகளுக்கு எதிர்மறையான பெரும் தரகு முதலாளித்துவ வர்க்கத்தினரையும், அன்னிய ஆட்சியாளர்களின் விழுமியங்களை முற்றிலுமாக உள்வாங்கியிருந்தவர்களும், அவர்களது ஆட்சியின் நற்பயன்கள் மீதும் முற்போக்குத் தன்மையின் மீதும் முழு நம்பிக்கை வைத்திருந்தவர்களும், ஒடுக்கப்பட்ட வேறு நாதியற்ற மக்களாக விளங்கிய இந்நாட்டின் உழைக்கும் மக்கள் மீது முழுமையான அவமதிப்பைக் கொண்டிருந்தவர்களுமான பெரும் அதிகார வர்க்கத்தினர் உள்ளிட்ட வசதி படைத்த சமூகப் பின்னணியைக் கொண்ட அறிவுஜீவிகளையும் கொண்டிருந்தது.
இரண்டாம் உலகப் போர் முடிந்த பிறகு ஆங்கில ஏகாதிபத்தியம் போரில் வெற்றி பெற்றாலும் பின்னடைவுக்குள்ளானது. பழையபடி தனது காலனிய நாடுகளை கட்டி ஆளமுடியவில்லை. காரணம் புதிதாக முன் அரங்கிற்கு வந்த அமெரிக்க ஏகாதிபத்தியம், சர்வதேச கம்யூனிச இயக்கம் – சோசலிச நாடுகள், காலனிய நாடுகளில் தீவிரமாக நடைபெற்ற தேசிய விடுதலைப் போராட்டங்கள், தனது சொந்த ஆயுதப்படைகளின் பிடிமானம் உடைபடுதல் ஆகியவை காரணமாக சிக்கலை சந்தித்த ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் முதன்மையான பிரச்சினையாக இந்திய மக்கள் இருந்தனர்.
அந்தச் சிக்கலை முடிந்த முட்டும் குறைப்பதற்கு அவர்களுக்கு உதவியது யார்?
போரின் முடிவில் ஆங்கிலேயர் ஆட்சி அல்லாத இரு சக்திகள் இந்தியாவில் வினையாற்றின. ஐரோப்பாவில் போர் முடிவுற்ற பிறகு வைசிராய் வேவெல் காங்கிரசு கட்சியின் செயற்குழு உறுப்பினர்களைச் சிறையிலிருந்து விடுவித்து ஜூன் – ஜூலை வாக்கில் சிம்லாவில் ஒரு மாநாட்டைக் கூட்டினார். வி.பி.மேனன் எழுதியது போல காங்கிரசு கட்சி எவ்வித நிபந்தனை ஒத்துழைப்புக் கொடுக்க முன்வந்தது.2 ”ஜப்பானுக்கு எதிரான போரை வெற்றிகரமாக நிறைவேற்றவும், ஆதரிக்கவும் தாங்கள் முழுமனதுடன் ஒத்துழைப்பதாகக் கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில், காங்கிரசு தலைவர்கள் வைசிராயின் ஆட்சி மன்ற குழுவில் (இந்திய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளைக் கொண்டு ஆட்சிமன்றக் குழுவை மாற்றியமைப்பதற்கு வைசிராய் எண்ணியிருந்தார்), இடம் பெறுவதற்கு ஆவலாய் இருந்தனர். (காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களின் அகிம்சைக் கோட்பாடு குறிப்பிடத்தக்க வகையில் இலகுவாக இருந்தது.) பெருமகிழ்ச்சியடைந்த நேரு கூறியதாவது, “நாங்கள் சிம்லாவில் வெற்றி பெறவேண்டும் என்று விரும்புகிறோம் நான் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன்.” ஆனால் மறுசீரமைக்கப்பட்ட ஆட்சிமன்றக் குழுவிற்கு அனைத்து முசுலீம் உறுப்பினர்களையும் நியமிக்கும் உரிமையைத் தனக்கு வழங்கவேண்டும் என்று லீக் (முசுலீம் லீக்) கோரியதால் சிம்லா மாநாடு தோல்வியுற்றது.
”நாட்டில் அமைதியான சூழலைப் பேணிக் காக்கக் காங்கிரசு தலைவர்கள் பணியாற்றவேண்டும்” என்று வேவெல் கேட்டுக் கொண்டார். நாட்டில் போருக்குப் பிந்தைய எழுச்சியைக் கண்டு வேவெல் அஞ்சினார். அது போலவே காந்தியும் அஞ்சினார்.3 காங்கிரசு கட்சியின் தலைவர் அப்துல் கலாம் ஆசாத் வைசிராய்க்கு எழுதியதாவது:
”காங்கிரசுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட தொடர்புகள் கடந்த கால கசப்பான சம்பவங்களை பெரிதும் மறக்கடித்து நம்பிக்கை, நல்லெண்ணம் கொண்ட ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியிருக்கிறது.4
ஆங்கிலேய ஆட்சியாளர்கள் அரசியலமைப்பு பிரச்சனைகள், எதிர்கால நிர்வாகக் கட்டமைப்பு, இராணுவ மறுசீரமைப்புத் திட்டம் மற்றும் இன்ன பிற விஷயங்களான கல்வி, தொழில்துறைத் திட்டம் ஆகியவற்றைக் குறித்த விவாதங்களில் கலந்து கொள்ளுமாறு காங்கிரசு தலைவர்களை அழைக்கத் தவறிய தில்லை . ஜூன் 1944-ல் டாடா இயக்குனரும், பம்பாய் திட்டம் ஆசிரியரும், நேருவால் போற்றப்பட்டவரான சர் ஆர்தேசிர் தலால் என்பவரைத் திட்டம் மற்றும் வளர்ச்சித் துறையில் பொறுப்பேற்கும் வகையில் வைசிராயின் நிர்வாகக் கவுன்சில் உறுப்பினராக நியமிக்கப்பட்டிருந்தார்.
காங்கிரசு இப்படி காலனியவாதிகளோடு நெருக்கமாக இருந்த போதும் இந்திய மக்கள் ஆங்கிலேய ஆட்சி மீது கடுங்கோபத்தில் இருந்தனர். கலகம் செய்தனர்.
நிலவிய புரட்சிகர சூழ்நிலையைச் சரியாகவே புரிந்து கொண்ட நேரு ஆங்கிலேய ஏகாதிபத்திய வாதிகளோடு கைகோர்த்து அச்சூழ்நிலையை நீர்த்துப் போகச் செய்வதற்காக அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார். இந்தியா ‘எரிமலையின் விளிம்பில் இருப்பதாகவும் ”நாம் எரிமலையின் உச்சியில் வீற்றிருப்பதாகவும்” நேரு கூறினார். மத்திய சட்ட அவையில் உள்ள ஐரோப்பியக் குழுவின் தலைவரான பி. ஜே. கிரிபித்ஸ் என்பவரும் கூட “பலரின் கருத்துப்படி இந்தியா புரட்சியின் விளிம்பில் இருக்கிறது” என்று கூறினார்.5
இவர்கள் அஞ்சியது போல இந்தியா வெடித்தெழும் நிலையில் எரிமலையின் விளிம்பில் நின்றது. இந்த பெருங்கோபத்திற்கு காரணம் ஆங்கிலேயர்களின் ஆட்சி மற்றும் சுரண்டல் ஒருபுறம் என்றால், மறுபுறம் போருக்காக இங்கிலாந்து இந்திய மக்களை கசக்கி பிழிந்ததால ஏற்பட்ட கடுங்கோபம். இது முதன்முதலில் கொல்கத்தாவில் வெடிக்கிறது. நேத்தாஜி சுபாஷ் சந்திர போஸ் உருவாக்கிய ஐ.என்.ஏ அதிகாரிகளை விடுவிக்க கோரி கொல்கத்தா மக்கள் கலகத்தை துவங்கினர்.
வழக்கு விசாரணையை சந்தித்துக் கொண்டிருந்த இந்தியத் தேசிய இராணுவத்தினர் (ஐ.என்.ஏ) அதிகாரிகளை விடுவிக்க வலியுறுத்தி நடைபெற்ற மாணவர் பேரணி மீதான போலீசு துப்பாக்கிச்சூடு தான் அதற்கு உடனடிக் காரணமாக இருந்தது. ஒரு மாணவரும், ஒரு இளைஞரும் துப்பாக்கி சூட்டிற்கு இரையாகினர். பலர் காயமுற்றனர். இந்நிகழ்வு கல்கத்தாவையும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் தீப்பிழம்பாக மாற்றியது. நகர வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியது. இரயில்கள் நிறுத்தப்பட்டன. தடுப்பரண்கள் அமைக்கப்பட்டன. பல்வேறு இடங்களில் வீதியோரப் போர்கள் நடந்தேறின. அனைத்துச் சமூக பாகுபாடுகளும் மறைந்து போயின.
… ஏறத்தாழ 150 போலீசு மற்றம் இராணுவ வாகனங்கள் தீக்கிரையாக்கப் பட்டன. அதிகாரபூர்வக் கணக்கீட்டின்படி ஒரு அமெரிக்கர் உள்ளிட்ட 33 பேர்கள் கொல்லப்பட்டனர். 200 பொது மக்கள், பல போலீசுக் காரர்கள், 70 ஆங்கிலேயப் படை வீரர்கள் மற்றும் 37 அமெரிக்கப் படை வீரர்கள் காயமுற்றனர்.6 ஒட்டு மொத்த வங்காளத்திலும் ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வுகளின் அதிர்வலைகள் பரவின.
அப்போது வங்க மக்களின் உணர்ச்சிக்கு சான்று தெரியவேண்டுமா? அல்லது போலீசு தடியடிக்கு பின்வாங்காத தூத்துக்குடி மக்களின் உணர்ச்சியை வங்கத்தில் காண வேண்டுமா?
மக்களின் உணர்வுகளைக் குறித்து விவரித்த வங்காள ஆளுநர் கேஸி எழுதியதாவது: ”வடக்கு மற்றும் தெற்குக் கல்கத்தா ஆகிய இவ்விரு இடங்களில் நடைபெற்ற போராட்டத்தில் சிறப்புக் கூறு யாதெனில் மக்கள் தங்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட போது, கலையாது நின்றனர் அல்லது சிறிது தூரம் பின்வாங்கி மீண்டும் தாக்குவதற்கு முன்னேறினர்…
நவம்பர் 24 – அன்று ஆங்கிலேய அரசு படைகள் தலைவர் (Commander -in-Chief) ஆச்சின்லெக் இந்தியாவிற்குள் நிலவிய உள்நாட்டுச் சூழலைக் குறித்து ஆய்வு மேற்கொண்டார். வைசிராய் அவ்வறிக்கையைப் பொதுவாக ஒப்புக் கொள்வதாக தெரிவித்தார்.
இந்த எழுச்சியின் அனல் ஆங்கிலேயர்களை மட்டுமல்ல, காங்கிரசு, கம்யூனிஸ்டு கட்சியையும் தொட்டது. இரு கட்சி பிரமுகர்களும் போராட்டத்தை கைவிடுமாறு மாணவர்களிடம் பிரச்சாரம் மேற்கொண்டனர். ஆனால் ஆங்கிலேயர்களின் மதிப்பீடோ நிலைமையை சமாளிக்க முடியாது என்கிறது.
ஆச்சின் லெக் எழுதியதாவது: ‘இந்தியப் படைகள் முற்றிலுமாக நம்பவியலாதவையாக மாறும்பட்சத்தில் இப்போது கைவசம் உள்ள ஆங்கிலேய ஆயுதப் படைகளால் உள்நாட்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வரவோ அல்லது அத்தியாவசியத் தகவல் தொடர்பு சாதனங்களைப் பாதுகாக்கவோ இயலாது. இப்படைகளைச் சிறிது சிறிதாகப் பெருக்கிப் பயன்படுத்துவதும் பலனளிக்காது. உள்நாட்டுச் சூழலை மீண்டும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கும் அத்தியாவசியத் தகவல் தொடர்புகளை மீண்டும் ஏற்படுத்துவதற்கும் இந்தியாவை மீண்டும் வென்றெடுப்பதற்கான ஒழுங்கமைக்கப்பட்ட பிரச்சாரத்தை மேற்கொள்வது தவிர வேறு வழியில்லை.7
நேதாஜியின் இந்திய தேசிய இராணுவத்தினரை கைது செய்து அவர்கள் மீது வழக்கு போட்டு தண்டிக்கும் செயல் இந்தியா முழுவதும் பெருங்கோபத்தைக் கிளப்பியது. காந்தி – காங்கிரசு உருவாக்கியிருந்த அஹிம்சைப் போராட்டம் மக்களிடையே ஆதரவு பெறவில்லை என்பதே ஐ.என்.ஏ வீரர்களை விடுவிக்குமாறு மக்கள் நடத்திய போராட்டத்திற்கு காரணம்.
ஆர்.பி. தத் கூறியது போல, ஐ.என்.ஏ. குறித்த முன்னுதாரணமும், ‘தொடர்ச்சியாக நடைபெற்ற ஐ.என்.ஏ. தலைவர்கள் மீதான வழக்கு விசாரணைகளும் போர்க்குணம் மிக்க தேசபக்தியின் மீதும், பழைய அகிம்சாவாதப் போராட்டத்திற்குப் பதிலாக ஆயுதம் தாங்கிய கிளர்ச்சியின் மூலமாக அதிகாரத்தைக் கைப்பற்றுவது குறித்த கருத்தியல் மீதும் நம்பிக்கைத் தீயை மூட்டின.8
படைகளின் முதன்மைத் தலைவர் ஆச்சின் லெக்கிற்கு நேரு பின்வருமாறு எழுதினார்: ”சில வாரங்களுக்குள்ளாகவே ஐ.என்.ஏ. குறித்த செய்திகள் இந்தியாவிலுள்ள கிராமங்களின் மூலை முடுக்குகள் வரை பரவிவிட்டது. எங்கெங்கும் அவர்கள் மீதான நன்மதிப்புப் பெருகியதோடு அவர்களின் பாதுகாப்பு குறித்த அச்சமும் தோன்றி விட்டது. மக்களிடையே பரவலாக எழுந்துள்ள ஆர்வக்கிளர்ச்சி வியப்பளிக்கக்கூடியதுதான். இருப்பினும் அதைவிட வியப்பளிக்கக் கூடியது யாதெனில் பெரும் எண்ணிக்கையிலான நிரந்தர இந்திய இராணுவ அதிகாரிகள் மற்றும் படை வீரர்கள் மத்தியில் இதே போன்ற ஆர்வக்கிளர்ச்சி தோன்றியுள்ளது என்பதே. ஏதோ ஒரு உணர்வு அவர்களது ஆழ்மனதைத் தொட்டுவிட்டது. 9
ஐ.என்.ஏ மீதான இந்திய மக்களின் ஆதரவோடு பிரச்சினை முடிந்துவிடவில்லை. அன்றைக்கிருந்த பிரிட்டீஷ் இந்தியப் படை வீரர்களிடம் அது பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியது. வர இருக்கின்ற நாட்களில் பல நகரங்களில் படை வீரர்கள் செய்யப் போகும் கலகத்திற்கு இது ஒரு துவக்கமாக இருந்தது.
ஐ.என்.ஏ. க்கு ஆதரவு (பிரிட்டிஷ் இந்திய ஆயுதப் படைகள் மத்தியில்) பெருகி வருவதாக நவம்பர் 26, 1946 அன்று ஆச்சின் அத்தின்லென் வேவெலுக்கு எழுதினார்.
இந்நிலையில் கொல்கத்தாவில் எழுந்த போராட்டத் தீயை தணிப்பதற்கு காங்கிரசும், காந்தியும் பெரிதும் முயன்றனர்.
காங்கிரசு செயற்குழு கல்கத்தாவில் கூடி ”சம்பந்தப்பட்ட அனைவருக்கும் வழிகாட்டும் நெறியாக” அகிம்சைவாதத்தின் மீது தனது நம்பிக்கையை வலியுறுத்தி, ”பொதுச் சொத்தை தீயிட்டுக் கொளுத்துவது என்பது போன்ற செயல்கள் அகிம்சை வாதத்திற்குள் அடங்காது எனத் தெளிவு படுத்தியது.
“அமைதியான சூழலைக் காப்பதன் அவசியத்தை” நேரு வலியுறுத்திக்கொண்டே இருந்தார்…. “நாட்டை ஆளுகின்ற பணியினை உடனடி யாகத் தங்களுடைய கைகளில் எடுத்துக் கொள்ள வேண்டாம்” என்றும் “தலைமையேற்கத் தகுதிவாய்ந்த அரசியல் தலைவர்களிடம் அப்பணியினை விட்டுவிட வேண்டும்” என்றும் அவர் மாணவர்களுக்கு அறிவுரை கூறினார்.10 ‘தன்னால் இயன்றவரை மோதலைத் தவிர்ப்பதற்கும், தீவிர எண்ணம் கொண்டோரைக் கட்டுப்படுத்துவதற்கும்” முயன்று கொண்டிருப்பதாக நேரு பிரிட்டிஷ் அமைச்சரவையின் முக்கிய உறுப்பினரான சர் ஸ்டாபோர்ட் கிரிப்ஸ்சிடம் (அவர் மூலமாக பிரிட்டிஷ் அமைச்சரவை முழுமைக்கும்) டிசம்பர் 3, 1945 அன்று உறுதி அளித்தார்.11
”பயனற்ற தகராறுகளில் தங்களுடைய ஆற்றலை விரயம் செய்ய வேண்டாம்” என்று சர்தார் பட்டேல் இளைஞர்களுக்கு அறிவுரை கூறினார்.
ஆனால் மக்கள் காங்கிரசு தலைவர்களின் வேண்டுகோள்களையும், காட்டிக் கொடுப்புகளையும் புறக்கணித்தனர்.
சட்டம் ஒழுங்கையும், அகிம்சை வழியையும் கடைப்பிடிக்க வேண்டும் என்ற காங்கிரசு தலைவர்களின் போதனைகளை புறக்கணித்த கொல்கத்தா…. பிப்ரவரி 11-18 1946 ஆகிய நாட்களில் கிளர்ந்தெழுந்தது. ஐ.என்.ஏ வின் அப்துல் ரஷீத்திற்கு விதிக்கப்பட்ட ஏழாண்டு கடுங்காவல் தண்டனைக்கு எதிராக மாணவர்களால் நடத்தப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டம் இக்கிளர்ச்சிக்குக் காரணமாக அமைந்தது. போராட்டத்தின் காரணமாக நகர வாழ்க்கை முற்றிலுமாக முடங்கிப் போனது. இரண்டு நாட்களுக்கு கொல்கத்தாவை ஒட்டியிருந்த பகுதிகளில் உள்ள பஞ்சாலைகளும், தொழிற்சாலைகளும் மூடப்பட்டிருந்தன. இரயில்கள் ஓடவில்லை . ஆயுதந்தாங்கிய போலீசாருடனும் கவச வாகனங்களில் அணிவகுத்த இராணுவ படைகளுடனும் மக்கள் கடுமையான தெருமுனைப் போர்களில் ஈடுபட்டார்கள்… இந்துக்கள் மற்றும் முசுலீம்கள் இடையே நிலவிய உறுதியான ஒற்றுமை முக்கியக் கூறாக விளங்கியது…. அதிகாரபூர்வ புள்ளி விபரங்களின்படி 84 பேர் பேர் கொல்லப்பட்டனர்; 300 பேர் காயமுற்றனர். நவம்பர் மாதத்தில் ஏற்பட்டவாறே இப்போதும் கொல்கத்தா மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் தோன்றிய ஏகாதிபத்திய எதிர்ப்பு அலை வங்காளம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
வங்கக் கடலோரம் துவங்கிய எழுச்சி விரைவிலேயே அரபுக் கடலோரம் மும்பையை தொட்டது. பின்னர் அதுதான் புகழ்பெற்ற கடற்படை வீரர்களின் எழுச்சியாக பரிணமித்தது. அதன் பிறகு நாடெங்கும் உள்ள படை வீரர்களின் அணிகள் கலகம் புரிய ஆரம்பித்தனர். தனது சொந்தப் படையே தனக்கு எதிராக திரும்புவதுதான் ஒரு ஆளும் வர்க்கத்திற்கு முற்றிலும் தோல்வியடையும் தருணம்!
பிப்ரவரி 18, 1946 அன்று துவங்கிய மும்பை கிளர்ச்சிதான் அவற்றில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், அனைவரையும் ஈர்ப்பதாகவும் இருந்தது. ராயல் இந்தியன் கடற்படையின் (Royal Indian Navy) வீரர்கள் முதலில் மும்பையிலும் பின்னர் கராச்சி, கல்கத்தா (கொல்கத்தா), மதராஸ் (சென்னை) ஆகிய நகரங்களிலும் கலகம் புரியத் துவங்கினர். மோசமான உணவு, நிறவெறிக் கொள்கை, ஆங்கிலேய அதிகாரிகளால் சுமத்தப்பட்ட அவமானங்கள் போன்ற பல்வேறு குறைகளைக் கொண்டிருந்த கலகக்காரக் கடற்படையினர் சுபாஷ்போசின் வீரதீரச் செயல்களாலும், ஐ.என்.ஏ.வின் முன்னுதாரணத்தாலும் உந்தப்பட்டனர்.12
பிப்ரவரி 22, 1946 நாளுக்குள்ளாக கலகக்காரக் கடற்படையினர் ஆங்கிலேய கடற்படையினுடைய துணைத்தலைவரின் (Vice – Admiral) முன்னணி கப்பல் உள்ளிட்ட மும்பையில் இருந்த ஏறக்குறைய 22 கப்பல்களைத் தங்களுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். மொத்தமாக ராயல் இந்தியன் கடற்படையை சார்ந்த 78 கப்பல்கள், 20 கடற்கரையோர படை அமைப்புகள், 20,000 கடற்படை வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மும்பையில் உள்ள ராயல் இந்தியன் விமானப் படை முகாம்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமானப்படை வீரர்கள் ஆதரவு தெரிவித்துப் போராட்டத்தில் குதித்தனர். கட்டளை பிறப்பிக்கப்பட்ட பிறகும் கூட இந்திய இராணுவப் படைவீரர்கள் மும்பை மற்றும் கராச்சியிலுள்ள ராயல் இந்தியன் கடற்படை வீரர்களைச் சுட மறுத்தனர்.
இராணுவத்தை அனுப்பி கடற்படை வீரர்களின் கலகத்தை ஒடுக்கிவிடலாம் என்று மனப்பால் குடித்தது பிரிட்டீஷ் இந்திய அரசு. ஆனால் இராணுவம் சுடவில்லை என்பதோடு இராணுவத்தில் இருந்த வெள்ளையின வீரர்களுக்கும் கடற்படை வீரர்களுக்குமான மோதலாக அது மாறியது.
பிப்ரவரி 21 அன்று கடற்படை வீரர்களின் போராட்டமானது அவர்களுக்கும், இந்திய இராணுவப்படை வீரர்கள் சுட மறுத்ததால் வரவழைக்கப்பட்டிருந்த ஆங்கிலேயப் படைகளுக்கும் இடையிலான மோதலாக வெடித்தது.13
வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த எழுச்சிக்கு மும்பை தொழிலாளிகள் கடற்படை வீரர்களுக்கு முக்கிய அரணாக திகழ்ந்தனர். முழு மும்பையுமே ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நின்றது.
தாங்கள் சார்ந்திருந்த சமூகங்களைப் பாராமல் மும்பையில் தொழிலாளர்களும், இளைஞர்களும் கடற்படையின் வீரதீரர்கள் பக்கம் நின்று, அவர்களுக்கு உணவு கொண்டு சென்று, தடுப்பரண்கள் நிறுவி, ஆயுதந்தாங்கிய போலீசாருடனும், கவச வாகனங்கள், கனரக கவச வாகனங்கள் ஆகியவற்றுடன் வந்திருந்த பல ஆங்கிலேய இராணுவப் படைகளுடனும் கடுமையாக மோதினர்.
ஏற்கனவே பிரிட்டீஷ் ஆட்சியாளர்களுடன் இந்தப் போராட்டத்தை எப்படி தணிப்பது என்று பேசிக் கொண்டிருந்த காங்கிரசும், முசுலீம் லீக்கும் மும்பை எழுச்சியை குலைப்பதற்கு புயலாய் வேலை செய்தன. ஆனால் மும்பை அதனை சட்டை செய்யவில்லை.
பிப்ரவரி 22 அன்று மிகப் பெரிய காங்கிரசு மற்றும் முசுலீம் லீக் தலைவர்களின் எதிர்ப்புக்கு இடையில் மும்பை பொது வேலைநிறுத்தத்தை மேற்கொண்டது.
காங்கிரசு மற்றும் முசுலீம் லீக் தலைவர்களைப் புறக்கணித்த மும்பையின் ஒட்டுமொத்தப் பாட்டாளி வர்க்கமும் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியால் (சி.பி.ஐ) ஆதரிக்கப்பட்ட, கடற்படை மையப் போராட்டக் குழுவால் விடுக்கப்பட்ட அழைப்பிற்கு, இணங்கப் போராட்டத்தில் குதித்தது. இரண்டு நாட்களாக நகரின் வீதிகளில் மோதல்கள் நிகழ்ந்தன. அதிகாரபூர்வப் புள்ளிவிவரங்களின்படி ஏறக்குறைய 1,500 பேர் மோதல்களில் பலத்த காயமுற்றனர் . அவர்களில் 200 க்கும் மேற்பட்டோர் மரணமடைந்தனர்.
”ஆயிரக்கணக்கானோரைச் சுட்டுக் கொன்றபிறகுதான் ஆங்கிலேயக் கனரக கவச ஊர்திகள் தெருக்களைக் கைப்பற்ற முடிந்தது” என எழுதினார் கிளர்ச்சியின் தலைவர்களுள் ஒருவரான பி.சி.தத். ”இந்திய விடுதலை இயக்கத்தின் கொந்தளிப்பான வரலாற்றில் நிராயுதபாணிகளாகத் தலைமையின்றித் தவித்த மக்களுடனான மோதலில் ஆட்சியாளர்கள் கனரக கவச ஊர்திகளை பயன்படுத்தியது இதுவே முதல்முறையாக இருந்தது. பிப்ரவரி 21 கடற்படை வீரர்களின் நாளாக இருந்தது. பிப்ரவரி 22 மும்பைத் தொழிலாளர்களின் நாளாக இருந்தது.”14
மும்பை மட்டுமல்ல, இன்றைய பாகிஸ்தானில் இருந்த கராச்சியிலும் கடற்படை வீர்கள் மோதலைத் துவங்கினர். அவர்களை சுடுவதற்கு கூர்கா படை வீரர்கள் மறுத்தனர். இந்தியாவின் தேசிய இனங்கள் அனைத்தும் மத வேறுபாடுகள் இன்றி ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து ஒன்றிணைந்து போர் புரிந்த நாட்கள் அவை.
மும்பைக்கு அடுத்தபடியாகக் கராச்சிதான் கடற்படை வீரர்களுக்கும், ஆங்கிலேயப் படைவீரர்களுக்கு இடையில் நடைபெற்ற உண்மையான மோதல் களமாக விளங்கியது. துணிவாகப் போரிட்ட இந்துஸ்தான் என்ற பழைய போர்க்கப்பலில் இருந்த கடற் படையினரைச் சுட பிறப்பிக்கப்பட்ட கட்டளைகளுக்கு கீழ்ப்பணிய குர்கா படைவீரர்கள் மறுத்தனர். பின்னர் குர்கா படை வீரர்கள் மாற்றப்பட்டு ஆங்கிலேயப் படைவீரர்கள் கொண்டு வரப்பட்டனர்.
கடல், தரை இராணுவப் பிரிவுகளோடு விமானப் படையும் போராட்டத்தில் இணைகிறது.
……..பல்வேறு இடங்களில் கலகக்காரக் கடற்படை வீரர்களுக்கு ஆதரவு தெரிவித்து வேலைநிறுத்தத்திலும் ஈடுபட்டனர். பம்பாயில் நடைபெற்ற ஆதரவு தெரிவிக்கும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் இந்திய விமானப்படையைச் சேர்ந்த ஆயிரம் வீரர்கள் பங்கேற்றனர் என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது. அது போலவே பூனே, கல்கத்தா, மதராசு மற்றும் அம்பாலாவில் நடைபெற்ற போராட்டங்களிலும் விமானப்படை வீரர்கள் பங்கேற்றனர். தத்தாவை மேற்கோள் காட்டுவோமானால், ”பம்பாய்க்குச் செல்ல உத்தரவிடப்பட்டிருந்த ராயல் இந்திய விமானப்படையின் ஒரு படையணி ஜோத்பூரில் முடங்கிவிட்டது. ஒவ்வொரு விமானமும் மர்மமான முறையில் இயந்திரக் கோளாரைச் சந்தித்தது.”15
இதோ உ.பி நகரங்களில் நிலை கொண்டிருந்த விமானப்படை வீரர்கள் ஐ.என்.ஏ பாதுகாப்பு நிதிக்கு நன்கொடை அனுப்புகின்றனர்.
உத்தரபிரதேசத்தின் அப்போதைய ஆளுநராக இருந்த ஹாலட் அலகாபாத், பாம்ராலி, கான்பூர் ஆகிய இடங்களில் நிறுத்தப் பட்டிருந்த விமானப்படை வீரர்கள் ஐ.என்.ஏ. பாதுகாப்பு நிதிக்குத் தங்களுடைய பங்களிப்புகளை அனுப்பியிருந்தனர் என்று நவம்பர் 19, 1945 என்று வேவெலுக்குத் தெரிவித்தார். 16 ஐ.என்.ஏ. வீரர்கள் இராணுவ நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்படுவதைக் கல்கத்தாவில் இருந்த இந்திய விமானப்படை முகாம் எதிர்த்தது. ஐ.என்.ஏ. பாதுகாப்பு நிதிக்கு அனுப்பப்பட்ட குறிப்பில் அது ”வீரம் செறிந்த தேசபக்தி மிகுந்த மைந்தர்களின் பாதுகாப்பிற்காக ” எனக் குறிப்பிட்டிருந்தது.17
அடுத்ததாக போலீசாரும் களத்தில் குதிக்கின்றனர்.
சில இடங்களில் காவல் துறையினரும் கலகம் விளைவித்தனர். மார்ச் 1946-ல் காவல் துறையினர் அலகாபாத் மற்றும் டில்லியில் பட்டினிப் போர் நடத்தினர். ஏப்ரல் மாதத்தில் 10,000 காவல்துறையினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். செப்டம்பர் மாதத்தில், பாட்னா மற்றும் பெகுசாரையில் இராணுவக் காவல்துறையினர் வேலை நிறுத்தம் செய்தனர்…….
….வீரஞ்செறிந்த கடற்படை வீரர்கள் எவ்வித அச்சுறுத்தலுக்கும் அடிபணியவில்லை . குண்டுவீசும் விமானங்களை அனுப்பிக் கடற்படையை அழிப்போம் என்ற அட்மிரல் கோட்ப்ரீயின் மிரட்டலுக்கு அஞ்சவில்லை. அவர்கள் தங்களை வழிநடத்த வருமாறு அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துத் தங்களால் இந்திய தேசிய கடற்படை என்று மறு பெயர் இடப்பட்டிருந்த கடற்படையை அவர்களிடம் ஒப்படைப்பதாக உறுதியளித்தனர். ஆனால் சி.பி.ஐ. உள்ளிட்ட எந்தவொரு அரசியல் கட்சியும் கலகக்காரக் கடற்படை வீரர்களுடன் தொடர்பு வைத்திருந்தும் அவர்களுக்கு செவி மடுக்கவில்லை .
இதுதான் அன்றைய அவலநிலை. காங்கிரசு, முசுலீம் லீக் போன்ற கட்சிகள் ஆங்கிலேயரின் தாளத்திற்கு வாத்தியம் இசைத்த போதும், உழைக்கும் மக்களிடம் வேர் விட்டிருந்த கம்யூனிஸ்டுக் கட்சியும் இந்த போராட்டத்திற்கு தலைமையேற்க மறுத்துவிட்டது. இந்நிலையில் தனது இன்னுயிரை பணயம் வைத்து போராடிய வீரர்கள் என்ன செய்வார்கள்? நாடெங்கும் எழுச்சி ஏற்பட்டிருந்தாலும் ஒரு புரட்சிகரக் கட்சி வழிநடத்துவதற்கு இல்லை எனும் போது அவர்கள் என்ன செய்ய முடியும்?
தத் எழுதியதாவது “அறுதிப் பெரும்பான்மையினர் மரணம் வரை போரிடவே விரும்பினரே தவிர சரணயடைவதற்காக அல்ல.”18 இறுதியாகக் கடற்படை மைய போராட்டக் குழுவானது காங்கிரசு மற்றும் லீக்கிடம் சரணடைகிறோமே தவிர ஆங்கிலேய ஆட்சியிடம் அல்லவென கூறிச் சரணடைய முடிவெடுத்தது. மக்களுக்கு விடுத்த கடைசி அறிக்கையில் அவர்கள் கூறியதாவது: ”முதன்முறையாக படைவீரர்களின் குருதியும் மக்களின் குருதியும் ஒரே நோக்கத்திற்காக இரண்டறக் கலந்து ஆறாக ஓடியது. படைகளில் அங்கம் வசிக்கும் நாங்கள் இதை மறக்கவே இயலாது. எங்களுடைய சகோதரர்களும், சகோதரிகளுமாகிய நீங்கள் மறக்க மாட்டீர்கள் என்பதை நாங்கள் அறிவோம். நமது மாபெரும் மக்கள் வாழ்க. ஜெய்ஹிந்த்.”19
சரணடைந்த வீரர்களை பிரிட்டிஷ் இந்திய அரசு என்ன செய்தது?
சரணடைந்ததற்கு பின்பு மனிதவேட்டை தொடங்கிற்று. 2000க்கும் மேற்பட்ட கலகக்காரர்கள் தளைப்படுத்தப்பட்டு முகாம்களில் அடைக்கப்பட்டனர். ஏறக்குறைய 500 பேருக்குத் தண்டனைகள் வழங்கப்பட்டு சாதாரணக் குற்றவாளிகளாக நடத்தப்பட்டனர். “எவ்விதமான ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது” என உறுதியளித்திருந்த மூத்த காங்கிரசு தலைவர்கள் அவ்வாக்குறுதியை காப்பாற்ற ஒன்றுமே செய்யவில்லை.20
கடற்படைக் கலகத்தின் போது துரோகவேலை பார்த்த காங்கிரசு தலைவர்களின் பங்கை சுனிதி குமார் கோஷ் ஆணவப்படுத்துகிறார்.
வரலாற்றுச் சிறப்பு மிக்க கடற்படைக் கலகத்தின் போது காங்கிரசு தலைவர்கள் ஆற்றிய பங்கு என்ன ? சர்தார் பட்டேல், அபுல் கலாம் ஆசாத், எஸ். கே. பாட்டீல் (பம்பாய் மாகாணக் காங்கிரசு கமிட்டிச் செயலாளராகவும் பின்னர் மைய அரசின் அமைச்சராகவும் இருந்தவர்) போன்ற காங்கிரசு தலைவர்களும், முஸ்லீம் லீக்கைச் சார்ந்த ஜின்னா மற்றும் சுந்தரிகரும் கடற்படை மையப் போராட்டக் குழு விடுத்திருந்த பிப்ரவரி 22 வேலைநிறுத்தத்தை வெளிப்படையாக எதிர்த்துக் கடற்படை வீரர்களை ஆங்கிலேயரிடம் சரணடையுமாறு அறிவுறுத்தினர்.
பம்பாய் ஆளுநருடன் பாட்டீல் இரகசிய ஆலோசனைகளில் ஈடுபட்டிருந்தார். காங்கிரசும், லீக்கும் மக்களை எதிர்த்துப் போரிடும் பொருட்டு காவல்துறைக்கும், ஆங்கிலேய இராணுவப் படைகளுக்கும் உதவுவதற்காக ஆங்கிலேய அரசுக்கு “தன்னார்வத் தொண்டர்களை” அனுப்பின.21
பிப்ரவரி 22 அன்று வேவெலுக்கு எழுதிய கடிதத்தில் கோல்வில்லே கூறும்போது, தான் “பல தன்னார்வத் தொண்டர்களைக் கண்டதாகவும் அவர்களுடைய பணி குறிப்பிட்ட எல்லைக்குட்பட்டவாறு இருந்தது எனினும்… பயனுள்ளதாக இருந்தது” என்று எழுதினார்.”
காங்கிரசு மற்றும் லீக் தலைவர்களின் கடுமையான எதிர்ப்புகளுக்கிடையில் பம்பாய் பொது வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்தியது. தொழிலாளர்களும், மாணவர்களும் காங்கிரசு மற்றும் லீக் தன்னார்வத் தொண்டர்களின் துணைகொண்டு ஒடுக்க முனைந்த ஆங்கிலேய இராணுவப் படைகளுடனும், ஆயுதந்தாங்கிய காவல் துறையினருடனும் தெருமுனைப் போர்களில் இறங்கினர்.
பம்பாய் அரசாங்கத்தின் அனுமதி பெற்று பிப்ரவரி 26 அன்று பம்பாயில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் நேருவும், பட்டேலும் ‘பம்பாயில் பரவலாக நடைபெற்ற மக்கள் போரை’ அதாவது ‘ஏகாதிபத்திய எதிர்ப்புக் கலகப் பதாகையை உயர்த்திப் பிடிக்கத் துணிந்த கடற்படை வீரர்கள், தொழிலாளர்களின் எதிர்ப்புப் போராட்டத்தை’ வன்மையாகக் கண்டித்தனர். அடுத்த நாள் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய நேரு ”இது போன்ற வேண்டுகோளை (வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு தருமாறு பம்பாய் நகருக்கு விடுக்கப்பட்ட அழைப்பு) விடுப்பதற்கு ராயல் இந்தியன் கடற்படையின் மையப் போராட்டக்குழுவுக்கு எவ்வித உரிமையும் இல்லை. நான் இது போன்ற செயல்களை அனுமதிக்க மாட்டேன்.22 நேருக்களுக்கு மட்டுமே வேலை நிறுத்தங்களுக்கு அழைப்புகள் விடுக்கும் உரிமை இருந்தது போலும்!
அகிம்சையின் தூதுவர் காந்தி கண்மூடித்தனமான வன்முறைக் கோரதாண்டவத்தைக் கட்டவிழ்த்துவிட்டதற்காகக் கலகக்காரர்களைக் கண்டித்தார். மக்களை உண்மையில் பலி வாங்கிய ஆங்கிலேய ஆட்சியால் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த உண்மையான வன்முறைக் கோரதாண்டவத்தை அவர் கண்டிக்கவில்லை. அவரைப் பொறுத்தவரை, “வன்முறை நடவடிக்கைக்காக இந்துக்களும் முசுலீம்களும் பிறரும் ஒன்று சேர்வது பாவகரமான செயல்..” இந்தியாவிற்கு விடுதலை வழங்குவோம் என்ற ஆங்கிலேயரின் கூற்றுக்களை நம்ப மறுத்தவர்களையும் அவர் தொடர்ந்து கண்டித்தார். ஒன்றுபட்ட மக்களின் வன்முறைப் போராட்டம் பாவகரமானது எனினும், அகிம்சையின் இறைத்தூதர் இந்தியாவின் பிரச்சனைகளுக்கு தீர்வாகச் சில இலட்சம் மக்கள் கொல்லப்படக்கூடிய நிகழ்வுகளான இந்துக்களுக்கும் முசுலீம்களுக்கும் இடையிலான வகுப்புக் கலவரங்களையும் ”சகோதர யுத்தத்தையும்” எதிர்நோக்கி இருந்தார்.
மும்பை கடற்படை வீரர்களின் வீரஞ்செறிந்த எழுச்சியை ஆங்கிலேயர்கள் மட்டுமல்ல, காங்கிரசும் காந்தியும் இதர தலைவர்களும்தான் சேர்ந்து கருவறுத்தார்கள். முசுலீம் லீக் அதற்கு ஒத்தூதியது. கம்யூனிஸ்ட் கட்சியோ வீரர்களைக் கைவிட்டது. இந்தியா முழுவதும் இப்படி படையணிகளில் ஏற்பட்ட கலகம்தான் ஆங்கிலேயரை ஆட்சி மாற்றம் குறித்து உடன் முடிவெடுக்குமாறு நிர்பந்தித்தது. சுடுவதற்கு படை இல்லாதபோது ஒரு ஏகாதிபத்தியம் எப்படி ஆள முடியும்? ஆனாலும் காங்கிரசு என்ற துரோகப் படை இருந்த படியால் ஆங்கிலேயர்கள் தனது நலன்களை பாதுகாத்துக் கொண்டே ஆட்சியை தனது காங்கிரசு அடிமைகளுக்கு கைமாற்றிக் கொடுத்தனர்.
சுனிதி குமார் கோஷின் ”நக்சல்பாரி முன்பும் பின்பும்” நூலில் அவரால் எடுத்தாளப்பட்ட ஆதார நூல்களின் பட்டியல்:
-
1 – Ronald Robinson, ‘Non-European Foundations of European Imperialism’, in R Owen and B Sutcliffe (Eds), Studies in the Theory of imperialism, p. 120
-
2 – Transfer of Power , XII, pp. 790-1; Selected Works of Jawaharlal Nehru, XIV, p.47.
-
3 – Transfer of Power, IV, pp.333-8; 340-4,365-9; V, pp. 1-2,127,424,431; Collected Works of Mahatma Gandhi (CWMG), LXXX, pp.444- 5; HM Seerbhai, Partition of India, p.32 and fn 15.
-
4 – Transfer of Power, VI, p.455; S Gopal (Ed.), Selected Works of Jawaharlal Nehru, XIV, p.497 – emphasis added.
-
5 – Cited in RP Dutt, Freedom for India, front cover page.
-
6 – Transfer of Power, VI, p.713.
-
7 – Ibid, pp.543, 582.
-
8 – RP Dutt, Freedom for India, London, 1946.
-
9 – Selected Works of Jawaharlal Nehru (SWJN), XV, p.92-emphasis added.
-
10 – See SWJN, XIV, pp. 195, 207, 229, 231, 241, 252, 254, 491, 493, passim. Emphasis added.
-
11 – Cited in RJ Moore, Escape from Empire, p. 76.
-
12 – BC Dutt, Mutiny of the Innocents, p.61; Hindusthan Standard (a daily now extinct), 21.1.1947
-
13 – See SWJN, XV, p. 1, note 2.
-
14 – BC Dutt, op cit, pp. 174,175.
-
15 – BC Dutt, op cit, pp. 174,175
-
16 – Transfer of Power VI, pp. 507-8.
-
17 – SWJN,XIV,p.543,fn.4.
-
18 – Dutt, op cit, p.181
-
19 – Ibid, p. 185.
-
20 – Ibid, pp.185-6
-
21 – See Bombay governor John Colville’s report to Viceroy Wavell, February 27,1946, Transfer of Power, VI, pp.1079-84; See especially p.1082
-
22 – SWJN, XV, pp. 4,13; Transfer of Power, VI, p. 1083-emphasis added.
நூல்: நக்சல்பாரி முன்பும் பின்பும்
ஆசிரியர்: சுனிதிகுமார் கோஷ்
தமிழாக்கம்: கோவேந்தன்
பக்கங்கள்: 560
விலை: 350
வெளியீடு: விடியல் பதிப்பகம்
23/5, ஏ.கே.ஜி. நகர், 3வது தெரு,
உப்பிலிபாளையம் அஞ்சல்,
கோயம்புத்தூர் – 641015
தொலைபேசி: 0422 – 2576772, 6789 457941
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram