27.12.2024
அண்ணா பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் வன்புணர்வு!
தமிழ்நாடு அரசே குற்றவாளி!
கண்டன அறிக்கை
அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து வரும் மாணவி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட நிகழ்வானது அனைவரையும் பதைப்பதைக்கச் செய்துள்ளது. மாணவியை பாலியல் வன்புணர்வு செய்த ஞானசேகரன் என்பவன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.
இந்நிகழ்வு தொடர்பாக தமிழ்நாடு அரசு மற்றும் போலீசின் நடவடிக்கைகள் மிகவும் வெறுக்கத்தக்கதாக உள்ளன. ஒரு பல்கலைக்கழகத்தில் அதுவும் பல்கலைக்கழக வளாகத்தில் எவனோ ஒருவன் ஒரு மாணவியை பாலியல் வல்லுறவு செய்ய முடியும், அதை வீடியோ பதிவு செய்து கொண்டு மிரட்டவும் முடியும் என்றால் இப்படிப்பட்ட நபர்களுக்கு அந்தத் துணிச்சல் எப்படி வந்தது?
இப்பிரச்சனையில் தமிழ்நாடு அரசுக்கும் பல்கலைக்கழகத்துக்கும் பல்கலைக்கழக துணை வேந்தருக்கும் எவ்வித பொறுப்பும் இல்லையா?
பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவர்களை பாதுகாப்பது பல்கலைக்கழக துணைவேந்தரின் பொறுப்பு இல்லையா? நண்பரோடு ஒரு பெண் தனிமையில் பேசிக் கொண்டிருந்தால் யார் வேண்டுமானாலும் பாலியல் வன்முறை நிகழ்த்தி விட்டு சென்று விடலாமா?
இதையெல்லாம் பரிசீலிக்காமல் இது ஒரு மாணவியின் தனிப்பட்ட பிரச்சனை; அதை அரசியலாக்காதீர்கள் என்கிறார் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன். இதைவிட ஒரு கேடுகெட்டச் சொல்லை யாராவது சொல்ல முடியுமா? பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள முட்புதர்களை அகற்றப் போகிறோம் என்கிறார் அமைச்சர். முட்புதர்கள் இருப்பதனால் தான் பாலியல் வன்புணர்வுகள் நடக்கிறதா என்ன?
இதெல்லாம் தெரியாதவர் அல்ல உயர் கல்வித் துறை அமைச்சர். மாறாக இப்பிரச்சனைக்கும் தமிழ்நாடு அரசுக்கும் தொடர்பு இல்லை என்பதைத்தான் கூறிக் கொண்டிருக்கிறார்.
இந்நிகழ்வு தொடர்பாக நேற்று பேட்டியளித்த சென்னை மாநகர காவல் ஆணையர், கம்ப்யூட்டரில் உள்ள பிரச்சனை காரணமாக முதல் தகவல் அறிக்கை வெளியாகி இருக்கலாம் என்கிறார். ஆக முதல் தகவல் அறிக்கை வெளியாகி அந்த மாணவியின் தகவல் வெளியானதற்கும் போலீசுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. ஆணையர் அவர்களே, மாணவியின் தகவல் வெளியானது என்பது உங்களுக்கு கம்ப்யூட்டர் தொடர்பான பிரச்சனை. ஆனால் அது வெளியானதால் ஏற்பட்ட பாதிப்புக்கு யார் பொறுப்பேற்பார்கள்? மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் வந்த பிறகு இதுவரை ஒரு முதல் தகவல் அறிக்கை கூட பதிவு இல்லையா? அல்லது பதிவு செய்யப்பட்டவை அனைத்தும் இப்படித்தான் வெளிப்படையாக இணையத்தில் இருந்தனவா?
ஆக பல்கலைக்கழகத்திற்கும் தமிழ்நாடு அரசுக்கும் போலீசுக்கும் இந்த நிகழ்வுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. இது ஒரு தனிப்பட்ட பிரச்சனை. அந்தப் பிரச்சனையை அந்த மாணவி போலீசின் கவனத்திற்கு கொண்டு வந்தார். அடுத்த நாளில் குற்றவாளி கைது செய்யப்பட்டு விட்டார். இவ்வாறு நாம் புரிந்து கொண்டு விட்டால் இனியும் பெண்கள் மீதான பாலியல் வன்புணர்வு, பாலியல் வன்கொடுமை நடக்காது என்று முடிவு செய்து கொள்ளலாமா?
மக்களுக்காக போராடுவோர் மக்கள் பிரச்சனையில் தலையிடுவோர் மீது அடுத்தடுத்து வழக்குகளை போட்டு அவர்களை ரவுடி பட்டியலில் வைத்துத் துன்புறுத்தும் தமிழ்நாடு போலீசு, ஒரு தொழில் முறை குற்றவாளியை சகஜமாக நடமாட விட்டிருக்கிறது என்பது எவ்வளவு முரண்? ஆனால் அதுதான் உண்மை. பொறுக்கிகளும் ரவுடிகளும் திருடர்களும் துணிச்சலாக இயல்பாக நடமாடுகிறார்கள். மக்களுக்காக போராடுவோர் சிறையிலும் வழக்குகள் மூலமாகவும் சித்திரவதை செய்யப்படுகிறார்கள்.
இப்பிரச்சினை சென்னையில் நடைபெற்றது, அதுவும் ஒரு பல்கலைக்கழகத்தில். அதனால் அத்தனை மீடியாக்களும் அங்கே இருக்கின்றன. பிரச்சனை பெரிதாகிறது, வேறு வழியின்றி சென்னை உயர்நீதிமன்றம் இதை தானாக முன்வந்து வழக்காக விசாரிக்கிறது. இது போன்ற பெண்கள் மீதான பாலியல் வன்புணர்வு வழக்குகளில் போலீசும் தமிழ்நாடு அரசும் எவ்வாறு செயல்பட்டது, செயல்படுகிறது, செயல்படும் என்பதுதான் பெண்கள் மீதான பாலியல் வன்புணர்வு குற்றவாளிகளுக்கு ஏற்படக்கூடிய துணிச்சலுக்குக் காரணம்.
விருதாச்சலத்தில், தாழ்த்தப்பட்ட மற்றும் மனவளம் குன்றிய பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த குற்றவாளி 130 நாட்கள் கழித்து கைது செய்யப்பட்டான். பாதிக்கப்பட்டப் பெண்ணை 130 நாட்கள் மருத்துவ பரிசோதனை அனுப்பாமலும் பாலியல் வன்புணர்வு பிரிவுகளை முதல் தகவல் அறிக்கையில் பதியாமலும் இருந்த போலீசுக்காரர்கள் மீது இப்போது வரை தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.
இது தொடர்பாக தமிழ்நாடு எஸ்சி / எஸ் டி ஆணையம், மாற்றுத்திறனாளிகள் ஆணையம், மகளிர் ஆணையம் என எத்தனை ஆணையங்கள் அறிவிக்கை அனுப்பினாலும் தொடர்புடைய விருதாச்சலம் இன்ஸ்பெக்டர் முருகேசன் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசும் போலீசும் தயாராக இல்லை.
பெண்கள் மீது நடத்தப்படுகின்ற பாலியல் வன்முறைகளில் பெரும்பான்மையானவை போலீசின் கட்டப்பஞ்சாயத்துகளால் அழுத்தி வைக்கப்படுகின்றன. அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கு போன்றவை அரிதிலும் அரிதான ஒன்றே!
இதையெல்லாம் கவனிக்கின்ற எந்த ஒரு பாலியல் வக்கிரம் பிடித்த நபருக்கும் ஞானசேகரன் செய்ததைப் போன்று செய்யலாம் என்று துணிச்சல் வராமலா இருக்கும்?
அண்ணா பல்கலைக்கழக மாணவி மீது நடத்தப்பட்ட பாலியல் வன்கொடுமைக்கு முதலில் தமிழ்நாடு அரசு பொறுப்பேற்க வேண்டும். இது தொடர்பாக பல்கலைக் பல்கலைக்கழக துணைவேந்தர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.
மேலும், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை வழக்குகள் உடனுக்குடன் விசாரிக்கப்பட்டு நீதிமன்றங்கள் மூலம் தீர்ப்பளிக்கப்பட வேண்டும்.
ஆணாதிக்க மற்றும் பாலியல் நுகர்வு கலாச்சாரத்தை வேரறுக்கும் வகையிலான கல்வி முறைகள் மாணவர்களுக்கு கற்பிக்கப்பட வேண்டும்.
ஜனநாயகப் பூர்வமான மாணவர்களின் செயல்பாட்டுக்கு உறுதுணையாக இருக்கக்கூடிய மாணவர் சங்கங்கள் எவ்விதத் தடையும் இன்றி பல்கலைக்கழக வளாகங்களில் செயல்பட அனுமதி அளிக்க வேண்டும்.
பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை வழக்குகளில் குற்றவாளிகளிடம் பணம் பெற்றுக் கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு அநீதியை விளைவிக்கும் போலீசுக்காரர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டு அவ்வழக்கிலேயே இணைக்கப்பட வேண்டும்.
தமிழ்நாடு முழுவதும் பாலியல் வன்கொடுமை வழக்குகளில் புகார் அளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படாத வழக்குகள் அனைத்தும் கணக்கிடப்பட்டு, காரணமான போலீஸ் அதிகாரிகள் மீது உடனடியாக தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெண்களை பாலியல் நுகர்வு பொருளாக அணுகும் ஆபாச இணையதளங்கள் உடனடியாக தடை செய்யப்பட வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.
தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
9962366321
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram