“ஹிந்துத்துவா வாட்ச்”: சர்வதேச விருதைப் பெறும் காஷ்மீர் ஊடகம்!

ஹிந்துத்துவா வாட்ச் அமைப்பை காஷ்மீரப் பத்திரிக்கையாளர் ராகிப் ஹமீத் நாயக் உருவாக்கியுள்ளார். அதன்மூலம் இந்தியாவில் உள்ள ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் மீதான 4000க்கும் மேலான கிரிமினல் வன்முறைத் தாக்குதல்களை ஆவணப்படுத்தியுள்ளார்.

”இந்துத்துவா கண்காணிப்பு” (Hindutva Watch – ஹிந்துத்துவா வாட்ச்) என்பது ஒரு இணையதளம். இது இந்தியாவில் இந்துத்துவா கும்பலால் நிகழ்த்தப்படும் வெறுப்பு மற்றும் வன்முறைக் கிரிமினல் குற்றங்களைத் தொடர்ந்து ஆவணப்படுத்தி வருகிறது. “வெறுப்புப் பிரச்சாரத்திற்கு எதிரான நடவடிக்கை“க்கான உயரிய விருதான மதிப்பு மிக்க ஈவா லாஸ்மேன் (Eva Lassman) விருது இந்துத்துவா கண்காணிப்புக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஹிந்துத்துவா வாட்ச் அமைப்பின் இணைய தளம் மற்றும் சமூக வலைத்தள பக்கங்கள் மீதான ஒன்றிய அரசின் தடையை எதிர்த்த சட்டப் போராட்டங்களுக்கிடையே இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கோன்சாகா பல்கலைக்கழகத்தின் (Gonzaga University) வெறுப்பு ஆய்வு மையத்தினால் (Centre for the Study of Hate) வழங்கப்படும் இந்த விருது, வெறுப்பை எதிர்த்துப் போராடுவதற்கும்  நேர்மையான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும் உழைக்கின்ற தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களை அங்கீகரிக்கிறது.

ஹிந்துத்துவா வாட்ச் அமைப்பை காஷ்மீரப் பத்திரிக்கையாளர் ராகிப் ஹமீத் நாயக் (Raqib Hameed Naik) உருவாக்கியுள்ளார். இவர் இந்தியாவில் உள்ள ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் மீதான 4000க்கும் மேலான கிரிமினல் வன்முறைத் தாக்குதல்களை ஆவணப்படுத்தியுள்ளார். இந்தப் பணியை விருதுகள் குழுவின் தலைவர் ஆரோன் டானோவ்ஸ்கி பாராட்டியுள்ளார். வெறுப்பை எதிர்த்துப் போராடுவதில் அதன் குறிப்பிடத்தக்கத் தாக்கத்தை எடுத்துரைத்தார்.

இந்த ஆண்டு துவக்கத்தில், ஜனவரி 16 அன்று, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 69A பிரிவின் கீழ் இந்துத்துவா கண்காணிப்பு (@HindutvaWatchIn) –இன் எக்ஸ் கணக்கை இந்தியாவில் முடக்கி வைத்துள்ளது.


படிக்க: பாசிச பாஜக ஆளும் மாநிலங்களில் அதிகரிக்கும் முஸ்லீம்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சுகள்!


”ஹிந்துத்துவா வாட்ச் இந்த ஆண்டு கோன்சாகா பல்கலைக்கழகத்தின் ஈவா லாஸ்மேன் ’வெறுப்புக்கு எதிராக நடவடிக்கை எடு’ (Take Action Against Hate) விருதைப் பெற்றுள்ளது. அடுத்த மாத தொடக்கத்தில், தில்லி உயர் நீதிமன்றம் ஹிந்துத்துவா வாட்ச் மீதான அரசாங்கத்தின் முறையற்ற மற்றும் சட்ட விரோத தடையை எதிர்த்த எங்கள் மனுவை விசாரிக்க உள்ளது. நீதிமன்றம் இந்த சட்ட விரோதத் தடையை இரத்து செய்யும் என நாங்கள் நம்புகிறோம்” என்று நாயம் எக்ஸ் வலைத்தளத்தில் எழுதினார். அதிலேயே விருது வழங்கும் விழாவின் படங்களையும் இணைத்துப் பதிவிட்டிருந்தார்.

கனடாவில் வெறுப்புணர்வை எதிர்த்துப் போராடியதற்காக அங்கீகரிக்கப்பட்ட கனடா நாட்டின் சமூக சேவகர் லாண்டன் டர்லாக் (Landon Turlock) உடன் ஹிந்துத்துவா வாட்ச் விருதைப் பகிர்ந்து கொள்கிறது. விருது வழங்கும் விழா டிசம்பரில் நடைபெற்ற நிலையில், அக்டோபர் மாத தொடக்கத்தில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

நன்றி: தி வயர்

தமிழில்: நாகராசு

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க