02.01.2025

500 அரசுப் பள்ளிகளை தனியாருக்கு தாரை வார்த்து
புதிய கல்விக் கொள்கையை அடியொற்றிச் செல்லும் திமுக அரசு!

கண்டன அறிக்கை

டந்த டிசம்பர் 29ஆம் தேதி தனியார்ப் பள்ளிகளின் சங்க கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனியார்ப் பள்ளிகள் சங்கம் கொடுத்துள்ள 7 தீர்மானங்களை முதல்வரிடம் கொடுத்து நிறைவேற்றுவேன் என பேசியுள்ளார். அந்த ஏழு தீர்மானத்தில் ஒரு தீர்மானம் 500 அரசுப் பள்ளிகளை அருகில் உள்ள தனியார்ப் பள்ளிகள் தத்தெடுத்து மேம்படுத்தப் போவதாக உள்ளது. அந்தத் தீர்மானத்தைக் குறிப்பிட்டுப் பேசிய அமைச்சர் அடுத்த கல்வியாண்டில் இருந்து இது நடைமுறைப்படுத்தப்படும் என்பதையும் தெரிவித்துள்ளார்.

ஒன்றிய பா.ஜ.க அரசு புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்கு முன்பாகவே அதில் சொல்லப்பட்ட பல விஷயங்களையும் நடைமுறைப்படுத்தினார்கள். தொடர்ந்து அதை செய்து வருகிறார்கள். இப்போது திமுக அரசோ அதே வழியில் பயணிக்கத் தொடங்கியுள்ளது. ஆட்சிக்கு வந்த பிறகு புதிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக மாநிலத்துக்கு என்று ஒரு கல்விக் கொள்கை உருவாக்கப் போவதாக அறிவித்துக் கொண்டது திமுக அரசு. அதற்கான குழுவை உருவாக்கியது. ஆனால் அந்தக் குழுவில் இருந்து வெளியேறிய பேராசிரியர் ஜவகர் நேசன் அவர்கள் மாநில கல்விக் கொள்கையையும் அதில் புதிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாக உள்ள விஷயங்களையும் அப்போதே அம்பலப்படுத்தினார்.

ஏற்கெனவே திமுக அரசு கொண்டு வந்த நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் என்ற நிறுவனத்தின் தலைவராக டி.வி.எஸ் ஐயங்கார் நியமிக்கப்பட்டதும், அது அரசுப் பள்ளிகளை நேரடியாக கார்ப்பரேட் முதலாளிகளுக்குத் தாரை வார்ப்பதற்கான நடவடிக்கை என்று பல கல்வியாளர்களும் எமது மாணவர் அமைப்பு உட்பட பல மாணவர் அமைப்புகளும் அம்பலப்படுத்தி இருந்தோம்.

அதன் தொடர்ச்சி தான் இந்த 500 அரசுப் பள்ளிகளை தாரைவார்க்கும் திட்டம். இன்றைய நிலையில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கான நிரந்தர பணியிடங்களை நிரப்பாமல் தொடர்ந்து தற்காலிக ஆசிரியர்களை நியமித்து வருகிறார்கள். அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு மேம்படுத்தப்படாமல் மிகவும் மோசமான நிலைமைகளில் காட்சியளிக்கிறது. கழிவறை வசதி இருப்பதில்லை, விளையாட்டு மைதானங்கள் இருப்பதில்லை, ஆய்வகங்கள் இருப்பதில்லை. இது போன்ற அவலங்கள் நிறைந்த அரசுப் பள்ளிகள் ஏராளம். இதையெல்லாம் சரி செய்யாமல்தான் இப்போது தனியார்ப் பள்ளிகளிடம் தாரை வார்ப்பதாக அறிவிக்கிறார்கள். இதன் அர்த்தம் அரசுப் பள்ளிகளை நடத்த முடியவில்லை என்பது அல்ல; திட்டமிட்டே ஒழித்துக் கட்டி தனியாரிடம் தாரைவார்ப்பது. பி.எஸ்.என்.எல்-ஐ ஒழித்துக் கட்ட ஒன்றிய பாஜக அரசு செய்வது போல தான் இதுவும்.

ஏற்கெனவே எமது மாணவர் அமைப்பின் சார்பாக திமுக அரசு கொண்டு வந்த இல்லம் தேடி கல்வி, நம்ம ஸ்கூல் பவுண்டேஷன், வானவில் மன்றம், பள்ளி மேலாண்மை குழு போன்ற பல்வேறு அறிவிப்புகளும் எப்படி புதிய கல்விக் கொள்கையுடன் இணைந்தது என ஆரம்பம் முதலே அம்பலப்படுத்தி வருகிறோம்.

500 அரசுப் பள்ளிகளைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதை இப்போது பலரும் கண்டித்துக் கண்டனக் குரல்கள் எழுப்புகிறார்கள். ஓரிரு வாரத்திற்கு முன்பு தான் மத்திய அரசின் ஐந்தாம் எட்டாம் வகுப்புகளுக்கு கட்டாயத் தேர்ச்சி முறை ரத்து என்ற அறிவிப்பு வெளியில் வந்தது. அது எப்படி உழைக்கும் மக்களின் வீட்டுப் பிள்ளைகளைக் கல்வியில் இருந்து அப்புறப்படுத்தும் நடவடிக்கை என பல கல்வியாளர்களும் அம்பலப்படுத்தினார்கள். அதை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பேசினார். ஆனால் இப்போது புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துகிறார்கள். இந்த நிகழ்வுகள் எல்லாம் புதிய கல்விக் கொள்கை தீவிரமாக நடைமுறைக்கு வந்து கொண்டிருக்கிறது என்பதையே காட்டுகிறது. கல்விச் சூழலின் அபாயத்தை நம் கண் முன்னே நிறுத்துகிறது.

இன்று அறிக்கை விட்டுள்ள அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் பத்திரிகையில் வெளிவந்தது தவறுதலான செய்தி என பேசுகிறார். முப்பதாம் தேதி செய்தி வெளிவந்த போது அமைச்சருக்குத் தெரியாதா? அந்த செய்தி பொய் செய்தி என்றால் யார் அதை உத்திரவாதப்படுத்துவது தாங்கள் தானே அமைச்சரே! இப்போது அனைவரும் கண்டித்த உடன் பொய் செய்தி என்கிறார். நியாயமாகப் பார்த்தால் செய்தி வெளியிட்ட தினசரி இதழ்களைத் தான் கண்டித்திருக்க வேண்டும். ஆனால் கண்டன அறிக்கை விட்ட அனைவரையும் கண்டிக்கிறேன் என வன்மமாகப் பேசுகிறார். மற்றவர்கள் எதிர்க்கருத்து தெரிவித்து திருப்பி தாக்கி விடக்கூடாது என்பதற்காக அடுத்த வரியே சோர்வாகி விட்டேன் என்று நாடகம் போடுகிறார்.

தற்போது அமைச்சர் விட்டுக் கொண்டிருக்கும் அறிக்கையின் படி பார்த்தாலே கார்ப்பரேட் நிறுவனங்களின் சி.எஸ்.ஆர் நிதி பெண்களுக்கான கழிவறை கட்ட பயன்படும் என்கிறார். இதுபோல் அரசுப் பள்ளிகளை மேம்படுத்த வாங்கப்படும் உதவிகள் தான் இது என பேசுகிறார்.

ஆனால் உண்மையில் அனைவருக்கும் கட்டாய கல்வி என்ற பெயரில் 25% ஏழை பின்தங்கிய மாணவர்கள் தனியார்ப் பள்ளிகளில் சேரலாம் அதற்கான கட்டணத்தை அரசே ஏற்கும் என்றார்கள். ஏன் அதே பணத்தைக் கொண்டு அரசுப் பள்ளிகளில் கல்வி வழங்க முடியாதா? அரசுப் பள்ளிகளை மேம்படுத்த முடியாதா என கேள்விகள் எழுப்பி இன்று வரை போராடி வருகிறோம்.

அமைச்சர் அவர்கள் தற்போது பேசுவதும் அதேபோலத்தான் சி.எஸ்.ஆர் நிதி என்றும் கார்ப்பரேட் நிதி என்றும் கொஞ்சம் கொஞ்சமாக அரசுப் பள்ளிகளைத் தாரைவார்க்கும் நடவடிக்கைதான் இது. மத்திய அரசு நிதி கொடுப்பதில்லை என்ற ஒரு விஷயத்தை மட்டும் காட்டி அதற்கு எதிராக உள்ளது போல் அறிக்கை விடுகிறார் அமைச்சர். இது உண்மையைத் திசை திருப்புவது அப்பட்டமான சந்தர்ப்பவாதம். ஆனால் மறுபுறம் அரசுப் பள்ளிகளுக்கு உதவி என்ற கார்ப்பரேட்டின் கபளீகர நடவடிக்கைக்கு ஆதரவு தரும் இந்த சந்தர்ப்பவாதத்தை நாம் அம்பலப்படுத்த வேண்டி உள்ளது.

மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அனைத்து ஜனநாயக சக்திகளின் கடமை.

புதிய கல்விக் கொள்கையை அனுமதியாதே!
புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்!
என்பதை நோக்கி முன்னேறுவோம்.

பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகளும் மாணவர்களும் பெற்றோர்களும்
இந்த பாசிசத்திற்குத் துணை போகும் அபாயத்தை எதிர்த்து
களத்தில் நிற்கத் தயாராவோம்.

தோழர். ரவி,
மாநில ஒருங்கிணைப்புக் குழு,

புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு.
9444836642.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க