இஸ்ரேல் ராணுவத்தால் பாலஸ்தீன மக்கள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டதையும் பெண்களுக்கு நிகழ்ந்த பாலியல் துன்புறுத்தல்களையும் ஜெனிவாவை தளமாகக் கொண்டு இயங்குகின்ற “யூரோ மெட் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு” (Euro-med Human Rights Monitor) ஆவணப்படுத்தியுள்ளது. அதில் வெளியிடப்பட்டுள்ள தகவல்களும் பாதிக்கப்பட்ட மக்களின் வாக்குமூலங்களும் நமக்கு அதிர்ச்சியூட்டுவதாகவும் ஆத்திரங்கொள்ளச் செய்வதாகவும் உள்ளன.
இனவெறி இஸ்ரேல் அரசானது, வடக்கு காசாவில் உள்ள கமால் அத்வான் (Kamal Advan) மருத்துவமனையிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பல வாரங்களாக வான்வழி மற்றும் பீரங்கி குண்டுவீச்சு தாக்குதல்களை நடத்திவந்தது. அதனை தொடர்ந்து கடந்த 2024-ஆம் ஆண்டு டிசம்பர் 27-ஆம் தேதி கமால் அத்வான் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தியது. மருத்துவமனையில் ஆக்சிஜன் மற்றும் மின்சார கட்டமைப்புகள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்தி மருத்துவமனையின் செயல்பாட்டினை முடக்கியது. இத்தாக்குதலில் மருத்துவனை முழுவதும் அழிக்கப்பட்டு, மருத்துவமனையின் ஒரு பகுதியில் ஏற்பட்ட தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட ஊழியர்கள் பலரும் பலியாகினர்.
மேலும், மருத்துவமனை அருகில் உள்ள வீடுகளுக்கருகே வெடிகுண்டுகளை வைத்து, ஏராளமான மக்களைக் கொன்று குவித்துள்ளது. சில மக்களை சம்பவ இடத்திலேயே தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரமும் அரங்கேறியுள்ளது. அப்பகுதில் உள்ள மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றியதுடன், மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் ஹோசம் அபு சஃபியே, பத்திரிக்கையாளர் இஸ்லாம் அகமது, மருத்துவக் குழுவைச் சேர்ந்த உறுப்பினர்கள் உள்பட ஆயிரக்கணகான மக்களை கடத்திச் சென்றுள்ளது.
இஸ்ரேலின் கொடூர தாக்குதல்கள் குறித்து தன்னார்வ மருத்துவர் ஒருவர் கூறுகயில்,“நான் கமால் அத்வான் மருத்துவமனை அருகே 11 பொதுமக்களுடன் தங்கியிருந்தேன். டிசம்பர் 27 அன்று நள்ளிரவு 12.30 மணிக்கு ராணுவம் வீடுகளுக்கு முன்னாள் வெடிகுண்டுகளை வைப்பதைக் கண்டேன். உடனே அதிலிருந்து தப்பிப்பதற்காக அருகில் உள்ள பகுதிக்கு சென்றேன். பிறகு அரை மணிநேரத்தில் மினியேச்சர் அணுகுண்டுகளைப் போன்று அதிக சத்தத்துடன் வெடிக்க ஆரம்பித்தது.
பின்னர் காலை மீண்டும் எங்கள் வீட்டிற்கு திரும்பியபோது, ராணுவம் வீட்டின் மீது ஷெல்களைக் கொண்டு தாக்குதல் நடத்த ஆரம்பித்தன. “நாங்கள் பொதுமக்கள்” என்று கத்த ஆரம்பித்தோம். வெள்ளைக் கொடியோடு வெளியே சென்ற வீட்டின் உரிமையாளரை இஸ்ரேல் ராணுவம் சுட்டுக் கொன்றது. குண்டு வெடிப்பினால் மனநலம் பாதிக்கப்பட்டது போன்ற குழந்தை எங்களிடம் இருந்த நிலையில், எங்களை சரணடையும்படி இஸ்ரேல் ராணுவம் பாலஸ்தீன கைதியை எங்களிடம் அனுப்பியது.
ஆனால், “நாங்கள் பொதுமக்கள்” என்று வெள்ளைக்கொடியை உயர்த்தினோம். பின்னர் எங்கள் அனைவரையும் கல்லறைக்கு அருகில் உள்ள திறந்தவெளி பகுதிக்கு கூட்டிச் சென்று உள்ளாடைகளை அகற்றி உறைபனியில் நிற்கவைத்தனர். அப்போது வீட்டின் வெளியே வந்த குழந்தை இஸ்ரேல் ராணுவத்தை நோக்கி ஓடியது. நான் கூப்பிட்டும் பதில் சொல்லவில்லை. உடனடியாக ராணுவம் குழந்தையை இறக்கமின்றி சுட்டுக் கொன்றது” என்று தெரிவித்தது நெஞ்சை உறைய வைக்கிறது.
மேலும், “ஒரு வீரன் குறிப்பிட்ட இடங்களில் எங்களை கூடுமாறு தெரிவித்தான். பின்னர் எங்களில் காயமடைந்த ஐந்து பேரை தொட்டியின் முன்பு நிற்கவைத்து எந்த கேள்வியும் கேட்காமல் சுட்டுக்கொன்றனர். சிறிது நேரத்திற்கு பிறகு அல்-ஃபகுரா பகுதிக்கு 300 பேரை கூட்டிச் சென்று இரவு 8.30 மணிவரை உடம்பில் துணி இல்லாமல் நிர்வாணமாக இருக்க வைத்தனர். பலரை அப்பகுதியில் தடுத்து வைத்தனர். பின்னர் ஒரு அதிகாரி எங்களின் தலைக்கு மேல் சுட்டு எங்களை ஜபாலியாவை நோக்கி செல்லும்படி தெரிவித்தார்” என்றார்.
படிக்க: காசா: அப்பாவி பாலஸ்தீன மக்களை கொலைசெய்யும் பாசிச இஸ்ரேல் | படக்கட்டுரை
தாக்குதலின்போது மருத்துவமனையிலிருந்த செவிலியர்கள், நோயாளிகள், அவர்களது உறவினர்கள் இஸ்ரேலிய ராணுவத்தால் பாலியல் வன்முறைக்கும் பல சிறுமிகள் பாலியல் துன்புறுத்தலுக்கும் உள்ளாக்கப்பட்ட கொடூரத்தையும் மருத்துவர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலிய ராணுவத்தால் தங்களுக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமைகள் குறித்து பெண் ஒருவர் பேசுகையில், “ஒரு ராணுவ வீரன் ஒரு செவிலியரை அவளது கால்சட்டையை கழற்றுமாறு கட்டாயப்படுத்தினார். பின்னர் அவள் மீது கையை வைத்தார். அவள் எதிர்க்க முயன்றபோது அவன் அவளது முகத்தின் குறுக்கே பலமாக தாக்கினான். பின் அவளது மூக்கிள் இருந்து ரத்தம் வந்தது” என்றார்.
இஸ்ரேலிய ராணுவத்தைச் சேர்ந்த ஒருவன் அங்கிருந்த பெண் ஒருவரிடம் “ஆடையை கழற்று; இல்லையென்றால் அதை நாங்கள் வலுக்கட்டாயமாக கழற்றி விட்டுவிடுவோம்” என்று கூறியதை மற்றொரு பெண் ஒருவர் ஆதங்கத்துடன் எடுத்துரைத்தார்.
அதேபோல், தனது முக்காடை கழற்ற மறுத்த பெண்ணின் ஆடைகளை ராணுவ வீரன் கிழித்து மார்பை வெளிப்படுத்தி, “இப்போது அதை கழற்றுங்கள்” என்று பிற பெண்களையும் கட்டாயப்படுத்தியதை பாதிக்கப்பட்ட பெண்ணே கூறியுள்ளார்.
இதேபோன்று மருத்துவமனை ஊழியர் ஒருவர் கூறுகையில், “எங்கள் ஹிஜாப்களை அகற்றுமாறு வீரர்கள் எங்களுக்கு உத்தரவிட்டனர். ஆனால் நாங்கள் மறுத்துவிட்டோம். பின்னர் அவர்கள் 20 வயதுக்குட்பட்ட சிறுமிகளிடம் திரும்பி, அவர்களின் ஹிஜாப்களை அகற்றுமாறு கோரினர். ஆனால் அவர்களும் மறுத்துவிட்டனர். பின்பு ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை அழைத்துச்சென்று அவர்களின் ஆடைகளை தூக்கி, கால்சட்டையை கீழே இறக்கி அச்சுறுத்தல் செய்தனர். அதேபோன்று எங்களையும் துன்புறுத்துவதற்கு முடிவு செய்தனர்” என்று தங்கள் மீது தொடுக்கப்பட்ட பாலியல் வன்கொடுமையை யூரோ மெட் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பிடம் கூறியுள்ளார்.
ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சி காலத்தில் யூத இன மக்கள் வதைமுகாம்களில் அடைத்து வைக்கப்பட்டு சொல்லொணா கொடுமைகளுக்கு உட்படுத்தப்பட்டனர் எனில், இன்று ஒட்டுமொத்த காசாவும் பாலஸ்தீன மக்களின் வதைமுகாமாக மாறியிருக்கிறது என்பதை இக்கொடூரங்களை நிரூபிக்கின்றன.
யூரோ மெட் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு வெளிக்கொண்டு வந்திருக்கும் இந்த உண்மைகள் அனைத்தும் டிசம்பர் 27 தாக்குதல் அன்று நடந்தவை மட்டுமே. இவையன்றி கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7 அன்று காசா மீதான இஸ்ரேலின் இன அழிப்பு போர் தொடங்கியதிலிருந்து மனிதத்தன்மைக்கு துளியும் சம்பந்தமற்ற இத்தகைய ஆயிரக்கணக்கான சம்பவங்கள் காசாவில் நடந்தேறி வருகின்றன.
இதுகுறித்து தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ள யூரோ மெட் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு, “கடந்த 14 மாதங்களாக இனவெறி இஸ்ரேலின் இனப்படுகொலையை தடுத்து நிறுத்துவதற்கு எந்தவித சட்டப்பூர்வ நடவடிக்கைகளையும் எடுக்கத் தவறியது, போரை நிறுத்துவதற்கு நிர்பந்திக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியது போன்ற காரணங்களால் சர்வதேச நாடுகள் இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு துணைபோகின்றன. சில நாடுகள் வெளிப்படையாக ஆதரிக்கின்றன என்று தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் இஸ்ரேல் நடத்திவரும் போரை தடுத்து நிறுத்துவதற்கு எந்தவித நடவடிக்கையையும் எடுக்காமல் அபாயகரமான தோல்வியைத் தழுவியுள்ளது. என்றும் யூரோ மெட் அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும், வலுக்கட்டாயமாக இடம்பெயர்ந்த பாலஸ்தீன மக்கள் தங்களது வீடுகளுக்கு திரும்புவதற்கும், கடத்தப்பட்ட பாலஸ்தீன மக்களை விடுவிப்பதற்கும், காணாமல் ஆக்கப்பட்ட பாலஸ்தீன மக்களின் தகவலை வெளிப்படுத்துவதற்கும் அவ்வமைப்பு கோருகிறது. காசா மற்றும் வடக்கு காசாவில் உள்ள மக்களின் தேவையை பூர்த்தி செய்வதற்கு உயிர்காக்கும் பொருட்கள் தங்குதடையின்றி காசாவுக்குள் செல்வதற்கு உடனடியாக அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும்; காசா மற்றும் பாலஸ்தீனப் பகுதிகளில் இருந்து இஸ்ரேல் படைகள் வெளியேறுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது.
யூரோ மெட் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு முன்வைத்துள்ள இக்கோரிக்கைகள் அனைத்தும் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும். அக்கோரிக்கைகளை நிறைவேற்ற பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக உலகம் முழுவதுமுள்ள பரந்துப்பட்ட உழைக்கும் மக்கள் போராட்டங்களை கட்டியமைக்க வேண்டும். இப்போராட்டங்களை “காசா மீதான இன அழிப்பு போரை நிறுத்து” என்று இனவெறி இஸ்ரேலுக்கு எதிராக கட்டியமைக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.
நன்றி – கவுண்ட்டர் கரண்ட்ஸ்
ஆசாத்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram