முரசொலி இடத்தில் புதிய ஜனநாயகம்

நரிக்கும் கொக்குக்கும் முறையே ஒரு மானும் மீனும் நண்பர்களாகி தம் இனத்தவரை அவைகளுக்கு இரையாக்கிக் கொண்டிருந்தால் மான்மீதும் மற்றதுகள் மீதும் ஆத்திரப்படாமல் இருக்க முடியுமா?

1

ரம்ப பள்ளிகளிலே படிக்கும் சிறுவர்கள் காலை வகுப்பில் மட்டும் பாடம் படித்து விட்டு பிற்பகலில் அவரவர் குலத் தொழிலைக் கற்க வேண்டும் என்ற திட்டத்தை ராஜகோபாலாச்சாரியார் கொண்டுவந்து அந்த திட்டத்திற்கு புதிய கல்வித் திட்டம் என்ற பெயரையும் சூட்டினார். ஆனால் பெரியார் அவர்களோ இதற்கு குலக்கல்வி திட்டம் என பெயர் தந்தார். இந்தத் திட்டத்தைத் திரும்பப் பெறாவிட்டால் பார்ப்பனர்கள் வாழும் அக்ரஹார பகுதிகளை எரிக்கும் போராட்டங்களை நடத்துவோம் என்றார். தீப்பந்தமும் பெட்ரோலும் தயாராகட்டும் என்று தனது தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

திராவிட கட்சிகளின் தொடர் போராட்டத்தால் ராஜாஜி பதவியையே விட்டு ஓடினார். இந்த ராஜாஜியைக் காப்பாற்றுவதற்கு தமிழரசு கழகம் என்ற அமைப்பை உருவாக்கிய மா.போ. சிவஞானம் முன் வந்தார். இவரை எதிர்த்து கலைஞர் கருணாநிதி அவர்கள் முரசொலி நாளேட்டில் எழுதியது… “வீழ்த்திக்கொல்ல வேல் கிடைக்காத காரணத்தால் கோல் கொண்டாவது கண்ணைக் குத்தி குருடாக்கி விடலாம் என்று எண்ணிக் கிளம்பும் இழிதகையானுக்கும் அதிகாரம் கை தவறிய காரணத்தால் இதிகாசத்தை கொண்டாவது திராவிட இனத்தாரை கபோதி ஆக்கி விடலாம் என்று கனவு காணும் ஆச்சாரியாருக்கும் அதிக வேறுபாடு இல்லை. நிச்சயமாக இல்லை. அதனால் தான் ஈழை கட்டி, இருமல் முற்றி, பாடை கட்டில் பயணம் நடத்த வேண்டிய பக்குவத்தை அடைந்து விட்ட பாரத இராமாயணங்களுக்கு ‘கர்ண பூஷணம்’, ‘பூணூல் தரிக்கும் புனித விழா’, ‘கல்யாண வைபோகம்’ எல்லாம் நடத்திக் களித்துக் கிடக்கிறது காக பட்டர் பரம்பரை..

அந்தப் பரம்பரைக்கு ஏற்படும் ஆசையிலும் ஆர்வத்திலும் அர்த்தம் இருக்கிறது ஒத்துக் கொள்கிறோம். தன் இனம், தன் சமுதாயம், அந்த சமுதாயத்தின் பரம்பரைப் பாத்தியமான உழைப்பில்லாப் பெருவாழ்வு, அத்தனையும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வாழ வேண்டும் என்பதிலே அந்த பரம்பரை அக்கறை காட்டுகிறது. நரி புதரிலே பதுங்கி நிற்கிறது நாக்கை நீட்டிக்கொண்டு. ஏன்? தான் வாழ. கொக்கு கரையிலே காத்திருக்கிறது ஏன்? தன் வயிற்றை நிரப்ப. நரியும் கொக்கும் தீனி தேட காத்திருக்கின்றன. அது அவைகளின் பசியைப் பொருத்த விஷயம். நரிக்கும் கொக்குக்கும் முறையே ஒரு மானும் மீனும் நண்பர்களாகி தம் இனத்தவரை அவைகளுக்கு இரையாக்கிக் கொண்டிருந்தால் மான்மீதும் மற்றதுகள் மீதும் ஆத்திரப்படாமல் இருக்க முடியுமா?

மன்னிக்க வேண்டும் நண்பர்களே! மான் இனத்திலும் மீன் இனத்திலும் இத்தகைய துரோகிகள் கற்பனைக்கு கூட கிடைக்க மாட்டா. உதாரணத்துக்காக சொன்னேன் அவ்வளவுதான். மனித இனத்திலேதான் அவர்களைக் காண முடியும். இராவணன் காலத்து விபீஷணன் முதல் ராஜாஜி காலத்து சிவஞானங்கள் வரையிலே அத்தகையோரை மனித சமுதாயத்திலேதான் காண முடியும்”. (முரசொலி 08.10.1954)

ராஜாஜி இடத்தில் அண்ணாமலை உள்ளிட்ட பாசிச கும்பல். மா.பொ.சி. இடத்தில் சீமான் போன்றவர்கள்.  புதிய கல்வி திட்டம் இன்று புதிய கல்விக் கொள்கையாக – தேசியக் கல்விக் கொள்கையாக அமுலாகிறது.  அந்த புதிய கல்விக் கொள்கையை வேறு வேறு பெயர்களில் தமிழகத்தில் அமல்படுத்துகிறது இன்றைய திராவிட மாடல் அரசு.  இன்று அதை எதிர்க்க கருணாநிதி இடத்தில் கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட பாசிச எதிர்ப்பாளர்கள். முரசொலி இடத்தில் புதிய ஜனநாயகம்.


மாநில ஒருங்கிணைப்புக் குழு,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு.
9444836642.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



1 மறுமொழி

  1. சிவஞானம் இடத்தில் சீமான் மட்டுமா?

    திமுக உள்ளிட்ட அனைத்து ஓட்டுக்கட்சிகளும் தான்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க