இதோ வருகிறார்கள்! | காசா | கவிதை

இதோ வருகிறார்கள்!

தோ வருகிறார்கள்
பாசிச இருளைக்கிழிக்கும்
நம்பிக்கை ஒளியேந்தி
வருகிறார்கள்

எழுபதாயிரம் டன்கள்
வெடிமருந்தைச்
சுமந்து

தாய்
தந்தை
மனைவி
கணவன்
குழந்தை
என மொத்த குடும்பங்களையும்
இழந்து வருகிறார்கள்

தங்கள் குழந்தைகளைப் புதைத்த இடங்களைக் காண கண்ணீரோடு வருகிறார்கள்

தகர்க்கப்பட்ட
தங்கள் வீடுகளைக்காண
படித்த பள்ளிகளைக்காண
ஓடி விளையாடிய
திடல்களைக்காண
ஓடோடி வருகிறார்கள்

இழப்புகளின் வேதனை அவர்கள் நெஞ்சில் தீராத வடுக்களாக மின்னுகின்றன
இருந்த போதும்
தன் தாய் மண்ணைக் காண ஆவலாக வருகிறார்கள்

காணாமல் போன பிள்ளை
தாயின் திசையறிந்து
வருவது போல
துள்ளிக்குதித்து வருகிறார்கள்

அவர்களுக்குத் தெரியும் இது நிரந்தரமல்ல என்று

அவர்களுக்குத் தெரியும்
இன்னும் லட்சம் உயிர்கள் இழக்காமல்
தாய்நாடு மீளாதென்று

ஹமாசை ஒழிப்பேன் பாலஸ்தீனத்தை ஒழிப்பேன் என்று கொக்கரித்தோர் அடங்கிப்போய் கிடக்கிறார்கள்

குண்டுகளை வீசி வீசி
இரத்தம் குடித்துக் குடித்து
தளர்ந்து போய்க்கிடக்கிறார்கள்

எல்லாவற்றையும் இழந்தவர்கள்
ஆரவாரமாய் வருகிறார்கள்
உற்சாகமாய் பாடுகிறார்கள்

கைக்குழந்தையின் பிணத்தை
ஒரு கையிலேந்தி
மறு கையில்
விடுதலைக் கொடியேந்தியவர்கள் அவர்கள்

ஒரே ஒரு
ஆலிவ் விதை
முளைக்கும் வரை
ஒரே ஒரு சூரியப்பறவை பறக்கும் வரை
ஒரே ஒரு பாப்பி
பூக்கும் வரை
ஒரே ஒரு பாலஸ்தீனர்
இருக்கும் வரை
பாலஸ்தீனமும் இருக்கும்

இது பாலஸ்தீனத்துக்கு மட்டுமல்ல
தேசிய இனமும்
உழைக்கும் வர்க்கமும்
நசுக்கப்பட்ட
ஒடுக்கப்பட்ட எல்லா இடங்களிலும் மீண்டும் தளிர்க்கும்
துளிர்க்கும்

மாபெரும்
மக்கள் சக்தி முன்
ஏகாதிபத்தியங்கள் மண்டியிடும்
மண்டியிட்டே தீரும்.


தோழர் மருது

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க