இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே ஏற்பட்ட உடன்பாடு காரணமாக ஜனவரி 19 முதல் போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது. இதன்மூலம், கடந்த பதினைந்து மாதங்களாக நடைபெற்று வந்த இஸ்ரேலின் இனப்படுகொலைத் தாக்குதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. போர் நிறுத்தம் மற்றும் பணயக் கைதிகளை விடுவிப்பதற்கான ஒப்பந்தம் தொடர்பான இந்த அறிவிப்பு ஜனவரி 15 அன்று மத்தியஸ்தம் செய்து வந்த அமெரிக்கா மற்றும் கத்தார் ஆகிய நாடுகளால் தனித்தனியே வெளியிடப்பட்டது.
இந்த போர் நிறுத்தம் மூன்று கட்டங்களாக நடைமுறைக்கு வரவுள்ளது.
முதல் கட்டம் 6 வாரங்கள் (42 நாட்கள்) நீடிக்கும். இந்த காலகட்டத்தில் ஹமாஸ் வசம் உள்ள இஸ்ரேலிய பணயக் கைதிகளில் 33 பேர் விடுவிக்கப்படுவர். அதற்குப் பதிலாக இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீனர்கள் சிலர் விடுவிக்கப்பட உள்ளனர். இடம்பெயர்ந்த பாலஸ்தீனர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்படுவர். அவர்களுக்கான நிவாரணப் பொருட்களை ஏற்றி வரும் சரக்கு வாகனங்கள் காசாவிற்குள் அனுமதிக்கப்படும். இஸ்ரேலிய படைகள் இராணுவ மண்டலமான நெட்சாரிம் தாழ்வாரத்தை (Netzarim Corridor) விட்டு வெளியேறும்; ஆனால், எகிப்துடனான எல்லையில் உள்ள பிலடெல்பி தாழ்வாரம் (Philadelphi Corridor) உட்பட காசாவின் எல்லைப் பகுதிகளில் இருந்து வெளியேறாது.
இரண்டாம் கட்டத்தில் இஸ்ரேலிய இராணுவத்தினர் உள்ளிட்ட மீதமுள்ள இஸ்ரேலிய பிணைக் கைதிகளும் பாலஸ்தீனர்கள் சிலரும் விடுவிக்கப்பட உள்ளனர். அதுமட்டுமல்லாமல், காசாவில் இருந்து இஸ்ரேல் இராணுவம் முழுவதுமாக பின்வாங்கும் என்றும் கூறப்படுகிறது.
மூன்றாம் கட்டத்தில் கொல்லப்பட்ட பணயக் கைதிகளின் உடல்களும் உடைமைகளும் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும். காசாவிற்கான மறுகட்டுமான திட்டமும் இதில் உள்ளடங்கும் என்று கூறப்படுகிறது.
உடன்பாட்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்களில் ஒப்புக்கொள்ளப் பட்டுள்ளவற்றை இனவெறி இஸ்ரேல் பின்பற்றுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இஸ்ரேல் அரசின் கூற்றுகளும் இஸ்ரேல் இராணுவத்தின் நடவடிக்கைகளும் போர் நிறுத்தத்தைச் சீர்குலைக்கும் வகையிலேயே அமைந்துள்ளன.
போர் நிறுத்த ஒப்பந்தம் இறுதியான பின்னரும் கூட தாக்குதல் நடத்தி 23 குழந்தைகள் உட்பட 86 பேரை இஸ்ரேல் படுகொலை செய்துள்ளது. அதுமட்டுமல்லாமல், நெட்சாரிம் தாழ்வாரத்தைக் கடந்து வடக்கு காசாவில் உள்ள தங்களது வீடுகளுக்குத் திரும்ப முயன்ற இடம்பெயர்ந்த பாலஸ்தீன மக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
இஸ்ரேலிய பணயக் கைதிகளை ஹமாஸ் ஒப்படைத்த பின்னர், இஸ்ரேல் மீண்டும் தனது தாக்குதலைத் தொடங்குமோ என்ற அச்சத்தை இஸ்ரேலின் இந்த போக்கு நமக்கு ஏற்படுத்துகிறது. ஹிஸ்புல்லா உடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் மதிக்காமல் நடந்து வருவதும் இந்த அச்சத்திற்கான மற்றுமொரு காரணமாக அமைந்துள்ளது.
இஸ்ரேல் – ஹிஸ்புல்லா இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி 60 நாட்களுக்குள், அதாவது ஜனவரி 26 அதிகாலைக்குள், இஸ்ரேல் இராணுவம் தெற்கு லெபனானில் இருந்து வெளியேறியிருக்க வேண்டும். ஆனால், இஸ்ரேல் அதைச் செய்யவில்லை. மாறாக, தெற்கு லெபனானில் தங்களது வீடுகளுக்குத் திரும்பிய மக்கள் மீது இஸ்ரேலிய படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன.
போர்நிறுத்தம் அமலில் உள்ள நிலையில், இஸ்ரேலுக்கு 2,000 பவுண்டுகள் (907 கிலோ) எடை கொண்ட மார்க்-84 குண்டுகளை வழங்க டிரம்ப் உத்தரவிட்டுள்ளது மேலும் அச்சத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், காசா பகுதியிலிருந்து அதிகப்படியான பாலஸ்தீனிய அகதிகளை ஜோர்டான், எகிப்து மற்றும் இதர அரபு நாடுகள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும், போரினால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள காசா பகுதியை ’சுத்தப்படுத்த’ இதுவே வழி என்றும் அவர் குறிப்பிட்டிருப்பது பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
காசாவின் தற்போதைய நிலை
காசா சுகாதார அமைச்சகத்தின் தரவுகளின்படி, இஸ்ரேல் இராணுவத்தின் தாக்குதலால் ஜனவரி 23 வரை 47,283 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்; 1,11,472 பேர் காயமடைந்துள்ளனர். இது உறுதிப்படுத்தப்பட்ட தகவலின் அடிப்படையிலான எண்ணிக்கை மட்டுமே. இடிபாடுகளை அகற்ற அகற்ற பலி எண்ணிக்கை விரைவாக அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
காசாவின் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள பலி எண்ணிக்கை ஒரு குறை மதிப்பீடு என்று “தி லான்செட்” வெளியிட்டுள்ள புதிய பகுப்பாய்வு தெரிவிக்கிறது. அக்டோபர் 2023 மற்றும் ஜூன் 2024 இறுதிக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் இஸ்ரேலின் வான்வழி குண்டுவீச்சு மற்றும் இராணுவ தரைவழி தாக்குதலில் இறந்தவர்களின் எண்ணிக்கை காசா சுகாதார அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்ட 37,900 என்பதை விட சுமார் 41 சதவிகிதம் அதிகம், அதாவது சுமார் 64,260 என்று அந்த ஆய்வு முடிவு கூறுகிறது.
ஜனவரி 14 நிலவரத்தின்படி, காசாவின் மொத்த மக்கள் தொகையில் (சுமார் 23 இலட்சம் மக்களில்) 90 சதவிகிதத்தினர் அதாவது சுமார் 19 இலட்சம் பேர் தங்களது சொந்த வீடுகளை விட்டு இடம்பெயர வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி உள்ளதாக “பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரண முகமை” (United Nations Relief and Works Agency for Palestine Refugees in the Near East – UNRWA) கூறியுள்ளது.
இஸ்ரேலின் குண்டு வீச்சால், காசாவின் உள்கட்டுமானம் முழுவதுமாக சிதிலமடைந்து உள்ளது. சுமார் 18 இலட்சம் மக்கள் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை (acute food insecurity) எதிர்கொண்டு வருவதாகவும், இதில் கிட்டத்தட்ட 1,33,000 பேர் பேரழிவு தரத்தக்க உணவுப் பாதுகாப்பின்மையை (catastrophic food insecurity) எதிர்கொள்கின்றனர் என்றும் பஞ்சம் குறித்த அறிவிப்புகளை வெளியிடும் “ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு நிலை வகைப்பாடு” (Integrated Food Security Phase Classification – IPC) அமைப்பின் தரவுகள் கூறுகின்றன.
செப்டம்பர் 2024 முதல் ஆகஸ்ட் 2025 வரையிலான காலகட்டத்திற்கான அதன் பகுப்பாய்வு, கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாட்டின் அளவு போர் தொடங்குவதற்கு முன்பு இருந்ததை விட 10 மடங்கு அதிகமாக இருப்பதாக எச்சரிக்கிறது. இஸ்ரேலின் அக்டோபர் 2023 தாக்குதலுக்கு முன்னரே காசாவின் சுமார் 80 சதவிகித மக்களுக்கு மனிதாபிமான உதவிகளின் தேவை இருந்தது என்று இந்த அமைப்பு கூறுகிறது.
சனத் (Sanad) என்ற நிறுவனத்தால் பகுப்பாய்வு செய்யப்பட்ட செயற்கைக்கோள் படங்கள், காசாவின் பாதிக்கும் மேலான (60 சதவீதம்) விவசாய நிலங்கள் இஸ்ரேலின் தாக்குதல்களால் சேதமடைந்துள்ளன-அழிக்கப்பட்டுள்ளன என்பதைக் காட்டுகின்றன.
இவ்வளவு பாதிப்புகளை எதிர்கொண்ட போதிலும் காசா மக்கள் தங்களது இருப்பிடங்களுக்கு பெரும் உற்சாகத்துடன் திரும்பிக் கொண்டு இருக்கின்றனர். அவர்களது மன உறுதி அவர்களை விரைவாக மீண்டுவரச் செய்யும்.
ஹமாஸ் அமைப்பை ஒழித்துக்கட்டாமல் ஓயப்போவதில்லை என்று கொக்கரித்த யூத பயங்கரவாத நெதன்யாகு அரசைப் பின்வாங்கும் நிலைக்குத் தள்ளியிருப்பது பாலஸ்தீன மக்களின் வெற்றியே!
பொம்மி
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram