தமிழ் நிலத்தின் அசைவ கடவுள் எப்படி எப்பொழுது சைவமாக மாறினார், சங்க காலத்தில் அவரது படையல் இது தான் என திருமுருகாற்றுப்படை மிக தெளிவாக எடுத்துறைக்கிறது. வரலாற்றை உள்ளபடியே புரிந்துகொள்ள நினைப்பவர்கள் இந்த பாடலை, அதற்கான தெளிவுரையை, சொல் அகராதியை முழுமையாக வாசிக்கவும். இதை வாசித்து நீங்கள் ஒன்றை புதிதாக புரிந்து கொண்டால் உங்களுக்கு இருப்பது கண், இல்லையேல் திருவள்ளுவர் அதை புன் என்கிறார்.
திருமுருகாற்றுப்படை 𝟲
“சிறுதினை மலரொடு விரைஇ மறிஅறுத்து – – – – – – 218
வாரணக்கொடியொடு வயிற்பட நிறீஇ
ஊர்ஊர் கொண்ட சீர்கெழு விழவினும் – – – – – – 220
ஆர்வலர் ஏத்த மேவரு நிலையினும்
வேலன் தைஇய வெறிஅயர் களனும்
காடும் காவும் கவின்பெறு துருத்தியும்
யாறும் குளனும் வேறுபல் வைப்பும்
சதுக்கமும் சந்தியும் புதுப்பூங் கடம்பும்
மன்றமும் பொதியிலும் கந்துடை நிலையினும் …” – – – – – – 226
தெளிவுரை:
“சிறிய தினை அரிசியைப் பூக்களுடன் கலந்து பல பாத்திரங்களில் பரப்பி
‘பிரப்பு அரிசி’யாய் வைத்து, ஆட்டுக் கிடாயை அறுத்து,
கோழிக் கொடியை அதற்குரிய இடத்தில் நிறுத்தி
ஊர்தோறும் கொண்டாடப்படும் பெருமையுடைய விழாவிலும்,
அன்புடைய பக்தர்கள் திருமுருகப்பெருமானை வழிபட்டு போற்றும் பொருத்தமான இடத்திலும்
வேலன் மிக்க மகிழ்ச்சியுடன் ஆடும் ‘வெறியாடு’ களத்திலும், காட்டிலும், சோலையிலும், அழகான [தீவு போன்ற] ஆற்றிடைக்குறையிலும்,
ஆறு, குளம் ஆகியவற்றின் கரைகளிலும், வேறு பல இடங்களிலும், நான்கு தெருக்கள் சந்திக்கும் சதுக்கத்திலும்,
மூன்று தெருக்கள் சந்திக்கும் முச்சந்தியிலும், புதுமலர்களை உடைய கடம்பு மரத்தினடியிலும்,
ஊரின் நடுவில் உள்ள மரத்தினடியிலும், அம்பலத்திலும், கந்து நடப்பட்டுள்ள இடத்திலும் …”
சொல் அகராதி:
சிறு தினை = சிறிய தினை அரிசி;
விரைஇ = கலந்து;
மறி = ஆட்டுக்கிடாய்;
வாரணக்கொடி = கோழிக்கொடி;
வயிற்பட = தக்க இடத்தில் அமையுமாறு;
நிறீஇ = நிறுத்தி;
ஆர்வலர் = திருமுருகப்பெருமானின் பக்தர்கள்;
மேவரு நிலையினும் = விரும்பி வருகின்ற இடந்தோறும்;
வேலன் தைஇய = வேலன் இயற்றிய;
வெறிஅயர் களனும் = மிகுதியான மகிழ்ச்சியோடு ஆடும் களத்திலும்;
காடும் காவும் = காட்டிலும் சோலையிலும்;
கவின்பெரு துருத்தியும் = அழகு பொருந்திய [சிறு தீவு போன்ற] ஆற்றிடைக்குறையிலும்;
யாறும் குளனும் = ஆறு, குளம் ஆகியவற்றின் கரைகளிலும்;
சதுக்கமும் = நான்கு தெருக்கள் சந்திக்கும் சதுக்கத்திலும்;
சந்தியும் = மூன்று தெருக்கள் சந்திக்கும் முச்சந்தியிலும்;
புதுபூங் கடம்பும் = புதிய பூக்களை உடைய கடம்பு மரத்தினடியிலும்;
மன்றமும் = ஊரின் நடுவே உள்ள மரத்தினடியிலும்;
பொதியிலும் = மக்கள் கூடும் பொது இடமான ‘பொதியில்’ அல்லது அம்பலத்திலும்;
கந்து உடை நிலையினும் = கந்து நடப்பட்டுள்ள இடத்திலும்.
பொதியிலும் = மக்கள் கூடும் பொது இடமான ‘பொதியில்’
அல்லது அம்பலத்திலும்;
கந்து உடை நிலையினும் = கந்து நடப்பட்டுள்ள இடத்திலும்.
முகநூலில் : Muthukrishnan Alagarsamy