பெங்களூரு மெட்ரோ கட்டண உயர்வு: ஏழை, நடுத்தர மக்களின் மீதான ஈவிரக்கமற்ற சுரண்டல்

”சாலைப் போக்குவரத்து நெரிசல் காரணமாக, அலுவலகத்திலிருந்து வீட்டிற்குச் செல்ல 4-5 மணி நேரம் ஆகும். மெட்ரோ அந்த நேரத்தை மிச்சப்படுத்தியது. மீண்டும் எங்களைப் போக்குவரத்து நெரிசலை நோக்கித் தள்ளுகிறார்கள்”

பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேசன் லிமிடெட் (BMRCL) சமீபத்தில் அதன் கட்டணக் கட்டமைப்பைத் திருத்தி, டிக்கெட் விலையை 100 சதவீதம் வரை உயர்த்தியது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து பெங்களூரு மக்களும், எதிர்க்கட்சிகளும், இயக்கங்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்தக் கட்டண உயர்வின் மூலம், மும்பை மற்றும் டெல்லியை விஞ்சி இந்தியாவின் மிகவும் ’விலையுயர்ந்த’ பொதுப்போக்குவரத்து அமைப்பாக பெங்களூரு மெட்ரோ மாறியுள்ளது. பிப்ரவரி 9 ஆம் தேதி அமலுக்கு வந்த புதிய கட்டணங்கள், கட்டண நிர்ணயக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் அமல்படுத்தப்பட்டுள்ளன.

அதிகபட்ச கட்டணம் ரூ.60 ல் இருந்து ரூ.90 ஆகவும், குறைந்தபட்ச இருப்புத் தொகை ரூ.50 ல் இருந்து ரூ.90 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த மெட்ரோ கட்டண உயர்வுக்குப் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியும், கோபமும் எழுந்துள்ளது. சமூக ஊடகங்களில் பலரும் ”நம்ம மெட்ரோ”வை புறக்கணிக்க வலியுறுத்தி வருகின்றனர். முன்பு மெட்ரோவை நம்பியிருந்த பல பள்ளி மாணவர்கள், பயணிகள் தற்போது அதைப் பயன்படுத்தப் போவதில்லை எனச் சுட்டிக்காட்டினர். கட்டண உயர்வைத் தொடர்ந்து மூன்று வேலை நாட்களில் மெட்ரோவில் பயணிப்போர் எண்ணிக்கை 8-10 சதவீதம் குறைந்துள்ளது.  மெட்ரோவை புறக்கணித்து BMRCL க்கு நெருக்கடியை ஏற்படுத்துவதன் மூலம் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வைக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்தன. கட்டண நிர்ணயக் குழு (FFC) பரிந்துரைத்த வரம்புகளுக்கு அப்பால் பயணிகளிடம் BMRCL அதிக கட்டணம் வசூலிப்பதாகக் குற்றம் சாட்டுகின்றனர்.

எதிர்ப்பைக் கண்டு அஞ்சிய சித்தராமையா இந்தக் கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்யுமாறு மெட்ரோ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். வியாழக்கிழமை (பிப்.13) அன்று BMRCL கட்டணக் கட்டமைப்பை மாற்றி அறிவித்தது. அதிகபட்ச உயர்வை 100% ல் இருந்து 71% மாக மாற்றி நயவஞ்சகமாக அறிவித்தது. இதனால் எந்த வகையிலும் கட்டணங்கள் குறையவில்லை என்பதுதான் நிலைமை.


படிக்க: மக்கள் நலன் என்ற பெயரில் போக்குவரத்து துறையில் தனியார்மயத்தை நுழைக்கும் திமுக அரசு!


மென்பொருள் பொறியாளரும், மெட்ரோ பயணியுமான பிரசாத் “மெட்ரோ பணக்காரர்களுக்கானது என்று BMRCL நினைக்கிறது. சாலைப் போக்குவரத்து நெரிசல் காரணமாக, அலுவலகத்திலிருந்து வீட்டிற்குச் செல்ல 4-5 மணி நேரம் ஆகும். மெட்ரோ அந்த நேரத்தை மிச்சப்படுத்தியது. மீண்டும் எங்களைப் போக்குவரத்து நெரிசலை நோக்கித் தள்ளுகிறார்கள்” என்று கூறுகிறார். இந்தக் கட்டண உயர்வால் மாதாந்திர பயணச் செலவுகள் ரூ.5500 வரை உயரும் என்று கணிக்கப்படுகிறது.

BMRCL அதிகரித்து வரும் செலவுகள் மற்றும் அதன் 10,422 கோடி கடனை திருப்பிச் செலுத்த வேண்டிய அவசியம் காரணமாகக் கட்டணத்தை உயர்த்தியதாகக் கூறுகிறது.

இன்னொரு பக்கம் ஆளும் காங்கிரசு அரசாங்கமும், எதிர்க்கட்சியான பி.ஜே.பி-யும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டுள்ளனர். கட்டண உயர்வு மத்தியக் குழுவால் தீர்மானிக்கப்பட்டது என்று கர்நாடக போக்குவரத்து அமைச்சர் ராமலிங்க ரெட்டி கூறுகிறார். இன்னொரு பக்கம் மாநில அரசை எதிர்த்து பி.ஜே.பி போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறது. இது நாடகம் என்பதுதான் உண்மை.

உண்மையில், மெட்ரோவின் கடனையும், செலவுகளையும் ஏழை, நடுத்தர மக்களைச் சுரண்டி வதைப்பதன் மூலம் ஈடுகட்ட வேண்டும் என்பதே ஒன்றிய பி.ஜே.பி, மாநில காங்கிரசு அரசுகளின் நோக்கமாக உள்ளது.

உண்மையில், ஐடி ஊழியர்களாலும், பொறியாளர்களாலும் பயன்பெறும் பெங்களூருவில் உள்ள பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் மீது வரிபோட்டு மெட்ரோவின் நெருக்கடியைத் தீர்த்துக் கொள்ள முடியும். ஆனால் அதனை ஒன்றிய பாஜகவோ, கர்நாடகத்தை ஆளும் காங்கிரசோ ஒருபோதும் செய்ய மாட்டார்கள். ஈவிரக்கமின்றி ஏழை, நடுத்தர மக்களின் மீது மேலும் சுமையைக் கூட்டுவதன் மூலம் நெருக்கடியைத் தீர்க்கப் பார்க்கிறார்கள்.

சட்டவிரோதமாக ஊழியர்களை பணிநீக்கம் செய்கின்ற இன்போசிஸ் நாராயணமூர்த்தி போன்ற கிரிமினல் முதலாளிக்கு ஏற்ப ஐடி ஊழியர்களின் வேலை நேரத்தை 14 மணி நேரமாக எப்படி மாற்றுவது என்பது மட்டும்தான் பாசிச பி.ஜே.பி மற்றும் காங்கிரசு அரசாங்கத்தின் கடமையாக உள்ளது. ஏழை, நடுத்தர மக்களைப் பற்றி கார்ப்பரேட் நல அரசாங்கங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை.


தோழர் இரஞ்சித்,
மக்கள் அதிகாரம் – கிருஷ்ணகிரி மாவட்ட அமைப்பாளர்.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க