தூத்துக்குடி: காமராஜர் கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காமராஜர் கல்லூரி நிர்வாகம் கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் கல்விக் கட்டணத்தை தன் மனம் போன போக்கில் உயர்த்தியது. அதற்கு உரிய ரசீது கூட வழங்கப்படவில்லை. அதைக் கண்டித்து இந்திய மாணவர்கள் சங்கம் (SFI) தலைமையில் காமராஜர் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களைப் பழிவாங்கும் நோக்கத்தோடு இடைநீக்கம் செய்தது கல்லூரி நிர்வாகம்.

வருவாய்க் கோட்டாட்சியர் தலைமையில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் மாணவர்களை இடைநீக்கம் செய்யக் கூடாது என்றும் கல்விக் கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும் என்றும் 2024 ஜூலை மாதம் கல்லூரிக்கு அறிவுறுத்தப்பட்டது. இதனையடுத்து போராட்டம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.

ஆனால், மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய்க் கோட்டாட்சியர் ஆகியோரின் அறிவுறுத்தலைப் பொருட்படுத்தாமல் போராட்டத்தை ஒருங்கிணைத்த மூன்றாம் ஆண்டு மாணவர் நேசமணி 03.01.2025 அன்று கல்லூரியை விட்டு நிரந்தர நீக்கம் செய்யப்பட்டார். மாணவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது என்று உத்தரவாதம் அளித்த பின்னர் நேசமணி மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் அளித்த புகாரைத் தொடர்ந்து 13.01.2025 அன்று மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நடத்திய பேச்சுவார்த்தையின்போது நேசமணி தேர்வில் பிட்டு அடித்தார், பேராசிரியர்களைக் கிண்டல் செய்தார்; இதனால் இவரைச் சேர்த்துக் கொள்ள முடியாது என்று கல்லூரி நிர்வாகம் பிடிவாதமாகக் கூறியது.

இதன் பிறகு SFI மாணவர்கள் 18.02.2025 அன்று உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர். பனி வெயிலைப் பொருட்படுத்தாமல் இரவு பகலாக 36 மணி நேரம் போராட்டம் நடத்திய பின்பு மாவட்ட நிர்வாகம், கல்லூரி நிர்வாகம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

முதலில் 15 நாள் அவகாசம் கேட்ட மாவட்ட நிர்வாகம், பேச்சு வார்த்தைக்குப் பிறகு அதைச் சுருக்கி 7 நாள் அவகாசம் வேண்டும் என்று கேட்டுக் கொண்டது. மாவட்ட நிர்வாகத்தை நம்பி மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். கல்லூரி நிர்வாகம் மாணவர் நேசமணியை பழி வாங்கும் வகையில் நடந்து கொண்டால் மாணவர்களைத் திரட்டி மீண்டும் போராட்டம் அறிவிப்போம்‌ என்று மாணவர்கள் சார்பாகக் கூறப்பட்டுள்ளது.

கல்லூரி நிர்வாகத்தைக் கேள்வி கேட்டு விட்டார்கள், அசிங்கப்படுத்தி விட்டார்கள் என்று ஈகோ பிரச்சனையோடு மாணவர்களை அணுகுகிறது கல்லூரி நிர்வாகம். அது மட்டுமல்ல மாணவர் அமைப்புகள் கல்லூரியில் இருக்கக்கூடாது என்ற வகையில் அது செயல்பட்டு வருகிறது.

தகவல்
மக்கள் அதிகாரம்,
நெல்லை மண்டலம்.
9385353605

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க