காசா மீதான போர் நிறுத்தம்: காசா மீண்டது, பாலஸ்தீனமும் மீளும்!

காசா மீதான போர் என்ற இந்த இடைக்கட்டத்தில், பல இழப்புகளைச் சந்தித்திருந்தாலும் ஹமாஸூம் பாலஸ்தீன மக்களும் வெற்றி பெற்றுள்ளனர்.

டந்த 16 மாதங்களாக பாலஸ்தீனத்தின் காசா மீது யூத இனவெறி இசுரேல் நடத்திவந்த போர், போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் 2025 ஜனவரி 19 உடன் முடிவிற்கு வந்துள்ளது.

இன்று உலகில் நடந்துக் கொண்டிருந்த இரண்டு போர்களில் – உக்ரைன் மீதான ரசியாவின் போர், பாலஸ்தீனத்தின் மீதான இசுரேலின் போர் – ஒன்று முடிவிற்கு வந்துள்ளது என்ற வகையிலும், இது மத்திய கிழக்கில் அமெரிக்க மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதற்காக நடத்தப்படும் போர் என்ற வகையிலும் காசா மீதான போர் நிறுத்தமானது முக்கியத்துவமுடையதாகும்.

ரசியாவிற்கு எதிராக உக்ரைனைத் தூண்டிவிட்டு அமெரிக்கா நடத்தும் பதிலிப் போரானாலும் சரி, காசா மீதான இசுரேலின் போராக இருந்தாலும் சரி, இரண்டுமே அமெரிக்க மேலாதிக்கத்திற்காக நடத்தப்படும் போர்களே; மனித குலத்திற்கு எதிரானவையே; அமெரிக்காவின் இராணுவ தளவாடப் பொருட்களை விற்பதற்கானவையே. எனினும், காசா மீதான போரானது இன அழிப்புப் போர் என்ற வகையில், தேச இனவிடுதலைக்காகப் போராடும் அனைவருக்கும் இப்போர் நிறுத்தம் முக்கியத்துவமுடையது.

பொய்க் குற்றச்சாட்டுகளை முன்வைத்து நடந்த போர்

ஜனநாயகத்திற்கான போர் என்று ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுத்ததைப் போலவே, பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று முள்ளிவாய்க்கால் படுகொலையை சிங்கள இனவெறி அரசு அரங்கேற்றியதைப் போலவே, காசா மீதான போரை ஹமாஸ் என்ற பயங்கரவாத இயக்கத்திற்கு எதிரான போர் என்று இசுரேல் புளுகியது.

காசா மீதான போர் நிறுத்தத்தை கொண்டாடிய பாலஸ்தீனிய மக்கள்

2023 அக்டோபர் ஏழாம் தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு எதிர்த்தாக்குதல் என்று தனது இன அழிப்பு நடவடிக்கைக்கு காரணம் கூறியது, இசுரேல் அரசு. ஹமாஸ் என்ற பயங்கரவாத இயக்கத்தை அழிக்கும் வரை, இந்தப் போர் ஓயாது என்று வெறிபிடித்துக் கொக்கரித்தார் இசுரேல் பிரதமர் நெதன்யாகு. பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார்; பின்னர், பிணையக் கைதிகள் அனைவரையும் விடுவித்தால்தான் பேச்சுவார்த்தை என்றார்.

ஆனால், இவை எதுவும் நிறைவேறாமல், இப்போது போர் நிறுத்தத்திற்கு இசுரேல் அரசு பணிந்து வந்துள்ளது. இந்தப் போர் நிறுத்தம் மூன்று கட்டங்களாக நடைமுறைக்கு வரும் என்றும், அனைத்து பிணையக் கைதிகளும் மொத்தமாக விடுவிக்கப்படாமல் கட்டங்கட்டமாக விடுவிக்கப்படுவர் என்றும் ஒப்பந்தமாகியுள்ளது.

இன அழிப்புப் போர்

ஆனால், இந்தப் போர் பாலஸ்தீனத்தை முற்றிலுமாக ஆக்கிரமிப்பதற்கான இன அழிப்புப் போர் என்பதை நாம் தொடக்கத்திலிருந்தே சொல்லி வருகிறோம். அது உண்மை என்பதை இசுரேலின் தொடர்ச்சியான போர்த் தாக்குதல்கள் நிரூபித்தன.

அக்டோபர் ஒன்பதாம் தேதி இசுரேல் காசா மீது தாக்குதலைத் தொடுக்கத் தொடங்கியது முதல், அதன் இரத்தவெறி உலகையே நடுநடுங்க வைத்தது.

பள்ளிகளும் பச்சிளம் குழந்தைகளும் அதன் தாக்குதல் இலக்காக இருந்தனர். இவர்கள்தான், ஹமாஸ் பயங்கரவாதிகளா? என்று இசுரேலின் கோர முகத்தைப் பார்த்து உலக மக்கள் கேள்வி எழுப்பினர்.

பள்ளிக் கட்டடங்கள், மருத்துவமனைகள், அகதிகள் முகாம்கள் மீது குறிவைத்து தாக்கியது இசுரேல் ராணுவம். அங்குதான், ஹமாஸ் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகப் புளுகியது. மருத்துவமனையைத் தாக்குவது போர்க்குற்றம் என்பதைப் பற்றியெல்லாம் இசுரேல் கவலைப்படவில்லை.

2024 மே மாதம் ஏழாம் தேதி, ரஃபா எல்லையில் குவிந்திருந்த மக்கள் மீது வான்வழித் தாக்குதலை நடத்தியது. அகதிகள் முகாம் மீதும் தாக்குதல்களை நடத்தியது; ஐ.நா-வின் மருத்துவ முகாம்களையும் விட்டுவைக்கவில்லை; சர்வதேச செய்தி நிறுவனங்களின் பத்திரிகையாளர்களையும் கொன்றது; சில நேரங்களில் சொந்த இராணுவத்தினரையும் கொன்றது.

மருந்துப் பொருட்கள், உணவு, குடிநீர் போன்ற அனைத்து மனிதாபிமான உதவிகளையும் தடுத்து நிறுத்தியது. உணவுப் பொருட்கள் கொடுத்தால் அது ஹமாஸுக்குச் சென்றுவிடும் என்று பேசியது.

அப்பாவி மக்கள் மீது தீப்பிழம்பைக் கக்கும் பாஸ்பரஸ் குண்டுகளை வீசியது, இசுரேல் அரசு. இது போர்க்குற்றம் என்று உலக நாடுகள் கண்டித்த போது கூட அதற்கு செவிமடுக்கவில்லை.

கடுமையான வெயில், கடும் குளிர், தொற்றுநோய் பரவல், குடிநீர் பற்றாக்குறை, அத்துடன் ஊட்டச்சத்துப் பற்றாக்குறையாலும் பட்டினியாலும் காசா மக்கள் மடியும் நிலைமை உருவானது. இது மனிதகுல நெருக்கடி (Human crisis) என்று முதலாளித்துவ ஊடகங்களே இசுரேலிய அரசை சாடின. எனினும், “போரை நிறுத்த மாட்டேன்”, “ஹமாஸை ஒழிக்காமல் விடமாட்டேன்” என்று கொக்கரித்தார் நெதன்யாகு.

காசா சுகாதார அமைச்சகத்தின் தரவுகளின்படி, இஸ்ரேல் அரசின் இனவெறிப் போரால் கடந்த ஜனவரி 23 வரை 47,283 பாலஸ்தீனர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்; 1,11,472 பாலஸ்தீனர்கள் காயமடைந்துள்ளனர். இது உறுதிப்படுத்தப்பட்ட தகவலின் அடிப்படையிலான எண்ணிக்கை மட்டுமே. இடிபாடுகளை அகற்ற அகற்ற பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டுள்ளது.

போரின் போது கைது செய்யப்பட்ட மருத்துவமனை உதவியாளர்கள், நோயாளிகள், காயமடைந்தவர்களுக்கு மரண தண்டனை விதித்துப் படுகொலை செய்துள்ளது கொலைவெறி பிடித்த இசுரேல் அரசு. கைது செய்யப்பட்டு பிணை வைக்கப்பட்டுள்ள பாலஸ்தீனர்களுக்கு முறையாக உணவு வழங்காமலும் சித்திரவதைகளைச் செய்தும் துன்புறுத்தி வருகிறது. இதனால், பலரும் மனநலம் பாதிக்கப்பட்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டும் சிறையிலேயே இறக்கும் நிலை ஏற்பட்டது.

காசா பகுதியின் மொத்த மக்கள் தொகையில் 90 சதவிகிதம் பேர், அதாவது 19 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இவர்களது அனைத்து வீடுகளும் இடிக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவின் மேலாதிக்கத்திற்காக,
ஆயுத விற்பனைக்காக நடத்தப்பட்ட போர்

இந்தப் போர் தொடங்கியதிலிருந்து பேச்சுவார்த்தை மூலமாக தீர்வு காண வேண்டும் என்று அமெரிக்கா கூறினாலும், இப்போருக்கு மட்டும் 18 பில்லியன் டாலருக்கும் (1.55 இலட்சம் கோடி ரூபாய்) மேல் இசுரேலுக்கு அமெரிக்கா நிதியுதவி, ஆயுத உதவி செய்துள்ளது.

இந்திய அரசு, இனவெறி இசுரேலின் இன அழிப்புப் போரை ஆதரித்தது; இசுரேலில் வீட்டு வேலைகள், கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்காக இந்தியாவில் ஆள் எடுக்கும் வேலையைச் செய்தது; மறைமுகமாக நிதி, ஆயுத உதவிகளையும் வழங்கியது. காசாவில் மக்கள் நெருக்கம் அதிகமுள்ள பகுதிகளில் குண்டுவீச்சுத் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்படும் ஹெர்மஸ் 900 ரக ஆளில்லா விமானங்கள் அதானியின் நிறுவனம் தயாரித்துக் கொடுத்தவை. மேலும், இந்திய அரசின் வெடிபொருள் தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்புகள், வேறொரு தனியார் நிறுவனத்தின் மூலம் சென்ற ஆண்டில் மட்டும் இரண்டு முறை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

கனடா, ஜெர்மனி, பிரிட்டன் போன்ற நாடுகளும் நேரடியாகவும் மறைமுகமாகவும் இசுரேலுக்கு ஆயுத ஏற்றுமதி செய்து வருகின்றன.

விரைவில் வெற்றி என்று முழங்கிய இசுரேல்

பாலஸ்தீனத்தின் காசா, மேற்குகரை மட்டுமின்றி அண்டை நாடுகள் மீதும் இசுரேல் தாக்குதல் நடத்தியது. லெபனான் நாட்டில் ஹிஸ்புல்லா மீதும், ஈரான் மீதும் தொடர்ந்து தாக்குதலை நடத்தியுள்ளது.

காசா மீதான இந்தப் போர் காலகட்டத்தில், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இரண்டாம் தேதி லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இசுரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் ஹமாஸின் இரண்டாம் நிலைத் தலைவர் சலே அல்-அரூரி, ஹிஸ்புல்லாக்களின் முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டனர்.

காசா பிராந்தியத்தை சிதைத்திருக்கும் இஸ்ரேலின் போர்வெறி.

இதே மாதத்தில், சிரியா தலைநகர் டமாஸ்கஸில் இசுரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரான் நாட்டைச் சேர்ந்த மூன்று பாதுகாப்புப் படை அதிகாரிகள் கொல்லப்பட்டனர். அடுத்த சில நாட்களில் நான்கு பாதுகாப்புப் படை அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.

ஏப்ரல் மாதத்தில், டமாஸ்கஸில் இருக்கும் ஈரானிய தூதரகத்தின் மீது இசுரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரான் இராணுவத்தின் மூத்த தளபதி முகமது ரெசா ஜாஹேதி கொல்லப்பட்டார்.

மே 19-ஆம் தேதி, ஈரானின் அதிபர் இப்ரஹிம் ரைசி மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் அமிர் அப்துல்லாஹியன் ஆகியோர் விமான விபத்தில் மர்மமான முறையில் கொல்லப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து, ஜூலை மாதம் 31-ஆம் தேதி ஈரானின் தலைநகர் டெஹ்ரானில் இருந்த ஹமாஸின் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்டார். ஏறக்குறைய இதே நாளில், ஹமாஸுக்கு ஆதரவாக லெபனானில் இருந்து இசுரேல் மீது தாக்குதலை நடத்திவரும், ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஃபுவாட் ஷுக்ரியைப் படுகொலை செய்தது இசுரேல்.

செப்டம்பர் மாதத்தில் மட்டும், இப்ராஹிம் அகில், அகமது வஹ்பி, இப்ராஹிம் குபைசி, ஹசன் நஸ்ருல்லா ஆகிய ஹிஸ்புல்லாவின் தலைவர்கள், தளபதிகள் இசுரேலால் அடுத்தடுத்து கொல்லப்பட்டனர்.

செப்டம்பர் 17,18 தேதிகளில் லெபனான் மக்களை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய பேஜர் வெடிப்பு தாக்குதலில் 12 பேர் பலியாகி 2,500-க்கும் மேற்பட்ட மக்கள் படுகாயமடைந்தனர். அதன் பின்னர் லெபனான் மீது இஸ்ரேல் நடத்திவரும் தொடர் தாக்குதல்களில் நான்காயிரத்திற்கும் அதிகான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த சந்தர்ப்பங்களில் எல்லாம், பாலஸ்தீனத்தை இசுரேல் முற்றிலுமாக அழித்துவிடும் என்று ஏகாதிபத்திய ஊடகங்கள் பிரச்சாரம் செய்தன.

காலை வாரிய இசுலாமிய நாடுகளும்
துணைநின்ற சர்வதேச மக்களும்

காசா மீது இசுரேல் போர் தொடுக்கத் தொடங்கியதில் இருந்து உலகம் முழுவதும் உள்ள மக்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், உலகம் முழுவதிலும் உள்ள அமெரிக்க ஆதரவு இனவெறி ஊடகங்கள் அனைத்து போராட்டங்களையும் இஸ்லாமியர்களின் போராட்டங்கள் என்று செய்திகளை வெளியிட்டன. உலகம் முழுவதும் இருக்கும் மக்களின் மதம், இனம் கடந்த இந்த ஆதரவை மதத்தின் அடிப்படையிலான ஒத்துழைப்பு என்று திரிப்பதன் மூலம் சர்வதேச ஒற்றுமையை குலைக்கும் ஏகாதிபத்தியத்தின் முயற்சி இது. தேசிய விடுதலைக்கான போராட்டங்கள் ஒன்றிணைந்துவிடக் கூடாது என்பதில் ஏகாதிபத்தியத்திற்கு இந்த அடிமை சேவகம் செய்யும் ஊடகங்கள் குறியாக இருந்தன.

மேலும், இப்போரில் இஸ்ரேல் ராணுவத்திற்கு எதிராக ஹமாஸ் மட்டுமின்றி பாலஸ்தீன விடுதலைக்கான மக்கள் முன்னணி (PFLP) உள்ளிட்டு பத்துக்கும் மேற்பட்ட மா-லெ குழுக்களும் பிற இயக்கங்களும் போராடின. 2024 செப்டம்பர் 29 அன்று லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மூன்று பி.எஃப்.எல்.பி. தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஆனால், இப்போரில் ஹமாஸ் மட்டுமே போராடுவதாக ஊடகங்கள் காட்டியதன் நோக்கம், காசாவில் ‘பயங்கரவாத’ இயக்கம் போர் புரிவதாக சித்தரித்து பாலஸ்தீன மக்களை ஒடுக்குவதன்றி வேறொன்றுமில்லை.

இந்தியாவில் சங்கி கும்பலும், அமெரிக்க-இசுரேல் ஆதரவு ஊடகங்களும் பாலஸ்தீனத்திற்கு ஆதரவான போராட்டங்கள் அனைத்தும் இசுலாமியர்களின் போராட்டம் என்று தொடர்ந்து பிரச்சாரம் செய்தன.

ஆனால், இது முற்றிலும் பொய்யானது. உலகம் முழுவதும் இருக்கும் மக்கள் பாலஸ்தீன மக்களின் போராட்டத்தை அம்மக்களின் தேசிய இன விடுதலைக்கான போராட்டமாகவே பார்க்கின்றனர்; எனவேதான், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக புரட்சிகர ஜனநாயக சக்திகள் குரல் கொடுத்தனர். அதேவேளையில், சவுதி அரேபியா போன்ற பல இசுலாமிய நாடுகள் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவளிக்காமல் துரோகமிழைத்தன; ஆகையால், உலகம் முழுவதும் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள் உழைக்கும் மக்களின் போராட்டங்களாகவே இருந்தது.

காசா மக்களின் இரத்தத்தை நக்கிய அமெரிக்க ஆதரவு ஊடகங்கள்

காசா மக்கள் மீதான அடக்குமுறைகளைத் தட்டிக்கேட்பதற்குப் பதிலாக, இயன்றவரை அமெரிக்க ஆதரவு, பாசிச ஆதரவு ஊடகங்கள் அனைத்தும் இசுரேலுக்கு முட்டுக்கொடுக்கும் வகையிலேயே செய்தி வெளியிட்டு வந்தன.

தமிழ்நாட்டில் தந்தி டிவியானது, இசுரேலில் இருந்து கொண்டு அங்கிருக்கும் அதிகார வர்க்கத்தின் துணையோடு பரபரப்பூட்டும் செய்திகளை வெளியிட்டது.

யஹ்யா சின்வர் கொல்லப்பட்ட போது, “அவர் ஒரு இராணுவத் தளபதி போல மரணமடையவில்லை” என்றும், “யஹ்யாவின் மனைவியும் குழந்தைகளும் பதுங்குக் குழியில் பத்திரமாக இருக்கின்றனர்”, “அவரது மனைவியின் கையில் இருக்கும் பை பல இலட்ச ரூபாய் பெருமானமுள்ளது” என்றெல்லாம் இழிவான முறையில் பிரச்சாரம் செய்தன.

ஒவ்வொரு முறை ஹமாஸ், ஹிஸ்புல்லா அமைப்புகளின் தலைவர்கள் இசுரேலால் கொல்லப்பட்ட போதெல்லாம் உழைக்கும் மக்கள் நம்பிக்கையிழக்கும் வகையில், “காசா இனி என்ன ஆகும்?”, “ஹமாஸ் முற்றிலும் அழிந்துவிட்டது” என்றெல்லாம் கேடுகெட்ட பிரச்சாரங்களை செய்தன.

தற்போது கூட, காசாவைக் கட்டியெழுப்புவது கடும் சிரமமானது, அதற்கு சில நூறு ஆண்டுகளாவது ஆகும் என்றெல்லாம் சொல்லி காசா மக்களின் நம்பிக்கையைக் குலைக்கும் வேலையில் ஈடுபடுகின்றன.

காசா மீதான போருக்கு ஆதரவாகவும் பாலஸ்தீன மக்களுக்கெதிராகவும் பேசிய ஊடகங்களின் செயலானது, இசுரேல் குண்டுவீச்சில் கொல்லப்பட்ட காசா மக்களின் இரத்தத்தைச் சுவைக்கும் இழி செயல்களே.

முற்போக்கு வேடம்போட்டுள்ள சில ஊடகங்கள்கூட, காசா மீதான இசுரேலின் போரை எதிர்ப்பதாகக் கூறினாலும், ஹமாஸ் பயங்கரவாத இயக்கம் என்ற தமது இழிவான பிரச்சாரத்தைத் தவறாமல் செய்தன. முதலாளித்துவ ஊடகங்களில் பரபரப்பாக செய்திகள் வெளியாகும் போது மட்டும் பெயரளவிற்கு ஓரிரு செய்திகளை மட்டும் வேண்டா வெறுப்பாக வெளியிட்ட இந்த ஊடகங்கள், முதலாளித்துவ ஊடகங்கள் காசா குறித்த செய்திகளை இருட்டடிப்பு செய்த போது இவையும் வாயை மூடிக்கொண்டன.

எதிர்வினைகள் தீவிரமாக இருந்தன

இஸ்ரேல் போரை தீவிரப்படுத்தினாலும், ஒவ்வொருமுறையும் அதற்கு சரியான எதிர்வினைகள் இருக்கத்தான் செய்தன. காசா மீதான போர் தொடங்கியதில் இருந்து ஏமனில் இருக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செங்கடல் வழியாக செல்லும் அமெரிக்கக் கப்பல்கள் மீது தொடர்ந்து தாக்குதல்களை நடத்தினர். இதனால், செங்கடல் வழியாக அமெரிக்கா தனது கப்பல் போக்குவரத்தையே தற்காலிகமாக நிறுத்திக்கொள்ளும் நிலைமை ஏற்பட்டது.

சென்ற ஆண்டு நடந்த இந்த நிகழ்வுகளைத் தொடர்ந்து ஆகஸ்டு மாதம் 19-ஆம் தேதி இசுரேலின் டெல்-அவிவ்-வில் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தப்பட்டது.

உண்மையில், ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டதானது, பாலஸ்தீனத்திற்கு ஆதரவளிப்பதில் தயக்கத்துடன் இருந்த பலரையும் போரில் ஹமாஸை ஆதரிக்கும் நிலைக்குத் தள்ளியது.

2024 ஜூலையில் லெபனான் ராணுவத் தலைவர் ஃபுவாட் ஷூக்ரியை இசுரேல் கொன்றதற்கு எதிராக, ஆகஸ்டு 25 அன்று ஹிஸ்புல்லா அமைப்பானது இசுரேலின் 11 இராணுவ தளங்களின் மீது 340 ராக்கெட்டுகளை ஏவித் தாக்குதலை நடத்தியது.

யஹ்யா சின்வர் கொலையும் எதிர்வினையும்

காசாவின் போரில் பல ஹமாஸ் தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். எனினும், யஹ்யா சின்வர் கொல்லப்பட்டது முக்கியமான நிகழ்வாகும்.

ஹமாஸ் தலைவர்களில் இவர் முக்கியமானவர். இஸ்மாயில் ஹனியே போல இவரும் மக்களால் பெரிதும் நேசிக்கப்படும் தலைவர்.

இவர், காசாவில் மக்களோடு மக்களாக இருந்து இசுரேலின் தாக்குதலை எதிர்த்துத் தாக்கினார். இவர் பதுங்கியிருந்த கட்டடத்தின் மீது இசுரேல் ஆளில்லா விமானங்கள் மூலமாகத் தாக்குதலை நடத்தியது.

இதனால், கடுமையான இடிபாடுகளில் சிக்கி, பலத்த காயமுற்ற நிலையில் யஹ்யா சின்வர் ஒரு சேதமடைந்த இருக்கையில் அமர்ந்திருந்த போது, அவரைக் கண்காணித்த ஆளில்லா விமானம் அவரை அடையாளம் கண்ட பின்னர், இசுரேல் இராணுவம் ஸ்னைப்பர் மூலம் அவரது தலையில் சுட்டு படுகொலை செய்தது.

காசா மீதான போரை கண்டித்து அமெரிக்க பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்த பிரம்மாண்ட போராட்டம்.

இவ்வாறு அவர் கொல்லப்படும் வீடியோக்காட்சியை வெளியிடுவதன் மூலம் காசா மக்களின் நம்பிக்கையை சிதைப்பதற்கு இசுரேல் முயற்சித்தது. ஆனால், அந்த வீடியோ காட்சியில் யஹ்யா சின்வர், தனது வலது கையில் பலத்தை காயமடைந்த நிலையிலும் இடது கையினால் ஒரு குச்சியை ஆளில்லா விமானத்தை நோக்கி வீசியதானது, காசா மக்களுக்கு பெரும் நம்பிக்கையை ஊட்டியது. தனது தலைவர் கடைசி நேரத்திலும் தனது போராட்ட உணர்வை இழக்கவில்லை என்ற உணர்வூட்டியது.

மேலும், அவர் இறந்த பின்னர் அவரது வயிற்றில் சிறு உணவுப் பருக்கைகளும் இல்லை; சுமார் மூன்று நாட்களுக்கும் மேலாக அவர் பட்டினியாக இருந்து மக்களுக்காகப் போராடினார் என்ற செய்தியானது மக்களுக்கு பெரிதும் நம்பிக்கையூட்டியது. தமது தியாகத் தலைவரை மக்கள் போற்றி வணங்கினர்.

உலகம் முழுவதும் மக்கள் ஆதரவு

காசா மீது இசுரேல் போர் தொடுக்கத் தொடங்கியதில் இருந்து உலகம் முழுவதும் இருக்கும் மக்கள், காசா மீதான இசுரேலின் போரையும் அதற்குப் பின்னணியில் இருந்து ஆதரவு தெரிவிக்கும் அமெரிக்கா மற்றும் அதன் ஆதரவு நாடுகளையும் கண்டித்து போராட்டம் நடத்தினர்.

அமெரிக்க ஆதரவு துருக்கியில், லட்சக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கிப் போராடத் தொடங்கியதன் விளைவாக, பாசிச எர்டோகன் அரசு இசுரேலுக்கு ஆதரவு அளிக்கவில்லை என்று அறிவிக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளானது. எனினும், அன்றாடம் காசாவிற்கு ஆதரவாக துருக்கியர்கள் போராடினர்.

அமெரிக்கா, இங்கிலாந்து, நார்வே, சுவீடன், பிரான்சு, ஜெர்மனி, ரோம், ஸ்காட்லாந்து என மேற்குலக நாடுகள் அனைத்திலும் ஆஸ்திரேலியாவிலும் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இந்த நாடுகளில் முக்கியமான நகரங்கள் அனைத்திலும் இலட்சக்கணக்கான மக்கள் கூடி போராட்டங்களில் ஈடுபட்டனர். பாலஸ்தீனக் கொடிகளை ஏந்தியும், “காசாவை விடுதலை செய்”, “காசா மீதான குண்டுவீச்சை நிறுத்து” போன்ற முழக்கங்களை முழங்கிய படியும் பிரம்மாண்ட பேரணி சென்றனர். தங்களது நாடுகளின் அரசுகள் இசுரேலுக்கு ஆயுத உதவி, நிதி உதவி வழங்குவதற்கும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இவ்வாறு பல நாடுகளில் மக்கள் போராட்டங்கள் தீவிரமாக நடந்த நிலையில்தான் அந்த நாடுகளின் அரசுகள் பெயரளவிற்கான கண்டனங்களையும் தெரிவித்தன.

சென்ற ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் கலிஃபோர்னியா மாணவர்கள் அமெரிக்க அரசு இசுரேலுக்கு ஆயுத உதவிகள் வழங்குவதை எதிர்த்து தொடர் போராட்டங்கள் நடத்தியது வரலாற்று முக்கியத்துவமுடையதாகும். அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சியின் மாநாடு நடக்கும் ஆகஸ்டு 19-22 தேதிகளில், பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன.

இதைப் போலவே, ஆசிய, ஆப்பிரிக்க, தென்னமெரிக்க நாடுகளில் இருக்கும் பல்வேறு ஜனநாயக சக்திகள், மனித உரிமை அமைப்புகள், புரட்சிகர இயக்கங்கள் மக்களைத் திரட்டி காசாவுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தன.

காசா மக்கள் – ஹமாசின் வெற்றி

ஹமாஸ், காசா மக்களின் பேரன்பை வெற்றிக் கொண்ட இயக்கம். பல ஆயிரம் மக்கள் இறந்துள்ளனர்; பல ஆயிரம் மக்கள் படுகாயமடைந்துள்ளனர்; இலட்சத்திற்கும் அதிகமான வீடுகள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன. பல முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஹமாசை ஒழிக்காமல் ஓயமாட்டேன் என்ற இசுரேல், இன்று அடிபணிந்து வந்துள்ளது. ஹமாஸ் முன்வைத்த மூன்று கட்ட அமைதிப் பேச்சுவார்த்தையை ஏற்றுள்ளது. ஹமாஸுடன் பேச்சுவார்த்தை நடத்திதான் பணயக் கைதிகளையும் விடுவித்துள்ளது.

ஹமாஸிடம் இருந்த பணயக் கைதிகள் ஜனநாயகமான முறையில் நடத்தப்பட்டதை உலகமே பார்த்தது; இசுரேலிடம் இருந்த பாலஸ்தீன பணயக் கைதிகள் கொடூரமாக நடத்தப்பட்டதையும் உலகம் கண்டித்தது. அந்தவகையிலும் இசுரேல் தோல்வியடைந்துவிட்டது.

இந்தப் போரின் தொடக்கத்தில் இருந்தே இசுரேல் அரசியலில் நெதன்யாகு மிகக் குறைவான ஆதரவு மட்டுமே கொண்டிருந்தார். அவரை ஆதரித்த சியோனிச தீவிர வலதுசாரி அமைப்பு போர் நிறுத்தம் செய்தால், ஆட்சிக்குக் கொடுக்கும் ஆதரவைத் திரும்பப் பெற்றுவிடுவதாக மிரட்டி வந்தது. இப்போது, அந்தக் கட்சியைச் சேர்ந்த பாதுகாப்பு அமைச்சர் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தியதைக் கண்டித்து பதவி விலகியுள்ளார்.

காசா மீதான போரின் விளைவாக, இசுரேல் ஆளும் வர்க்கத்தில் இருந்த பிளவு அதிகரித்துள்ளது. பணயக் கைதிகளை விடுதலை செய்வதற்காக, ஹமாசை அழிக்கும் இன அழிப்புப் போர் நடத்துவதற்கு நியாய உரிமை கோரிய நெதன்யாகு இசுரேல் மக்கள் மீது கடுமையான பொருளாதாரச் சுமைகளை ஏற்றினார். ஹமாஸ் மீண்டு வந்திருப்பதானது, இசுரேல் ஆளும் வர்க்கத்தின் பொய்ப் பிரச்சாரத்தை மக்களுக்கு உணர்த்தியிருப்பது மட்டுமின்றி, தங்கள் மீதான பொருளாதாரச் சுமைகளுக்கு எதிராகவும் கிளர்ந்தெழுவதற்கான வாய்ப்பை உருவாக்கியுள்ளது.

ஆனால், காசா எழுந்து நின்றுள்ளது.

ஹமாஸ் பணயக் கைதிகளுடன் வெளியே வந்த போது, காசா மக்கள் பேருற்சாகத்துடன் வரவேற்றனர். விடுதலைப் பாடல்களைப் பாடிகொண்டே மக்கள் வடக்கு காசாவை நோக்கி முன்னேறுகின்றனர். இவை, வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சிகளாகும்.

பாலஸ்தீன விடுதலைப் போராட்டம் 75 ஆண்டுகளுக்கும் மேலாக நடக்கும் நீண்ட போராகும். காசா மீதான போர் என்ற இந்த இடைக்கட்டத்தில், பல இழப்புகளைச் சந்தித்திருந்தாலும் ஹமாஸூம் பாலஸ்தீன மக்களும் வெற்றி பெற்றுள்ளனர்.

தற்போது பாலஸ்தீன மக்களின் பெரும்பான்மையின் ஆதரவைப் பெற்றிருந்த ஹமாஸ் மேலும் பலமடைந்துள்ளது. காசா மறுகட்டமைப்புப் பணிகள் தொடங்குகின்றன.

நெதன்யாகு – பைடன் கொடும்பாவிகளைத் தூக்கிலிட்டு ம.க.இ.க., பு.மா.இ.மு. தோழர்கள் நடத்திய போராட்டம்.

மனித குலத்திற்கு எதிராக தொடுக்கப்பட்ட இந்த இன அழிப்புப் போரில் இசுரேலும் அமெரிக்காவுமே போர்க்குற்றவாளிகள். இக்குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். இந்தப் போருக்கான விலையை இசுரேலும் அமெரிக்காவுமே ஏற்கவேண்டும். காசா மறுகட்டமைப்புக்கு உதவ வேண்டும்.

இத்துடன், பாலஸ்தீன விடுதலைக்கான போராட்டத்தில் முன்னேற வேண்டும். அந்த வகையிலான அரசியல்-பொருளாதார மாற்றுத் திட்டத்துடன் ஹமாசுடன் ஐக்கிய முன்னணி அமைத்து முன்னேறுவது புரட்சிகர ஜனநாயக சக்திகளின் கடமையாகும்.

தமிழ்நாட்டில் புரட்சிகர ஊடகங்களின் ஆதரவு

காசா மீது இசுரேல் போரை அறிவித்து தாக்குதல் தொடங்குவதற்கு முன்பிருந்தே, காசாவின் மீது சிறிதும் பெரிதுமாக இசுரேல் நடத்திவரும் தாக்குதல்களை வினவு இணையதளம் தொடர்ந்து அம்பலப்படுத்தி வந்துள்ளது. போரின் ஒவ்வொரு தருணத்திலும் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும் போராடும் மக்களுக்கு நம்பிக்கையூட்டியும் வந்துள்ளது. படக்கட்டுரைகள், காணொளிகள் என தொடர்ந்து பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ் வாசகர்களிடம் காசாவுக்கான ஆதரவைத் திரட்டியுள்ளது. புதிய ஜனநாயகம் இதழும் இந்த காலக்கட்டத்தில் முக்கியமான பல தருணங்களைப் பதிவு செய்துள்ளது. மொத்தத்தில், இந்த 16 மாதங்களில் காசா தொடர்பாக 100-க்கும் அதிகமான பதிவுகள் பதிவிடப்பட்டுள்ளன.

மிகவும் நெருக்கடியான, 2024 ஜூலை-செப்டம்பர் மாதங்களில், யஹ்யா படுகொலைக்குப் பிந்தைய தருணத்தில், வினவு வெளியிட்ட கட்டுரைகள், பாலஸ்தீனத்தின் மீது அக்கறை கொண்டவர்களுக்குப் பெரிதும் நம்பிக்கையூட்டுவதாக இருந்தன.

மக்கள் அதிகாரம் மற்றும் அதன் தோழமை அமைப்புகள், காசா மீதான போர் தொடுக்கப்பட்டதில் இருந்து தொடர்ந்து பலமுறை ஜனநாயக சக்திகளுடன் இணைந்து போராட்டங்களை நடத்தியுள்ளது.


தங்கம்

(புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2025 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க