பாலஸ்தீனம்: மக்கள் மருத்துவர் அபு சஃபியாவை சித்திரவதைக்குள்ளாக்கும் இஸ்ரேல்

இந்த அடக்குமுறையின் காரணமாக இன்னும் ஆயிரக்கணக்கான அபு சஃபியாக்கள் உருவாவதை இந்தக் கோழைகளால் தடுக்க முடியாது.

காசாவின் கமால் அத்வான் மருத்துவமனையின் இயக்குநர் 51 வயதான ஹூசம் அபு சஃபியா (Hussam Abu Safia) இஸ்ரேலின் இராணுவ சிறையில் கொடூர சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார் என்று அவரது வழக்கறிஞர் கூறியுள்ளார்.

குழந்தைகள் நல மருத்துவரான அபு சஃபியா காசாவின் சுகாதார அமைப்பின் முக்கியமான நபராவார். இஸ்ரேல் இராணுவத்தின் கொடூரமான தாக்குதலின் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளை கமால் அத்வான் மருத்துவமனையின் இயக்குநர் அபு சஃபியா வெளி உலகிற்குக் கொண்டு வந்தது முக்கியமானது. மேலும் இஸ்ரேல் இராணுவம், தனது வடக்கு காசா முற்றுகை நடவடிக்கையைத் தீவிரப்படுத்தி, அனைவரையும் வெளியேற உத்தரவிட்டது. ஆனால் அவர் அங்கிருந்து வெளியேற மறுத்து, மக்களுடன் இருந்தார். மருத்துவ ரீதியான உதவிகளைச் செய்தும் வந்தார். இதுவே அவர் இஸ்ரேல் இராணுவத்தின் கோபத்திற்கு ஆளாவதற்குக் காரணமாக அமைந்தது.

அக்டோபர் 26, 2024 அன்று இஸ்ரேல் இராணுவத்தால் கமால் அத்வான் மருத்துவனை தாக்குதலுக்கு உள்ளானபோது, மருத்துவமனை வாயிலில் அவரது மகன் இப்ராஹிம் ட்ரோன் தாக்குதலின் மூலமாகக் கொல்லப்பட்டார். மருத்துவமனையின் முற்றத்திலேயே மகனின் இறுதிச் சடங்குகளை நடத்தி இஸ்ரேலின் இனப்படுகொலையை அம்பலப்படுத்தினார்.

நவம்பர் 24 அன்று மருத்துவமனையின் மீதான இஸ்ரேலின் ட்ரோன் தாக்குதலில் அவரது தொடையில் காயம் ஏற்பட்டது. “இது நம்மைத் தடுக்காது, எனது பணியிடத்தில் நான் காயமடைந்தேன் என்பதுதான் மரியாதை. எனது இரத்தம் ஒன்றும் எனது சகாக்கள் மற்றும் மக்களை விட விலைமதிப்பற்றது அல்ல. நான் குணமடைந்தவுடன் பணிக்குத் திரும்புவேன்” என்று அச்சமயத்தில் தனது உணர்வை வெளிப்படுத்தியுள்ளார்.

டிசம்பர் மாதம் காசாவில் இஸ்ரேலிய இராணுவத்தால் கைது செய்யப்பட்ட அவர், ரமல்லாவுக்கு அருகில் உள்ள ஓஃபர் சிறைக்கு மாற்றப்படுவதற்கு முன்பு, இஸ்ரேலின் நெகேவ் பாலைவனத்தில் உள்ள சித்திரவதைக்குப் பெயர் பெற்ற எஸ்.டி.டீமான் இராணுவ தடுப்பு முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரது ஆடைகளைக் களைந்து சித்திரவதை செய்துள்ளனர். இதன் காரணமாக அவருக்கு இதயத்தசை வீக்கம் மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஏற்பட்டுள்ளது. ஆனால், அவருக்குச் சிகிச்சை மறுக்கப்பட்டுள்ளது. மேலும் தாக்குதலின் காரணமாக அவரது இரு கைகளிலும் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.


படிக்க: காசாவில் உறைபனியால் குழந்தைகள் மரணம் – தொடரும் இஸ்ரேலின் படுகொலைகள்!


ஜனவரி 9 ஆம் தேதி ஓஃபர் சிறைக்கு மாற்றப்பட்ட அவர், 25 நாட்கள் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பின்னர், இஸ்ரேலிய இராணுவம் மற்றும் உளவுத்துறையால் இடைவிடாது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அவரை நிர்ப்பந்தித்து, பொய்யான வாக்குமூலம் பெறுகின்ற நோக்கில் மின்சாரம் பாய்ச்சி சித்திரவதை செய்யப்பட்டுள்ளார் என்று அவரது வழக்கறிஞர் அல்-மனாயாமா கூறுகிறார்.

“மிகவும் குளிர்ந்த நிலையில் உள்ள சிறைச் சூழலானது, அபு சஃபியா வின் ஆரோக்கியத்தைக் கடுமையாகப் பாதித்துள்ளது, மருத்துவப் பராமரிப்பும் இல்லை, துன்பகரமான சூழலில் உள்ளார்” என்று அல்-மனாயாமா கூறுகிறார். அபு சஃபியா கைது செய்யப்பட்டு இவ்வளவு நாட்கள் ஆகியும் அவர் தனது வழக்கறிஞரைச் சந்திப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை.

அபு சஃபியா எங்கு இருக்கிறார், அவர் உயிருடன் இருக்கிறார் என்கின்ற செய்தியையாவது அறிந்து கொள்ள முடிவதாக அவரது வழக்கறிஞர் கூறுகிறார். ஆனால், எஸ்.டி.டீமான் தடுப்பு முகாம் மற்றும் பிற இஸ்ரேலின் இராணுவ சிறைகளுக்குக் கொண்டு செல்லப்பட்ட ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் என்ன ஆனார்கள் என்பதே தெரியாமல் உள்ளது.

மக்களின் மருத்துவரான அபு சஃபியாவை கைது செய்து சித்திரவதை செய்வதன் மூலம், மக்களுக்காக பணிபுரியும் மற்ற மருத்துவர்களையும் அச்சுறுத்தி அடிபணிய வைப்பதுதான் இனவெறி இஸ்ரேலின் நோக்கம். ஆனால், இந்த அடக்குமுறையின் காரணமாக இன்னும் ஆயிரக்கணக்கான அபு சஃபியாக்கள் உருவாவதை இந்தக் கோழைகளால் தடுக்க முடியாது.

இஸ்ரேல் மீது பொருளாதாரத் தடை விதித்து அதனுடைய அடக்குமுறைகளைக் கட்டுப்படுத்தி அடிபணிய வைத்து பேச்சு வார்த்தைக்கு அழைத்து வருவது ஜனநாயகத்துக்காக, இறையாண்மைக்காகக் குரல் கொடுக்கின்ற உலக நாடுகளுடைய கடமையாகும்.

இஸ்ரேலின் ரத்த வெறி பிடித்த இந்த அடக்குமுறைகளுக்கு எதிராகச் சர்வதேச பாட்டாளி வர்க்கமும் தேசிய விடுதலைக்காகப் போராடுகின்ற மக்களும் கட்டாயம் கணக்கு தீர்ப்பார்கள்!


அய்யனார்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க