11.03.2025

கபடி போட்டியில் வென்றதற்காக தலித் மாணவன் மீது கொலை முயற்சி!
படுகாயம்!

தமிழ்நாடு அரசே, ஆதிக்க சாதி சங்கங்களை தடை செய்!

ஆதிக்க சாதிவெறியர்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் போலீசு மீது நடவடிக்கை எடு!

கண்டன அறிக்கை

தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம், அரியநாயகபுரம் கிராமத்தைச் சேர்ந்த பதினொன்றாம் வகுப்பு தலித் மாணவன் தேவேந்திர ராஜா ஆதிக்க சாதிவெறியர்களால் கொடூரமாக வெட்டப்பட்ட செய்தி தமிழ்நாட்டையே அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

அண்மையில் நடந்த கபடிப் போட்டியில் தேவேந்திர ராஜா பங்கேற்ற அணி வெற்றிபெற்றுள்ளது. கபடிப் போட்டியில் தோற்ற ஆதிக்கசாதிவெறியர்கள் நேற்று 10.3.2025 வழக்கம் போல் பள்ளிக்கு பேருந்தில் சென்ற மாணவன் தேவேந்திர ராஜாவை பேருந்தை நிறுத்தி வெளியே இழுத்து போட்டு கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். தேவேந்திர ராஜாவுக்கு தலையில் கொடுங்காயமும் இரண்டு கைகளிலும் வெட்டுக்காயமும் ஏற்பட்டுள்ளது.

நாங்குனேரி மாணவன் சின்னத்துரை நன்றாக படித்ததற்காகவும் சிவகங்கை மாணவன் புல்லட் ஓட்டியதற்காகவும் வெட்டப்பட்டனர். இப்போது தேவேந்திர ராஜா கபடியில் வென்றதற்காக வேட்டையாடப்பட்டுள்ளானர்.

தலித் மக்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. பள்ளிகளில் ஆதிக்க சாதிவெறியர்கள் திட்டமிட்டு வேலை செய்கின்றனர்.

கிராமங்கள் தோறும் பள்ளிகள் தோறும் ஆர்.எஸ்.எஸ் கும்பல் பல்வேறு பெயர்களில் செயல்பட்டு சாதி வெறியையும் மதவெறியையும் வளர்க்கின்றது.

மாணவர்கள் கைகளில் வண்ணக்கயிறு கட்டக்கூடாது என்ற தமிழ்நாடு அரசின் உத்தரவுக்கு எதிராகக் குரல் கொடுத்ததே எச்.ராஜாதான்.

ஆதிக்க சாதி வெறி சங்கங்கள் தங்களது செயல்பாட்டை பள்ளிகளில் இருந்தே தொடங்குகின்றன. போலீசோ வழக்கம் போல முன்விரோதம் என்று கூறி பிரச்சினையை திசை திருப்பி ஆதிக்க சாதி வெறியர்களைப் பாதுகாக்கிறது.

ஆதிக்கு சாதி வெறியர்களும் போலீசும் இணைந்து மேற்கொள்ளும் இந்தத் தீண்டாமை வன்கொடுமையை மக்கள் அதிகாரம் வன்மையாகக் கண்டிக்கிறது.

தமிழ்நாடு அரசு உடனடியாக அனைத்து ஆதிக்கச் சாதி சங்கங்களையும் தடை செய்து தீண்டாமை வன்கொடுமையில் ஈடுபட்டவர்களுக்கு தகுந்த தண்டனை பெற்றுத்தரவேண்டும் என்றும் மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.


தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
9962366321

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க