திருப்பரங்குன்றம்: தமிழ்நாட்டின் அயோத்தியல்ல, பார்ப்பனிய எதிர்ப்பு மரபின் தொடர்ச்சி!

எப்படியேனும் சாதி-மதவெறிக் கலவரங்களைத் தூண்டி தமிழ்நாட்டில் தளம் அமைக்க முயன்றுவரும், பார்ப்பன பாசிச கும்பலின் அடுத்தகட்ட நகர்வுதான் திருப்பரங்குன்றம். தாமதிக்காமல் திருப்பியடிக்க வேண்டிய தருணம் இது.

ந்தியா முழுவதும் கலவரங்களை நடத்தி ஆட்சியைப் பிடிக்க முயலும் ஆர்.எஸ்.எஸ் –  பா.ஜ.க. கும்பலுக்கு, நீண்ட காலமாகவே சிம்மசொப்பனமாக இருந்து வருகிறது, தமிழ்நாடு.

இருப்பினும், சாதி மற்றும் மத மோதல்களை உருவாக்குவதற்கான முயற்சியை அக்கும்பல் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது. கன்னியாகுமரியில் இந்து – கிறித்தவர் இடையிலும், கோவையில் இந்து – இஸ்லாமியர் இடையிலும்,  நெல்லையில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் ஆதிக்கச் சாதியினருக்கும் இடையிலும் முரண்பாடுகளைத் தீவிரப்படுத்தி, இஸ்லாமியர், கிறித்தவர்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தாக்குதல்களை நடத்திய இக்கும்பல், தற்போது திருப்பரங்குன்றத்தைக் குறிவைத்து தனது சதி வேலைகளை அரங்கேற்றி வருகிறது.

“இந்துக்கள் மனதைப் புண்படுத்திவிட்டனர்”, “முருகன் மலையை சிக்கந்தர் மலையாக மாற்ற இஸ்லாமியர்கள் முயற்சிக்கின்றனர்”, “நாங்களும் வெள்ளிக்கிழமை பன்றி வெட்டுவோம்”, “தர்காவுக்குச் சொந்தமான கொடிமரத்தில் தீபம் ஏற்ற வேண்டும்”, “தர்காவை மலையிலிருந்து அகற்ற வேண்டும்”, “திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக மாற்றுவோம்” என்றெல்லாம் மதக்கலவரத்தைத் தூண்டும் வகையில் பா.ஜ.க-வைச் சேர்ந்த அண்ணாமலை, எல்.முருகன், எச்.ராஜா, இந்து முன்னணியைச் சேர்ந்த காடேஸ்வரா சுப்பிரமணியன் உள்ளிட்ட சங்கிகள் கடந்த இருமாத காலமாக தொடர்ந்து மதவெறியைக் கக்கி வந்தனர்.

ஆனால், திருப்பரங்குன்றம் பகுதி மக்களின் மதநல்லிணக்கப் பாரம்பரியமும், பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகளின் தொடர் போராட்டங்களும் இக்கும்பலது கனவைத் தகர்த்தெறிந்துள்ளது.

திருப்பரங்குன்றம் மலை உரிமை தொடர்பான வெவ்வேறு பிரச்சினைகள் ஒரு நூற்றாண்டாகவே இருந்து வந்திருந்தாலும் கடந்த முப்பது ஆண்டுகளாக, இந்த மதவெறிக் கும்பல்தான், மதக்கலவரத்தைத் தூண்டும் வகையில் இதனைக் கையாண்டு வருகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலில் சில தொகுதிகளிலாவது வெற்றிபெற வேண்டும் என்ற வெறியில், அதிகார வர்க்கத்தில் ஊடுருவியிருக்கும் சங்கிகளைப் பயன்படுத்தி, தற்போது தனது கலவரத் திட்டத்தை விரைவுபடுத்துகிறது. அதன் ஓர் அங்கமாகத்தான் கடந்த இரண்டு மாத காலமாக, மதுரையில் மதவெறியூட்டும் நடவடிக்கைகளை அரங்கேற்றி வருகிறது.

மலை யாருக்கு சொந்தம்?

திருப்பரங்குன்றம் மலையில் சொத்துரிமை தொடர்பான பிரச்சினை, பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலேயே எழுப்பப்பட்டது. 1920-ஆம் ஆண்டு இரயில்வே பாதைகள் அமைக்கவும் குவாரிகள் அமைக்கவும் திருப்பரங்குன்றம் மலையைக் கையகப்படுத்தும் முயற்சிகளை பிரிட்டிஷ் அரசின் வருவாய்த்துறை மேற்கொண்டது. இதற்கு எதிராக, திருப்பரங்குன்றம் முருகன் கோயில் தேவஸ்தானம் கீழமை நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. அந்த வழக்கில் தர்கா நிர்வாகமும் மனுதாரராக இணைக்கப்பட்டது.

கீழமை நீதிமன்றத்தின் முதன்மை கூடுதல் நீதிபதியாக இருந்த பி.ஜி. இராம ஐயர் 300-க்கும் மேற்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்து, 21 சாட்சிகளை விசாரித்தார். 25-08-1923 அன்று அவர் வழங்கிய தீர்ப்பில், நெல்லித்தோப்பு, அதில் உள்ள புதிய மண்டபம், நெல்லித்தோப்பிலிருந்து பள்ளிவாசல் வரை உள்ள படிக்கட்டுகள், பள்ளிவாசல் மற்றும் கொடிமரக் கம்பம் ஆகியவை இஸ்லாமியர்களின் சொத்தாகும் எனவும், மலையின் பிற பகுதிகள் மற்றும் கிரிவலப் பாதை, முருகன் கோயில் தேவஸ்தான நிர்வாகத்திற்குச் சொந்தமானவை எனவும் குறிப்பிடப்பட்டது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அது வருவாய்த்துறைக்குச் சாதகமாக முடிந்ததாகக் கூறப்படுகிறது. இந்த உயர்நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து, அன்றைய உச்சநீதிமன்றமான இலண்டனில் உள்ள பிரிவி கவுன்சிலில் (Privy Council) 25-08-1923 அன்று மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில், பி.வி. இராம ஐயர் வழங்கிய தீர்ப்பினை உறுதிப்படுத்தி, 12-05-1930 அன்று உத்தரவு வழங்கப்பட்டது.

அதன் பின்னர், தர்காவில் வழிபாடு நடத்தவும், உணவு சமைப்பதற்கும் தேவையான நீரை சிவன் கோயில் (காசி விசுவநாதர் கோயில்) சுனையில் இருந்து எடுத்துப் பயன்படுத்தி வந்தனர். கோடைக்காலங்களில் நீரின் அளவு குறைவதால், இருதரப்பினருக்கும் இடையே சிறு மோதல்கள் ஏற்பட்டு வந்தன. இதனால், தர்கா நிர்வாகம், தர்காவிற்குச் சொந்தமான இடத்திலேயே சுனை கட்டும் பணியை மேற்கொண்டது.

இதை எதிர்த்து, சுனை கட்டுமிடம் கோயில் நிர்வாகத்திற்குச் சொந்தமானது என அறிவிக்கக் கோரி, கோயில் நிர்வாகம் சார்பாக 1975-ஆம் ஆண்டு மதுரை மாவட்ட சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி கே. சுப்பிரமணியன், முந்தைய 1920-ஆம் ஆண்டு பி.ஜி. ராம ஐயர் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில், வழக்கில் குறிப்பிடப்பட்ட இடம் தர்காவிற்கே சொந்தமானது எனவும், சுனை கட்ட தடை போட முடியாது எனவும் 22-11-1978 அன்று தீர்ப்பளித்தார்.

மேற்கண்ட அனைத்து வழக்குகளிலும், திருப்பரங்குன்றம் கோயில் நிர்வாகம் தர்காவிற்குச் சொந்தமான இடங்களைக் கோயிலுக்கு சொந்தமானவை என அறிவிக்க முயன்றது. ஆனால், அனைத்துத் தீர்ப்புகளும் தர்கா நிர்வாகத்திற்கு ஆதரவாகவே வந்துள்ளன.

ஆனால், 1931-ஆம் ஆண்டு லண்டன் பிரிவி கவுன்சிலின் தீர்ப்பில் முழு மலையும் முருகனுக்குச் சொந்தமானது என்று கூறப்பட்டதாக எச்.ராஜா உள்ளிட்ட சங்கிகள் பொய்ப் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

திருப்பரங்குன்றம் தமிழ்நாட்டின் அயோத்தியா?

இந்தியாவின் தொல்லியல் அடையாளங்களில் ஒன்றாக இருந்த பாபர் மசூதி, 1992-ஆம் ஆண்டு இடிக்கப்பட்டது. இராமன் அங்கு பிறந்தார், அவ்விடத்தில் இராமன் கோயில் இருந்தது என்ற பொய்ப் பிரச்சாரத்தைக் கட்டமைத்த ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பல், கரசேவை நடத்தி மசூதியை இடித்தது.

இதையே முன்மாதிரியாக வைத்து, நாடு முழுவதும் இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்களுக்கு எதிரான பிரச்சாரங்களைத் தொடங்கின. திருப்பரங்குன்றம் மலையும் இப்போது அந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. எனவேதான், “திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக மாற்றுவோம்” என்று எச்.ராஜா திமிர்த்தனமாகப் பேசித் திரிகிறார்.


திருப்பரங்குன்றத்தில் கலவரம் செய்வதற்காக வெளியூர்களிலிருந்து ஆட்களை திரட்டிவந்து பா.ஜ.க. நடத்திய போராட்டம்.

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்கு மேலே, 50 அடி உயரத்தில் 300 ஆண்டுகள் பழமையான தீபமேற்றும் பீடம் உள்ளது. தமிழ்நாடு முழுவதுமிருந்து வரும் பக்தர்கள் அங்கு தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். ஆனால், “தர்காவிற்குச் சொந்தமான கொடிமரம் அமைந்துள்ள பகுதியில்தான் தீபம் ஏற்ற வேண்டும், அது இந்துக்களின் நம்பிக்கை” என்று கூறி, ஆர்.எஸ்.எஸ்-இன் வானரப்படைகளில் ஒன்றான “இந்து பகத் சன சபை”யின் தலைவர் வி.தியாகராஜன் சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் 1994-இல் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி ஜெ. கனகராஜ், 1930-ஆம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பே இறுதியானது என்றும், எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறாத வண்ணம் இந்தப் பகுதியின் பாதுகாப்பை போலீசுத்துறை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் 24-11-1994 அன்று உத்தரவிட்டார்.

இதையெல்லாம் மதிக்காத பாசிச கும்பலோ, கொடிமரம் அமைந்துள்ள பகுதியில் தீபம் ஏற்ற வேண்டும் என்று இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பை அப்பகுதி மக்களிடையே விதைக்க முயற்சித்து வருகிறது.

அண்மையில் கூட, செய்தியாளர்களிடம் பேசிய ஒன்றிய அமைச்சர் எல்.முருகன், “1931-ஆம் ஆண்டு தீர்ப்பின்படி, தர்கா அமைந்துள்ள 33 சென்ட் இடம் மட்டுமே தர்காவிற்குச் சொந்தமானது. கோயிலுக்குச் சொந்தமான இடத்திலுள்ள (தர்கா) கொடிமரத்தில் தீபம் ஏற்றுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும். கடந்த 30 ஆண்டு காலமாக இந்துக்களின் உரிமை பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது” என்று பேசியிருக்கிறார்.

கடந்த 2023-ஆம் ஆண்டு, நெல்லித்தோப்பு பகுதியில் தொழுகையைத் தடைசெய்யக் கோரி இந்து மக்கள் கட்சி சார்பில், உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. தொழுகைச் செய்வதைத் தடுக்க முடியாது எனவும் அந்த வழக்கில் எவ்வித இடைக்காலத் தடை உத்தரவும் பிறப்பிக்க இயலாது எனவும் 27-06-2023 அன்று நீதிபதிகள் கூறிவிட்டனர்.

இவ்வாறாக, 1920 முதல் 2023-ஆம் ஆண்டு வரை நடைபெற்ற பல்வேறு வழக்குகளில் சிக்கந்தர் தர்கா, பள்ளிவாசல், கொடிக்கம்பம் அமைந்துள்ள மலையுச்சி, நெல்லித்தோப்பு உள்ளிட்ட பகுதிகள் இஸ்லாமியர்களுக்குச் சொந்தமானது என்பது சட்டரீதியாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆதாரங்களையும் தீர்ப்புகளையும் மதிக்காமல், இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க. கும்பல் இஸ்லாமியர்களுக்கு எதிரான அவதூறான பரப்புரையைத் திட்டமிட்டே  செய்து வருகிறது.

அதன் தொடர்ச்சியாகத்தான், சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழிகளே இதுவரை பலியிடப்படாதது போலவும், இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில்தான் இஸ்லாமியர்கள் வேண்டுமென்றே பிரச்சினை செய்வதாகவும், முருகன் மலையை சிக்கந்தர் மலையாக்க முயற்சிகள் நடப்பதாகவும் கதையளந்து, கலவரம் நடத்த முயற்சிக்கிறது இந்து முன்னணி கும்பல்.

இந்துக்களும் கிடா வெட்டும் சிக்கந்தர் தர்கா:

கடந்த டிசம்பர் 26-ஆம் தேதி டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை எதிர்த்துப் போராடிய அரிட்டாபட்டியைச் சேர்ந்த  மக்கள், டங்ஸ்டன் திட்டம் முறியடிக்கப்பட்டதைத் தொடர்ந்து நேர்த்திக்கடன் செலுத்த, கிடா வெட்டுவதற்காக சிக்கந்தர் தர்காவிற்குச் சென்றனர். அப்போது அங்கு கிடா வெட்டுவது தடை செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, திருப்பரங்குன்றம் போலீசால் தடுத்து நிறுத்தப்பட்டனர். அவ்வாறு சென்ற மக்கள் இஸ்லாமியர்கள் அல்ல, இந்துக்கள்தான்.

எனவே, திருப்பரங்குன்றம் மலையில் சிக்கந்தர் தர்கா அமைந்திருப்பது பற்றியோ, அங்கு ஆடு, கோழி பலியிடுவது பற்றியோ அப்பகுதி இந்து மக்கள் யாரும் புகார் அளித்ததில்லை. இந்து மக்களும் இணைந்தே அங்கு வழிபாடு நடத்தி வந்துள்ளனர் என்பது யாவரும் அறிந்த விசயம்.

ஆனால், இந்துக்களின் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொள்ளும் இந்து முன்னணி-பா.ஜ.க. கும்பலானது அயோத்தியில் கலவரம் செய்து பாபர் மசூதியை இடித்ததைப் போல, திருப்பரங்குன்றத்திலும் அரங்கேற்ற வேண்டுமென 30 ஆண்டு காலமாக வெறிகொண்டு அலைகிறது. ஆனால், இந்து – இஸ்லாமிய மக்களின் மதநல்லிணக்கத்தை அக்கும்பலால் உடைக்க இயலவில்லை. இத்தகைய ஒற்றுமைதான் இந்துத்துவப் பாசிஸ்டுகளின் தாக்குதல் இலக்காக இருக்கிறது. அதைத் தகர்ப்பதன் ஊடாகவே தமிழ்நாட்டில் வேருன்ற முடியும் என்பதை உணர்ந்து,  வாய்ப்புகளுக்காக அலைந்து கொண்டிருக்கிறது.

முருகனுக்கு எதிரி, இஸ்லாமியர்களா? இந்து முன்னணியா?

தொல்குடித் தமிழ் மக்களின் கடவுளான முருகனை, சுப்பிரமணியன் என பெயரை மாற்றி சைவக் கடவுளாகவும் வேதக் கடவுளாகவும் மாற்றியது பார்ப்பனக் கும்பல். இப்படி கடவுளைத் திருடியவர்கள்தான், “திருப்பரங்குன்றம் என்ன கசாப்புக் கடையா?” என்று இப்போது கேள்வியெழுப்புகின்றனர்.

குறிஞ்சி நிலத் தலைவனான முருகனை, வேட்டைக் கடவுளாகவே மக்கள் வழிபட்டு வந்தனர். அதனால், முருகன் கோயில் மட்டுமல்ல, கருப்பசாமி, பதினெட்டாம்படி கருப்பு, பாண்டி முனி, அம்மன் கோயில்கள் உள்ளிட்ட நாட்டார் தெய்வங்களுக்கும் ஆடு, கோழி பலியிடுவதுதான் நமது தமிழ் மரபு – வழிபாட்டு முறை. இந்து முன்னணியும் பா.ஜ.க-வும் கூறும் சைவ வழிபாட்டு முறை ஒருபோதும் தமிழர்களின் வழிபாட்டு முறையாக இருந்ததில்லை.

இந்தப் பண்பாட்டுப் பின்புலத்தில்தான் முருகனும் சிக்கந்தரும் இணக்கமாகவே இருந்து வருகின்றனர். அங்குள்ள மக்கள் அனைவரும் தாயும் பிள்ளையுமாகவே பழகி வருகின்றனர். எனவே, திருப்பரங்குன்றத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டியது கலவரம் நடத்துவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டுள்ள இந்து முன்னணி-பா.ஜ.க. பாசிச கும்பல்களைத்தான், சிக்கந்தர் தர்காவை அல்ல.

ஆண்டிமலை அகர்வாலுக்கு; திருப்பரங்குன்றம் மார்வாடிகளுக்கா?

மதுரையிலுள்ள அரிட்டாப்பட்டி சுற்றுவட்டாரத்தில் டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தைக் கடந்த ஆண்டு அறிவித்தது மோடி அரசு. அந்தத் திட்டம் அமையவிருக்கும் பகுதியானது பல்வேறு மலைகளையும், நாட்டார் வழிபாட்டுத் தலங்களையும், பல்லுயிர்ப் பாதுகாப்பு மண்டலத்தையும், தமிழர் பண்பாட்டின் அடையாளங்களையும் உள்ளடக்கியது. அவை அனைத்தையும் அழித்து, வடநாட்டு அகர்வாலுக்குத்  தாரைவார்க்க முயன்றதும், வளர்ச்சித் திட்டம் என்று ஆதரித்ததும் இதே ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி, பா.ஜ.க. கும்பல்தான்.

அங்குள்ள மலைகளில் ஆண்டிமலை எனும் முருகன் மலையும் ஒன்று. இப்போது திருப்பரங்குன்றம் முருகனைக் ‘காப்பாற்றத்’ துடிக்கும் எச்.ராசா, எல்.முருகன், அண்ணாமலை, காடேஸ்வரா சுப்பிரமணியன் உள்ளிட்ட யாரும், ஆண்டிமலையிலுள்ள முருகனைக் காப்பாற்ற வரவில்லை. அப்பகுதி மக்களின் போராட்டமே முருகனையும், கருப்பனையும், அம்மன் கோயில்களையும் பாதுகாத்தது. அகர்வாலுக்காக, அரிட்டாப்பட்டி முருகனையும் கருப்பனையும் அழிக்கத் துணிந்த இந்தக் கும்பல்தான், இப்போது சிக்கந்தர் தர்காவில்  ஆடு, கோழி வெட்டுவதால் முருகனின் புனிதம் கெடுகிறது என கதையளக்கிறது.

இதேபோல், மதுரை மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றியுள்ள மாசி வீதிகளில் உள்ள கடைகள், வணிக வளாகங்களில் பெரும்பாலானவை மார்வாடி – சேட்டுகளின் கட்டுப்பாட்டிற்குச் சென்றுள்ளன. சுமார் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, மீனாட்சியம்மன் கோயிலுக்கு அருகிலுள்ள புதுமண்டபத்தில் மிகப்பெரும் தீ விபத்து ஏற்பட்டது. அங்கு செயல்பட்டுவந்த 50-க்கும் மேற்பட்ட கடைகள் முழுமையாக தீயில் கருகி சேதமடைந்தன. அந்த மண்டபம் புனரமைக்கப்பட்ட பிறகு, 200 ஆண்டுகளாக அங்கு கடைகளை நடத்திவந்த உள்ளூர் வணிகர்கள், சேட்டு-மார்வாடிகளால் வேறு இடத்திற்கு விரட்டப்பட்டனர். கோவை, திருவண்ணாமலை, திருப்பூர் போன்ற தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் இந்த நிலைதான்.

திருப்பரங்குன்றம் கோயிலைப் பார்ப்பனமயமாக்கி முருகனை அபகரித்ததுபோல், மலையைச் சுற்றியுள்ள கடைகள், வணிக வளாகங்களை அங்குள்ள அதிகாரிகளின் துணையுடன் மார்வாடி – சேட்டுகளுக்குத் தாரைவார்க்கும் முயற்சியில் இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. கும்பல் தற்போது ஈடுபட்டுள்ளது என்பதே உண்மை.

அது மட்டுமின்றி, சிக்கந்தர் தர்காவில் ஆடு வெட்டக்கூடாது என இப்போது சொல்லும் இந்து முன்னணி கும்பல், திருப்பரங்குன்ற மலை சமணர் மலை, ஆகையால், மார்வாடிகள் மனம் நோகக் கூடாது என்பதற்காக, மலைக்குக் கீழே இருக்கும் கருப்பு கோயிலிலும், அம்மன் கோயிலிலும் ஆடு வெட்டக்கூடாது என்று தடுக்கும். பின்னர், திருப்பரங்குன்றத்தில் இறைச்சியே சாப்பிடக்கூடாது என்றும் விரிவுப்படுத்தும்.

ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. பாசிச கும்பலை விரட்டியடிப்போம்!

இந்த விவகாரத்தில் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க., இந்து முன்னணி கும்பலுக்கு எதிராக பேசுபவர்களிடையே ஒருமித்த கருத்து இல்லை. சிலர், “மக்களிடம் பிரச்சினை இல்லை. அறநிலையத்துறைதான் பிரச்சினையாக இருக்கிறது. எனவே, அறநிலையத்துறையை ஜனநாயகப்படுத்த வேண்டும்” என்கின்றனர்.

இன்னும் சிலர், “இந்த விவகாரத்தில் இந்து முன்னணியின் பிளவுவாத அரசியலுக்கு இடம் கொடுத்துவிடக் கூடாது. எனவே, பெரும்பான்மை இந்து மக்களுடன் இஸ்லாமியர்கள் ஒன்றுபட்டு நிற்க வேண்டும். எத்தனையோ தர்கா இருக்கும்போது இந்த இடத்தில் ஆடு வெட்டவில்லை என்றால் ஒன்றும் குடிமுழுகிப் போய்விடாது” என்கின்றனர்.

இந்த பிரச்சினை இந்துக்கள்-இஸ்லாமியர்களுக்கு இடையிலான பிரச்சினை அல்ல. மக்கள் விரோத இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. கும்பலுக்கும், பெரும்பான்மை மக்களுக்கும் இடையிலான பிரச்சினை என்பதை முதலில் உணர வேண்டும். இந்தக் கும்பல் குறிவைத்திருப்பது இஸ்லாமியர்களை அல்ல. மதுரையின் மத நல்லிணக்கத்தைப் பேணிவரும் பெரும்பான்மை இந்து மக்களையும், அவர்களின் பாரம்பரிய வழிபாட்டு உரிமையையும், பண்பாட்டையும்தான். இவற்றை அழித்து பார்ப்பனியமயமாக்குவதும், மக்களைப் பிளவுபடுத்துவதுமே அவர்களின் நோக்கம். பகுத்தறிவு, மத நல்லிணக்கம், முற்போக்கு, ஜனநாயகம் என பன்முகத்தன்மை கொண்ட தமிழ்நாட்டில், பார்ப்பனியக் கலாச்சாரத்தைத் திணிக்கும் நீண்டகாலத் திட்டத்தின் ஒருபகுதியே இது.

மேலும், அம்பானி, அதானி, அகர்வால் போன்ற முதலாளிகளுக்கு ஒட்டுமொத்த நாட்டையும் படையல் போட்டுக்கொடுப்பதும், இதற்கு எதிராக மக்களை ஒன்றுபட விடாமல் பிளவுபடுத்துவதும்தான் இவர்களது நோக்கத்தின் விளைவு. இந்த செயல்திட்டத்தைத்தான் காலங்காலமாக ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல் நாடெங்கும் செயல்படுத்தி வருகிறது. கடந்த பத்தாண்டுகளில், இக்கும்பல் நடத்திய இத்தகைய பிளவுவாத கலவரங்களுக்கு மணிப்பூரும் ஒடிசாவும் ஜார்க்கண்டும் இரத்த சாட்சியங்களாக இருக்கின்றன.

எப்படியேனும் சாதி-மதவெறிக் கலவரங்களைத் தூண்டி தமிழ்நாட்டில் தளம் அமைக்க முயன்றுவரும், பார்ப்பன பாசிச கும்பலின் அடுத்தகட்ட நகர்வுதான் திருப்பரங்குன்றம். தாமதிக்காமல் திருப்பியடிக்க வேண்டிய தருணம் இது.

ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. பாசிச கும்பல் கிளப்பும் மதவெறி – சாதிவெறிக்கு எதிராக, தமிழ்நாட்டின் தொன்மை வாய்ந்த பார்ப்பனிய எதிர்ப்பு மரபையும், மதவெறி எதிர்ப்பு மரபையும் முன்னிறுத்துவோம். பார்ப்பனக் கும்பலால் களவாடப்பட்ட முருகனை மீட்போம். அவர்கள் இலக்கு வைத்துள்ள கருப்பன், அய்யனார், அம்மன் உள்ளிட்ட நாட்டார் தெய்வங்களைக் காப்போம். ஆடு, கோழிகளைப் பலியிடும் தமிழ் மக்களின் வழிபாட்டு உரிமையை நிலைநாட்டுவோம்! பார்ப்பன பாசிஸ்டுகளின் கல்லறை தமிழ்நாடு என்பதை நிலைநாட்டுவோம்!


பாரி

(புதிய ஜனநாயகம் – மார்ச் 2025 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க