நீட் தேர்வு தூக்குக் கயிற்றுக்கு மற்றொரு மாணவி பலி

நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு, ஆள் மாறாட்டம் செய்வது போன்ற பல்வேறு முறைகேடுகள் தொடர்ந்து அம்பலமாகி வந்தாலும் பாசிச கும்பல் நீட் தேர்வை இரத்து செய்வதில்லை.

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே நீட் தேர்வு தோல்வி பயத்தால் 18 வயது மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளார். இச்சம்பவம் தமிழ்நாடு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அருகே உள்ள பெரியமுத்தியம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் செல்வராசு-சந்திரா. இவர்களது மகள் சத்யா. அருகிலுள்ள கொங்கணாபுரம் தனியார்ப் பள்ளியில் படித்துவந்த மாணவி சத்யா கடந்த வருடம் பன்னிரண்டாம் வகுப்பில் 562 மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ளார்.

பின்னர் மருத்துவப் படிப்பில் சேர்வதற்காக நீட் எனப்படும் மருத்துவப் படிப்பிற்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை எழுதியுள்ளார். ஆனால், அத்தேர்வில் 333 மதிப்பெண்களை மட்டுமே பெற்றுள்ளார்.

மனம் தளராமல் நீட் தேர்வில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக ஜலகண்டபுரத்தில் உள்ள தனியார் நீட் பயிற்சி மையத்தில் சேர்ந்துள்ளார். தொடர்ந்து நீட் தேர்விற்குத் தயாராகிவந்த சத்யா இந்தாண்டு மே 4-ஆம் தேதி அன்று நடைபெற உள்ள நீட் தேர்விற்காக கடுமையாகப் படித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த வாரம் சத்யா தனது அம்மாவிடம், “நீட் தேர்விற்குப் படிப்பதற்கு மிகவும் கடினமாக உள்ளது. என்னால் மருத்துவப் படிப்பில் சேர முடியுமா? முடியாதா? என்று தெரியவில்லை” என்று தன்னுடைய பயத்தினை வெளிப்படுத்தி உள்ளார். உடனடியாக “மருத்துவப் படிப்பு இல்லை என்றால் வேறு பாடத்தைத் தேர்வு செய்து படித்துக் கொள்ளலாம்” என்று பெற்றோர்  சத்யாவிற்கு ஆறுதல் கூறியுள்ளனர். ஆனால் மருத்துவராக வேண்டும் என்கிற தன்னுடைய கனவினை சிதைக்க விருப்பமில்லாமல் மன உளைச்சலிலும் தொடர்ந்து நீட் தேர்விற்குத் தயாராகி வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த மார்ச் 31-ஆம் தேதி அன்று இரவு சத்யா வாந்தி எடுத்துள்ளார். பெற்றோர் என்ன ஆனது என்று கேட்டபோது “நீட் தோல்வி பயத்தால் விசம் குடித்து விட்டேன்” என்று சத்யா கூறியுள்ளார். பதறிப்போன பெற்றோர் அவரை தூக்கிக்கொண்டு எடப்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.


படிக்க: நீட் தேர்விற்கு அபார் அட்டை கட்டாயம் | பு.மா.இ.மு. கண்டனம்


அங்கு இரண்டு நாட்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக மாணவி சத்யாவை சேலம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஏப்ரல் 3 அன்று மாணவி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அவரின் உடல் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மாணவி தற்கொலை செய்துகொண்டது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மகள் இறப்பு குறித்துப் பேசிய பெற்றோர், “மருத்துவ படிப்பு இல்லை என்றால் எத்தனையோ படிப்புகள் உள்ளன. என் மகளைப் போல வேறு எந்த மாணவ-மாணவியும் தற்கொலை செய்துகொள்ளக் கூடாது” என்று துக்கத்துடன் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்பாக கடந்த மார்ச் 28-ஆம் தேதி அன்று சென்னை கிளாம்பாக்கத்தைச் சேர்ந்த தர்ஷனி என்கிற மாணவி நீட் தோல்வி பயத்தால் தற்கொலை செய்துகொண்டார். தற்போது சத்யாவும் நீட் எனும் தூக்குக் கயிற்றிற்குப் பலி கொடுக்கப்பட்டுள்ளார்.

நீட் தேர்வினால் மாணவ-மாணவிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்பதைவிட பாசிச மோடி அரசால் தொடர்ந்து படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர் என்று கூறுவதே சரியாக இருக்கும். நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு, ஆள் மாறாட்டம் செய்வது போன்ற பல்வேறு முறைகேடுகள் தொடர்ந்து அம்பலமாகி வந்தாலும் பாசிச கும்பல் நீட் தேர்வை இரத்து செய்வதில்லை. மாறாக, இம்முறைகேடுகளுக்கும் நீட் பயிற்சி என்ற பெயரில் கார்ப்பரேட் கும்பல் அடிக்கும் கொள்ளைக்கும் பக்கபலமாக இருப்பதே ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல்தான்.

ஏழை குழந்தைகளின் மருத்துவக் கனவைச் சிதைத்து பணக்காரர்கள் மட்டும்தான் மருத்துவராக முடியும் என்று கல்வித்துறை முழுவதையும் கார்ப்பரேட்மயமாக்கிக் கொண்டிருக்கிறது பாசிச கும்பல். இதன் காரணமாக, 2017-ஆம் ஆண்டு அனிதா முதல் தற்போது சத்யா வரை நீட் என்னும் தூக்குக் கயிற்றுக்கு மாணவர்கள் தொடர்ந்து பலி கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.


படிக்க: உ.பி: நீட் பயிற்சி மாணவியை அடைத்துவைத்து பாலியல் வன்கொடுமை


2021-ஆம் ஆண்டு நீட் தேர்வை இரத்து செய்வோம் என்று தம்பட்டம் அடித்து ஆட்சிக்கு வந்தது தி.மு.க அரசு. ஆனால், நீட் தேர்விற்கு எதிராக உருப்படியாக களப் போராட்டங்களைக் கட்டியமைப்பதற்கு மாறாக, கையெழுத்து இயக்கம் நடத்துவது, சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவது என சட்டப் போராட்டங்கள் மூலமே நீட் தேர்வை இரத்து செய்ய முடியும் என்று தமிழ்நாட்டு மக்களையும் மாணவர்களையும் ஏமாற்றி வருகிறது.

மறுபுறம், அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு நீட் பயிற்சி அளிப்பது என்ற பெயரில் தனியார் நீட் பயிற்சி மையங்களைப் பள்ளிகளுக்குள் அனுமதித்து தன்னுடைய கார்ப்பரேட் சேவைக்காக ஏழை எளிய மாணவர்களின் முதுகில் குத்தி வருகிறது. இந்த அரசுதான் நீட் தேர்வை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறதாம்.

எனவே, நீட் இரத்து விவகாரத்தில் எப்போதோ காலாவதியாகிப்போன சட்டப் போராட்டத்தின் மூலமாக நீட் தேர்வை ஒருபோதும் இரத்து செய்ய முடியாது. மாறாக ஆசிரியர்கள், மாணவர்கள் ஒருங்கிணைக்கின்ற மாபெரும் மக்கள் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். அதன் மூலமே நீட் தேர்விற்கு இன்னொரு உயிர் பலியாவதைத் தடுக்க முடியும்.


இன்குலாப்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க