மணிப்பூர்: இரண்டு ஆண்டுகளைக் கடந்து தொடரும் பாசிச கும்பலின் நரவேட்டை!

தற்போது வரை வன்முறை தாக்குதலில் 260-க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 70,000-ரத்திற்கும் மேற்பட்ட மக்கள் சொந்த நாட்டிற்குள்ளாகவே அகதிகளாக்கப்பட்டுள்ளனர். மருந்து, நிவாரண பொருட்களின் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.

ணிப்பூரில் உள்ள குக்கி மெய்தி இன மக்களுக்கிடையே பாசிச கும்பலால் உருவாக்கப்பட்ட வன்முறை இரண்டு ஆண்டுகளைக் கடந்தும் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. தினந்தோறும் மக்கள் அச்சத்துடனே வாழ்ந்து கொண்டிருக்கும் நிலைமை இயல்பாக்கப்பட்டு வருகிறது.

கடந்த 2023 ஆம் ஆண்டு மெய்தி இன மக்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்கப்படும் என்ற உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதரன் தீர்ப்பளித்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து குக்கி இன மக்கள் மெய்தி இன மக்களுக்கு பழங்குடி அந்தஸ்து வழங்கப்பட்டால் தங்களின் உரிமைகள் பறிக்கப்படும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை பாசிச கும்பல் இரண்டு சமூக மக்களுக்கு இடையிலான வன்முறையாக மாற்றியது.

அதனைத் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பின்புலம் கொண்ட அரம்பை தெங்கால் உள்ளிட்ட மெய்தி இனவெறி அமைப்புகள் குக்கி இன மக்களைக் கொடூரமாகப் படுகொலை செய்தன. ஆயிரக்கணக்கான வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. மெய்தி சமூக ஆண்களால் குக்கி இன பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது, உள்ளிட்ட வன்முறைகளை மறைப்பதற்கு பாசிச கும்பல் திட்டமிட்டு 144 தடை உத்தரவை அமல்படுத்தி இணைய சேவையினை முடக்கியது.

ஆனால் மெய்தி இனவெறியர்களால் குக்கி இன பெண்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு நிர்வாணமாக அழைத்துச் செல்லப்பட்ட காணொளி வெளியாகி நாட்டையே உலுக்கியது இதனைக் கண்ட உலக நாடுகள் இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பின.

பின்னர் குக்கி மெய்தி இன மக்களின் போராட்டங்களினால் ஏற்பட்ட நெருக்கடியால் உயர்நீதிமன்ற உத்தரவு திரும்பப் பெறப்பட்டது. இதற்கிடையில் மணிப்பூர் கலவரத்தைத் திட்டமிட்டு நடத்தியது நான்தான் என்கிற பைரன் சிங்கின் ஒப்புதல் வாக்குமூல ஆடியோ குக்கி மாணவர் அமைப்புகளால் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி 9 ஆம் தேதி அன்று கலவரத்திற்குக் காரணமான பைரன் சிங் தன்னுடைய முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் அம்மாநிலத்தில் பாசிச கும்பலால் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதன் மூலம் மாநிலத்தில் அமைதி திரும்பிவிடும் என்ற பாசிச கும்பலின் திட்டத்தை எதிர்க்கட்சிகள் வரவேற்றன. ஆனால் இன்று வரை மணிப்பூர் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.


படிக்க: மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி: குக்கி மக்களை ஒடுக்குவதற்கான சூழ்ச்சி!


தற்போது வரை வன்முறை தாக்குதலில் 260-க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 70,000-ரத்திற்கும் மேற்பட்ட மக்கள் சொந்த நாட்டிற்குள்ளாகவே அகதிகளாக்கப்பட்டுள்ளனர். மருந்து, நிவாரண பொருட்களின் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. நிவாரண முகாம்களில் தொற்றுநோய் பரவிக்கொண்டிருக்கிறது. இரண்டு இன மக்களுக்கும் இடையேயான மோதலால் மலைக்கும் பள்ளத்தாக்கிற்கும் இடையேயான தொடர்பு முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.

மே 3 ஆம் தேதியுடன் வன்முறை தொடங்கி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்தும், மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டு மூன்று மாதங்களைக் கடந்தும் தற்போது வரை வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த வீட்டிற்குச் செல்வதற்காகப் பதற்றத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

வன்முறை தாக்குதலால் இடம்பெயர்ந்தவர்களில் ஒருவரான ஜி கிப்கென் “நான் இம்பாலில் ஒரு பயிற்சி நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வந்தேன். இப்போது எல்லாம் போய்விட்டது. வருமான ஆதாரமும் மூன்று குழந்தைகளும் இல்லாததால், அவர்களின் எதிர்காலம் குறித்து நான் கவலைப்படுகிறேன். என்னால் எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை. இன்னும் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், நிலைமை எவ்வாறு நன்றாக மாறும் என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை,”என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

பிஷ்ணுபூர் மாவட்டத்தில் வசிக்கும் மெய்தி சமூகத்தைச் சேர்ந்த அபுங் “எனது மிகப்பெரிய கவலை எனது இரண்டு சிறு குழந்தைகளின் எதிர்காலம்தான். முன்னதாக, எனக்கு ஒரு செழிப்பான மளிகைக் கடை இருந்தது. நிவாரண முகாமில் தங்குவதை விட ஆயத்த வீட்டில் வாழ்வது சிறந்தது என்றாலும், அது ஒருவரின் சொந்த வீட்டில் வாழ்வதன் சுதந்திரம் மற்றும் மகிழ்ச்சியுடன் ஒப்பிட முடியாது.” என்று தன்னுடைய வலிகளை வார்த்தைகளால் வெளிப்படுத்தியிருக்கிறார்.


படிக்க: மணிப்பூர்: மோடி அரசை கண்டித்து குக்கி பா.ஜ.க. எம்.எல்.ஏ-க்கள் போராட்டம்


“வன்முறை வெடித்த முதல் சில மாதங்களில், குறிப்பிடத்தக்க சமூக ஆதரவு இருந்தது, மேலும் பொருட்கள் சரியான நேரத்தில் வந்து சேர்ந்தன. ஆனால் படிப்படியாக, நாங்கள் மறக்கப்பட்டுவிட்டோம். பெரும்பாலும், அடிப்படைத் தேவைகளுக்கு மற்றவர்களின் கருணையைச் சார்ந்து இருக்க வேண்டியிருக்கிறது. இது அவமானகரமானது,” என்று இம்பாலில் உள்ள ஒரு ஆயத்த (prefabricated) வீட்டில் வசிக்கும் அபேனாவ் தேவி நிவாரண பொருட்கள் வழங்கப்படாதது குறித்து தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறுகையில் “இந்த இரண்டு ஆண்டுக்கால மோதலின் மிகவும் சிக்கலான மற்றும் கவலைக்குரிய அம்சம் என்னவென்றால், ஆயுதக் குழுக்களும் அவற்றின் கூட்டாளிகளும் அந்தந்த சமூகங்களின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றியுள்ளனர். சாதாரண மக்களின், குறிப்பாக இடம்பெயர்ந்தோரின் துன்பங்களைப் புறக்கணித்து அவர்கள் தங்கள் நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்து வருகின்றனர்,” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் “இம்பால் பள்ளத்தாக்கில் ஆயுதக் குழுக்களால் மிரட்டி பணம் பறித்தல் மற்றும் குக்கி பெரும்பான்மை பகுதிகள் வழியாகச் செல்லும் நெடுஞ்சாலைகளில் சட்டவிரோத வரிவிதிப்பு ஆகியவை பெருமளவில் அதிகரித்துள்ளன. முன்னர் செயலிழந்த பல போராளி அமைப்புகள் புத்துயிர் பெற்றுள்ளன. பெரும்பாலும் வேலையில்லாத, குறைந்த கல்வியறிவு பெற்ற இளைஞர்களை ஆட்சேர்ப்பு செய்துள்ளன,” என்று மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சம்பவங்கள் குறித்து கூறியுள்ளார்.

பாசிச கும்பல் மலைகளில் உள்ள கனிம வளங்களை அதானி, அம்பானி, அகர்வால் போன்ற கார்ப்பரேட் கும்பலுக்குத் தாரை வார்ப்பதற்காக இரண்டு ஆண்டுகளைக் கடந்தும் தன்னுடைய நரவேட்டையை நடத்திக் கொண்டிருக்கிறது. எனவே பாசிச கும்பலின் குடியரசுத் தலைவர் ஆட்சி நாடகத்தைப் புறந்தள்ளி, பாசிச கும்பலுக்கு எதிராக அம்மாநிலத்தில் நடைபெறுகின்ற மக்கள் போராட்டங்களை வளர்த்தெடுக்க வேண்டும். அதன் மூலமே மலைகளில் உள்ள கனிமங்களையும், மக்களின் உயிர்களையும் பாதுகாக்க முடியும்.


இன்குலாப்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க