6,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!

“உடனடியாக வேலையை நிறுத்திவிட்டு அலுவலகத்தை விட்டு வெளியேறுவது குறித்து அறிவிக்கை செய்யுமாறு எங்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.”

மே 13 ஆம் தேதி அன்று மைக்ரோசாஃப்ட் நிறுவனம் 6,000க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்து உடனடியாக நிறுவனத்தை விட்டு வெளியேற வேண்டுமென்று கூறி அராஜகத்தில் ஈடுபட்டுள்ளது. இது ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் (Microsoft Corporation) அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்ற பன்னாட்டு மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனமாகும். அந்நிறுவனத்தில் உலகம் முழுவதிலும் லட்சக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் லாபம் 2024 – 2015 நிதி ஆண்யாண்டின் இறுதி காலாண்டில் (ஜனவரி முதல் மார்ச் வரை) எதிர்பார்த்ததைவிட அதிகரித்துள்ளது. ஆனால் லாபத்தை மேலும் அதிகரிக்கும் வெறியோடு இந்நிறுவனம் கடந்த 13 ஆம் தேதி அன்று 6,000 ஊழியர்களை (3%) பணிநீக்கம் செய்து அனைவரும் உடனடியாக நிறுவனத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று அறிவித்துள்ளது.

பணிநீக்கம் செய்யப்பட்டவர்களில் ஒருவரான மைக்ரோசாஃப்டின் AI இயக்குநர் கேப்ரியலா டி குய்ரோஸ் (Gabriela de Queiroz) கூறுகையில் “உடனடியாக வேலையை நிறுத்திவிட்டு அலுவலகத்தை விட்டு வெளியேறுவது குறித்து அறிவிக்கை செய்யுமாறு எங்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால் நான் சிறிது நேரம் தங்கத் தேர்ந்தெடுத்தேன். கூட்டங்களுக்கு வந்து, விடைபெற்று, என்னால் முடிந்ததைச் செய்து முடித்தேன். அது எனக்குச் சரியாக இருந்தது,” என்று கூறினார். மேலும் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் “இவ்வளவு திறமையானவர்களை வேலையிலிருந்து நீக்கியதைக் கண்டு நான் மிகவும் மனம் உடைந்தேன்,” என்று தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

மற்றொரு ஊழியர் கார்சோலினா வால்டன் கூறுகையில், “எனது ஸ்கிப் மூலம் எனது காலெண்டரில் கடைசி நிமிட சந்திப்பு சேர்க்கப்பட்டது. நிகழ்ச்சி நிரலைக் கண்டுபிடிக்க முயன்று கொண்டிருந்தேன். 2026 நிதியாண்டிற்கான முன்னுரிமைகள் அல்லது மறுகட்டமைப்பு குறித்து இருக்குமோ என்று சிந்தித்தேன். அறிமுகமில்லாத ஒரு முகம் அழைப்பில் இணைந்தவுடன், நானும் மைக்ரோசாப்ட் பணிநீக்கங்களில் ஒரு பகுதியாக இருப்பதை விரைவாக உணர்ந்தேன்” என்று தெரிவித்துள்ளார்.


படிக்க: 10000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவிருக்கும் அமேசான் நிறுவனம்!


ஆனால் மைக்ரோசாப்ட் நிறுவனம் “இந்நடவடிக்கை மாறிவரும் சந்தையில் வெற்றிபெற, நிறுவனத்தைச் சிறப்பாக நிலைநிறுத்தத் தேவையான நிறுவன மாற்றங்களின் ஒரு பகுதியாகும்” என்றும் ”தொழில்நுட்ப துறையில் ஏற்பட்டுள்ள போட்டியைச் சமாளிப்பதற்காக செயற்கை நுண்ணறிவு துறையில் கவனம் செலுத்துகிறோம்” என்றும் தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளது.

குறிப்பாக அந்நிறுவனம் தொடர்ந்து செயற்கை நுண்ணறிவு துறையில் அதிக அளவு முதலீடுகளைச் செய்து வருகிறது. நடப்பு ஆண்டில் 8,000 மில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது. எனவே செயற்கை நுண்ணறிவு துறையின் விரிவாக்கச் செலவுகளை ஈடுசெய்வதற்கு தன்னுடைய ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைத்திருக்கிறது.

இதனை டி எஸ் டேவிட்சனின் தொழில்நுட்ப ஆய்வாளர் கில் லூர்யா “மைக்ரோசாப்ட் ஒவ்வொரு ஆண்டும் இதே அளவில் முதலீடு செய்யுமேயானால், அதன் மூலதனச் செலவுகள் காரணமாக ஏற்படும் கழிவீட்டு (depreciation) செலவுகளை ஈடுசெய்ய, பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைந்தது 10,000 குறைக்க வேண்டும் என்று கருதுகிறோம்,” என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்பு 2023 ஆம் ஆண்டு மைக்ரோசாஃப்ட் நிறுவனம் 10,000 ஊழியர்களை (5%) பணிநீக்கம் செய்தது. 2024 ஆம் ஜூன் மாதத்தில் உலக அளவில் 2,28,000 ஊழியர்கள் அந்நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமேசான் (Amazon), மெட்டா (Meta) போன்ற நிறுவனங்களும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக ஆயிரக்கணக்கான ஊழியர்களைத் தொடர்ந்து பணிநீக்கம் செய்து வருகின்றன.


படிக்க: இஸ்ரேலின் இனப்படுகொலைக்குத் துணைபோகும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம்


இந்த பணிநீக்க அறிவிப்பு வெளியாவதற்கு முன்பாக, மே 8 அன்று மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில் கேட்ஸ் (Bill Gates) 2045-ஆம் ஆண்டிற்குள் தன்னுடைய சொத்தில் 99 சதவிகிதத்தை தொண்டு நிறுவனங்களுக்கும், பொதுச் சேவைகளுக்கும் செலவிடப்போவதாக அறிவித்துள்ளார்.

லாப விகிதம் குறைந்துவிடக் கூடாது என்ற லாபவெறியினால் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் நிறுவனர் மக்களுக்குச் சேவை செய்யத் தனது சொத்துகளைச் செலவிடப் போகிறாராம். தனது நிறுவனத்திற்காக உழைத்த ஊழியர்களின் மீதே அக்கறை கொல்லாத கார்ப்பரேட் முதலாளி மக்கள் மீது கரிசனம் காட்டுகிறாராம்.

குறிப்பாக இனவெறி இஸ்ரேலின் இனப்படுகொலைக்குத் துணைநின்று ஏ.ஐ (AI) தொழில்நுட்ப கருவிகளை வழங்கிய நிறுவனத்தின் நிறுவனர் மக்களுக்குச் சேவை செய்யப் போகிறாராம்.

திரு. பில் கேட்ஸ் அவர்களால் மக்களை ஏய்க்க முடியாது!


ஆசாத்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க