தமிழகம் முழுவதும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் விடுதிகள் மூடப்பட்டு வருவதாக தற்போது ஆதிதிராவிடர் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் விடுதி ஊழியர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதுதொடர்பாக, ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாநில பொறுப்பாளர் கண்ணன் மின்னம்பலத்திடம் பேசியபோது, “ஆதிதிராவிட மாணவர்கள் விடுதிகளில் ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவுக்கு மேற்பட்ட பகுதியிலிருந்து மாணவ, மாணவிகள் விடுதிகளில் சேரவில்லை என்றால் ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் குடியிருக்கும் மாணவர்களை சேர்த்துக்கொள்ளலாம் என்று தமிழக அரசு சமீபத்தில் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் 730 தொடக்கப்பள்ளிகள், 99 நடுநிலைப்பள்ளிகள், 108 உயர்நிலைப் பள்ளிகள், 98 மேல்நிலைப் பள்ளிகள் என 1,038 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பள்ளிகள் உள்ளது. 2021 -2022- காலகட்டத்தில் இந்த பள்ளிகளில் 95,113 மாணவர்கள் படித்து வந்தனர். தற்போது 76,383 மாணவர்கள் படித்து வருகின்றனர்.
விடுதிகளைப் பொறுத்தவரை ஆண்கள் விடுதி, மாணவிகள் விடுதி, கல்லூரி விடுதி, ஐ.டி.ஐ விடுதி என தமிழகம் முழுவதும் 1,324 விடுதிகள் இயங்கி வந்தது. சமீபத்தில் அரசு நிதி கொள்கையை கருத்தில் எடுத்துக்கொண்டு விடுதிகளை மூட முடிவு செய்தது.
இதனையடுத்து பல மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரி இருவரும் மாணவர்கள் விடுதியில் தங்கி படிக்காதது போல ரெக்கார்டுகளை தயார் செய்து விடுதிகளை மூட அரசுக்கு பரிந்துரை செய்துள்ளனர்.
2025 ஜனவரி மாதம் 2-ஆம் தேதி முதல் விடுதிகளில் தங்கி பயிலும் மாணவர்கள் பயோ மெட்ரிக் வைக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில், தற்போது பயோ மெட்ரிக் நடைமுறை செயல்படுத்தப்பட்டு வருகிறது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 56 விடுதிகளில் 48 விடுதிகளில் மாணவர்கள் யாரும் இல்லை, அதனால் விடுதிகளை மூட வேண்டும் என்று விருதுநகர் மாவட்ட ஆட்சியரும் ஆதிதிராவிட மாவட்ட நலத்துறை அலுவலரும் 2025 ஜனவரி 3-ஆம் தேதி அரசுக்கு பரிந்துரை செய்துள்ளனர்.
ஆனால், 48 விடுதிகளிலும் மாணவர்கள் பயின்று வருகிறார்கள் என்பது பயோ மெட்ரிக் மூலம் தெரிய வந்துள்ளது. அப்படி இருக்கும்போது மாணவர்கள் யாரும் விடுதிகளில் படிக்கவில்லை என்று மாவட்ட ஆட்சியரும் ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலரும் எப்படி பரிந்துரை செய்ய முடியும்.
ஜூன் மாதம் பள்ளி திறப்புக்கு பின்னர் விடுதிகளில் புதிய மாணவர்கள் தங்கி பயில நல்லோசை என்ற வெப்சைட்டில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. தற்போது இந்த வெப்ட்சைட்டை ஓப்பன் செய்தால், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 48 விடுதிகளின் விவரம் இல்லை. இதேநிலை தான் தமிழகம் முழுவதும் நீடிக்கிறது.
பிற்படுத்தப்பட்ட நல மாணவர்கள் விடுதிகளில் பயோ மெட்ரிக் முறையை இன்னும் கொண்டு வரவில்லை. அந்த விடுதிகளையும் மூட அரசு முடிவு செய்துள்ளது.
இப்படி, ஆதிதிராவிடர் மாணவர்கள் விடுதிகளை மூடுவதால், அந்த விடுதிகளில் உள்ள ஓஏ, வாட்ச்மேன், வார்டன் போன்ற பணியிடங்களும் காலியாகிவிடும்.
இதனால் வேலைவாய்ப்பு கேள்விக்குறியாகும். மேலும், விடுதியில் மாணவர்களுக்கு கொடுக்கக்கூடிய உணவுகளை ஒப்பந்த அடிப்படையில் வழங்க தனியார்மயப்படுத்தியுள்ளனர்.
தமிழக அரசின் இந்த முடிவால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, தமிழக அரசு ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் விடுதிகளை மூடும் முடிவைக் கைவிட வேண்டும்” என்று தெரிவித்தார்.

நன்றி: மின்னம்பலம்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram