பீகார் மாநிலத்தில் இந்தாண்டு அக்டோபர்-நவம்பர் மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், பீகாரின் வாக்காளர் பட்டியலை ‘சிறப்பு தீவிர மறு ஆய்வு’ (Special Intensive Revision – SIR) செய்யப் போவதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது, அம்மாநிலத்தில் பா.ஜ.க – தேர்தல் ஆணையம் கூட்டு பிரம்மாண்டமான அளவில் தேர்தல் மோசடியில் ஈடுபடவிருப்பதை வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளது.
ஒவ்வொரு மாநிலத்திலும் தேர்தல் நடப்பதற்கு முந்தைய மாதங்களில் புதிய வாக்காளர்களை இணைத்து வாக்காளர் பட்டியல் புதுப்பிக்கப்படுவது தேர்தல் ஆணையத்தால் பின்பற்றப்பட்டுவரும் நடைமுறையாகும். ஆனால், தேர்தல் ஆணையத்தின் துணையுடன், இந்த சாதாரண நடைமுறையையே தேர்தல் மோசடிக்கான வழிமுறையாக மாற்றி, வாக்காளர் பட்டியலில் பல்லாயிரக்கணக்கானோரை போலியாக இணைத்து, டெல்லி, மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல்களில் பா.ஜ.க. வெற்றிபெற்றது என்ற குற்றச்சாட்டு ஏற்கெனவே உள்ளது. இந்நிலையில், பீகாரில் வழக்கமான வாக்காளர் பட்டியலைப் புதுப்பிப்பிற்கு பதிலாக, வாக்காளர் பட்டியலையே ஒட்டுமொத்தமாக மறு ஆய்வு செய்ய உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருப்பது நாடு முழுவதும் சந்தேகத்தையும் எதிர்ப்பையும் கிளப்பியுள்ளது.
ஏழை-எளியோரின் வாக்குரிமை பறிப்பு
தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள வாக்காளர் பட்டியல் மறு ஆய்வானது இதற்கு முன்னர் 2003-ஆம் ஆண்டு பீகாரில் மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும், அதன் பிறகு நடந்த 2004 நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்னரே இந்த மறு ஆய்வு நடவடிக்கை முடிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது பீகாரில் சட்டமன்றத் தேர்தல் நடப்பதற்கு ஒருசில மாதங்களே உள்ள நிலையில் வாக்காளர் பட்டியலை மறு ஆய்வு செய்வதில்தான் தேர்தல் ஆணையம்-பா.ஜ.க-வின் மோசடி-முறைகேடு திட்டம் ஒளிந்துள்ளது.
பீகாரில் அண்மையில் வெளியான உத்தேச வாக்காளர் பட்டியலின்படி, மொத்தமாக 7 கோடியே 96 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் தங்களது இந்திய குடியுரிமையை நிரூபிப்பதன் மூலம் வாக்காளர் தகுதியை நிரூபிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 2003 வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றவர்கள் நிரூபிக்க தேவையில்லை என்று கூறப்பட்டாலும், ஏறக்குறைய 4.74 கோடி வாக்காளர்கள் (மொத்த வாக்காளர்களில் 60 சதவிகிதம்) மிகக் குறுகிய காலத்திற்குள் தங்களது குடியுரிமையை நிரூபித்து வாக்குரிமையை பெற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, ஜூன் 25 முதல் ஜூலை 3 வரை 7.9 கோடி வாக்காளர்களுக்கு கணக்கெடுப்பு படிவங்கள் வழங்கப்படும். ஜூலை 25-ஆம் தேதிக்குள் வாக்காளர்கள் படிவங்களை நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும். அதனடிப்படையில், ஆகஸ்ட் 1 அன்று பீகார் மாநிலத்தின் உத்தேச வாக்காளர் பட்டியல் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்படும். படிவங்களை சமர்ப்பிக்காத, விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் இப்பட்டியலில் இடம்பெறாது. இதன் பிறகு விண்ணப்பிக்கத் தவறிய வாக்காளர்கள் செப்டம்பர் 1 வரை மீண்டும் விண்ணப்பிக்கலாம், ஆட்சேபணைகள் இருந்தால் தெரிவிக்கலாம். இதனடிப்படையில், செப்டம்பர் 30 அன்று இறுதி பட்டியல் வெளியிடப்படும். இவ்வாறு மிகக்குறுகிய கால அவகாசமே வழங்கப்பட்டுள்ளதால் பீகார் மக்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். ஜூலை 5-ஆம் தேதி இரவு 7 மணி வரை 14.18 சதவிகித வாக்காளர்கள் மட்டுமே படிவங்களை சமர்ப்பித்திருப்பது இதனை நிரூபிக்கிறது.
மேலும், இத்தகைய நெருக்கடியான அவகாசத்திற்குள் தங்களது குடியுரிமையை நிரூபிப்பதற்கு 10, 12-ஆம் வகுப்பு சான்றிதழ்கள், பிறப்பு சான்றிதழ், கடவுச்சீட்டு, குடியிருப்பு சான்றிதழ், ஓய்வூதியம் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் என 11 வகையான ஆவணங்களை சமர்ப்பித்தாக வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், பத்து கோடிக்கும் அதிகமான மக்கள் வசிக்கும், சமூக-பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கியிருக்கும் பீகார் போன்ற ஒரு மாநிலத்தில் வசிக்கும் மக்களிடம் இத்தகைய ஆவணங்களை கோருவதென்பது கணிசமானோரின் வாக்குரிமை பறிபோவதற்கே வழிவகுக்கும்.
படிக்க: மகாராஷ்டிரா: முதல்வர் பட்னாவிஸ் தொகுதியில் பல்லாயிரம் போலி வாக்காளர்கள்
ஏனெனில், பீகார் கல்வியறிவில் பின்தங்கிய மாநிலம் என்பதால் அனைவரும் கல்வி சான்றிதழ்களை சமர்பிப்பது சாத்தியமற்றதாகும். மேலும், கடந்தாண்டுகளில் கடுமையாக அதிகரித்துள்ள வேலைவாய்ப்பின்மை காரணமாக கணிசமான இளைஞர்கள்-மக்கள் புலம்பெயர் மக்களாக மாற்றப்பட்டுள்ளனர். எனவே இவர்களிடத்தில் தேர்தல் ஆணையம் கோரும் கடவுச்சீட்டு உள்ளிட்ட சான்றிதழ்கள் இருப்பதற்கான வாய்ப்பு குறைவு என்பதுடன் அவற்றை குறுகிய காலத்திற்குள் ஏற்பாடு செய்து சமர்பிப்பதும் சாத்தியமற்றதாகும்.
மேலும், பீகார் மாநிலத்தில் பிறக்கக்கூடிய குழந்தைகளை பதிவு செய்யும் நடைமுறையும் மிகக் குறைவாகவே உள்ளது. 2000-ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட ஒரு புள்ளிவிவரத்தின் அடிப்படையில், இந்திய அளவில் 50 சதவிகிதம் பேர் குழந்தை பிறப்பை பதிவு செய்கின்றனர் எனில், பீகாரில் வெறும் மூன்று சதவிகிதம் அளவிற்கே குழந்தை பிறப்பு பதிவு செய்யப்படுகிறது. இத்தகைய மாநிலத்தில் வாக்காளர் பட்டியலுக்கு பிறப்பு சான்றிதழை ஆதாரமாக கேட்பதென்பது அதன் இயல்பிலேயே அநீதியானது. இதில் 1987 முதல் 2006 வரை பிறந்தவர்கள் குடியுரிமைக்கு ஆதாரமாக அவர்களின் பெற்றோரின் பிறப்புச் சான்றிதழையும் சமர்ப்பிக்க வேண்டுமென்பது அப்பட்டமாக மக்களின் வாக்குரிமையை பறிப்பதற்கே வழிவகுக்கும். மக்களிடத்தில் இல்லாத சான்றிதழ்கள் கோரப்படும் அதேவேளையில், பெரும்பாலான மக்களிடம் இருக்கும் குடும்ப அட்டையும் மோடி அரசால் இந்திய மக்கள் அனைவரிடத்திலும் திணிக்கப்பட்ட ஆதார் அட்டையையும் கோரப்படாதது லட்சக்கணக்கான மக்களின் வாக்குரிமையை பறிக்க வேண்டுமென்ற பாசிச கும்பலின் சதித்திட்டத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
குறிப்பாக, சமூக-பொருளாதார ரீதியாக நலிவுற்றுள்ள பட்டியலின மக்களையும் இஸ்லாமிய-கிறிஸ்தவ சிறுபான்மை மக்களையும் புறக்கணிப்பதுதான் பாசிச கும்பலின் நோக்கமாகும். இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரை (OBC) தனக்கான வாக்குவங்கியாக கொண்டுள்ள பா.ஜ.க., பீகார் தேர்தலில் அந்த வாக்குவங்கியை தக்கவைத்து கொள்வதற்காக சாதிவாரிக் கணக்கெடுப்பை அறிவித்துள்ள அதேவேளையில், பெரும்பாலும் எதிர்க்கட்சிகளின் வாக்குவங்கியாக உள்ள தலித்-இஸ்லாமிய மக்களை புறக்கணிப்பதற்கு இந்த மறு ஆய்வை நடத்தி வருகிறது. இதன் மூலம் அம்மக்களின் வாக்குரிமையைப் பறித்து அவர்களை இரண்டாந்தர குடிமக்களாக்கத் துடிக்கிறது.
குடியுரிமை பறிபோகும் அபாயம்
தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பின் மூலம் பல லட்சக்கணக்கான ஏழை-எளிய, பட்டியலின-சிறுபான்மை மக்களின் வாக்குரிமையுடன் சேர்த்து அவர்களின் குடியுரிமையும் பறிக்கபடும் அபாயம் உருவாகியுள்ளது. இந்த கெடுநோக்கத்திலிருந்தே இதுவரை இல்லாத வகையில், வாக்குரிமையை உத்தரவாதப்படுத்துவதற்கு குடியுரிமையை நீரூபிக்க வேண்டுமென தேர்தல் ஆணையம் கட்டாயப்படுத்துகிறது.
அதாவது, தேர்தல் ஆணையத்தின் தற்போதைய (ஜூன் 24, 2025) உத்தரவின் 5(b) பிரிவானது, வாக்காளர் பட்டியல் மறு ஆய்வு நடவடிக்கையின் போது உள்ளூர் தேர்தல் பதிவு அதிகாரிகள் (ERO), யாரையேனும் வெளிநாட்டவர் என்று சந்தேகித்தால் அவர்களை குடியுரிமை அதிகாரிகளிடம் பரிந்துரைக்கலாம் என்று தெரிவித்துள்ளது. இதனால், அம்மக்களின் குடியுரிமை கேள்விக்குள்ளாக்கப்பட்டு அகதியாக்கப்படுவதுடன் வசிப்பிட இழப்பு, தடுப்புக் காவல், நாடுகடத்தல் போன்ற ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்படுவர் என்றும் எச்சரிக்கப்படுகிறது.
அதிலும், விண்ணப்பிக்கும் மக்களின் குடியுரிமையை சரிபார்க்கும் அதிகாரமானது உள்ளூர் தேர்தல் பதிவு அதிகாரிகளுக்கு (ERO) வழங்கப்பட்டுள்ளது. இது சாதாரண இ.ஆர்.ஓ. அதிகாரிகளுக்கு குடியுரிமையை தீர்மானிக்கக்கூடிய கட்டுப்படுத்தப்படாத அதிகாரத்தை வழங்குகிறது. மேலும், வாக்குரிமை சரிபார்ப்பு என்ற பெயரில் எந்தவித சட்டப் பாதுகாப்புமின்றி குடியுரிமை சரிபார்ப்புக்கான குறுக்கு வழியையும் உருவாக்குகிறது. சந்தேகம் என்ற பெயரில் யாருடைய குடியுரிமை-வாக்குரிமையை வேண்டுமானாலும் கேள்விக்குள்ளாக்கும் நிலையுள்ளது. இதன்மூலம், அதிகார வர்க்கத்தில் ஊடுருவியுள்ள சங்கிகளின் மூலம் இஸ்லாமிய மக்களின் குடியுரிமையை பறிப்பதற்கு பாசிச கும்பல் சதித்திட்டம் தீட்டுகிறது.
படிக்க: ஜார்க்கண்ட்: முஸ்லீம் வெறுப்பு பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்திய காவிக் கும்பல்!
மறுபுறம், இது இந்திய மக்களால் போராடி பின்வாங்க வைக்கப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்தின் அங்கமான தேசிய குடிமக்கள் பதிவேட்டை (NRC – National Register of Citizens) பின்வாசல் வழியாக நடைமுறைப்படுத்துவதாகவும் உள்ளது. இதற்கு முன்னர் பா.ஜ.க. ஆளும் அசாம் மாநிலத்தில் என்.ஆர்.சி. நடைமுறைப்படுத்தப்பட்டு இஸ்லாமிய மக்கள் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர். ஆனால், அதற்கிருந்த சட்டப்பூர்வ அடிப்படையும் இந்திய உச்ச நீதிமன்றத்தின் பெயரளவிலான மேற்பார்வையும் கூட இந்நடவடிக்கையில் இல்லை. மேலும், பீகாரில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெறுவதால் அரசு-அதிகார வர்க்கத்தின் துணையுடன் பாசிச கும்பல் அனைத்து வகையான மோசடிகளையும் கட்டவிழ்த்துவிடும்.
மொத்தத்தில், குடியுரிமை பறிக்கப்பட்டுவிடுமோ என்று அஞ்சி இஸ்லாமிய மக்கள் வாக்குரிமைக்கு விண்ணப்பிக்காமல் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். இதன்மூலம் அரசியலமைப்பு சட்டத்தினால் அங்கீகரிக்கப்பட்ட வாக்குரிமையை சட்டப்பூர்வமாகவே பறிக்கிறது பாசிச பா.ஜ.க. கும்பல். இது இஸ்லாமிய மக்களை இரண்டாந்தர குடிமக்களாக்க வேண்டுமென்ற ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. பாசிச கும்பலின் நீண்டகால இலக்குடன் இணைந்ததாகும்.
தேர்தலுக்கான நிகழ்ச்சிநிரல்
மிகக்குறுகிய காலத்திற்குள் வாக்காளர் பட்டியல் மறு ஆய்வு செய்வது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள தேர்தல் ஆணையம், அண்டை நாடுகளிலிருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்கள் பலர் பீகாரில் இருப்பதாகவும் அவர்களை கண்டறிவதற்கும் தகுதிவாய்ந்த வாக்காளர்கள் வாக்களிக்காமல் போய்விடக் கூடாது என்பதை உறுதி செய்வதற்காகவும் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று தெரிவித்துள்ளது. இதில்தான் பாசிச கும்பலின் அரசியல் நிகழ்ச்சிநிரல் ஒளிந்துள்ளது.
சமீப காலமாக, அண்டை நாடுகளான வங்கதேசம், மியான்மரிலிருந்து அகதிகளாக வந்த இஸ்லாமிய மக்களை ‘சட்டவிரோத குடியேறிகள்’ என்று கூறி இந்தியாவை விட்டு வெளியேற்றும் நடவடிக்கையில் பாசிச பா.ஜ.க. கும்பல் ஈடுபட்டு வருகிறது. “ஆபரேஷன் புஷ் பேக்” (Operation Push Back) என்ற பெயரிலான இப்பாசிச நடவடிக்கையின் மூலம் 2,000-த்திற்கும் மேற்பட்டோரை இந்தியாவிலிருந்து வெளியேற்றியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த பாசிச நடவடிக்கையை தனது தேர்தல் நலனுக்கு பயன்படுத்திக்கொள்ள எத்தனிக்கும் பா.ஜ.க. கும்பல், பீகாரில் சட்டவிரோதக் குடியேறிகள் இருப்பதாக இஸ்லாமியர்களை குறிவைத்து பிரச்சாரத்தை கட்டியமைத்து அதன் மூலம் தேர்தலில் வெற்றிபெறத் துடிக்கிறது. அந்தவகையில் வாக்காளர் பட்டியல் மறு ஆய்வு என்ற பெயரில் இஸ்லாமிய வெறுப்புக்கு அடித்தளமிடப்பட்டுள்ளது. மேலும், இந்த பாசிச நடவடிக்கைக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பேசினால் அவர்களை சட்டவிரோத குடியேற்றத்திற்கு ஆதரவானவர்களாக சித்தரித்து ‘தேசவிரோதி’ என முத்திரை குத்துவதற்கு ஏதுவாக நிகழ்ச்சிநிரலை உருவாக்கி வருகிறது.
இதன் மூலம், சமீப காலமாக அரசியல் அரங்கில் நிகழ்ச்சிநிரலை உருவாக்குவதில் தோற்றுபோயுள்ள பாசிச பா.ஜ.க. கும்பல் புதிய நிகழ்ச்சிநிரலை உருவாக்குவதற்கு அப்பட்டமாக துணைபோயுள்ளது பா.ஜ.க-வின் செல்லப்பிராணியான இந்திய தேர்தல் ஆணையம்.
மேலும், இது பீகார் தேர்தலுடன் முடியக்கூடியதல்ல. 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல்கள் நடக்கவுள்ள தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம் மற்றும் அசாம் மாநிலங்களிலும் வாக்காளர் பட்டியல் மறு ஆய்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிலும், அண்டை நாடுகளுடன் எல்லைகளை பகிர்ந்துகொள்ளும் மேற்குவங்கத்திலும் அசாமிலும் இந்த இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரத்தை பாசிச கும்பல் உச்சத்திற்கு கொண்டுசெல்லும். மேலும், இந்த மறு ஆய்வின் மூலம் எதிர்க்கட்சியினரின் வாக்குவங்கியைக் கணிசமான அளவு குறைத்து தேர்தல் மோசடியின் மற்றொரு பரிமாணத்திற்கு முன்னேறத் துடிக்கிறது.
இதற்கெதிராக குரல் கொடுத்துவரும் எதிர்க்கட்சிகள் கடந்த ஜூலை 2 அன்று தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்து வாக்காளர் பட்டியல் மறு ஆய்வு குறித்து முறையிட்டனர். ஆனால், இச்சந்திப்பில் எதிர்க்கட்சிகளுக்கு முறையாக பதிலளிக்கக்கூட தேர்தல் ஆணைய அதிகாரிகள் தயாராக இல்லாததால் எதிர்க்கட்சியினர் ஏமாற்றமடைந்தனர். மேலும், பீகாரில் மிகக் குறுகிய காலத்தில் வாக்காளர் பட்டியல் மறு ஆய்வு செய்வதற்கெதிராக எதிர்க்கட்சிகள் சார்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது. ஆனால், உச்சநீதிமன்றம் பாசிச பா.ஜ.க. கும்பலுக்கு சாதகமான தீர்ப்புகளையே வழங்கி வந்துள்ளது என்பதே கடந்தகால அனுபவமாகும்.
ஆனால், வாக்காளர் பட்டியல் மறு ஆய்வு என்ற இந்த பாசிச நடவடிக்கையின் மூலம் மக்களின் வாக்குரிமை-குடியுரிமை பறிக்கப்பட்டு அவர்கள் அகதியாக்கப்படுவர் என்பதை மக்களிடத்தில் சென்று சேர்ப்பதற்கும் அதற்கெதிராக போராட்டங்களை கட்டியமைப்பதற்கும் எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதில்லை. இப்போது மட்டுமல்ல, தொடர்ச்சியாகவே பாசிச கும்பலுக்கு எதிரான மக்கள் எழுச்சியை கட்டியமைத்து பின்வாங்க வைப்பது குறித்தும் தேர்தல் மோசடிகளை தடுப்பது குறித்தும் எதிர்க்கட்சிகள் கனவிலும் சிந்திப்பதில்லை. இங்குதான் மக்கள் வீதிக்கு வந்துவிடக் கூடாது, இக்கட்டமைப்பின் யோக்கியதையை புரிந்துகொண்டுவிடக் கூடாது என்ற எதிர்க்கட்சிகளின் மக்கள்விரோதத் தன்மை ஒளிந்துள்ளது. ஆனால், ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல் பாசிசமயமாக்கப்பட்டுவரும் இக்கட்டமைப்பின் அங்கமான தேர்தல் ஆணையமும் நீதிமன்றமும் பாசிச கும்பலுக்கு ஆதரவாகவே செயல்படும். மக்கள் களம் மட்டுமே பாசிச கும்பலை பின்வாங்கச் செய்யும்.
சோபியா
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram