கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் ஜூன் 8 காலை 7:10 மணிக்கு ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி பேருந்து மீது இரயில் மோதி மூன்று மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். இருவர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள தெற்கு ரயில்வே “இரயில் வருவது தெரிந்தும் பள்ளி வேன் டிரைவர் கூறியதைக் கேட்டு கேட்டை திறந்ததுதான் விபத்திற்குக் காரணம்” என்றனர்.
ஆனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பள்ளி வாகன ஓட்டுநர் சங்கர் கூறும் போது “ரயில்வே கேட் மூடப்படாமல் இருந்தது. ரயில் ஒலி எழுப்பும் சத்தமும் வரவில்லை, கேட் கீப்பரே அங்கு இல்லை” எனக் குறிப்பிட்டார்.
இதே கருத்தைத்தான் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ள விஸ்வேஸ் என்ற மாணவரும் கூறியுள்ளார்.
இந்த செய்தி பரவலாக வெளிவந்த பின்னர் ரயில்வே நிர்வாகம் அப்படியே மாற்றி இன்னொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
”பள்ளி வாகன ஓட்டுநர் கேட்டை திறக்கச் சொல்லி திறந்து இருந்தாலும் அதுவும் விதி மீறல்தான். எனவே, கேட் கீப்பர் பணியிலிருந்து கைது செய்யப்பட்டிருக்கும் பங்கஜ் சர்மா பணி நீக்கம் செய்யப்படுகிறார்” என அறிவித்துள்ளனர்.
ரயில்வே துறையின் ஒவ்வொரு அறிவிப்பும் விபத்துக்குப் பொறுப்பேற்காத அலட்சியப் போக்கை வெளிப்படுத்துகிறது.
கடந்த 2024 ஏப்ரலில் வெளிவந்த அறிவிப்பில் நாடு முழுவதும் 17,083 ரயில்வே கேட்டுகள் கேட் கீப்பருடன் உள்ளன. அவற்றில் கடந்த ஜனவரி 2025 வரை 497 மட்டும் நீக்கப்பட்டு 16,586 ரயில்வே கேட்டுகள் கேட் கீப்பருடன் இயங்கி வருவதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 16,586 இரயில்வே கேட்டுகள் பலவற்றில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதும் பல்வேறு செய்தித்தாள்களில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது.
படிக்க: மோடியின் ஆட்சியில் தொடர் நிகழ்வாகிவரும் இரயில் விபத்துகள்!
இரயில்வே கேட்டை பொருத்தவரை இன்டர்லாக்கிங் தானியங்கி திறப்பது மற்றும் மூடுவது, நான்-இன்டர்லாக்கிங் தானியங்கி அல்லாத அடைத்தல் மற்றும் நீக்குதல் என இரண்டு முறைகள் உள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
முதலாவது தொழில்நுட்பத்தில் இரயில்வே கேட் மூடி இருந்தால் தான் இரயிலுக்கு பாதையைக் கடக்கும் அனுமதி கிடைக்கும். மேலும் ரயில் போன பிறகு தான் கேட்டைத் திறக்க முடியும் என குறிப்பிடுகின்றனர். இந்த வசதி இல்லாதவைதான் மேற்குறிப்பிடப்பட்ட 16,583 ரயில்வே கேட்டுகள். இதனால்தான் பல்வேறு விபத்துகளும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன என்பதை பல்வேறு ரயில்வே வல்லுநர்களும் குறிப்பிடுகின்றனர்.
கடலூரில் நடந்த இந்த பிரச்சனைக்கு கேட் கீப்பராக இருந்த பங்கஜ் சர்மாவை கைது செய்து குற்றவாளியாக்கியுள்ளனர். ஆனால் விபத்துகள் தொடர்ந்து நடப்பதற்கு மேற்குறிப்பிடப்பட்ட காரணமும் முக்கியமானது என்பது அரசுக்குத் தெரிந்தே இருக்கிறது. ஆதலால் அரசே முதன்மை குற்றவாளி.
2023-ஆம் ஆண்டில் ஒரிசாவில் ஏற்பட்ட மிகவும் மோசமான இரயில் விபத்தில் இரு ரயில்கள் மோதியதில் 300 பேர் வரை உயிரிழந்தனர். அப்போது கவாச் கருவி பொருத்தி இருந்தால் விபத்து நடந்திருக்காது என அன்றைய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியிருந்தார்.
அப்படியானால் இதையெல்லாம் சரி செய்ய வேண்டும் என உடனே களமிறங்கி அதற்கான பணிகளை தொடர்ந்து வேகப்படுத்திச் செய்திருக்க வேண்டும்.
ஆனால் ரயில்வே துறைக்கான பட்ஜெட் நீக்கப்பட்டு அதற்கான நிதிகள் குறைக்கப்பட்டு தனியார்மயத்தை நோக்கி தள்ளிக்கொண்டிருப்பவர்களால் இதையெல்லாம் சரி செய்ய முடியுமா?
ஆகவே இதை முடிவுக்குக் கொண்டுவர மாற்றுக் கட்டமைப்பை நிறுவுவதற்கான மாபெரும் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டியது நம் அனைவரின் கடமை.
ரவி
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram