பெங்களூரு காந்திபவனில் ஜூன் 6, 2025 அன்று தொழிலாளர் விரோத சட்டங்களை எதிர்த்தும் நவீன கொத்தடிமை முறையான ஒப்பந்த தொழிலாளர் வேலை முறையை ஒழிக்கவும் வேண்டி, NIMHANS, HAL, DRDO ஆகிய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் நிரந்தரமற்ற (non-permanent) தொழிலாளர்களின் கூட்டமைப்பு சார்பில் மாநாடு (Convention against Labour Codes and Demand for the End of the Exploitative Contract Labour System) நடைபெற்றது.
அம்மாநாட்டில் ஒப்பந்த தொழிலாளர்கள் என்கிற பெயரில் கொத்தடிமைகளாக்கிச் சுரண்டும் இந்த மோசமான ஒப்பந்த தொழிலாளர் முறையை ஒழித்துக் கட்ட வேண்டும் என்றும் புதிதாகக் கொண்டுவரப்பட்டிருக்கின்ற தொழிலாளர் விரோத தொழிலாளர் சட்டத்திருத்தங்களை இரத்து செய்ய வேண்டும் என்றும் ஒன்றிய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்; தீர்மானமும் நிறைவேற்றியுள்ளனர்.
அனைத்திந்திய தொழிற்சங்க மையக் கவுன்சிலல் (AICCTU) சார்பில் பேசிய அதன் துணைத் தலைவரான டி ரோசாரியோ “புதிய தொழிலாளர் சட்டங்கள் ஒப்பந்த தொழிலாளர் முறையை நிறுவன மையப்படுத்துகிறது” என்றும் ”எல்லா நிரந்தரமற்ற தொழிலாளர்களையும் உடனே நிரந்தர தொழிலாளர்களாக நியமிக்க வேண்டும் ” என்றும் கோரிக்கை விடுத்தார். பெரும்பாலான அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள் மற்ற பிற அரசுத் துறைகளின் குரூப் “ஏ” மற்றும் குரூப் “பி” பதவிகள் நிரந்தரமானவையாக இருக்கின்ற அதேவேளை குரூப் “சி” மற்றும் குரூப் “டி” பணிகள் மட்டும் தற்காலிகத் தன்மையுடன் தனியாருக்கு ஒப்பந்த முறையில் அவுட்சோர்சிங் செய்யப்படுகின்றன. இது மிகப் பெரிய மோசடி என்று அரசின் கொள்கையைச் சாடினார்.
நிரந்தரமாக வேலை செய்யும், அதே சமயம் தற்காலிக தொழிலாளர்கள் என்று பொய்யாக அழைக்கப்படுகின்ற லட்சக்கணக்கான ஒப்பந்தத் தொழிலாளர்கள் கடுமையான சுரண்டலுக்கு உட்படுத்தப்படுகிறார்கள். மிகக் குறைந்த ஊதியம், வேலை உத்தரவாதம் இன்மை, சமூகப் பாதுகாப்பின்மை ஆகியன நிலைமையை மேலும் மோசமாகின்றன என்பதை எடுத்துக் காட்டினார். புதிய தொழிலாளர் சட்டத் திருத்தங்கள் அச்சுரண்டல் முறையை மேலும் நிறுவனமயமாக்கி மோசமடையச் செய்துள்ளன என்று கூறினார்.
படிக்க: 12 மணிநேர வேலை நேரம்: ஐ.டி ஊழியர்களை வஞ்சிக்கும் கர்நாடகா அரசு
இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல்ஸ் லிமிடெட் (ஹெச்.ஏ.எல்) நிறுவனத்தில் உள்ள ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் தலைவர் விஜயகுமார் பேசுகையில் ”இந்த சுரண்டல் முறைகளை ஒழித்துக் கட்டுவதற்கு ஒற்றுமையுடன் ஒன்று திரண்டு போராடுவதைத் தவிர நமக்கு வேறு வழி என்ன இருக்கிறது?” என்று கேள்வி எழுப்பினார்.
ஹெச்.ஏ.எல் ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சந்திரசேகர் பேசுகையில் இந்த முறையில் நீண்ட காலமாக சம்பளம் உயர்த்தப்படாமல் இருப்பது எவ்வளவு மோசம் என்பதைச் சுட்டிக் காட்டி “ஒன்றிய அரசாங்கத்தின் குறைந்தபட்ச ஊதிய சட்டத் திருத்தம் 2016-இல் மேற்கொள்ளப்பட்டது; இன்று 2025-இல் விலைவாசிகள் கடுமையாக உயர்ந்திருக்கின்ற போதிலும் குறைந்தபட்ச ஊதியம் எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்கிறது. இந்த காலாவதி ஆகிப்போன ஊதிய கொள்கை தொழிலாளர்களைக் கையறு நிலையில் கட்டாய உழைப்பில் அழுத்தி விடுகிறது” என்று விளக்கியதுடன் சங்கம் சேரும் உரிமை மற்றும் வேலை நிறுத்தம் செய்யும் உரிமையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
பெருநகர பெங்களூரு மாநகராட்சி (ப்ருஹத் பெங்களூரு மகாநகர பாலிகனே) ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் செயலாளர் மணியம்மா பேசுகையில், ”நமது ஒன்றுபட்ட, அமைப்பு ரீதியான பலத்தைத் திரட்டிப் போராடுவதன் மூலமே இந்த ஒப்பந்த தொழிலாளர் முறையை ஒழித்துக் கட்ட முடியும்” என்று கூறி மாபெரும் போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்தார்.
நிரந்தரமாக தேவைப்படுகின்ற வேலைக்கு நிரந்தரமற்ற தொழிலாளர்களை நியமிப்பது அரசின் அயோக்கியத்தனமான தொழிலாளர் விரோதக் கொள்கை. அரசு அதிகாரிகளும் ஆட்சியாளர்களும் அதை வெவ்வேறு பெயர்களில் அமலாக்கிக் கொண்டு வெவ்வேறு வகைகளில் நியாயப்படுத்திக்கொண்டு திரிகின்றனர்.
இவற்றை முறியடிக்க தொழிலாளி வர்க்கத்தின் ஒற்றுமையை, அமைப்பு ரீதியான அணி திரட்டலை உயர்த்திப் பிடித்து இம்மாநாட்டில் பலரும் பேசியிருக்கின்றனர்.
அரசு மற்றும் பொதுத்துறையில் பணியாற்றும் நிரந்தரமற்ற தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்! உழைக்கும் மக்கள் அனைவரும் துணை நிற்போம்!
சுந்தரம்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram