எப்பொழுதுமே ஐ.டி துறை என்பது செல்வம் கொழிக்கும் ஒரு துறை, அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் எல்லோரும் சீரும் சிறப்புமாக, மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் என்கிற ஒரு பொதுப் பார்வை உள்ளது. ஆனால் உண்மை என்ன என்பதை நடைமுறையில் உரசிப் பார்க்க வேண்டியுள்ளது.
பொதுவாக எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் முதலாளித்துவ நிறுவனங்கள் கீழ்மட்ட தொழிலாளர்களில் இருந்து, நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் வரைக்கும் பல அடுக்குகளை கொண்டதாகத்தான் இருக்கும். இந்த அடுக்குகள் பல்வேறு வர்க்கப் பிரிவுகளை கொண்டதாக இருக்கும்.
எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் அந்தத் துறை சார்ந்த தொழிலாளர்கள் மட்டும் வேலை பார்ப்பதாக நினைப்பதுண்டு. ஆனால் வெளியில் நிற்கும் காவலாளியில் தொடங்கி, துப்புரவுத் தொழிலாளர்கள், சமையல் தொழிலாளர்கள், உணவு விநியோகிக்கும் தொழிலாளர்கள், நிறுவனத்தின் உள்கட்டமைப்பை நிர்வகிக்கும் தொழிலாளர்கள், நிறுவனத்திற்கு நாள்தோறும் வெவ்வேறு விதமான பொருட்களை கொண்டு வரும் ஓட்டுநர்கள் மற்றும் பிற தொழிலாளர்கள், கட்டட தொழிலாளர்கள் என பலரும் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலையில் ஈடுபட்டு இருப்பார்கள். அது ஐ.டி துறைக்கும் பொருந்தும்.
ஐ.டி தொழிலாளர்களில் மேல்தட்டு தொழிலாளர்கள் நிறைய சம்பாதிக்கின்றனர். இவர்கள் ஏறக்குறைய முதலாளிகளின் குணாம்சம் கொண்டவர்களாக இருப்பார்கள். மற்ற தொழிலாளர்களை பிழிந்து வேலை வாங்குவதில் இவர்களை யாரும் மிஞ்ச முடியாது.
அதேசமயம், ஐ.டி துறையைப் பொருத்தவரை,10 வருடங்களுக்கு முன்பு ஒரு ஆரம்ப நிலை ஊழியருக்கு நிர்ணயிக்கப்பட்ட ஊதியம்தான் தற்போதும் உள்ளது. ஆனால் இதை வைத்து வாழ்க்கையை ஓட்டுவது மிகவும் சிரமம். இந்த ஊதியத்தையும் தாண்டி அவர்களை ஒட்டச் சுரண்டும் வேலையை ஐ.டி நிறுவனங்கள் செய்து வருகின்றன. இது தொடர்பாக சமீபத்தில் பெரும் விவாதம் அரங்கேறியது.
படிக்க: 12 மணிநேர வேலை நேரம்: ஐ.டி ஊழியர்களை வஞ்சிக்கும் கர்நாடகா அரசு
ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி மற்றும் நிறுவன லாபம் இருந்த போதிலும், இந்தியாவின் ஐ.டி துறையில் பல தொழிலாளர்களுக்கு, குறிப்பாக, மேலாண்மை சாராத பணிகளில் உள்ளவர்களுக்கு உண்மையான ஊதியங்கள் தேக்கமடைந்துள்ளன அல்லது குறைந்து விட்டன. சமீபத்தில் முதலாளி வர்க்க அறிவுஜீவிகளே தொழிலாளர் வர்க்கத்திலுள்ள நடுத்தர வர்க்கம் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகி இருப்பதாக Linkedin சமூக வலைத்தளத்தில் எழுதி இருந்தது பேசுபொருளானது.
பெங்களூரில் உள்ள ஐ.டி நிறுவனமான பீபால்கோவின் (PeepalCo) இணை நிறுவனரும் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஆஷிஷ் சிங்கால் தனது சமூக வலைதளப் பதிவொன்றில், ”அதிகரித்து வரும் செலவுகள் மற்றும் தேக்கமடைந்த சம்பளத்தால், நடுத்தர வர்க்கத்தினர் பொருளாதார அதிர்வுகளை அமைதியாக உள்வாங்கிக் கொள்கிறார்கள்; பிணை எடுப்புகள் இல்லை, தலைப்புச் செய்திகள் இல்லை, எந்த உரையாடலும் இல்லை” என்று கூறியிருந்தார். “யாரும் பேசாத மிகப்பெரிய மோசடி நடுத்தர வர்க்க சம்பளம்” என்று எழுதி, அவ்வர்க்கம் எதிர்கொண்டுள்ள நெருக்கடியை விளக்கியிருந்தார்.
வங்கி மூலதனமானது ரியல் எஸ்டேட் துறை மூலமாக ஒட்டுமொத்த தொழிலாளர்களின் குடியிருப்பு பிரச்சினையை மோசமான நிலைக்கு தள்ளிவிட்டிருக்கிறது. வங்கிகள் ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கும், தொழிலாளர்களுக்கும் ஒருசேர கடன் கொடுப்பதால், இந்தத் துறையைக் கொண்டு முழு தொழிலாளர் வர்க்கத்தையும் ஒட்டச் சுரண்டுகிறது. அதிகமாக ஊதியம் வாங்கும் மேல் தட்டு ஐ.டி ஊழியர்களால் கூட வீடு வாங்குவது என்பது எட்டாக் கனவாக மாறிக் கொண்டிருக்கிறது.
இன்னொரு பக்கம், ஏகாதிபத்திய மூலதனம் ஐ.டி தொழில்துறையில் வேலை பார்க்கும் ஊழியர்களை கடும் சுரண்டலுக்கு உள்ளாக்குகிறது. 8 மணி நேர வேலை என்பது காணாமல் போயிற்று என்றே சொல்லலாம். இங்கு குறிப்பிடுவது வேலை நேரத்தை மட்டும்தான்.
பெருநகரங்கள் மக்கள்தொகை வெள்ளத்தால் பெருகி வழிவதால், உள்கட்டமைப்பு வசதிகள் மேலும் மேலும் மோசமடைந்து வருகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நகர மக்கள் தொகை பெரும் போக்குவரத்து நெருக்கடியை ஏற்படுத்துவதால், ஒரு தொழிலாளி சராசரியாக அலுவலகம் சென்றடைய ஒரு மணிநேரத்தில் இருந்து இரண்டு மணிநேரம் வரை ஆகிறது. அதுவும் பெங்களூரு போன்ற நகரத்தில் சாலை வசதிகள் படுமோசமாக உள்ளது.
வெகு சில தொழிலாளர்களே அலுவலகங்களுக்கு அருகாமையில் இருக்கின்றனர். அந்த குடியிருப்புகளின் வாடகை மிக அதிகம். எல்லாத் தொழிலாளர்களாலும் கொடுக்க இயலாது. ஆகவே ஒரு ஐ.டி தொழிலாளியின் வேலை நேரம் முழுமையாக கணக்கிட்டால் குறைந்தபட்சம் 12 முதல் 14 மணி நேரம் வரை நீள்கிறது. இங்கே குறிப்பிடுவது ஐ.டி துறையில் வேலை பார்க்கும் நேரடி தொழிலாளர்கள் பற்றி மட்டுமே. ஐ.டி துறையில் வேலை பார்க்கும் இன்ன பிற தொழிலாளர்கள் வாழ்க்கை படு மோசம். வெளியில் நிற்கும் காவலாளி முதல் சமையல் சப்ளை செய்யும் தொழிலாளர்களின் வாழ்க்கையோ அந்தோ பரிதாபம்.
இவ்வாறான பொருளாதார, வேலை நேர நெருக்கடிகள் பல்வேறு பிரச்சினைகளை ஐ.டி தொழிலாளர்களின் வாழ்க்கையில் ஏற்படுத்துகின்றன. சில தொழிலாளர்கள் மன உளைச்சலுக்குள்ளாகி தற்கொலை செய்து கொண்டுள்ளனர். பல தொழிலாளர்களுக்கு குழந்தையின்மை பிரச்சினைகள் வருகிறது. இன்னும் பல தொழிலாளர்களின் குடும்பங்கள் விவாகரத்து மூலம் சிதறுண்டு போகின்றன.
படிக்க: “நாங்கள் உங்கள் அடிமைகள் அல்ல”: பெங்களூருவில் ஐ.டி. ஊழியர்கள் போராட்டம்
தற்பொழுது சில ஐ.டி தொழிலாளர்கள் தங்களுக்கு நிறுவனங்கள் கொடுக்கும் நெருக்கடி காரணமாக சில தொழிற்சங்கங்களிலும் சேர்கின்றனர். அவர்களின் நெருக்கடிகளைத் தீர்க்க அது போதுமானதாக இல்லை. அதேசமயம், அவர்கள் வாழ்க்கை குறித்த உரையாடல்கள் வேறு ஒரு தளத்தில் அமைதியாக நடந்து கொண்டிருக்கிறது.
ஐ.டி தொழிலாளர்கள் தங்களின் குமுறல்களை உரையாட பிரத்யேகமாக சில செயலிகள் உள்ளன. Blind, Grapevine, Reddit, fishbowl ஆகிய செயலிகள் இதில் முக்கியமானவை.
இந்த செயலிகளின் சிறப்பம்சம் என்னவென்றால், எல்லோரும் இதில் இணைய முடியாது. அந்தந்த நிறுவன தொழிலாளர்கள் தங்களது அலுவலக இமெயில் முகவரியை பதிய வேண்டும். அது இந்த செயலிகளால் உறுதிப்படுத்தப்பட்ட பிறகே அதனுள் நுழைய முடியும். இந்த செயலிகளில் அலுவலகங்களில் பேச முடியாத அனைத்து பிரச்சினைகளையும் தொழிலாளர்கள் பேசுகின்றனர். அவர்கள் அன்றாடம் சந்திக்கும் நெருக்கடிகள் தொடங்கி, நிறுவனங்களை அம்பலப்படுத்தும் பதிவுகள் வரை அங்கே விவாதமாகும். சில தொழிலாளர்கள் “நாம் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து போராட வேண்டும்” என்று நிறுவனங்களுக்கு எதிராக கோரிக்கையும் வைப்பதுண்டு. அதற்கு விருப்பங்கள் (லைக்குகள்) கொட்டுவதும் உண்டு. இதே செயலிகளில் நிறுவன ஆட்களும் உளவாளிகளாக இருப்பர். இவர்கள் விவாதங்களை திசைதிருப்பும் முயற்சிகளில் ஈடுபடுவர். இந்தச் செயலிகளை நிறுவனங்கள் தொழிலாளர்களின் மனநிலையை கணிப்பதற்காகப் பயன்படுத்திக் கொள்கின்றன என்பது உண்மைதான். இருப்பினும் தொழிலாளர்கள் தங்கள் உண்மையான பெயரை குறிப்பிடாமல் பதிவிட முடிவதால் தங்கள் மனதில் தோன்றியவற்றை பதிவிடுகின்றனர். இவையெல்லாம் வடிகால் மட்டுமே.
1990-களில் தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் எனும் மறுகாலனியாக்கக் கொள்கைகள் இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட பிறகு, ஐ.டி துறையில் உருவான வேலை வாய்ப்புகளும் அதில் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட சில சலுகைகளும் மறுகாலனியாக்கக் கொள்கைகளின் வெற்றியாக சித்தரிக்கப்பட்டது. ஆனால், இன்று ஐ.டி தொழிலாளர்கள் நவீன கொத்தடிமைகளாக மற்றப்பட்டிருப்பதானது அந்த பிம்பத்தை சுக்குநூறாக உடைத்துள்ளது.
உண்மையில், ஐ.டி தொழிலாளர்கள் வாழ்க்கை என்பது ஒரு பிரஷர் குக்கர் வாழ்க்கைதான். ஒரு சில தொழிற்சங்க நடவடிக்கைகள் இருந்தாலும், அவர்களை பெருவாரியாக ஒன்றிணைக்க சரியான அமைப்பு இன்னும் உருவாகவில்லை என்பதே நிதர்சனமானது. இந்தத் தொழிலாளர்கள் மத்தியில் அறிவுஜீவிகள் உருவாகியுள்ளனர் என்பதனையும் குறிப்பிட வேண்டும். அவர்கள் மார்க்சியத்தை நேரடியாக படிப்பவர்களாகவும், அதனை நடைமுறைப்படுத்த ஆர்வமுள்ளவர்களாகவும், ஈடுபடுபவர்களாகவும் உள்ளனர். பிரஷர் குக்கர் ஒரு நாள் வெடிக்கும் என்பதில் மட்டும் சந்தேகம் இல்லை. அப்பொழுது அவர்களை வழிநடத்த சரியான அமைப்பு உருவாகியே தீர வேண்டும் என்பது காலத்தின் கட்டளை.
வினோத் வில்சன்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram