விநாயகர் சிலைகளைக் கரைப்பதற்காக ஆமைகள் முட்டையிடும் பட்டினப்பாக்கம் கடற்கரையில் கட்டடக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ள சம்பவமானது, அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது. இதனால் பட்டினப்பாக்கம் கடற்கரை மீண்டும் சரிசெய்ய முடியாத அளவிற்குப் பாதிப்படைந்துள்ளது என பூவுலகின் நண்பர்கள் அமைப்பு அம்பலப்படுத்தியுள்ளது.
பாசிச ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி, இந்து முன்னணி உள்ளிட்ட சங்கப் பரிவார் கும்பல்கள் தங்கள் மதவெறிக் கலவர நோக்கத்திற்காக விநாயகர் சிலை ஊர்வலங்களை ஆண்டுதோறும் நடத்தி வருகின்றன என்பது நாம் அறிந்ததே.
கலவரச் சூழலை ஏற்படுத்துவது, மக்களின் அன்றாட வாழ்க்கையைத் தொந்தரவு செய்வது என்பது மட்டுமல்லாமல் இப்பாசிச கும்பல் இயற்கையையும் நாசப்படுத்துகிறது என்பது இன்னுமொரு முக்கியமான விடயம். ஆறு, ஏரி, குளங்கள், கடல் என எல்லா இடங்களிலும் விநாயகர் சிலைகள் கரைக்கப்படுவதால் மிகக் கடுமையாக நீர்நிலைகள் பாதிப்படைகின்றன.
சென்னையில் மட்டும் இந்த வருடம் 1,519 சிலைகள் கரைக்கப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சென்னையில் குறிப்பாக 4 இடங்களில் இச்சிலைகள் கரைக்கப்படுகின்றன. இதில் பட்டினப்பாக்கம் கடற்கரைப் பகுதியில்தான் அதிகளவிலான சிலைகள் கரைக்கப்படுகின்றன.
விநாயகர் சிலைகளைக் கரைப்பதற்காக, பட்டினப்பாக்கம் கடற்கரையில் இந்த ஆண்டில், வேறு எந்த ஆண்டிலும் இல்லாத வகையில் கடற்கரைப் பகுதியில் மிகப்பெரிய அளவில் கட்டடக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன.
படிக்க: கர்நாடகா: விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தைக் கலவரமாக மாற்றிய காவிக் கும்பல்
கடலோர ஒழுங்குமுறை மண்டல விதியின்படி எந்தவொரு கட்டடக் கழிவுகளையும் கடலோரப்பகுதியில் கொட்டக்கூடாது. ஆனால், சென்னை மாநகராட்சியும், போலீசும் மேற்கண்ட ஏற்பாட்டைச் செய்து கொடுத்துள்ளன என்பது மிக மோசமான முன்னுதாரணமாகும். ’சமூகநீதி மாடல்’ அரசு, பாசிசக் கலவரக் கும்பலைத் திருப்திப்படுத்தி, இயற்கையை நாசப்படுத்த வேண்டிய அவசியம் என்ன?
ஏற்கனவே, விநாயகர் சிலைகளை உற்பத்தி செய்வது, வழிபாட்டிற்கு நிறுவுவது, நீர்நிலைகளில் சிலைகளைக் கரைப்பது தொடர்பாக, பல்வேறு உத்தரவுகளையும், வழிகாட்டுதல்களையும் உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்றங்களும், மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும் வழங்கியுள்ளன. சுற்றுச்சூழல், நீர்நிலைகளை மாசுபடுத்தும் பிளாஸ்டர் அஃப் பாரிஸால் (Plaster of Paris) விநாயகர் சிலைகளைச் செய்ய ஏற்கெனவே தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் பிளாஸ்டர் அஃப் பாரிஸால் செய்யப்படும் சிலைகளில் ஜிப்சம், பாஸ்பரஸ், மெக்னீசியம் உள்ளிட்ட வேதிப்பொருட்கள் உள்ளன. மேலும் சிலைகளுக்குப் பூசப்படும் இரசாயன வண்ணங்களில் பாதரசம், காட்மியம், ஆர்சனிக், ஈயம் மற்றும் கார்பன் உள்ளிட்ட தீங்கு விளைவிக்கும் வேதிப்பொருட்களும் கலந்துள்ளன. ஆனால் இந்த உத்தரவுகளையெல்லாம் மீறி அந்த வகையான சிலைகள் தயாரிக்கப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட்டு வருகின்றன.
இதையெல்லாம் தடுப்பதற்கு தமிழ்நாடு அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது என்ற கேள்வி இருக்கும்போதே, சென்னை மாநகராட்சி, போலீசின் தற்போதைய ஏற்பாடானது மோசமானதும், மிகவும் கண்டிக்கத்தக்கதுமாகும்.
விநாயகர் சிலைகளைக் கரைப்பது தொடர்பாக புதுப்பேட்டையைச் சேர்ந்த ஹரிஹரன் என்பவர் தொடர்ந்த மனு மீது கடந்த ஆண்டு ஜனவரி 24 அன்று விரிவான உத்தரவு ஒன்றத் தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் பிறப்பித்திருந்தது.
அனுமதிக்கப்பட்ட நீர்நிலைகளில் சூழலுக்குகந்த மக்கும் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் சிலைகளைக் கரைப்பவர்களிடம் சிலைகளின் உயரத்தைப் பொறுத்து கட்டணம் நிர்ணயிக்கும்படியும், அறிவிக்கப்படாத நீர்நிலைகளில் கரைப்பவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் எனவும், இதனை விநாயகர் சதுர்த்திக்கு 2, 3 மாதங்களுக்கு முன்னரே அரசு சார்பாக விளம்பரம் செய்ய வேண்டும் எனவும் பசுமைத் தீர்ப்பாயம் தனது உத்தரவில் கூறியிருந்தது.
படிக்க: உத்தரப்பிரதேசம்: விநாயகர் சிலையை உடைத்துவிட்டு இஸ்லாமியர்கள் உடைத்ததாக புகாரளித்த பூசாரி
கடந்த ஆண்டும் இந்த உத்தரவின் மீது எந்த நடவடிக்கையும் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளவில்லை. இது குறித்து தமிழ்நாடு அரசு பசுமைத் தீர்ப்பாயத்துக்கு அளித்த பதிலில் “கட்டணம் நிர்ணயிப்பதும், அபராதம் விதிப்பதும் வழிபாட்டு உரிமை மற்றும் பொதுமக்களின் உணர்வு தொடர்பானது என்பதால், சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியுள்ளது” என்று கூறியிருந்தது.
பொதுமக்களின் உணர்வு, வழிபாட்டு உரிமையைத் தடுப்பது என்பது இதில் எங்கே உள்ளது? அப்படியென்றால் சுற்றுச்சூழல் நாசமானால் பரவாயில்லை என்பதுதான் தமிழ்நாடு அரசின் கருத்தா? கலவர சங்கிக் கும்பலைத் திருப்திப்படுத்துவதைத் தாண்டி இதில் வேறென்ன இருக்கிறது?
மேற்கண்ட தமிழ்நாடு அரசின் அணுகுமுறையின் தொடர்ச்சியாகத்தான் பட்டினப்பாக்கம் கடற்கரையில் கட்டடக் கழிவுகளைக் கொட்டியதையும் பார்க்க வேண்டியுள்ளது.
பாசிச ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி, இந்து முன்னணி கும்பல்களின் கலவர நோக்கத்திற்காகவே ஆண்டுதோறும் நடத்தப்படுகின்ற, சுற்றுச்சூழலுக்கும் நீர்நிலைகளுக்கும் மோசமான பாதிப்பை ஏற்படுத்துகின்ற, சமூகத்தில் பதட்டத்தை ஏற்படுத்துகின்ற விநாயகர் சிலை நிறுவுதலையும், ஊர்வலங்களையும், கரைப்பு நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு தடை செய்வது மட்டுமே இதற்கு நிரந்தரத் தீர்வாக அமையும்.
அய்யனார்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram