உத்தரப்பிரதேசத்தின் சித்தார்த் நகர் மாவட்டத்திலுள்ள தௌலிஹாவா கிராமத்தைச் சேர்ந்த கிரிச் ராம் என்ற பூசாரி, கோவிலிலிருந்த விநாயகர் சிலையை மன்னன் மற்றும் சோனு ஆகிய இரண்டு இஸ்லாமியர்கள் உடைத்ததாகவும் தடுக்கச் சென்ற தனது மனைவியை அவர்கள் தாக்கியதாகவும் ஜூலை 16 அன்று போலீசில் புகாரளித்தார். மேலும், அவர்கள் தன்னை பூஜை செய்ய அனுமதிக்க மாட்டோம் என்று அச்சுறுத்தியதாகவும் தெரிவித்தார்.
“ஒரு வகுப்பினரின் மதத்தை அவமதிக்கும் நோக்கத்துடன் வழிபாட்டுத்தலத்தை தாக்கியது, அசுத்தப்படுத்தியது” என்ற அடிப்படையில் இந்த புகாரின் மீது உடனடியாக முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்த போலீசு, உடனடியாக விசாரணையையும் தொடங்கியது. இதுகுறித்து விசாரணை செய்வதற்காக உள்ளூர் போலீசுத்துறை, வட்டம் மற்றும் உள்ளூர் சப்-டிவிஷனல் மாஜிஸ்திரேட் குழுவினர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டனர்.
படிக்க: பக்ரீத் அன்று முஸ்லீம்கள் மீது திட்டமிட்டு கலவரங்களை நடத்தியுள்ள பாசிசக் கும்பல்
அப்போது அங்கிருந்த குழந்தைகள், விநாயகர் சிலையை உடைத்தது பூசாரிதானே ஒழிய இஸ்லாமியர்கள் அல்ல என்றும் தாங்கள் அங்கு விளையாடிக் கொண்டிருந்தபோது அதனைப் பார்த்ததாகவும் போலீசில் தெரிவித்தனர். இதனையடுத்து பூசாரி கிரிச் ராம்-இன் சதித்தனம் வெளிச்சத்திற்கு வந்தது. பூசாரியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மன்னன் மற்றும் சோனு ஆகிய இரண்டு முஸ்லிம் இளைஞர்களுடன் தனக்கு ஏற்கனவே தகராறு இருந்ததாகவும் அவர்களை பொய்யாக வழக்கில் சிக்க வைப்பதற்காக, தானே சிலையை உடைத்ததாகவும் தெரிவித்தார். இந்த செய்தி பலரையும் அதிர்ச்சியடைச் செய்துள்ளது.
பாசிச மோடி ஆட்சியில் இந்தியா முழுவதும் இஸ்லாமியர்கள் மீது பசு கடத்தல், மதமாற்றம், லவ் ஜிகாத், வெள்ள-ஜிகாத் என பல்வேறு புனைவுகளின் மூலம் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. காவி கும்பல் தொடர்ந்து முஸ்லிம் வெறுப்பைப் பரப்பி கொடூரமான தாக்குதல்களை நடத்தி வருகிறது. இக்கும்பல் பரப்பும் பொய்களால் பல இடங்களில் கலவரங்களும் வன்முறைகளும் அரங்கேறியுள்ளன. பாசிச சங்கப் பரிவார கும்பல் மக்கள் மத்தியில் பரப்பியுள்ள முஸ்லிம் வெறுப்பிற்கு ஒரு சான்றாகவே இச்சம்பவம் அமைந்துள்ளது.
செய்தி ஆதாரம்: தி வயர்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube