2022 ஆம் ஆண்டு முதல் ரஷ்யாவில் எண்ணெய் வாங்கியதில் அரசின் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களை விட இரண்டு தனியார் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு அதிக லாபம் கிடைத்துள்ளதை ”பிசினஸ் ஸ்டாண்டர்ட்” (Business Standard) என்னும் பத்திரிகை நடத்திய ஆய்வு அம்பலப்படுத்தியுள்ளது. மேலும் அமெரிக்காவின் புதிய சுங்க கட்டண விதிகள் அமலான பிறகும் ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்க இந்நிறுவனங்கள் முயற்சி செய்து கொண்டிருக்கின்றன.
நாளொன்றுக்கு இந்தியா ரஷ்யாவிடம் இருந்து சராசரியாக 15 லட்சம் பீப்பாய் எண்ணெய் வாங்குகிறது. இதில் 40 சதவிகிதத்திற்கும் அதிகமான பங்கை முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் (Reliance Industries) மற்றும் ரஷ்யாவின் ரோஸ் நிஃப்ட் நடத்தும் நயரா எனர்ஜி (Nayara Energy) ஆகிய நிறுவனங்கள் கொண்டுள்ளன.
ஆகஸ்ட் 23 அன்று இப்பத்திரிக்கை வெளியிட்ட செய்தியில் “நிலையான எரிபொருள் விலை” கொள்கையினால் இந்திய அரசு சுத்திகரிப்பு நிறுவனங்களை விட தனியார் நிறுவனங்களே அதிக லாபத்தைப் பெறுவதாகக் குறிப்பிட்டுள்ளது.
அதேபோல், கடல் போக்குவரத்து நுண்ணறிவு நிறுவனமான கெப்ளர் (Kpler) இன் தரவுகளின்படி, இந்தியாவில் எண்ணெய் இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் 7 இருக்கும் போதிலும் தினமும் இறக்குமதியாகும் 18 லட்சம் எண்ணெய் பேரல்களில் 8.81 லட்சம் பேரல்களை மேற்கூறிய இரண்டு நிறுவனங்களே பெறுகின்றன என்று குறிப்பிட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டு உக்கிரன் – ரஷ்யா போரினால் பல்வேறு பொருளாதார சிக்கல்களை மேற்கொண்டது ரஷ்யா. 2021ஆம் ஆண்டில் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் 2 சதவிகிதத்தை மட்டுமே ரஷ்யாவிடமிருந்து பெற்று வந்த இந்தியா 42 மாதங்களில் 32 சதவிகிதமாக உயர்த்தியுள்ளது. இந்த மாற்றம் அமெரிக்கா, சவுதி அரேபியா, நைஜீரியா போன்ற நாடுகளின் கச்சா எண்ணெய் இறக்குமதியின் பங்கைக் குறைத்துள்ளது.
2025 ஜூலை சமயத்தில் இந்த இறக்குமதி 45 சதவிகிதத்தைத் தொட்டது. அதாவது இறக்குமதியாகும் இரண்டில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
இந்த மொத்த நடவடிக்கையும் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிக்கு கொள்ளை லாபத்தை வாரி வழங்கியது.
படிக்க: அம்பானி வீட்டு திருமணம்: “சுற்றுலா விபச்சாரம்” மோடியின் புதிய இந்தியா
ஓ.என்.ஜி.சி (ONGC) போன்ற இந்திய அரசு சுத்திகரிப்பு நிறுவனங்கள் விலை கட்டுப்பாடுகளுடன் செயல்பட வேண்டியுள்ளதால் அந்த இரண்டு லாபவெறி கார்ப்பரேட்டுகளும் தங்களுடைய தயாரிப்பின் பெரும் பகுதியை ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன.
இந்தியாவின் மொத்த எரிபொருள் ஏற்றுமதியில் 81 சதவிகிதத்தை இந்த இரண்டு நிறுவனங்களே கொண்டுள்ளன. இதில் 71 சதவிகிதத்தை, அதாவது 9,14,000 பேரல்களை, ரிலையன்ஸ் நிறுவனம் மட்டுமே ஏற்றுமதி செய்கிறது.
மேலும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜாம்நகர் சுத்திகரிப்பு நிறுவனம் தனது மொத்த கொள்ளளவில் 67 சதவிகிதத்தை ஏற்றுமதி செய்துள்ளது என்பதை இவ்வறிக்கை தெள்ளத் தெளிவாகக் குறிப்பிடுகிறது.
எந்த நாட்டின் இறையாண்மையையும் மதிக்காத டிரம்ப் இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்வதைக் காரணமாகக் காட்டி இந்தியா மீது கூடுதல் வரியை விதித்துள்ளதை நியாயப்படுத்தி வருகிறார். ஆனால், இது இந்திய அரசை தனக்கு அடிபணிய வைப்பதற்கான நடவடிக்கையே ஆகும். இந்த கூடுதல் வரிவிதிப்பு இந்தியாவில் உள்ள சிறு குறு தொழில் செய்பவர்கள் மற்றும் உழைக்கும் மக்களின் முதுகில் சுமையை ஏற்றியுள்ளது.
கச்சா எண்ணெய் மலிவான விலையில் ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டாலும் மக்களின் பயன்பாட்டிற்கு விற்கப்படும் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ரஷ்ய எண்ணெய் மூலம் வரும் இலாபம் என்னவோ அம்பானிக்கு. அமெரிக்காவின் வரிவிதிப்பால் ஏற்பட்டுள்ள பாதிப்பு மட்டும் உழைக்கும் மக்களுக்கு.
ஆண்ட்ரே
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram