அம்பானி வீட்டு திருமணம்: “சுற்றுலா விபச்சாரம்” மோடியின் புதிய இந்தியா

தற்போது நடந்து முடிந்தது திருமணமும் அல்ல; திருமணத்திற்கான முன்னோட்டமும் அல்ல; “இந்தியாவில் திருமணம்” என்ற மோடி அரசின் முன்னெடுப்பிற்கான கேளிக்கை விளம்பரம் மட்டுமே.

மோடியின் பத்தாண்டுகால ஆ(ட்)சியில் உலக பணக்காரராக வளர்ந்த முகேஷ் அம்பானியின் இளையமகன் ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சன்ட் திருமண நிகழ்வு குஜராத் மாநிலம் ஜாம்நகரில் நடந்து முடிந்துள்ளது. மார்ச் 1, 2, 3 ஆகிய தேதிகளில் நடந்த இந்நிகழ்வு, முதலில் திருமணம் என்று சொல்லப்பட்ட நிலையில் பின்னர், இதுவரை இல்லாத புதிய நிகழ்வாக “திருமண முன்னோட்டம்” (அ) “திருமண ஒத்திகை” என்று கூறப்பட்டது. தற்போது திருமணம் ஜூலை மாதம் 1-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ‘திருமண முன்னோட்டத்தை’ நடத்துவதற்காக குஜராத் மாநிலம் ஜாம்நகரில் 400 ஏக்கரில் புதிய நகரத்தையும், 3,000 ஏக்கரில் புதிய காட்டையும் அம்பானி குழுமம் உருவாக்கியது. அந்நகரில் மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்ட இந்த மூன்று நாள் நிகழ்விற்கு, ஹாலிவுட் நடிகர்கள், ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் உள்ளிட்ட பாலிவுட் நடிகர்கள், சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட விளையாட்டு வீரர்கள், கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் பின் ஜாசிம் அல் தானி, பூட்டான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கேல் வாங்சுக் மற்றும் ராணி ஜெட்சன் பெமா,  டொனால்ட் டிரம்பின் மகள் இவாங்கா டிரம்ப், டிஸ்னியின் நிர்வாக அதிகாரி பாப் இகர், பில் கேட்ஸ், பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் உள்ளிட்ட சர்வதேச ஏகபோக கார்ப்பரேட் முதலாளிகள், உலக முன்னணி பிரபலங்கள் என 1,200 பேர் விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

உலகில் வேறெங்கும் நடந்திராத வகையில், அம்பானியின் விருந்தினர்களான இந்த உல்லாச ஊதாரிகள் குஜராத்தின் ஜாம்நகருக்கு தனியார் ஜெட் விமானங்களில் வந்திறங்குவதற்கு உகந்தவகையில் விமானப் படையின் கட்டுப்பாட்டில் உள்ள ஜாம்நகர் விமான நிலையத்தை பிப்ரவரி 25 முதல் மார்ச் 5 வரை சர்வதேச விமான நிலையமாக மாற்றியது மோடி அரசு. “பொழுதுப்போக்கு பூங்காவில் ஒரு மாலை” (ஒன் ஈவினிங் இன் எவர்லேண்ட்) “காட்டுப்பகுதியில் ஒரு உலா”, “ஹஸ்தாக்ஷர்” (கையெழுத்து – இந்திய கலாச்சாரத்தின் மீது) என ஒவ்வொரு நாளுக்கும் ஒரு கருப்பொருளை உருவாக்கி அதற்கேற்ப இந்த ஊதாரிகள் ஆடை அலங்காரங்கள் செய்து பங்கேற்கும் வகையில், ஆயிரக்கணக்கான சிகையலங்கார நிபுணர்கள், ஒப்பனைக் கலைஞர்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர். இந்த ஊதாரிகளும் இவர்களுக்கான இந்த ஒப்பனைக் கலைஞர்களும் தங்குவதற்கு உல்லாச நடசத்திர விடுதிகள் ஏற்பாடு செய்யப்பட்டன.


படிக்க: உழைக்கும் மக்களை அவமானப்படுத்தும் அம்பானி குடும்பத்தின் ஆடம்பரத் திமிர்


இத்திருமண முன்னோட்டத்தின் தொடக்க நிகழ்வாக 75 கோடி ரூபாய் செலவில் பிரபல அமெரிக்க பாப் பாடகர் ரிஹானாவின் கலைநிகழ்ச்சி; ஷாரூக் கான், சல்மான் கான், அமீர் கான் ஆகிய பாலிவுட் நடிகர்கள் ஒன்றாக இணைந்து ஆடிய கேலிக்கை நடனம்; பிரபல சமையல் கலைஞர்களைக் கொண்டு சமைக்கப்பட்ட 2,500-க்கும் அதிகமான ஆடம்பர உணவு வகைகள்; இந்த ஊதாரிகளுக்கு வழங்குவதற்காக விலையுயர்ந்த ஆடம்பர பரிசுப் பொருட்கள்; ஆபாச நடனங்கள், கூத்துகள் என மொத்தமாக இந்நிகழ்விற்கு மட்டும் சுமார் 1,250 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது.

அதாவது, பிரிட்டிஷ் காலனியாதிக்கக் காலத்தில் கூட இல்லாத அளவிற்கு பொருளாதார, வர்க்க ஏற்றத்தாழ்வு நம் நாட்டில் தலைவிரித்தாடும் நிலையில் 1,250 கோடி ரூபாய் செலவு செய்து திருமணத்திற்கான ‘ஒத்திகை’ நடத்தப்பட்டிருப்பது வக்கிரத்தின் உச்சமாகும். இந்நிகழ்வானது அன்றாட உணவிற்கே அல்லல்படும் கோடிக்கணக்கான இந்திய உழைக்கும் மக்களை அவமானப்படுத்தும் அப்பட்டமான ஆடம்பரத் திமிரன்றி வேறொன்றுமில்லை. ஆனால், சில சர்வதேச முதலாளித்துவ ஊடகங்களே இந்தியாவில் நிலவும் வறுமை, பொருளாதார ஏற்றத்தாழ்வுடன் அம்பானியின் இந்த உல்லாச திருமண ஒத்திகையை ஒப்பிட்டு இந்த வக்கிரத்தைக் கண்டித்திருந்த நிலையில், கார்ப்பரேட் கும்பலின் அடிமைகளாகிப்போன பெரும்பாலான இந்திய ஊடகங்கள் வெட்கமின்றி ஆனந்த் அம்பானியின் திருமண நிகழ்வை அருவருக்கத்தக்க வகையில் மெச்சிப் புகழ்ந்து பிரச்சாரம் செய்தன.

இன்னொருபுறம், “அம்பானி நினைத்திருந்தால் மகன் திருமணத்தை பிற கோடீஸ்வரர்களை போல வெளிநாட்டில் நடத்தியிருக்க முடியும், இந்தியாவின் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் காப்பதற்காகவே அவர் சொந்த ஊரான குஜராத்தில் திருமணத்தை நடத்தியுள்ளார்” என்று சங்கிகளும் அம்பானியின் கூலி அடிமைகளும்  உச்சிமுகர்ந்தனர். உண்மையில், அம்பானி இத்திருமண நிகழ்வை குஜராத் மாநிலம் ஜாம்நகரில் நடத்தியதற்கு பின்னால் மோடி-அம்பானி கூட்டின் மிகப்பெரிய கார்ப்பரேட் கொள்ளை திட்டம் அடங்கியுள்ளது.


படிக்க: அமுல் விரிவாக்கத்துக்குப் பின்னே அம்பானியின் ஏகபோக விருப்பம்!


திருமணம் முன்னோட்டம்அல்ல கேளிக்கை விளம்பரம்

திருமண நிகழ்வை ஜாம்நகரில் நடத்தியது குறித்து பேசிய அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி, அதற்கு இரண்டு காரணங்களை முன்வைத்தார். ஒன்று, ஜாம்நகர் ஆனந்த் அம்பானி வளர்ந்த இடம்; மற்றொன்று, பிரதமர் மோடியின் “வெட் இன் இந்தியா”(Wed in India) அழைப்பு. அதாவது, இந்தியாவிலேயே திருமணம் செய்யுமாறு பணக்காரர்களுக்கு மோடி விடுத்த அழைப்பு.

2023 நவம்பரில் மன்-கி-பாத் வானொலி நிகழ்ச்சியில் பேசிய மோடி, வெளிநாட்டில் திருமணத்தை நடத்துவதற்கான இந்திய கோடீஸ்வரர்களின் மோகம் அவருடைய மனதிற்கு மிகுந்த வலியை தருவதாக சொன்னார். மேலும், இந்திய மண்ணில், இந்திய மக்கள் மத்தியில், திருமண விழாக்களைக் கொண்டாடினால் நாட்டின் பணம் நாட்டிலேயே இருக்கும் என்றும் இந்த திருமண சீசனில் சுமார் 5 லட்சம் கோடி ரூபாய் வர்த்தகம் நடக்கும் என சில வர்த்தக நிறுவனங்கள் மதிப்பிட்டுள்ளதாகவும் கூறினார்.

அதன் தொடர்ச்சியாக, டிசம்பர் மாதத்தில் உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் நடந்த உச்சிமாநாட்டில் பேசிய மோடி, “இந்தியாவில் திருமணம்” என்ற முன்னெடுப்பை அறிமுகப்படுத்தினார். இந்தியாவில் உள்ள கோடீஸ்வரர்களும் பிரபலங்களும் வெளிநாடுகளில் திருமணத்தை நடத்துவதைத் தவிர்த்து இந்தியாவிற்குள்ளேயே திருமணத்தை நடத்த வேண்டுமென்று அழைப்பு விடுத்தார்.

கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் வெளியான அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பின் (CAIT) ஆய்வு முடிவு, நவம்பர் 23 முதல் டிசம்பர் 15 வரையிலான வெறும் 23 நாட்களைக் கொண்ட குளிர்கால திருமண சீசனில், சுமார் 38 லட்சம் திருமணங்கள் நடைபெறும் என்றும், அதன்மூலம் 4.74 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் வர்த்தகம் நடக்கும் என்றும் கூறியது. இதனால், திருமணங்களுக்கு தேவையான ஆடம்பர மாளிகைகள், உல்லாச நட்சத்திர விடுதிகள், திருமண அரங்குகள், நிகழ்வு மேலாண்மை, அலங்காரம், புகைப்படம் மற்றும் வீடியோ ஷூட்கள், பேண்ட் வாத்திய இசை நிகழ்ச்சி, உள்ளிட்ட திருமணத்திற்கான சேவைத் துறையிலும், ஆடைகள், நகைகள், உணவு தானியங்கள், மளிகைப் பொருட்கள், காய்கறிகள், ஆடம்பர பரிசுப் பொருட்கள், சாராயம், போதை, விபச்சாரம் போன்ற பல்வேறு வகைகளில் மேற்கொள்ளப்படும் ஊதாரித்தனமான செலவினங்களிலும் மிகப்பெரிய வர்த்தக உந்துதலை ஏற்படுகிறது என்று அவ்வறிக்கை கூறுகிறது. இது அதற்கு முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் கணிசமான அளவு அதிகமாகும்.


படிக்க: நிதிநிலை அறிக்கை 2023-2024: அம்பானி – அதானிகளுக்கு அமிர்தகாலம், உழைக்கும் மக்களுக்கு ஆலகாலம்!


மன்-கி-பாத்-இல், இந்த திருமண சீசனில் 5 லட்சம் கோடி வரை வர்த்தகம் நடக்கும் என்று மோடி சொன்ன வழிவகை இதுதான். இந்த வர்த்தக மூலதனத்தை குறிவைத்தே மோடி இந்தியாவிலேயே திருமணம் செய்யுங்கள் என்று உலக கோடீஸ்வரர்களுக்கு அறைகூவல் விடுக்கிறார். இந்த ‘அறைகூவலுக்கான’ செயல்முறை விளக்கமாகத்தான் தற்போது குஜராத்தின் ஜாம்நகரில் ஆனந்த் அம்பானியின் திருமண கொண்டாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

அதாவது, தற்போது நடந்து முடிந்தது திருமணமும் அல்ல; திருமணத்திற்கான முன்னோட்டமும் அல்ல; “இந்தியாவில் திருமணம்” என்ற மோடி அரசின் முன்னெடுப்பிற்கான கேளிக்கை விளம்பரம் மட்டுமே. ஆனந்த் அம்பானியின் திருமணம் குறித்து பிற பணக்காரர்களையும் உள்நாட்டிலேயே திருமணம் செய்துகொள்ள தூண்டும் வகையில் ஊடகங்களில் செய்தி வெளியானதே அதற்கான எடுத்துக்காட்டு. ஜூலை 1 அன்று நடக்க இருக்கும் அம்பானி வீட்டு திருமணக்கூத்து இம்மூன்று நாள் கூத்தின் அடுத்தக்கட்டமாக அமையும் என்பதையும் இன்னும் பல சர்வதேச பிரபலங்களும் ஊதாரிகளும் படையெடுப்பார்கள் என்பதையும் தனியாக விளக்க வேண்டியதில்லை.

000

1990-களில் அமல்படுத்தப்பட்ட மறுகாலனியாக்கக் கொள்கைகளுக்கு பிறகு இந்தியாவில் பணக்காரர்களின் உல்லாச திருமண நிகழ்ச்சிகள் மிகப்பெரிய வணிக சந்தையாக மாற்றப்பட்டுள்ளது. திருமணம், திருமண வரவேற்பு, திருமணத்துக்கு முந்தைய பிந்தைய புகைப்படப்பிடிப்பு, மெஹந்தி, சங்கீத் (ஒன்றாக பாடுவது), ஒத்திகை விருந்து, வரவேற்பு பார்ட்டி, பேச்சுலர் பார்ட்டி என வெவ்வேறு பெயர்களில் நாளுக்கு நாள் திருமணங்களில் குடி-கூத்தின் பரிணாமங்கள் விரிவடைந்துகொண்டே செல்கின்றன. இந்தவகையில், ஒரு ஐந்து நட்சத்திர விடுதியில் சுமார் 200 விருந்தினர்களை அழைத்து கோடிஸ்வரர்களும் பிரபலங்களும் இரண்டு நாட்கள் நடத்தும் ஊதாரித்தனமான திருமண நிகழ்ச்சிக்கு மூன்று கோடி ரூபாய்க்கும் அதிகமாக செலவாகும் என்று இத்துறை சார்ந்த வணிக நிறுவனங்கள் மதிப்பிட்டு அதற்கேற்ப தங்களது ‘தொழிலை’ விரிவுப்படுத்திக் கொள்கின்றன.

இன்னொருபுறம், பத்தாண்டுகால மோடியின் கார்ப்பரேட் ஆட்சியில் ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையிலான ஏற்றத்தாழ்வு பலமடங்கு அதிகரித்துள்ளது. 2022 கணக்கெடுப்பின்படி இந்திய கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 161-ஆக உள்ள நிலையில், 2027-ஆம் ஆண்டில் 195-ஆக அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.


படிக்க: ஹூரன் ஆய்வறிக்கை: பணக்காரர்களை உரமிட்டு வளர்க்கும் மோடி அரசு


சமீபத்தில், ஹூரன் ஆய்வு அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் ஆசிய பணக்காரர்களின் மையமாக இருந்த சீனாவின் பெய்ஜிங் நகரை பின்னுக்கு தள்ளி 92 பில்லியனர்களுடன் இந்தியாவின் மும்பை நகரம் முதலிடத்தைப் பிடித்துள்ளதோடு, உலக அளவில் அதிக பணக்காரர்களை கொண்ட மூன்றாவது நகரமாகவும் மாறியுள்ளது இதற்கு கூடுதல் சான்று. ஆனால், இக்கோடீஸ்வரர்கள் பெரும்பாலானோர் துருக்கி, தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியா, துபாய், பாரிஸ் போன்ற வெளிநாடுகளிலேயே திருமணம் செய்துகொள்கின்றனர்.

இவர்களை வெளிநாட்டில் திருமணம் செய்வதை தடுத்து இந்தியாவிலேயே திருமணம் செய்யவைப்பதன் மூலமாக உள்நாட்டு பொருளாதாரத்திலும் சுற்றுலாத்துறையிலும் பல லட்சம் கோடி வரை லாபம் பார்க்க முடியும் என்பதுதான் மோடியின் புதிய இந்தியாவிற்கான திட்டம். எனவே, தேச வளர்ச்சி, புதிய இந்தியா என்பதெல்லாம், இந்தியாவை சர்வதேச உல்லாச, ஊதாரித்தனமான விபச்சார விடுதியாக்கும் திட்டமாகும். இதன் விளைவாக, நாடு முழுவதும் போதை-பாலியல்-கலாச்சார சீரழிவும் கூட்டு பாலியல் வல்லுறவுகளும் தீவிரமடைவதை தவிர்க்க முடியாது.

ஏற்கெனவே மோடி- யோகி கும்பல்,  அயோத்தி ராமன் கோவிலை வைத்து உலகின் பிடித்தமான சுற்றுலா மையமாக உத்தரப்பிரதேசத்தை மாற்றும் “பிராண்ட் உ.பி.” (Brand UP) திட்டத்தை அமல்படுத்தத் தொடங்கிவிட்டது. ராமர் கோவில் என்பது பாசிச மோடி கும்பலுக்கு சுற்றுலா பொருளாதாரத்தை வளர்க்கும் திட்டத்தின் ஒரு அங்கம். அதைப்போலவே, “இந்தியாவில் திருமணம்” என்ற மோடியின் முன்னெடுப்பும் உள்நாட்டு பொருளாதார வளர்ச்சி, சுற்றுலா வளர்ச்சி என்ற பெயரில் சர்வதேச உல்லாச, ஊதாரி கும்பல்களுக்கு நாட்டை திறந்துவிடுவதற்கான ஏற்பாடே.


தலையங்கம்

(புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2024 | மின்னிதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube4 மறுமொழிகள்

  1. நாட்டை விபச்சாரத்திற்கு திறந்துவிடுவதுதான் இந்திய பொருளாதார வளர்ச்சியா அல்லது இந்தியாவின் வளர்ச்சியா

  2. Nalla visayaththai ketta visayamaka siththarikireengaley. Unkal manasuku eppadi sarinu padudhu. Modi meethu poiya ethavathu sollividanun athaney. Neengal PM ah erunthal enna seyveerkalo athai seyyalam entry koorungal.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க