தென்காசி வியாபாரிகள் போராட்டம் வெல்லட்டும்!

இதற்கு முன் நகராட்சி நிர்வாகம் மார்க்கெட்டை குத்தகைக்கு விட்டிருந்தது. தற்போது அதிக வருவாயை ஈட்டுவதற்காக தானே நேரடியாக அதிக தொகைக்கு ஏலம் விட்டு வியாபாரிகள் வயிற்றில் அடிக்கிறது.

தென்காசி நகராட்சிக்குட்பட்ட தென்காசி தினசரி காய்கனிச் சந்தையில் வியாபாரிகள் சுமார் 40 வருட காலமாக தினசரி குத்தகை செலுத்தி 120 கடைகளை நடத்தி வியாபாரம் செய்து வருகின்றனர்.

பழைய மார்க்கெட் கடைகளை இடித்து புதிய மார்க்கெட் கட்டும் பணிகளுக்கான ஆணை 2023 இல் வெளியிடப்பட்டது. இதன் அடிப்படையில் வியாபாரிகளுக்கு அருகில் இருக்கும் பூங்காவில் மாற்று இடம் ஏற்பாடு செய்யப்பட்டது. தற்போது கட்டி முடிக்கப்பட்ட புதிய மார்க்கெட்டை ஏலம் விடுவதற்கு தென்காசி நகராட்சி சந்தை முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து தென்காசி தினசரி சந்தை காய்கறி வியாபாரிகள் சங்கத் தலைவர் வெங்கடேஷ் கூறுகையில், “தென்காசி நகராட்சியில் இருந்து ஏலம் மற்றும் ஒப்பந்த புள்ளி அறிவிப்பு என்ற நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் சிறு வியாபாரிகள் ஆகிய எங்களுக்கு பெரும் பணக்காரர்களிடம் போட்டியிடும் சூழ்நிலையும் அதனால் எங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தொழில் நடத்துவதற்கு கடைகள் கிடைக்காத சூழ்நிலையும் ஏற்படும் என்கிற அச்சத்தில் வியாபாரிகள் அனைவரும் உள்ளோம். இதனால் சிறு வியாபாரிகள் ஆகிய நாங்கள் வேறு வழியின்றி பொது ஏலம் ரத்து செய்யும் வரை எங்கள் கடைகளை 07/10/2025 ஆம் தேதியில் இருந்து காலவரையற்ற கடை அடைப்பு போராட்டம் நடத்துகிறோம்” என்றார்.

மேலும், புதிய கட்டிடத்தில் உள்ள கடைகளை பொது ஏலம் தவிர்த்து நியாயமான மாத வாடகைக்கும், நியாயமான முன் தொகைக்கும் தங்களுக்கு வழங்க உரிய நடவடிக்கை எடுத்து உதவிட வேண்டும் என்றும் கூறினார். இக்கோரிக்கை மனுவினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மற்றும் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஏலத்தை ரத்து செய்!

இந்த ஏல முறையை எதிர்த்து வியாபாரிகள் நீதிமன்றம் சென்ற நிலையில், நீதிமன்றம் மாவட்ட நிர்வாகத்திற்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கி வியாபாரிகள் முதுகில் குத்தியுள்ளது.

இதற்கு முன் நகராட்சி நிர்வாகம் மார்க்கெட்டை குத்தகைக்கு விட்டிருந்தது. தற்போது அதிக வருவாயை ஈட்டுவதற்காக தானே நேரடியாக அதிக தொகைக்கு ஏலம் விட்டு வியாபாரிகள் வயிற்றில் அடிக்கிறது.

சங்கத்திடம் ஒப்படையுங்கள்!

மொத்தம் 120 வியாபாரிகள் உள்ளனர். புதிதாக கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்தில் 76 கடைகள் மட்டுமே உள்ளது. இதனால் கடைகளை யாருக்கு ஒதுக்கீடு செய்வது என்ற சிக்கல் வரலாம். நியாயமான வாடகை நிர்ணயம் செய்து சங்கத்திடமே ஒப்படைத்து விட்டால் வியாபாரிகள் அனைவரும் தங்களுக்குள் பிரச்சனை இல்லாதவாறு பிரித்துக் கொள்வோம் என்று வியாபாரிகள் கூறுகின்றனர்.

விவசாயிகள் ஆதரவு!

விவசாயிகளும் தாங்கள் மார்க்கெட்டிற்கு கொண்டு வந்திருந்த வெண்டை, தக்காளி, சுரைக்காய், கத்தரி, கருவேப்பிலை உள்ளிட்ட பொருட்களை சந்தை முன்பு சாலையில் கொட்டி வியாபாரிகளின் கடையடைப்பு போராட்டத்திற்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.

நாமும் கரம் கோர்ப்போம்!

இந்த ஏல முறையால் உண்டாகும் சுமையானது பொதுமக்களின் தலையில்தான் வந்து விடியும். ஆகவே இது வியாபாரிகள் பிரச்சனை மட்டும் அல்ல. உழைக்கும் மக்களை ஒட்டச் சுரண்டுவது, நகரங்களை விரிவுபடுத்தி பெருமுதலாளிகள் கைகளில் ஒப்படைத்து உழைக்கும் மக்களை அடிமைகளாக்கி துடைத்தெறிவது என்பது இது போன்ற திட்டத்தில் உள்ளடங்கியுள்ளது. ஆகவே இது வியாபாரிகள், விவசாயிகள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவருக்குமான பிரச்சனை. ஆகவே வியாபாரிகளின் இந்த நியாயமான போராட்டத்திற்கு பொதுமக்கள், ஜனநாயக சக்திகள் என அனைவரும் இணைந்து நமது ஆதரவை வழங்குவோம். ”வேண்டும் ஜனநாயகம்!” என்று முழங்கி களத்தில் இறங்குவோம்.

பதிவு
மக்கள் அதிகாரக் கழகம்,
தூத்துக்குடி மாவட்டம்.
9385353605

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க