NH744 – தென்காசி நான்கு வழிச்சாலை : கார்ப்பரேட்டுகளுக்காக விவசாயிகளை அழிக்கும் திட்டம் !

ஒரு திட்ட மேலாளர் கூறுகையில், ”இது தூத்துக்குடி துறைமுகத்தையும் கொல்லம் துறைமுகத்தையும் இணைப்பதற்கானது.” என்றார். இப்போதுதான் நமக்கு பிடிபடுகிறது இது பாரத் மாலா, சாகர் மாலா ஆகிய திட்டங்களின் ஒரு பகுதியென்று.

ரும்பாடுபட்டு நிலத்தை திருத்தி நீர் பாய்ச்சி வேளாண்மை செய்து வைத்திருக்கும் உங்கள் விளைநிலத்தில், திடீரென ஒருநாள் தங்களை அரசாங்க அதிகாரிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள் வந்து, விளைந்து நிற்கும் பயிர்களுக்கு மத்தியில் சாலை அளவுகற்களை நட்டு வைத்து இந்த நிலத்தை நாங்கள் சாலை அமைக்க கையகப்படுத்துகிறோம் என்று சொன்னால் நீங்கள் என்ன செய்வீர்கள்? இது உங்கள் வாழ்வாதாரம் பறிக்கப்படும் செயல்தானே. இதற்கு எதிராக போராடுவதை தவிர உங்களுக்கு வேறு என்ன வழி இருக்கிறது? அது தான் தென்காசி மாவட்டத்தின் கடையநல்லூர், வாசுதேவநல்லூர் பகுதிகளை சேர்ந்த மக்களுக்கு நடந்திருக்கிறது. அவர்கள் தங்கள் விளைநிலங்களை காத்துக்கொள்ள போராடி வருகிறார்கள்.
தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டு திட்டத்தின்கீழ், மதுரை மாவட்டம் திருமங்கலம் முதல் தென்காசி மாவட்டம் செங்கோட்டை வரை சுமார் 147 கி.மீ தூரத்துக்கு NH 744 என்னும் பெயரில் நான்கு வழிச்சாலை அமைக்க 1,863 ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்த திட்டமிட்டிருப்பது குறித்த ஒரு பத்திரிகை செய்தி கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியானது அப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய வைத்தது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக ராஜபாளையம் அருகே உள்ள சத்திரப்பட்டியில் தொடங்கி செங்கோட்டை வரையிலான 69 கி.மீ தூரத்திற்கு நான்கு வழிச்சாலை அமைய உள்ளது.
அந்த பகுதி மக்களை எந்த வகையிலும் கலந்து ஆலோசிக்காமல் இப்படி ஒரு திட்டத்தை அவர்கள்மீது அரசாங்கம் திணிக்கத் துணிந்திருக்கிறது. இதனால் தங்கள் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படும் என்று அப்பகுதி மக்கள் உணர்ந்திருக்கின்றனர்.  இந்த நான்கு வழிச்சாலை திட்டத்தால் முப்போகம் விளையும் விவசாய நிலங்கள் 1700 ஏக்கர், 3 லட்சம் தென்னைகள், 200 திறந்தவெளி கிணறுகள், 500 ஆழ்துளை கிணறுகள், 200 வீடுகள் பாதிக்கப்படும். மேலும், இந்த சாலை தென்காசி மாவட்டத்தில் நுழையும்போது, 7 கண்மாய்கள், நாற்பதுக்கும் மேற்பட்ட நீரோடைகள், ஆயிரக்கணக்கான வாழை, எலுமிச்சை, காட்டு மரங்கள் அழிக்கப்படும் அபாயம் உள்ளது.
படிக்க :
எட்டு வழிச்சாலை : நிலத் திருட்டுக்குப் பெயர் வளர்ச்சி !
கவுத்தி – வேடியப்பன் மலை : கார்ப்பரேட் கொள்ளைக்கு எதிராகத் தொடரும் போராட்டம்!
இந்த சாலை நேராக பயணிக்காமல் குறுக்கும் நெடுக்குமாக விளைநிலங்களில் பயணிப்பது போன்று ஏன் திட்டமிடப்பட்டிருக்கிறது? என்று அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். ஏதோ உள்நோக்கத்துடன் இந்த சாலை போடப்பட உள்ளது என்பதை உணர்ந்து கொண்ட விவசாயிகள் தங்களது எதிர்ப்பை வெவ்வேறு விதங்களில் வெளிப்படுத்தினர்.  தங்கள் விளைநிலங்கள் பாதிக்காதவாரு சாலைக்கான மாற்றுப் பாதையின் வரைபடத்தையும் அவர்கள் சமர்பத்தினர்.
ஆனால், அரசாங்கம் அவர்களின் விளைநிலங்களின் வழியாக சாலை போடுவதில் உறுதியான இருந்ததால், இறுதியாக தங்கள் நிலங்களை காத்துக்கொள்ளும் பொருட்டு சாதி மத பேதமின்றி
NH 744 நன்செய் மீட்பு மற்றும் சாலை மாற்றமைப்பு சங்கம்” என்ற ஒரு அமைப்பை உருவாக்கி அதன்கீழ் போராட்டங்களை ஒருங்கிணைத்தனர். போராட்டங்களில் கலந்து கொள்ளும் பெரும்பாலானவர்கள் இந்த நிலங்களை மட்டுமே பிழைப்பாதாரமாக கொண்டவர்கள்.
இந்த சாலையால் தங்கள் விளைநிலங்கள் பாதிக்கப்படுவது குறித்து வாசுதேவநல்லூர் தொகுதியின் அப்போதைய சட்டமன்ற உறுப்பினர் மனோகரனை சந்தித்து முறையிட்டனர். அவர், “இது மத்திய அரசின் திட்டம் இதை எங்களால் எதிர்க்க முடியாது” என்று கூறிவிட்டார். அப்போதைய பாஜகவின் அடிமை அதிமுக ஆட்சியாளர்களால் அதற்குமேல் என்ன சொல்லிவிட முடியும்!! சாலை பற்றிய விவரங்களை அதிகாரிகளிடம் விவசாயிகள் கேட்டிருக்கின்றனர்.
முதலில் அதிகாரத் திமிரோடு தர  மறுத்திருக்கிறார்கள். பின்னர் வரைபடத்தை கொடுத்துள்ளார்கள். ஆனால், அரசியல் கட்சிகளை சேர்ந்த பிரமுகர்களுக்கு சாலை பயணிக்கும் வழித்தடம் முன்பே தெரிந்திருக்திறது. அதை பயன்படுத்தி சாலையின் வழித்தடத்தின் ஓரத்தில் இப்பொழுதே நிலங்கள் வாங்கி போட்டுவிட்டனர். சாலை வந்த பின்னர் அதை விற்று லாபம் பார்க்கவோ, சாலையோரத்தில் வணிக வளாகம் கட்டவோ இதை பயன்படுத்தி கொள்வார்கள் என்பது தெளிவு.
திருமங்கலம் முதல் செங்கோட்டை வரை செல்லும் பழைய பாதை பெரும்பாலும் பொது மக்கள் பயணிக்கவும் சுற்றுலா பயணிகள் பயணிக்கவும் பயன்படுவது. அதனால் ராஜபாளையம், திருவில்லிபுத்தூர், வாசுதேவநல்லூர், கடையநல்லூர், தென்காசி, குற்றாலம் போன்ற  முக்கிய நகரங்களோடு அது இணைந்திருப்பது அத்தியாவசியமானது. ஆனால், இந்த பழைய சாலையில் உள்ள போக்குவரத்து நெரிசலை சரி செய்யவே போடப்படுவதாக சொல்லப்படும் இந்த புதிய சாலை ராஜபாளையம், திருவில்லிபுத்தூர், வாசுதேவநல்லூர், கடையநல்லூர், தென்காசி போன்ற முக்கிய நகரங்களை இணைக்காமல் செல்கிறது.
சாலையை அகலப்படுத்துவதற்காக விளைநிலத்தில் நடப்பட்டிருக்கும் அளவுக்கல்
இந்த சாலை அமைவதில் பல்வேறு விதிமீறல்கள் இருப்பது அப்பட்டமாக தெரிகிறது. சுற்றுச்சூழல் அனுமதி வாங்குவதை தவிர்ப்பதற்காகவே இந்த சாலை, புதிய சாலை இல்லை, பழைய சாலையின் விரிவாக்கம்தான் என்று அப்பட்டமாக பொய் சொல்கிறார்கள் அதிகாரிகள். சிவகிரி முதல் உள்ளாறு வரை பயணிக்கும் இந்த NH 744 சாலைக்கும் நெல்லை வன உயிரின சரணாலயத்திற்கும் இடையே உள்ள தூரம் 6 கி.மீ எனவும், சாலை அமைப்பது தொடர்பாகவும் பாலம் கட்டுவது தொடர்பாகவும் எவ்விதமான அனுமதியும் வனத்துறையால் வழங்கப்படவில்லை எனவும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் வனத்துறை தெரிவித்துள்ளது. வன உயிரின சரணாலயத்திலிருந்து 10 கி.மீ சுற்றளவிற்குள் எந்தவித திட்டத்தையும் செயல்படுத்தக் கூடாது என விதிமுறை இருக்கும்போது இந்த சாலை வன உயிரின சரணாலயத்திலிருந்து 6 கி.மீ தூரத்தில் அமைக்கப்படுவது எப்படி? என்று 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு கொடுத்துள்ளனர்.
“வழக்கமாக நான்கு வழிச்சாலைகளுக்காக 27 முதல் 30 மீட்டர்கள் அகலத்திற்குதான் இடம் கையகப்படுத்துவது வழக்கம். ஆனால், 8 வழிச்சாலைக்குரிய 60 முதல் 63 மீட்டர்கள் அகலம் வரை கையகப்படுத்துகிறார்கள். சில இடங்களில் 140 மீட்டர்கள் அகலம் வரை கையகப்படுத்துகிறார்கள். இதை மக்கள் விபரீதமாக உணர்கிறார்கள். அதாவது நான்கு வழிச்சாலை என்று சொல்லிவிட்டு எட்டு வழிச்சாலைக்கு நிலம் எடுத்துள்ளார்கள் என்பதுதான் வேதனை” என்று நக்கீரன் பத்திரிகை செய்தி குறிப்பிடுகிறது.
தென்காசி மாவட்டத்தின் தலைநகரமான தென்காசியில் இருந்து திருநெல்வேலி வரை நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த NH-744 நான்கு வழிச்சாலை தென்காசி அருகில் கூட வரவில்லை. இதனால் அந்த நெல்லை முதல் தென்காசி நான்கு வழிச்சாலையையும் இந்த புதிய NH-744 சாலையையும் எப்படி இணைப்பீர்கள் என்று கேட்டால், அதற்கு தனி இணைப்புச் சாலை திட்டம் இருப்பதாக தெரிவிக்கின்றனர் அதிகாரிகள். எத்தனை கோடி ரூபாய் மக்கள் வரிப்பணம் எதற்காக இப்படி விரயம் செய்யப்படுகிறது? எல்லாம் கார்ப்பரேட் முதலாளிகளின் லாப நோக்கத்திற்காகதான்.
முதலில் திமுகவை சேர்ந்தவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். NH-744 நன்செய் மீட்பு மற்றும் சாலை மாற்றமைப்பு சங்கத்தின் தலைவர் மாடசாமியே ஒரு திமுக பிரமுகர்தான். இந்த  பாஜக அடிமை அதிமுக அரசு போய் திமுக ஆட்சி மலர்ந்தால் தமது நிலப்பிரச்சினை தீர்ந்துவிடும் என்று நம்பினார்கள்.
அந்நிலையில் 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வந்தபோது, தொகுதி வேட்பாளர் தனுஷ் குமார் “NH-744 நன்செய் மீட்பு மற்றும் சாலை மாற்றமைப்பு சங்கம்” ஏற்பாடு செய்த கூட்டத்தில் கலந்துகொண்டு இந்த நான்கு வழிச்சாலையை எதிர்ப்பதாக உறுதியளித்துள்ளார். இதனை நம்பி வடகரை, அச்சன்புதூர் ஆகிய பகுதிகளில் போராட்ட சங்கத்தினர் வீடுவீடாக சென்று தங்கள் நிலங்களை மீட்க திமுகவிற்கு வாக்களிக்கும்படி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கனிமொழி அவர்கள் பேசுகையில், “இந்த நான்கு வழிச்சாலை தனியார்களுக்கும் முதலாளிகளுக்கும் சாதகமாக அமைக்கப்படுகிறது. வேண்டுமென்றே விவசாய நிலங்கள் பாதிக்கும் வகையில் தனியாருக்கு ஆதரவாக சாலை அமைக்கப்படுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். கமிஷன் வந்தால் போதுமென்ற நிலையில் அனைத்து துறைகளும் செயல்பட்டு வருகின்றன” என்றார்.
எல்லாம் தேர்தல் நாடகத்திற்காகதான்.
இந்நிலையில் நிலம் கையகப்படுத்தும் பணி குறித்த ஆட்சேபனை மனு அளித்தவர்களிடம் விளக்கம் கேட்க வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், 150-ற்கும் மேற்பட்ட நில உரிமையாளர்கள் ஆட்சேபனை மனு அளித்துள்ள நிலையில் வெறும் 57 பேரை மட்டும் விசாரணைக்கு அழைத்திருந்தனர். இதனை சுட்டிக்காட்டி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.  அதாவது தங்கள் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள அதிகார வர்க்கம் எவ்வளவு கள்ளத்தனமாக நடந்துகொள்கிறது என்பதற்கான ஒரு எடுத்துக்காட்டுதான் இது‌.

 

சட்டமன்ற ஆட்சி மாற்றத்திற்கு பிறகு, போராட்ட சங்கத் தலைவர் மாடசாமி அவர்கள் தலைமையில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவை சந்தித்துப் சாலைப் பிரச்சினை தொடர்பாக மணு கொடுத்துள்ளனர். திருமங்கலம் முதல் கொல்லம் வரை தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக அமைக்க நிலமெடுப்பு செய்வதற்கு இந்திட்டத்தினை மாற்றுப்பாதையில் செயல்படுத்த போராட்டக் குழுவினர் கோரிக்கை வைத்திருந்த நிலையில், தமிழக பொதுப்பணித்துறை (கட்டிடங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள்) அமைச்சர்  போராட்டக் குழுவினரின் இந்த கோரிக்கையை ஆராய்வதற்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் தென்காசி பாராளுமன்ற உறுப்பினர், தென்காசி சட்டமன்ற உறுப்பினர், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தை சேர்ந்த இரண்டு பொறியாளர்கள் மற்றும் நெடுஞ்சாலை துறையை சேர்ந்த இரண்டு பொறியாளர்கள் ஆகியோர் அடங்கிய குழு அமைக்க உத்திரவிடப்பட்டிருந்தது.
இதனால் சாலை எப்படியும் மாற்றுப்பாதையில் சென்றுவிடும் என்று நம்பி விவசாயிகள் தங்கள் பிரச்சினை தீர்ந்துவிட்டதாக நினைத்து மகிழ்ந்திருந்திந்தனர். ஆனால், அவர்கள் மகிழ்ச்சி நிலைக்கவில்லை.
அந்த உத்தரவின் படி, 30/10/21 மற்றும் 06/11/21 ஆகிய நாட்களில் இந்த குழு தனது கூட்டங்களை நடத்தியது. அதில் திருமங்கலம் முதல் கொல்லம் வரை நான்கு வழிச்சாலை திட்டத்தின் சீரமைப்பு (Alignment) பற்றி விவாதிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் ஏற்கனவே வரையறுக்கப்பட்ட பாதையில் அதாவது முப்போகம் விளையும் விளைநிலங்கள் வழியாகவே சாலையை கட்டமைப்பது என்றும்; மேலும் புதிதாக கொடிக்குறிச்சியில் இருந்து தென்காசிக்கு இணைப்புச் சாலை அமைக்க தமிழக முதன்மை செயலாளர் மற்றும் நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறைக்கு பரிந்துரைத்துள்ளது இந்த குழு.
இந்த பரிந்துரையை ஏற்றுக்கொண்ட தமிழக முதன்மை செயலாளர் மற்றும் நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் வரையறுக்கப்பட்ட பாதையில் நான்கு வழிச்சாலை அமைக்கப்படவும் கொடிக்குறிச்சியில் இருந்து தென்காசிக்கு இணைப்புச் சாலை அமைக்கவும் ஒப்புதல் அளித்துள்ளது.
சில மாதங்கள் கழித்து, அமைச்சர் அமைத்த குழு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வரையறுத்த பாதை வழியாக சாலை போட முடிவெடுத்து விட்டதாக தகவல் வந்தது. இது பற்றி   விவசாயிகள் விசாரித்தபோது, குழுவில் இருந்த சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் இருவரும் இரண்டு கூட்டங்களில் ஒன்றில் கலந்து கொள்ளவில்லை என்பது தெரிய வருகிறது. ஏன் என்ற கேட்டால், “என்னை குழு கூட்டத்திற்கு போன் செய்து அழைத்தார்கள், நான் வரவில்லை என்று சொல்லிவிட்டேன்” என்று தெனாவெட்டாக பதில் சொல்லியுள்ளார். ஆட்சிக்கு வருவதற்கு முன்பு “நான் உங்களில் ஒருவன் எனக்கு ஓட்டுப்போடுங்கள்” என்று கெஞ்சுவதும், தேர்தலில் வெற்றி பெற்று பதவியை பார்த்த பின்பு இப்படி தங்களை நம்பிய மக்களுக்கு பச்சையாக துரோகம் செய்வதும் அரசியல்வாதிகள் இயல்புதான். இதற்கு திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு எந்த வகையிலும் விதிவிலக்குகள் அல்ல.
மேலும் அமைச்சர் எ.வ. வேலுவிடம் இதுபற்றி விவசாயிகள் கேட்டபோது, அவர், “அன்று முதல்வர் சொன்னார், அதனால் கூட்டம் நடத்தினோம். ஆனால் இன்று முதல்வர் ஒன்றும் சொல்லவில்லை. இது இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் திட்டம். என்னிடம் இதுபற்றி கட்சிக்காரர்கள் இப்படி கேட்டு வரவேண்டாம்” என்று கூறியுள்ளார்.
வயலில் இறங்கி போராட்டம் நடத்தும் விவசாயிகள்
NH-744 நன்செய் மீட்பு மற்றும் சாலை மாற்றமைப்பு சங்கத்தின் தலைவர் மாடசாமி ஒரு திமுக பிரமுகர். அவர் கனிமொழி அவர்களிடம் சென்று, “சாலை மத்திய அரசு கொண்டு வருகிறது. ஆனால் நிலம் கையகப்படுத்துவது மாநில அரசு (திமுக அரசு) தானே. நமது கட்சி நினைத்தால் ஏதாவது செய்ய முடியுமே” என்று கேட்டிருக்கிறார். அதற்கு கனிமொழி அவர்கள், “என்னிடம் இப்படியெல்லாம் கேட்டு வராதீர்கள்” என்று மிரட்டலும் எரிச்சலும் கலந்த தொணியில் கூறியுள்ளார்.
இப்படி திமுகவின் மக்கள் விரோத சந்தர்ப்பவாதம் மக்களின் உணர்வுகளை மூலதனமாக கொண்டு ஆட்சியை பிடித்துவிட்டு பின்பு முதலாளிகளுக்கு விசுவாசமாக இருப்பது ஒருபக்கம் என்றால், திமுக அரசின் பிடியில் இருக்கும் போலீஸ் துறையினரின் அடக்குமுறை இன்னொரு பக்கம் மக்களை வதைக்கிறது.
போலீஸின் அடக்குமுறை கடுமையாக இருக்கிறது. போஸ்டர் ஒட்டினால் கூட வழக்கு போடுகிறார்கள். போராடினால் பயங்கரவாதிகள் என்று சொல்லி மக்களிடமிருந்து தனிமைப்படுத்தி, தங்களையும் அச்சுறுத்துகிறார்கள் இந்த போலீஸ் துறையினர் என்று போராட்டக்காரர்கள் கூறுகின்றனர். அதிமுக அரசைவிட திமுக அரசு மிகமூர்க்கமாக நடந்து கொள்கிறது என்றார்கள் போராட்டக்காரர்கள். NH-744 நன்செய் மீட்பு மற்றும் சாலை மாற்றமைப்பு சங்கத்தின்கீழ் போராடிய விவசாயிகள்மீது அதிமுகவைவிட திமுக அதிக வழக்குகள் பதிந்திருக்கிறது.
சாலை போடுவதற்கு 21/03/21 அன்று நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. அதனால் 21/03/22-க்குள் நிலத்தை அளந்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். ஆனால், தங்கள் விளைநிலங்களை, தங்கள் வாழ்வாதாரத்தை காத்துக்கொள்ளும் பொருட்டு நிலத்தை அளக்கவிடாமல் விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். எல்லா வகையான போராட்ட முறைகளையும் கைகொள்கிறார்கள்.
திமுகவை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் என எவராயினும் அந்த பகுதியை கடந்து செல்லவிடாமல் மக்கள் போராட்டங்கள்மூலம் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். நிலத்தில் அளவுக்கல் நட்டவரும் அதிகாரிகளிடம் மக்கள் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். அதற்காக கைது செய்யப்படுகிறார்கள்.
தனது நிலத்தில் அளவுக்கல் பதிக்க வந்த அதிகாரிகளை எதிர்த்து அந்த நிலத்தில் படுத்து போராடிய விவசாயி ஒருவரையும் அவருக்கு ஆதரவாக வந்த ஐந்து பேரையும் போலீசார் கைது செய்தனர். ஏன் கைது என்று கேட்கப்போன மற்றவர்களையும் கைது செய்துள்ளனர்.
போராட்ட சங்கத்தினர் பல்வேறு அதிகாரிகளிடம் பேசிப் பார்த்தனர். பெரும்பாலானவர்கள் சரியாக பதில் சொல்லவில்லை. ஒரு திட்ட மேலாளர் (Project Manager) கூறுகையில், “இந்த திட்டம் உங்களுக்கானது அல்ல. இது மாநிலங்களுக்கு இடையிலான சாலை (Inter State Connectivity Road). தூத்துக்குடி துறைமுகத்தையும் கொல்லம் துறைமுகத்தையும் இணைப்பதற்கானது. நடுவில் இருக்கும் யாரையும் நாங்கள் பொருட்படுத்துவதில்லை” என்கிறார். இப்போதுதான் நமக்கு பிடிபடுகிறது இந்த சாலை பாரத் மாலா, சாகர் மாலா ஆகிய திட்டங்களின் ஒரு பகுதியென்று.
இந்திய அரசு ஒவ்வொரு மாநில விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களை இணைக்கும் வகையில் பாரத் மாலா என்னும் திட்டத்தின்கீழ் சாலைகளை அமைத்து வருகிறது. அதன்படி மதுரை – கொச்சி  விமான நிலையங்களை இணைக்கும் வகையில் நான்கு வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. மதுரை விமான நிலையம் முதல் திருமங்கலம் வரை ஏற்கனவே நான்கு வழிச்சாலை இருக்கிறது. தற்போது திருமங்கலம் முதல் புளியரை வரை நான்கு வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் கேரளாவின் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது புளியரை. அங்கிருந்து கொச்சி வரை பாதை விரிவுபடுத்தப்படுகிறது. தற்போது திருமங்கலம் முதல் சத்திரப்பட்டி வரை நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. அதை தொடர்ந்து சத்திரப்பட்டியில் இருந்து புளியரை பாதை அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கியுள்ளது” என்று குமுதம் ரிப்போர்ட்டர் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
2015-ம் ஆண்டில் சாகர் மாலா திட்டம் பாஜக அரசாங்கத்தால் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. இது இந்தியாவின் துறைமுகங்களை மிக நேர்த்தியாக இணைக்கவும் துறைமுகங்களை இயந்திரமயமாக்கவும், நவீனமயமாக்கவும் மிகப்பெரிய முதலீடுகளோடு தொடங்கப்பட்ட திட்டமாகும். இதன்படி திட்டம் அறிவிக்கப்பட்ட ஆண்டிலிருந்து ஐந்து அல்லது பத்து ஆண்டுகளுக்குள் ஐந்து லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என்று சொல்லப்படுகிறது. முக்கியமான துறைமுகங்களை ஒட்டி கடற்கரையோரங்களில் தொழிற்துறைகளை நிறுவுதல் மற்றும் 6 முக்கியமான துறைமுகங்களை கட்டுவதுதான் இதன் முக்கியமான இலக்காக வைக்கப்பட்டுள்ளது.
சாகர் மாலா திட்டம் கடல்வழி மற்றும் சாலைவழி கட்டுமானங்களை வளர்ப்பதன் மூலமாக பொருளாதார இலக்கை அடைய நிர்ணயிக்கப்பட்டது என்றால் பாரத் மாலா என்பது நாடு முழுவதும் சாலை இணைப்புகளை விரிவாக்குவது பற்றிய திட்டமாகும். பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு இந்த திட்டத்தை கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அங்கீகரித்தது. அதன்படி முதற்கட்டமாக இதற்காக ரூ.5.35 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டது‌. அதில் ரூ.20,000 கோடி துறைமுகங்களை சுற்றியுள்ள சாலைகளை மேம்படுத்த பயன்படுத்தப்படும்.  நாட்டின் 550 மாவட்டங்களை இணைக்கும் வகையில் சாலை கட்டுமானங்கள் இருக்கும். தற்போது உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் வெறும் 300 மாவட்டங்களை மட்டுமே இணைக்கிறது.
பாரத் மாலா திட்டத்தின் மூலமாக சாலைவழி சரக்கு போக்குவரத்தை தற்போதுள்ள 40 சதவீதத்தில் இருந்து 70 அல்லது 80 சதவீதமாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. சாகர் மாலா திட்டத்தின்கீழ் 2,100 கி.மீ கடற்கரை சாலைகள் அமைப்பது இந்திய துறைமுகங்களையும் வணிக – வர்த்தக மையங்களையும் இணைக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
படிக்க :
தாளவாடி வனப்பகுதி : பழங்குடி மக்களை அச்சுறுத்தும் புலிகள் காப்பகமும் – கார்ப்பரேட் நலனும் !
காட்டில் மாடு மேய்க்க மக்களுக்குத் தடை, நாட்டையே ஏய்க்க முதலாளிகளுக்கு தடை இல்லை !
இதன்மூலம் சாகர் மாலா மற்றும் பாரத் மாலா திட்டங்கள் தொழிற்துறை, வணிக – வர்த்தக மையங்களுக்கான துறைமுகங்களுக்கான சாலை வழித்தடங்களை விரிவுபடுத்தி பெருமுதலாளிகளின் லாபங்களை அதிகரிக்கதான் கொண்டுவரப்படுகிறது. இதற்காக மக்களின் வரிப்பணம் கொட்டிக்கொடுக்கப்படுகிறது. மேலும், இந்த சாலைகள் மற்றும் துறைமுகங்கள் கட்டுமான  திட்டங்களால் கடற்கரையோர மக்கள் மற்றும் விவசாயம் சார்ந்து வாழும் மக்கள் தங்கள் நிலங்களையும் வாழ்விடங்களையும் வாழ்வாதாரங்களையும் இழக்க நேரிடுகிறது.
சென்ற அடிமை அதிமுக ஆட்சியில், வரைமுறையின்றி மாவட்டங்கள் பிரிக்கப்பட்டது. இது போன்ற பாரத் மாலா திட்டத்தின்கீழ் சாலைகளை அமைப்பதற்கும், அதன்மூலம் பெருமுதலாளிகளின் லாபங்களை பெருக்கிக் கொள்ளவும்,  மேலும் சுங்கக் கட்டணம் என்ற பெயரில் மக்கள் பணத்தை கொள்ளை அடிப்பதற்கும்தான்.
இப்படி உள்நாட்டு, பன்னாட்டு முதலாளிகளுக்கு லாபத்தை உறுதி செய்ய உள்ளூர் மக்களின் வாழ்வாதாரம் காவு கொடுக்கப்படுவதும், அவர்கள் திட்டத்தை மக்கள்மீது திணிக்க எந்தவகையான அதிகார அத்துமீறல்களும், சதிகளும், அரசியல் உள்ளடிகளும் செய்ய தயாராக இருக்கின்றனர் என்றும், அவர்களின் அடக்குமுறைகள் மையப்படுத்தப்பட்ட அளவில் உள்ளாட்டு, பன்னாட்டு முதலாளிகளின் மூலதனத்திற்கு சேவை செய்வதாக இருக்கிறது என்றும், NH 744 நன்செய் மீட்பு மற்றும் சாலை மாற்றமைப்பு சங்கத்தினர் புரிந்துகொள்ள வேண்டும்.
இது அவர்கள் பகுதியில் மட்டும் நடக்கும் தனித்த நிகழ்வு அல்ல. தென்காசி, திருவண்ணாமலை, பாலியப்பட்டு என மூலதனத்தின் கைகள் நாடு முழுவதும் பல்வேறு பகுதி மக்களின் வாழ்வாதாரங்களை சூறையாடி வருகிறது. இதனை புரிந்து கொண்டு ஒருங்கிணைந்த போராட்டத்தை கட்டியமைக்க வேண்டிய கடமை நம்முன் உள்ளது.
மக்கள் அதிகாரம்,
நெல்லை மண்டலம்