“இனிமேல் தமிழ்நாட்டுக்குள் காடுகள் என்று அரசால் அறிவிக்கப்பட்டுள்ள எந்தப் பகுதிகளிலும் கால்நடைகள் மேய்க்க அனுமதிக்க கூடாது” என கடந்த மார்ச் 4-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
வைகை தோன்றும் இடமான மேக மலையில் மாடுகள் தொடர்ந்து மேய்வதால், நீர்ப்பிடிப்பு பகுதியில் சேதம் ஏற்பட்டு ஆற்றில் வரவேண்டிய நீர் குறையும் என்றும்; வனத்துறை அதிகாரிகள் அதிக அளவில் மேய்ச்சல் அனுமதி சீட்டுகளை வழங்கி, காடுகளில் மாடுகளை மேய்க்க உதவுகிறார்கள் என்றும்; இத்தகைய அனுமதி மேகமலை வனப்பகுதியை சீரழித்து இறுதியில் ஐந்து மாவட்டங்களுக்கு வரவேண்டிய தண்ணீரை வராமல் தடுத்துவிடும் என்றும்; இதனால், பாரம்பரியமாக இருந்துவரும் மாடுமேய்க்கும் வழக்கத்தை நிறுத்த ஆணையிடும்படி திருமுருகன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கில்தான் மேற்கண்ட தீர்ப்பை நீதிபதிகள் வழங்கி இருக்கின்றனர்.
இந்தத்தீர்ப்பால் பாதிக்கப்படப்போவது யார்? பலனடையப்போவது யார்? மாடுகள் மேய்ச்சலை நிறுத்திவிட்டால் வைகையில் தண்ணீர் வளம் பாதிக்காமல் இருக்கும் என்று யாராவது உறுதி கூறமுடியுமா? சரி, ஒருவர் ஒரு பிரச்சினை தொடர்பாக வழக்கு தொடுக்கிறார் என்றால், அவ்வழக்கில் எதிர் மனுதாரர்களின் கருத்து என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டுமா இல்லையா? அப்படி எவ்வித அவசியமும் நீதிமன்றத்துக்கு இல்லாமல் போய்விட்டது.
000
மேக மலைப் பகுதியில், வேளாண்மைக்கு அடுத்தபடியாக பெருவாரியானவர்கள் செய்துவரும் தொழில் மேய்ச்சல்தொழில். ஏற்கெனவே, மாடு மேய்க்க அனுமதி கேட்பவர்களிடம் வனத்துறையினர் செய்யும் இடையூறுகள் மற்றும் வழக்குகள், அபராதங்கள் என பலவித கெடுபிடிகள்.
படிக்க :
♦ மாட்டு கொட்டகையாக மாறிய அரசு பள்ளிக்கூடம் : ஆதித்யநாத் ஆட்சியின் சாதனை !
♦ அதானியின் வளர்ச்சிக்கு பழவேற்காடு பலிகிடா !
வைகை ஆற்றில் தண்ணீர் வரத்துக் குறைவதற்கு முதல் காரணம் நீர்ப்பாசனத் துறையின் தவறான நிர்வாகம். மேலும் வைகை அணைக்கு மேல் உள்ள ஆற்றின் இரு மருங்கிலும் நடக்கும் அதீதமான தண்ணீர் திருட்டு; தண்ணீரை தொடர்பில்லாத பகுதிகளுக்கு மடை மாற்றம்செய்யும் பாசனத்துறையின் முறையற்ற செயல்கள் என பல முக்கிய காரணங்கள் உண்டு.
தண்ணீர் திருட்டு தொடர்பாக, தேனி மாவட்ட ஆட்சியர் மற்றும் நீர்ப்பாசனத் துறையினர் தொகுத்த அறிக்கை கடந்த ஆண்டு வெளியானது. அதில், ஆற்று நீர் வைகை அணைக்கு வந்துசேரும் முன்பே நூற்றுக்கணக்கான பம்புகளை வைத்து, நீரை பல மைல் தூரம் கடத்திச்சென்று முறையற்ற பாசனத்தில் ஈடுபடுவதுதான் தண்ணீர் குறைவுக்கு காரணம் என்பது தெளிவாக்கப்பட்டது. இதையெல்லாம் கண்கொள்ளாத உயர்நீதிமன்றம் பாமர மக்கள் என்றவுடன் கண்ணை மூடிக்கொண்டு நியாயம் வழங்குகிறது.
நீதிமன்றம் தன்னுடைய தீர்ப்புக்கு ஆதாரமாக மேகமலை ஒரு பல்லுயிர் காப்பு பகுதி, பாதுகாக்கப்பட்ட பகுதி, அணில்களும் புலிகளும் வாழும் பகுதி; எனவே மாடுகளை உள்ளே விடக்கூடாது என்று கூறியுள்ளது.
மேலும் இந்த வழக்குக்காக நீதிமன்றத்திற்கு உதவி செய்ய நியமிக்கப்பட்ட உயிரியல் பேராசிரியர் தனது அறிக்கையில், மேகமலைக் காடுகள் ஒரு சரணாலயப் பகுதி என்பதால் அங்கு வாழும் விலங்குகளுக்கு மலைமாடுகள் போன்ற வளர்ப்புக் கால்நடைகளைத் தாக்கும் கோமாரி போன்ற நோய்கள் பரவக்கூடும்; மாடுகள் எழுப்பும் இரைச்சல் ஒலிகள் காட்டு விலங்குகளை துன்புறுத்தும்; எனவே மாடுகளை மேய்க்க அனுமதிக்கக் கூடாது என்று கூறியுள்ளார்.
மேகமலை பல நூறு ஆண்டுகளாக விலங்குகள் சரணாலயம் என்பது போலவும், திடீரென்று சிலர் மாடுகளை மேய்ப்பது போலவும் அதனால் வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பது போலவும் கூறுவதெல்லாம் முழுப்பூசணிக்காயை சோற்றுக்குள் மறைத்த கதைதான்.
000
1947-க்கு முன்பு வரை மேகமலை, கண்டமனூர் ஜமீனுக்கு உட்பட்ட நிலப் பகுதியாகவே இருந்து வந்தது. இங்கு தனியாருக்கு சொந்தமான பல தேயிலை தோட்டங்கள், தனியார் சுற்றுலா விடுதிகள், செல்வந்தர்களுக்குரிய சொத்துகள் பல உள்ளன.
