28.06.2023

ஆகம விதிகளில் தேர்ச்சி பெற்றவர்களை கோயில்களில் அர்ச்சகர்களாக நியமிக்க
சாதி தடை இல்லை என்கிற சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை வரவேற்போம்!

பத்திரிகை செய்தி

சேலம் சுகனேஸ்வரர் கோயிலில் காலியாக உள்ள அர்ச்சகர் பணியிடத்தை நிரப்ப கோயில் அறநிலையத்துறை அலுவலர் கடந்த 2018-இல் வெளியிட்ட அறிவிப்பாணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் ஆகம விதிகளில் தேர்ச்சி பெற்றவர்களை அர்ச்சகர்களாக நியமிக்க சாதி தடை இல்லை என்ற தீர்ப்பை கடந்த 26 ஆம் தேதி வழங்கியுள்ளது.

கருவறை தீண்டாமைக்கு எதிரான நீண்ட போராட்டத்தில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் வழங்கியுள்ள இத்தீர்ப்பு வரவேற்க வேண்டிய ஒன்று. கருவறை தீண்டாமைக்கு எதிராக 1970-இல் பெரியார் கருவறை நுழைவுப் போராட்டத்தை அறிவித்தார். அன்று ஆட்சியில் இருந்த திமுக அரசு சட்டப்படியே இதை நிறைவேற்றுவோம் என்ற அளித்த வாக்குறுதியால் பெரியார் போராட்டத்தை நிறுத்தி வைத்தார். 1971-இல் தமிழக அரசு சட்டம் இயற்றினாலும் பார்ப்பனர்கள் தங்களது செல்வாக்கு ஆதிக்கத்தை பயன்படுத்தி மரபு பழக்கவழக்கத்தை மீறக்கூடாது என்ற காரணத்தை முன்வைத்து உச்ச நீதிமன்றத்தின் மூலம் தடை பெற்றனர்.

2002-இல் ஈழவர் சாதியை சேர்ந்த ஒருவர்  கேரளாவில் அர்ச்சகராக நியமிக்கப்பட்டதை எதிர்த்த வழக்கில் மரபு, பழக்க வழக்கத்தின் படி பார்ப்பனர்கள் மட்டுமே அர்ச்சகராக முடியும் என்பதை ஏற்க முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

2002-இல் வழங்கப்பட்ட இந்த உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அர்ச்சகர் பணி நியமனத்தில் மரபு, பழக்க வழக்கம் என்பதை ஒழிக்கும்  வகையில்  2006 ல் தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்திற்கு 1972 -இல் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தடையானை பெற்றனர்.


படிக்க: அனைத்து சாதி அர்ச்சகர் தீர்ப்பைக் கண்டித்து ஆர்ப்பாட்டங்கள்


அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என 2006-இல் கொண்டுவரப்பட்ட தமிழக அரசின் அரசாணையின் மூலம் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி துவங்கப்பட்டு 206 மாணவர்கள் தங்களது பயிற்சியை முடித்தனர். ஆனாலும் உடனடியாக சான்றிதழ்கள் வழங்கப்படவில்லை பணியமர்த்தப்படவில்லை ஒவ்வொரு கட்டத்திலும் போராட வேண்டிய நிலைமை.

பெரியார் அறிவித்த கருவறை நுழைவுப் போராட்டத்தை 1993-இல் வெற்றிகரமாக நடத்தியது மக்கள் கலை இலக்கிய கழகம். இப்போராட்டத்தில் பார்ப்பனரல்லாதவர்களும் தாழ்த்தப்பட்டோரும் பெரியார் அம்பேத்கர் படங்களுடன் ஸ்ரீரங்கம் கோயில் கருவறைக்குள் நுழைந்தனர். கருவறை தீண்டாமையும் பார்ப்பன ஆதிக்கத்தை தக்க வைப்பதற்காக ஆர்.எஸ்.எஸ்- பி.ஜே.பி கும்பலால் போலியாக முன்வைக்கப்பட்ட இந்து ஒற்றுமையும் அம்பலப்படுத்தப்பட்டது.

அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள்  அர்ச்சகர்களாக பணியமர்த்தப்பட்டதும் பல்வேறு கட்ட போராட்டங்களுக்குப் பிறகே நடந்தது.

ஆனாலும் அச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்களை திருச்சி ஸ்ரீரங்கம் மதுரை மீனாட்சி அம்மன் போன்ற முக்கியமான கோயில்களில் அர்ச்சகராக்க முடியவில்லை என்பது ஒரு புறம், மறுபுறம் கடந்த மார்ச் மாதம் வயலூர் முருகன் கோவிலில் பார்ப்பனர் அல்லாத பயிற்சி பெற்ற மாணவர்கள் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டதை எதிர்த்த வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வழங்கிய தீர்ப்பில் “ஆகம விதிப்படி இவர்கள் நியமிக்கப்படவில்லை. பரம்பரையாக உள்ளவர்களையே அர்ச்சகர்களாக நியமிப்பது பற்றி எட்டு வாரத்தில் பரிசீலித்து அரசு பதில் அளிக்க வேண்டும்” என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது பார்ப்பன ஆதிக்கத்திற்கும் காவி கார்ப்பரேட் பாசிச  கும்பலுக்கும் ஆதரவான தீர்ப்பு.


படிக்க: அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவோம்! மதுரையில் உண்ணாவிரதம்!!


இந்த நிலைமையில் தான் சேலம் சுகனேஸ்வரர் கோவில் தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் வரவேற்புக்குரிய தீர்ப்பை வழங்கியுள்ளது. தனது தீர்ப்பில் “ஆகம விதிகளில் தேர்ச்சி பெற்ற தகுதியான நபர்களை குறிப்பிட்ட ஆகம விதிகளை பின்பற்றும் கோயில்களில் அர்ச்சகர்களாக நியமிக்கலாம். அதற்கு எந்த ஒரு சாதியும் தடையாக இருக்காது.அதாவது ஆகம விதிகளை பூர்த்தி செய்யக்கூடிய தகுதியான நபர்களை அர்ச்சகராக நியமிக்கும் போது பரம்பரை, பரம்பரையாக குறிப்பிட்ட சாதியினரை மட்டும்தான் அர்ச்சகராக நியமிக்க முடியும் என உரிமை கோர முடியாது” என கூறியுள்ளது. இத்தீர்ப்பிலும் ஆகம விதிகளை கடைபிடிக்கும் கோயில்களில்  தலைமை அர்ச்சகர்கள் அளிக்கும் தகுதிச் சான்றின் அடிப்படையில்  தகுதியான நபர்களை அர்ச்சகர்களாக நியமிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

அர்ச்சகர் பயிற்சி பள்ளியின் சான்றிதழ் இருக்கும்போது  தலைமை அர்ச்சகர்களின் தகுதிச் சான்று எதற்கு? இதனையும் முறியடிக்க வேண்டியுள்ளது.

இந்து ஒற்றுமை பேசி பார்ப்பன ஆதிக்கத்தை நிலை நிறுத்த துடிக்கும் காவி பாசிச கும்பலுக்கு எதிரான போராட்டத்தில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவதற்கான போராட்டமும் முக்கியமானது.

இதற்கான போராட்டத்திற்கும், தமிழகத்தை சுற்றி வளைத்து கைப்பற்ற துடிக்கும் காவி கார்ப்பரேட் பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தில் பார்ப்பன ஆதிக்கத்திற்கு எதிராகவும் ஜனநாயகத்திற்காகவும் போராடக்கூடிய அனைவரும் ஒருங்கிணைவோம்!

அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆக்கி கருவறை தீண்டாமைக்கு முடிவு கட்டுவோம்!
அனைத்து முனைகளிலும் காவி கார்ப்பரேட் பாசிசத்தை முறியடித்து முன்னேறுவோம்!

மாநில ஒருங்கிணைப்புக் குழு,
மக்கள் கலை இலக்கிய கழகம்,
தமிழ்நாடு – 9791653200

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க