1990 களின் பிற்பகுதியிலிருந்து இருந்து உலகமயம், தாராளமயம், தனியார்மயம் எனும் கொள்கைகளின் விளைவாக இந்தியாவில் தொழில் வளர்ந்த மாநிலங்களில் உள்ள பெரு நகரங்களான பெங்களூரு, சென்னை, டெல்லி, மும்பை, பூனே, ஹைதராபாத் ஆகியவற்றில் தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை வாய்ப்புகள் அதுவரையில் யாரும் எதிர்பார்த்திருக்காத அளவில் பெருகின.
குறிப்பாக படித்த இளைஞர்களுக்கு படிப்பை முடிக்கும் முன்னரே வேலைகள் உறுதி செய்யப்படும் நிலை இருந்தது. பொறியியல் கல்லூரிகளில் பட்டப்படிப்பு, பாலிடெக்னிக் கல்லூரிகளில் பட்டயப் படிப்பு, கலை அறிவியல் கல்லூரிகளில் கணினி அறிவியல் சார்ந்த எம்சிஏ(MCA), விஸ்காம்(VISCOM) போன்ற பல வகைப் படிப்புகளுக்கு படித்து முடித்தவுடன் வேலை என்பதற்கு ஓரளவுக்கு உத்தரவாதம் இருந்தது.
ஆனால், அந்த நிலை நீங்கி ஆண்டுகள் ஆகிவிட்டன என்பது நம் கவனத்தைக் கோருகிறது. அன்றைக்கு தேடித்தேடி வேலைக்கு ஆள் எடுத்த, இந்தியாவின் பெரும் அடையாளங்களாக கருதப்பட்ட டிசிஎஸ், இன்போசிஸ், டெக் மகேந்திரா, விப்ரோ போன்ற எண்ணற்ற நிறுவனங்கள் இன்று இருக்கின்ற ஊழியர்களை ஆட்குறைப்பு செய்து வெளியேற்றி வருகின்றன.
இந்தியப் பெரு நிறுவனங்கள் மட்டுமல்ல இந்தத் தகவல் தொழில்நுட்பம் மற்றும் கணினி அறிவியல் சார்ந்த உலகளாவிய மாபெரும் (Giant) நிறுவனங்கள் என்று அறியப்படும் அமெரிக்க ஐரோப்பிய ஜப்பானிய நிறுவனங்களிலும் நிலைமை இதுவே. அதாவது மைக்ரோசாப்ட், கூகுள், முகநூல், அமேசான், ஆப்பிள், மெட்டா (Meta) இன்டெல், ஐபிஎம், எஸ்ஏபி (SAP), சோனி, தோஷிபா போன்ற உலகறிந்த நிறுவனங்கள் அனைத்திலும் நிலைமை இதுவே.
படிக்க: கார்ப்பரேட் சுரண்டலுக்கு எதிரான சாம்சங் தொழிலாளர்களின் மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டம் வெல்லட்டும்!
வளர்ந்த நாடுகளில் உள்ளதைப் போலவே இந்தியா போன்ற வளரும் நாடுகளிலும் தகவல் தொழில்நுட்பத் துறை சார்ந்து பல ஆயிரம் சிறு குறு தகவல் நிறுவனங்கள் தோன்றின. அவை படித்த தகுதி பெற்ற பல லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்தன. ஆனால் தனியார்மயம் உலகமயம் என்ற ஏகாதிபத்தியங்களின் மறுகாலனியாக்க கொள்கைகளின் அடிப்படையில் அந்த சிறு குறு நிறுவனங்களையெல்லாம் விழுங்கிவிட்டுத்தான் பெரும் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் நிலை நிறுத்தப்பட்டன. கார்ப்பரேட் நிறுவனம் ஒவ்வொன்றிலும் பல லட்சம் ஊழியர்களுக்கு வேலை என்ற நிலைமையை தோற்றுவித்தன.
ஆனால் இன்று புதிய இளைஞர்களுக்கு வேலை இல்லை என்பது மட்டுமல்ல திரும்பிய பக்கம் எல்லாம் வேலை பறிப்பு, ஆட்குறைப்பு, வெளியேற்றம் (lay offs) என்பதே நிலைமை என்றாகி இருக்கிறது.
உலக அளவில் வேலை வாய்ப்பு நிலைமைகளை பற்றிய புள்ளி விவரங்களை சேகரித்து வெளியிடுகின்ற லே ஆப்ஸ் ( layoffs.fyi ) என்கிற இணையதளம் இந்த ஆகஸ்ட் மாதத்தில் அதிர்ச்சியூட்டும் விவரங்களை வெளியிட்டிருக்கிறது. அந்த இணையத்தின் செய்திகளை அடிப்படையாகக் கொண்டு நம் நாட்டின் பிசினஸ் ஸ்டாண்டர்ட், ஹிந்துஸ்தான் டைம்ஸ், டைம்ஸ் ஆப் இந்தியா போன்ற பத்திரிகைகளும் தங்கள் கட்டுரைகளில் இந்த விபரங்களை வெளியிட்டிருக்கின்றன.
2024 ஆம் ஆண்டில் கடந்த ஜூன் மாதம் வரையிலான 6 மாதத்தில் மட்டும், உலக அளவில் ஐ.டி துறையில் முக்கிய நிறுவனங்களாக பேசப்படுகின்ற 333 நிறுவனங்களில் மட்டும் 98,834 ஊழியர்கள் வேலையில் இருந்து வெளியேற்றப்பட்டிருக்கின்றனர். ஆறு மாதத்தில் ஒரு லட்சம் பேர் வேலை நீக்கம் என்கிற இந்த எண்ணிக்கை தான் எவருக்கும் அச்சமூட்டுவதாக இருக்கிறது. இவற்றில் பெரும்பாலானவை கூகுள், மைக்ரோசாப்ட், ஐபிஎம், இன்டெல், அமேசான், முகநூல் போன்ற முக்கிய அமெரிக்க நிறுவனங்களாகும்.
அதேபோல் இந்திய நிறுவனங்களான டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ, டெக் மகிந்திரா போன்ற பிரபலமாக அறியப்பட்ட 39 நிறுவனங்களிலிருந்து கடந்த மே மாதத்தில் மட்டும் 9742 பேர் வெளியேற்றப்பட்டிருக்கின்றனர். அதேபோல் கடந்த ஆண்டு 2023 சற்றேறக்குறைய 20,000 பேஃப்ர் வெளியேற்றப்பட்டிருக்கின்றனர் என்பதை ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டிருக்கிறது. உண்மையில் இந்த எண்ணிக்கைகள் இன்னும் கூடுதலாக இருக்கக்கூடும் என்கிற சந்தேகத்தையும் முன் வைத்திருக்கின்றது. இந்த விவரங்களுடன் இதே சந்தேகத்தையே முன் வைத்திருக்கிறது ஐ.டி. ஊழியர்களுக்கான தொழிற்சங்கம் (All India IT & ITeS Employees’ Union).
படிக்க: கர்நாடகா: 14 மணிநேர வேலை சட்டத்துக்கு எதிராக ஐ.டி. ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் 1900 ஊழியர்கள் மற்றும் கூகுள் நிறுவனத்தில் முக்கியமானவர்கள் என்ற தகுதியில் உள்ள (core group) 200 ஊழியர்கள் வெளியேற்றப்பட்டிருப்பதை முக்கிய தகவலாக கோடிட்டு காட்டுகின்றது சிஎன்பிசி (CNBC) செய்தி ஊடகத்தின் அறிக்கை.
கூகுள், ஆப்பிள், அமேசான், மைக்ரோசாப்ட், முகநூல், இன்டெல், ஐபிஎம், எஸ்ஏபி, போன்ற பல பிரபல நிறுவனங்களும் கடந்த 12 முதல் 18 மாதங்களாகவே தொடர்ந்து ஊழியர்களை வெளியேற்றிக் கொண்டிருக்கின்றன. சென்ற ஆண்டில் ஆட்குறைப்பு செய்யாத ட்விட்டர், நெட் பிளிக்ஸ், டெஸ்லா போன்றவையும் 2024 ஆம் ஆண்டில் எண்ணிக்கை வெளியிடாமல் ஆட்குறைப்பு செய்திருக்கின்றன என்பது கவனிக்கத்தக்கதாகும்.
இவ்வகையில் இன்டெல் நிறுவனத்தில் 15 சதவிகிதம் பேரும், ஜப்பானின் சோனி நிறுவனத்தில் 8 சதவிகிதம் பேரும், ஆல்பாபெட் (Alphabet) நிறுவனத்தில் 6 சதவிகிதம் பேரும், வேலை தேடித் தரும் இணையதளமான இன்டீட் (Indeed) நிறுவனத்தில் 8 சதவிகிதம் பேரும் இவ்வாறு வெளியேற்றப்பட்டிருக்கின்றனர். மேலும் ஈ பே (eBay) நிறுவனம் 1000 பேரையும் ஸ்பாட்டிஃபை (Spotify) நிறுவனம் 1500 பேரையும் வெளியேற்றியுள்ளன. அதேபோல் பின்லாந்தின் நோக்கியா நிறுவனம் சில உற்பத்தி பிரிவுகளையே மூடிவிட்டதன் மூலம் 14,000 பேரை வெளியேற்றியுள்ளது.
இந்தியாவைப் பொறுத்த அளவில் பெரும்பான்மையான ஐடி நிறுவனங்கள் பெங்களூருவில் இயங்கி வருகின்றன. அவற்றில் 50க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் எதில் எத்தனை ஊழியர்கள் வெளியேற்றப்பட்டிருக்கின்றனர் என்பதை இந்த இணையதளம் தனது அறிக்கையில் பெயர் பட்டியலுடன் வெளியிட்டிருக்கிறது. சென்னையிலுள்ள சில நிறுவனங்களும் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
இவை தவிர இந்தியாவில் சில்லறை வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் ஃப்லிப்கார்ட் மற்றும் உணவு விநியோக நிறுவனமான ஸ்விக்கி (swiggy), கல்வித்துறை சார்ந்த பைஜூஸ் ஆகியவையும், ஓலா மற்றும் ஊபர் நிறுவனங்களும் பெரிய அளவில் ஆட்குறைப்பு செய்திருக்கின்றன.
இந்த ஆட்குறைப்பு நடவடிக்கைகளுக்கு எந்த நிறுவனமும் காரணம் எதையும் சொல்வதில்லை. பொருளாதாரத்தில் நிலையற்ற தன்மை நிலவுவதால் அவ்வாறு செய்ய நேரிடுகிறது என்று பொதுவில் கூறுகின்றன. மேலும் ஊழியர் எண்ணிக்கையை உற்பத்தியின் தேவைக்கேற்ப கச்சிதப்படுத்தி வைத்துக் கொள்வதாகவும் அதன் மூலம் நிறுவனத்தின் உற்பத்தி திறனை மேம்படுத்திக் கொள்வதாகவும் கூறுகின்றன.
இவ்வெளியேற்றங்கள் உயர்நிலை நிர்வாகத்திலும் அறிவுத்துறை சார்ந்த ஆய்வு மற்றும் மேம்பாட்டு துறைகளிலும் (Research and Development) நடக்கின்றன. இவை அந்நிறுவனங்களின் எதிர்கால வளர்ச்சி குறித்த அவற்றின் நம்பிக்கையின்மையை வெளிப்படுத்துகின்றன. மேலும் அனைத்து துறைகளிலும் உள்ள கீழ்நிலை ஊழியர்கள் பெரிய எண்ணிக்கையில் வெளியேற்றப்படுகின்றனர்.
கர்நாடக அரசு ஐடி துறை ஊழியர்களுக்கு 14 மணி நேர வேலை நேர சட்டத்தை கொண்டுவர இருப்பதை இதனோடு இணைத்துப் பார்க்க வேண்டும். ‘தேவையற்ற’ ஊழியர்களை வெளியேற்றிவிட்டு இருப்பவர்களை இறுக்கிப்பிழிவது தான் கார்ப்பரேட் நிறுவனங்களின் நோக்கம் என்பது தெளிவாக தெரிகிறது.
மொத்தத்தில் உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டிருக்கும் மந்த நிலையின் காரணமாக தற்காப்பு நிலையிலிருந்து இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேற்குறிப்பிட்ட இவையாவும் பொருளாதார மேம்பாட்டுக்கும் உற்பத்திப் பெருக்கத்திற்கும் முக்கிய சேவை துறையாக விளங்கும் தகவல் தொழில்நுட்பத் துறையில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் மட்டுமே ஆகும்.
ஆட்குறைப்பு நடவடிக்கைகள் என்பது எப்போதுமே சேவை துறையில் மட்டும் தனித்து நடப்பதில்லை. எனவே உற்பத்தி துறையிலும் இத்தகைய ஆட்குறைப்புகள் நடந்து வருவதை நாம் உணர்ந்து கொள்ள முடியும்.
எனில் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கைகள் உலகமய தனியார்மய தாராளமய ஏகாதிபத்திய உற்பத்தி முறை, பாதாளத்தை நோக்கி சரிந்து கொண்டிருக்கிறது என்ற உண்மையை நமக்கு உணர்த்துகிறது. இளைஞர்களின் எதிர்காலம் தான் என்ன என்கிற கேள்வி பூதாகரமானதாக எழுகின்றது. இக்கேள்வி இளைஞர்களின் சிந்தனையைப் பற்றிக் கொண்டால் அதுவே மாற்றங்களுக்கு வழிவகுக்கக் கூடும்.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube