கர்நாடகா: 14 மணிநேர வேலை சட்டத்துக்கு எதிராக ஐ.டி. ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பா.ஜ.க-வின் பாசிசத்தை எதிர்ப்பதாகக் கூறிக்கொண்டு பா.ஜ.க-வின் கார்ப்பரேட் சேவையை தானும் தொடர்கிறது காங்கிரஸ். கார்ப்பரேட்டுகளின் நலனுக்காக பெரும்பான்மை தொழிலாளர்களை சுரண்டலுக்கு தள்ளும் மக்கள்விரோதச் சட்டத்திருத்தத்தை அமல்படுத்த துடிக்கிறது.

ர்நாடக மாநில காங்கிரஸ் அரசாங்கம் தொழிலாளர்களின் வேலை நேரத்தை 14 மணி நேரமாக உயர்த்தும் வகையில், “கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் சட்டம் 1961”-இல் (Karnataka Shops and Commercial Establishments Act) திருத்தம் செய்வதற்கான முன்மொழிவை கொண்டுவந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூருவில் தகவல் தொழில்நுட்பத்துறை (IT-Information Technology) சார்ந்த ஊழியர்கள் ஆகஸ்ட் 4-ஆம் தேதி அன்று சுதந்திரப் பூங்காவில் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். தகவல் தொழில்நுட்பத்துறை சார்ந்த ஊழியர்களின் சங்கமான கே.ஐ.டி.யூ. (Karnataka state IT/ITeS Employee’s Union) நடத்திய இந்த ஆர்ப்பாட்டத்தில் 800-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

சங்கத்தின் பொதுச்செயலாளர் சுகாஷ் அடிகா மற்றும் செயலர் நிதியங்கா கூறுகையில், அதிகபட்சமாக 12 மணி நேரம் அதாவது 10 மணி நேர வேலையுடன் இரண்டு மணி நேர கூடுதல் பணி (Over Time) என்று இருந்ததை 14 மணி நேரம் என்று மாற்றுவது தொழிலாளர்கள் மீது தொடுக்கப்படும் பெரிய தாக்குதலாகும்; 14 மணி நேரம் என்று அவர்கள் கூறுவது உண்மையில் இருக்கின்ற நேர வரம்பை நீக்குவதே ஆகும்; இதன்மூலம் இப்போது பரவலாக நடைமுறையில் இருக்கும் மூன்று சுற்று (Three shift) பணி முறை ஒழிக்கப்பட்டு ஒரு நாளைக்கு இரண்டு சுற்று (Two shift) பணி என்கிற நிலை உருவாக்கப்படும்; இதுதான் இச்சட்டத் திருத்தத்தின் முதன்மையான நோக்கமாகும்; இதனால் தொழிலாளர்கள் கடுமையான சுரண்டலுக்கு உட்படுவர்; ஏற்கெனவே ஊழியர்கள் பெரும்பாலானோருக்கு இருந்து வருகின்ற மன உளைச்சல் மன அழுத்தம் போன்ற நோய்கள் மேலும் அதிகமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது மறுக்க முடியாததாகும்; அத்துடன் இரண்டு சுற்று முறை நடைமுறைக்கு வந்தால் கணிசமான பேருக்கு ஏறக்குறைய 30 சதவிகித பேருக்கு வேலை பறிபோகும் அபாயம் இருக்கிறது என்கின்றனர்.

மேலும், இவ்வாறு ஆட்குறைப்பு செய்துவிட்டு இருக்கின்ற ஊழியர்களை பிழிந்தெடுப்பதுதான் கார்ப்பரேட் முதலாளிகளின் திட்டம். ஆனால் ஊடகங்களில் பேசும்போது, குறிப்பிட்ட சில அவசர காலங்களில் ஊழியர்களின் ஒத்துழைப்பைப் பெறுவதற்கு சட்டம் குறுக்கீடு செய்வதாகவும் அதனால் உற்பத்தியும் சேவையும் பெரும் பாதிப்புகளை சந்திப்பதாகவும் எனவே சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்றும் நயவஞ்சகமாக பேசுகின்றனர். ஆனால், தொழிலாளர்களை சுரண்டுவதற்கு சட்டத்தில் உள்ள தடைகளை நீக்கிவிட்டு கார்ப்பரேட் சுரண்டலுக்கேற்ப நெகிழ்வுத் தன்மை கொண்டதாக சட்டத்தை மாற்ற வேண்டும் என்பதே கார்ப்பரேட் முதலாளிகளின் கோரிக்கை என்பதை போராடும் தொழிலாளர்கள் அம்பலப்படுத்துகின்றனர்.


படிக்க: என்.சி.ஆர்.பி-ன் தரவு: உண்மையான ‘’குஜராத் ஸ்டோரி’’


இந்திய தகவல் தொழில்நுட்ப துறையின் தலைநகரமாக பெங்களூரு விளங்கி வருகிறது. 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பெங்களூருவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிகின்றனர். இங்கு 50 சதவிகித ஊழியர்கள் 14 மணி நேரம் வரை பணிபுரிந்து வருவது ஏற்கெனவே நடைமுறையில் இருந்து வருகிறது என்பதை “பிசினஸ் ஸ்டாண்டர்ட்” (Business Standard) பத்திரிக்கை தரவுகளின் மூலம் அம்பலப்படுத்துகிறது. எனவே, ஏற்கெனவே வேலையும் உறக்கமும் போக மீத நேரம் இல்லாததால் ஆகப் பெரும்பான்மையான தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் தங்களின் குடும்ப நிகழ்ச்சிகளில் கூட பங்கு கொள்ள முடியாத நிலையில் இச்சட்டம் தொழிலாளர்களை மோசமான வாழ்க்கை சூழலுக்குள் தள்ளும்.

முதலாளிகளின் இத்தகைய கோர நோக்கத்தை தகவல் தொழில்நுட்பத் தொழிலாளர்கள் தெளிவாகவே புரிந்து கொண்டிருக்கிறார்கள். எனவேதான் இந்த சட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது, இது இளைய தலைமுறையினர் மீது தொடுக்கப்படும் தாக்குதல் என்று நூற்றுக்கணக்கான ஊழியர்கள் போராட்டத்தின் மூலம் தங்களின் ஒன்றுபட்ட எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

உண்மையில், கே.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தின் இந்த ஆர்ப்பாட்டத்தை கண்டு ஆளும் காங்கிரஸ் கட்சி அரண்டுப் போனது. ஆர்ப்பாட்டம் நடந்த சுதந்திரப் பூங்காவிற்கு நேரடியாக வந்த தொழிலாளர் துறையின் துணை ஆணையர் ஜி.மஞ்சுநாத், சங்கத் தலைவர்களிடம் இருந்து கோரிக்கை மனுவை பெற்றுச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும், தகவல் தொழில்நுட்பம் மற்றும் உயிரி தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிரியங்க் கார்கே, இச்சட்டத்திருத்தம் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட குறிப்பிட்ட சில துறைகளுக்கு-அதாவது அதிக வேலை நேரத்தை கோருகின்ற துறைகளுக்கு மட்டுமே பொருந்தும்; மாறாக அனைத்து தொழிலாளர்களுக்கும் ஆனது அல்ல என்று தன்னிலை விளக்கம் கொடுத்துள்ளார்.

பா.ஜ.க-வின் பாசிசத்தை எதிர்ப்பதாகக் கூறிக்கொண்டு பா.ஜ.க-வின் கார்ப்பரேட் சேவையை தானும் தொடர்கிறது காங்கிரஸ். கார்ப்பரேட்டுகளின் நலனுக்காக பெரும்பான்மை தொழிலாளர்களை சுரண்டுலுக்கு தள்ளும் மக்கள்விரோதச் சட்டத்திருத்தத்தை அமல்படுத்த துடிக்கிறது.

இப்படிப்பட்ட சட்டத்திருத்தங்கள் எங்கோ யாருக்கோ நடக்கிறது என்று இந்திய தொழிலாளி வர்க்கம் பார்வையாளராக இருக்க முடியாது. தகவல் தொழில்நுட்ப தொழிலாளர்களின் போராட்டத்தை தாமாக முன்வந்து ஆதரிக்க வேண்டும். அதேபோன்று தகவல் தொழில்நுட்ப ஊழியர்களும் தங்களின் கோரிக்கைகளையும் போராட்டத்தையும் பிற உழைக்கும் வர்க்கத்தவரின் போராட்டங்களுடன் இணைக்க வேண்டும். அதன்மூலம் இச்சட்டத்திருத்தத்தை நிரந்தரமாக முறியடிக்க வேண்டும்.


ஆதி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க