மகாராஷ்டிரா, குஜராத்…
அதிகரிக்கும் வேலை நேரமும்
தீவிரமாகும் உழைப்புச் சுரண்டலும்
இந்தியாவின் தொழில் வளர்ச்சிமிக்க மாநிலமான மகாராஷ்டிராவில் தொழிற்சாலை மற்றும் தொழிலாளர் நலச்சட்டங்களைத் திருத்துவதற்கு கடந்த செப்டம்பர் மூன்றாம் தேதி அன்று அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனடிப்படையில், “கடைகள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கான தொழிலாளர் நலச் சட்டம், 1948” (Shops and Establishments Act 1948) மற்றும் “தொழிற்சாலை சட்டம், 2017” (Factory Act 2017) ஆகிய இரண்டு சட்டங்களிலும் திருத்தங்கள் கொண்டுவரப்பட உள்ளன.
இதன்படி, வணிகம் மற்றும் பிற தொழில் நிறுவனங்களில் தற்போது நடைமுறையிலிருக்கும் அதிகபட்சம் 9 மணி நேர வேலை என்பது 12 மணி நேரமாக மாற்றப்பட உள்ளது. 5 மணி நேர உழைப்பிற்குப் பிறகு அரை மணி நேரம் ஓய்வு என்பது 6 மணி நேர உழைப்பிற்குப் பிறகு அரை மணி நேரம் என்று மாற்றியமைக்கப்பட உள்ளது. மேலும், மிகைப்பணியானது (Over time) அதிகபட்சம் மூன்று மாதத்திற்கு 115 மணி நேரம் என்றிருந்தது (இது சில ஆண்டுகளுக்கு முன் 75 மணி நேரம் என்றிருந்தது) இனி 144 மணி நேரமாக அதிகரிக்கப்பட உள்ளது.
அதேசமயம், இத்திருத்தம் 20-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்யும் கடைகள் மற்றும் நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தமுள்ள 85 லட்சம் குறு, சிறு மற்றும் பெரும் தொழில் நிறுவனங்களில் வெறும் 56,000 நிறுவனங்களுக்கு மட்டுமே இச்சட்டத்திருத்தம் பொருந்தும்.
இதனால், மீதமுள்ள பல இலட்சக்கணக்கான நிறுவனங்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்களின் நலனையும் உரிமையையும் பாதுகாப்பதற்கு எந்தச் சட்ட வரம்புகளும் நெறிமுறைகளும் கிடையாது என்ற நிலை உருவாக உள்ளது. அங்கெல்லாம் முதலாளிகள் வைத்ததே சட்டம், தொழிலாளர்கள் விருப்பம் இருந்தால் வேலை செய்யலாம் என்ற நிலையே ஏற்படும். இது அடுத்தடுத்து பெரு நிறுவனங்களுக்கும் விரிவாக்கப்படும் அபாயம் உள்ளது.
ஏற்கெனவே, உத்தரப்பிரதேசம், ஹரியானா, இராஜஸ்தான், குஜராத், திரிபுரா, ஆந்திரா ஆகிய பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களிலும், தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா போன்ற எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களிலும் இதேபோன்ற சட்டத்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டிருக்கின்றன.
தங்கள் மாநிலத்தை நோக்கி மூலதனத்தை ஈர்த்து, தொழில் வளர்ச்சியை பெருக்குவதன் மூலம் மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதே இந்தச் சட்டத்திருத்தத்தின் நோக்கம் என்கிற தேன் தடவிய ஒரே பொய்யையே எல்லா மாநில அரசுகளும் கூறிவருகின்றன.
ஆனால், இச்சட்டத் திருத்தமானது இந்திய மற்றும் சர்வதேச கார்ப்பரேட் முதலாளிகள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கோரிக்கையாகும். ஆகவேதான் தங்களின் வர்க்க நலன் என்கிற நிலையிலிருந்து பா.ஜ.க. மட்டுமல்லாமல் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளும் தாமே முன்வந்து இந்தச் சட்டத் திருத்தங்களைக் கொண்டு வந்திருக்கின்றன. நாடு தழுவிய அளவில் தொழில் வளர்ச்சிக்கு சாதகமான சூழலுள்ள மாநிலங்கள் அனைத்திலும் 8 மணி நேர வேலையை ஒழித்துக்கட்டும் இச்சட்டத் திருத்தங்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்படவிருக்கின்றன.
இதே வழியில்தான் இரண்டாண்டுகளுக்கு முன்பாகவே தமிழ்நாட்டில் தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தும் மசோதாவை தமிழ்நாடு சட்டப்பேரவையில் தி.மு.க. அரசு நிறைவேற்றியது. ஆனால், இதற்கு தமிழ்நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, தி.மு.க. அரசு தற்காலிகமாகப் பின்வாங்கியிருக்கிறது.
எனவே, மேற்குறிப்பிட்ட மாநில அரசுகள் யாவும் கார்ப்பரேட் சேவைக்காக தொழிலாளர் வர்க்கத்தின் மீது கொடுந்தாக்குதலையும் உழைப்புச் சுரண்டலையும் தீவிரப்படுத்துவதற்கு ஆயத்தமாகியுள்ளன என்பதே நிதர்சனம். பிற மாநிலங்களும் இச்சட்டத்திருத்தத்தை மேற்கொள்வதற்கு தயாராகி வருகின்றன.

இந்தியாவில் தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் கொள்கை நடைமுறைக்கு வந்து ஒப்பந்தத் தொழிலாளர் முறை புகுத்தப்பட்ட காலத்திலிருந்து தொழிலாளர்கள் மீதான ஒடுக்குமுறை பல வழிகளிலும் அதிகரித்துக் கொண்டே வந்திருக்கின்றது. குறிப்பாக 2014-இல் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு அந்தப் போக்கு மிகவும் வேகமெடுத்தது. தொழில் உற்பத்தியிலும் வணிகத்திலும் தொழிலாளர்களுக்கு இருந்துவந்த சட்டப் பாதுகாப்புகள் ஒவ்வொன்றையும் வேகமாக ஒழித்துக்கட்டி வருகிறது பாசிச மோடி-அமித்ஷா கும்பல்.
அதன் உச்ச நிலையாகவே 29 பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டிருந்த தொழிற்சாலை மற்றும் தொழிலாளர் நலச் சட்டங்களை வெறும் நான்கு சட்டத்தொகுப்புகளாக குறுக்கிச் சுருக்கி 2019-ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் விவாதமின்றி நிறைவேற்றியது பாசிச மோடி அரசு. அவற்றில்தான் வேலை நேரத்தை நிலைமைகளுக்கும் தேவைக்கும் ஏற்ற வகையில் மாற்றிக் கொள்ளவும் பெண்களை முழு இரவுப் பணியில் ஈடுபடுத்தவுமான திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கின்றன.
மேலும், ஒன்றிய பா.ஜ.க. அரசின் இப்புதிய சட்டத் தொகுப்பில் ஒரு வாரத்திற்கு 48 மணி நேர வேலை என்பது தக்கவைக்கப்பட்டிருந்தாலும், அதற்குட்பட்டு ஒரு நாள் வேலை நேரத்தை 12 மணி நேரம் வரை நீட்டித்துக்கொள்ள வழிவகை செய்கிறது. இதனடிப்படையிலேயே மாநிலத் தொழிலாளர் நலச் சட்டங்கள் திருத்தப்படுகின்றன. மேலும், ஒரு நாளைக்கு 12 மணி நேர வேலை என்கிற முறையில் வாரத்தில் 4 நாள் வேலை (12 × 4), 3 நாள் விடுமுறை என்ற வேலைமுறையை உருவாக்குவது குறித்தும் கார்ப்பரேட் நிறுவனங்கள் பரிசீலித்து வருகின்றன. அவ்விடுமுறைகளையும் பறிப்பதற்கு மிகைப்பணி நேரத்தை கூட்டி வருகின்றன.
இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி, “ஊழியர்கள் ஒரு வாரத்தில் 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும்” என்று நஞ்சைக் கக்கியதையும், எல்&டி முதலாளியான எஸ்.என்.சுப்பிரமணியன், “விடுமுறை நாட்களில் எவ்வளவு நேரம்தான் உங்கள் மனைவியின் முகத்தையே பார்த்துக் கொண்டிருப்பீர்கள்?” என்று வக்கிரமாகப் பேசியதையும் இதனுடனே இணைத்துப் பார்க்க வேண்டும்.
உலகின் வளர்ந்த நாடுகளான பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் சராசரியாக வாரம் 30 – 32 மணி நேர வேலைதான் பின்பற்றப்படுகிறது. அமெரிக்காவில் 36 மணி நேரம் என்று இருக்கிறது. இன்றைய நிலையில் பார்த்தால், அதிக உழைப்பு நேரம் உள்ள நாடுகளில் இந்தியா முன்னிலையில் இருக்கிறது. ஆனாலும், இன்னும் இன்னும் என்று தொழிலாளர்களின் இரத்தத்தை கார்ப்பரேட் வல்லூறுகள் ஒட்டச் சுரண்டுகின்றன.
இன்று பழைய தொழிலாளர் சட்டம் நடைமுறையில் இருக்கும் நிலையிலேயே முறைசாரா ஒப்பந்தத் தொழிலாளர்கள் எவருக்கும் 8 மணி நேர வேலை என்பது கிடையாது. அவர்கள் அனைவரும் 10 முதல் 14 மணி நேரம் வரை வேலை நெருக்கடிக்கேற்ப இழுத்த இழுப்பிற்கு வேலை செய்ய வேண்டிய மோசமான பணிச்சூழலில் இறுத்தப்பட்டிருக்கிறார்கள்.
ஆகவே, இன்று 8 மணி நேர வேலை என்பது வங்கிகள், காப்பீடு நிறுவனங்கள் போன்ற ஒன்றிய அரசு மற்றும் அதன் சில பொதுத்துறை நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தக் கூடியதாகச் சுருங்கி விட்டது. இன்றைய நிலையில் இந்தியாவின் ஒட்டுமொத்த தொழிலாளர் எண்ணிக்கையில் 90 சதவிகிதத்திற்கும் மேலானோர் முறைசாரா, தற்காலிக, ஒப்பந்தத் தொழிலாளர்களே என்பதை கருத்தில் கொண்டு பார்த்தால்தான் இந்நிலைமையின் பாதகத்தன்மையை ஒருவர் உணர முடியும்.
ஒருபுறம், மறுகாலனியாக்கக் கொள்கைகளை தீவிரமாக நடைமுறைப்படுத்திவரும் மோடி கும்பல் தொழிலாளர்கள் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. மறுபுறம், பா.ஜ.க-வை எதிர்ப்பதாக சொல்லிக்கொள்ளும் எதிர்க்கட்சிகளும் தாங்கள் ஆளும் மாநிலங்களில் தொழிலாளர்கள் மீதான சுரண்டலைத் தீவிரப்படுத்தும் விதமாக சட்டத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றன. மேலும், பாசிச மோடி அரசு கொண்டுவந்துள்ள புதிய நான்கு தொழிலாளர் சட்டங்களை நடைமுறைக்குக் கொண்டுவருவதற்கு, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் உட்பட 25 மாநிலங்கள் மற்றும் எட்டு யூனியன் பிரதேசங்கள் ஒப்புக்கொண்டு அதற்கான வரைவு விதிகளை வகுத்துள்ளன.
எனவே, தொழிலாளர்கள் தங்கள் மீதான ஒடுக்குமுறைகளுக்கு எதிராக ஒன்றிய மற்றும் மாநில அரசு என இரண்டு முனைகளிலும் போராட வேண்டியுள்ளது. மேலும், தொழிலாளர்களை கொத்தடிமைகளாக்கும் புதிய நான்கு தொழிலாளர் சட்டங்களை இரத்துச் செய்ய வைப்பதற்கான போராட்டத்தை பிற உழைக்கும் மக்களை ஒன்றிணைத்துக் கொண்டு இந்தியத் தொழிலாளி வர்க்கம் கட்டியமைக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும்.
![]()
ஆதி
(புதிய ஜனநாயகம் – அக்டோபர் 2025 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram









