அஷ்பகுல்லா கான்: போர்ப்பாடல் பாடி தூக்கு கயிற்றை முத்தமிட்ட மாவீரன்!
(அக்டோபர் 22 சுதந்திர போராட்ட வீரத் தியாகி அஷ்ஃபாகுல்லா கானின் 125வது பிறந்தநாள்)
ஸர்ஃபரோஷி கி தமன்னா அப் ஹமாரே தில் மே ஹே
தேக்னா ஹே ஸோர் கித்னா பாஹு ஏ காத்தில் மே ஹே
(“தியாகத்திற்கான வேட்கை இப்போது எங்கள் இதயத்தில் உள்ளது; கொலையாளியின் கரங்களுக்கு எவ்வளவு வலிமை என்று நாங்கள் பார்க்க வேண்டும்”)
குடியுரிமைப் போராட்டங்கள் உட்பட அண்மைக் காலங்களில் நடந்த பொது உரிமைகளுக்கான எழுச்சிகளில் எதிரொலித்த இந்த வரிகள் உங்களுக்கு நினைவிருக்கிறதா?
இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு உத்வேகம் அளித்த பிஸ்மில் அஸிமாபாதி எழுதிய இந்தப் புரட்சிக் கவிதை, முக்கியமாக இரண்டு தியாகிகளின் பெயர்களுடன் இணைத்து பேசப்படுகிறது. ராம் பிரசாத் பிஸ்மில் மற்றும் அஷ்பகுல்லா கான் ஆகிய இருவரும் சிறையில் தினமும் பாடி நடந்த வீரப் பாடல் இதுவே.
1900 ஆம் ஆண்டு அக்டோபர் 22 ஆம் தேதி உத்தரப் பிரதேசத்தின் ஷாஜஹான்பூரில், செல்வாக்குமிக்க ஒரு ஜமீன்தார் குடும்பத்தில் ஷஃபிகுல்லா கான் மற்றும் மசஹருன்னிசா பேகம் ஆகியோரின் மகனாக அஷ்பகுல்லா கான் பிறந்தார். தாயின் செல்வாக்கால் இலக்கிய ஆர்வம் கொண்டவராக வளர்ந்த அஷ்பகுல்லா கான், சிறுவயதிலிருந்தே உருது கவிதைகளை எழுதினார். அந்தக் கவிதைகளில் பெரும்பாலானவை, ஆட்சிக்கு எதிரான கடுமையான விமர்சனங்களையும் மக்களின் வலிகளையும் ஆழமாக வெளிப்படுத்தின.
நாட்டின் விடுதலைக்கான போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்ற அவரது தணியாத வேட்கை, அவரை இந்துஸ்தான் குடியரசுக் கழகத்தின் (HRA) தலைவரான ராம் பிரசாத் பிஸ்மிலுடன் நெருக்கமாக்கியது. ஒரு ஜமீன்தார் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞனை ஆரம்பத்தில் பிஸ்மில் சேர்த்துக் கொள்ளத் தயங்கினாலும், அஷ்பகுல்லாவின் தீரத்தையும், தேசப்பற்றையும், அர்ப்பணிப்பு உணர்வையும் உணர்ந்து அவரை அமைப்பில் இணைத்துக் கொண்டார்.
இவர்கள் இருவருக்குமிடையேயான உறவு, சமூக நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமைக்கு உன்னதமான ஒரு உதாரணமாகக் கருதப்படுகிறது.
புரட்சி நடவடிக்கைகளுக்குத் தேவையான ஆயுதங்களை வாங்குவதற்குப் பணம் திரட்ட, பிரிட்டிஷ் அரசாங்கத்தின் பணத்துடன் செல்லும் ஒரு ரயிலைக் கொள்ளையடிக்க பிஸ்மில் திட்டமிட்டார். இத்தகையதொரு நடவடிக்கையை மேற்கொண்டால், பிரிட்டிஷ் அரசு கடுமையான ஒடுக்குமுறைகளை ஏவிவிடும் என்றும், அது போராட்ட வழிமுறைகளுக்குப் பாதகமாக அமையும் என்றும் அஷ்பகுல்லா கடுமையாக எதிர்த்தார். இருப்பினும், அமைப்பிலுள்ள பெரும்பாலான உறுப்பினர்களின் முடிவை மதித்து, அவர் அந்தத் திட்டத்தில் முக்கியமான பங்கினை வகித்தார்.
1925 ஆம் ஆண்டு ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி, அரசாங்கக் கருவூலத்திற்கான பணத்துடன் சென்ற சஹாரன்பூர்-லக்னோ பயணிகள் ரயிலை, லக்னோவிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காகோரி கிராமத்தில் வைத்து புரட்சியாளர்கள் கொள்ளையடித்தனர். பிஸ்மில், அஷ்பகுல்லா ஆகியோருடன் ராஜேந்திர லாஹிரி, சந்திரசேகர் ஆசாத், சச்சீந்திரநாத் பக்ஷி, கேசப் சக்கரவர்த்தி, மன்மத் நாத் குப்தா, முராரி ஷர்மா, முகுந்த் லால், பன்வாரி லால் ஆகியோர் இந்தக் குற்றத்தில் ஈடுபட்டனர். அன்று கவரப்பட்ட தொகை 4,679 ரூபாய் ஒரு அணா ஆறு பைசா ஆகும். இந்த அதிர்ச்சியூட்டிய சம்பவத்தைத் தொடர்ந்து, பிரிட்டிஷ் அரசு நாடு முழுவதும் தீவிரமான அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிட்டது.
இரண்டு மாதங்களுக்குப் பிறகு பிஸ்மில் கைது செய்யப்பட்டார்.
சம்பவத்திற்குப் பிறகு நேபாளத்திற்கும் (இப்போதைய ஜார்கண்டின்) டால்ட்டன் கஞ்சிற்கும் தப்பிச் சென்ற அஷ்பகுல்லாவைக் கண்டுபிடிக்க பிரிட்டிஷார் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டபோதும் முடியவில்லை. ஆனால், ஒரு வருடத்திற்குப் பிறகு, கிராமவாசிகளில் ஒருவரால் காட்டிக் கொடுக்கப்பட்டதால், போலீசார் அவரை டெல்லியில் வைத்து கைது செய்தனர்.
விசாரணையின் போது, பிஸ்மிலைக் காப்பாற்றுவதற்காக, கொள்ளையின் முழுப் பொறுப்பையும் தான் ஏற்றுக் கொள்வதாக அஷ்பகுல்லா பகிரங்கமாக அறிவித்தார். வழக்கறிஞரின் ஆலோசனைகளை ஏற்க மறுத்து, தன்னைக் குற்றவாளியாகக் காண வேண்டும் என்று அவர் பிரிவி கவுன்சிலிடம் வேண்டினார்.
பிஸ்மில், அஷ்பகுல்லா, ராஜேந்திர லாஹிரி, ரோஷன் சிங் ஆகியோருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. ஐந்து பேர் ஆயுள் தண்டனைக்காக காலாவதிக்கு நாடு கடத்தப்பட்டனர். சந்திரசேகர் ஆசாத்தை கைது செய்ய எடுத்த முயற்சி வெற்றி பெறவில்லை (பின்னர் அலகாபாத்தில் உள்ள ஆல்பிரட் பூங்காவில் வைத்து போலீசார் சுற்றி வளைத்தபோது அவர் சுயமாகச் சுட்டுக் கொண்டு உயிர் நீத்தார்).
1927 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் தேதி ஃபைசாபாத் சிறையில் வைத்து அஷ்பகுல்லா கான் தூக்கிலிடப்பட்டார். இறுதி ஆசை ஏதேனும் உண்டா என்று கேட்ட அதிகாரியிடம், நாட்டின் சுதந்திரத்தை விட வேறு எந்த விருப்பமும் இல்லை என்று பதிலளித்து, ‘ஸர்ஃபரோஷி கி தமன்னா’ பாடலை உரத்த குரலில் பாடி, நிமிர்ந்த தலையுடனும் புன்னகையுடனும் அவர் தூக்கு மேடையை நோக்கி நடந்து சென்றார்.
ஆக்கிரமிப்பாளர்களிடம் மன்னிப்பு கேட்கவோ, கருணையை யாசிக்கவோ மறுத்த, அஷ்பகுல்லா கானைப் போன்ற தீரர்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்து பெற்றுத் தந்த விலைமதிப்பற்ற சுதந்திரத்தைப் பாதுகாக்க ஒவ்வொரு இந்தியருக்கும் கடமை உண்டு.
மலையாளத்தில் மாத்யமம் நாளிதழ்…
![]()
முகநூலில்: சையது அலி
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











