இமாச்சல், பஞ்சாப், உத்தராகண்ட், காஷ்மீர் பெருவெள்ளம்:
இந்தியாவிற்கு ஒலிக்கும் அபாய சங்கு!
அதீத வெப்பம், வெப்ப அலை, வறட்சி, காட்டுத்தீ, அதீத கனமழை, பெருவெள்ளம், மேக வெடிப்பு இவையெல்லாம் அன்றாட செய்திகளில் அடிக்கடி விவாதிக்கப்படும் பெயர்களாகிவிட்டன. அந்தளவிற்கு காலநிலை மாற்றமும், அதனால் ஏற்படும் பேரிடர்களும் இயல்பாகிவிட்டன.
ஒரு அரசியல் நெருக்கடிக் காலத்தில், அரசியல் கைதுகளும் அவசரச் சட்டங்கள் பிறப்பிக்கப்படுவதும் எப்பொழுது வேண்டுமானாலும் நடைபெறலாம் என்ற அச்சம் சமூகத்தையே ஆட்கொண்டிருக்கும்.
அதுபோல, காலநிலையில் ஏற்படும் தீவிர மாற்றத்தால், ஒரு பருவ காலம் முழுவதும் பெய்ய வேண்டிய மழை மேகவெடிப்பினால் ஓரிரு மணி நேரங்களில் கொட்டித் தீர்ப்பது, கோடை காலம் முடிந்தும் அதீத வெப்பம், வெப்ப அலை வீசுவது, பெரும் சேதத்தை ஏற்படுத்தும் கட்டுக்கடங்காத காட்டுத்தீ என எப்பொழுது என்ன நிகழுமோ என்ற அச்சத்தில் மனித சமூகம் வாழ்ந்துக் கொண்டிருக்கிறது. இதையே காலநிலை நெருக்கடி என்கிறோம்.
தீவிரமாகும் காலநிலை நெருக்கடி
இந்தியாவில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழைக் காலத்தில் (ஜூன் – செப்டம்பர்) இயல்பைக் காட்டிலும் 8 சதவிகிதம் அதிகமாக மழை பெய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த பருவத்தின்போது நாட்டில் வழக்கமாக 868 மி.மீ. மழை அளவு பதிவாகும். ஆனால், இம்முறை 937 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. அதேசமயம், இந்த மழைப்பொழிவும் அனைத்து மாநிலங்களிலும் சீரானதாக இல்லை.
கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவில் 1,089.9 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. இது இயல்பாக பதிவாகும் 1,367 மி.மீ. மழையைக் காட்டிலும் 20 சதவிகிதம் குறைவாகும். குறிப்பாக, பீகார், அருணாச்சலம், அசாம் மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்களில் நான்கு மாதங்களில் மூன்று மாதங்கள் பற்றாக்குறையாகவே பருவ மழை பெய்துள்ளது.
அதேசமயம், வடமேற்கு இந்தியாவில் 747.9 மி.மீ. மழைப்பொழிவு பதிவாகி உள்ளது. இது வழக்கத்தை விட 587.6 மி.மீ. அதிகமாகும். குறிப்பாக பஞ்சாப், உத்தராகண்ட், காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இந்த பருவக் காலத்தில் பெருமழையும் பெருவெள்ளமும் ஏற்பட்டது.
இதில், நூற்றுக்கணக்கான மக்கள் பலியாகினர். பலர் காணாமல் போயுள்ளனர். மலைப்பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. வீடுகள், சாலைகள், கட்டடங்கள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டன. சமவெளிப் பகுதியில், இப்பெரு வெள்ளத்தால் இலட்சக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. ஆயிரக்கணக்கான கிராமங்கள் நீரில் தத்தளிக்கின்றன. மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து கையறுநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். கோடிக்கணக்கில் சேதம் ஏற்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக, மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதி இரவு 11.30 மணியிலிருந்து 23-ஆம் தேதி அதிகாலை 2.30 மணி வரை 180 மி.மீ. வரையிலான மழை பெய்திருக்கிறது. கரியா, காலிகட், ஜோத்பூர், டப்சியா மற்றும் பல்லிகுஞ்ச் (Ballygunge) ஆகிய தெற்கு கல்கத்தா நகரங்களில் முறையே 340 மி.மீ., 297 மி.மீ., 290 மி.மீ., 284 மி.மீ. மற்றும் 279 மி.மீ. என ஒரே நாளில் மழை பெய்திருக்கிறது.
காஷ்மீரில் மேகவெடிப்பு காரணமாக கதுவார் மாவட்டத்திலுள்ள சசோடி கிராமத்திலும் வரலாறு காணாத மழை பெய்திருக்கிறது. அதே சமயம் இக்கிராமத்திலிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ள பஹல்காமில் கொஞ்சம் கூட மழை பெய்யவில்லை.
மகாராஷ்டிராவிலும் இந்த ஜூன் முதல் செப்டம்பர் வரை 1,000 மி.மீ. அளவிற்கு மழை பெய்திருக்கிறது. இது சராசரி மழை அளவைவிட 109 சதவிகிதம் அதிகமாகும். இதனால் வறட்சியால் பாதிக்கப்பட்ட பல மாவட்டங்களில் மழை பெய்திருப்பதோடு, பயிர்கள் நீரில் மூழ்கி நாசமடைந்திருக்கின்றன.
உத்தராகண்டிலும் மேகவெடிப்பால் பெரு மழையும், பெரு வெள்ளமும் ஏற்பட்டிருக்கிறது. தலைநகர் டேராடூன், உதம்சிங் நகர், சமோலி மாவட்டத்தில் பெய்த பெருமழையால், அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. நிலச்சரிவு ஏற்பட்டு சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதற்கு முன்பு ஆகஸ்ட் மாதத்தில் ஏற்பட்ட மேகவெடிப்பால், உத்திரகாசி மாவட்டம் தாராலியில் பெருமழை பெய்து பெரும் சேதம் ஏற்பட்டது. ஹர்ஷில் பகுதியில் உள்ள கீர் கங்கா கதேரா என்கிற ஆழமான வடிகாலில் நீர்மட்டம் திடீரென அதிகரித்து, தராலி கிராமத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
மொத்தத்தில், காலநிலை நெருக்கடி காரணமாக இந்தியாவின் பருவநிலை மாற்றத்தைக் கணிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. காலநிலை ஆபத்துக் குறியீட்டில் இந்தியா ஆறாவது இடத்தில் உள்ளது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. நாளுக்குநாள் தீவிரமடைந்துவரும் இப்பேரிடர்கள், இந்தியா எதிர்கொண்டிருக்கும் அபாயம் குறித்து எச்சரிக்கின்றன.
ஒன்றிய – மாநில அரசுகளின் ‘வளர்ச்சி’த் திட்டங்களும் பேரிடர்களும்
பஞ்சாப், டெல்லி, இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தராகண்ட் மாநிலங்களில் பெய்த பெருமழைக்கும், பெரும் சேதத்திற்கும் காலநிலை நெருக்கடி எவ்வாறு முக்கியமான காரணமாக இருக்கிறதோ, அதேபோல் ஒன்றிய – மாநில அரசுகளின் சுற்றுச்சூழல் விரோத நடவடிக்கைகளும் முக்கியமான காரணமாகும். கார்ப்பரேட்டுகளின் கொள்ளைக்கு அரசுகள் செய்யும் சேவையே, சுருக்கமாகச் சொன்னால், ஒன்றிய, மாநில அரசுகளின் ‘வளர்ச்சித்’ திட்டங்களின் விளைவாகவும் இப்பேரிடர்களை பார்க்க வேண்டியுள்ளது.
சான்றாக, பஞ்சாப் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கிற்கு, நீர்நிலைகள் மற்றும் நீர்வழிப் பாதைகளைத் தூர்வாராதது, நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு, மாஃபியாக்களின் மணற்கொள்ளை, சூழலியலுக்குப் பொருத்தமற்ற பக்ராநங்கல் அணை, நீர்மின் திட்டங்கள், இத்திட்டங்களுக்காக மேற்கொள்ளப்பட்ட காடழிப்பு போன்றவை முக்கிய காரணங்களாகும். அதுமட்டுமின்றி சோ நதிக்கரையில் திட்டமின்றி விரிவாக்கப்படும் சண்டிகர் நகரமயமாக்கமும், மழைநீர் வடிகால் திட்டமின்றி மேற்கொள்ளப்படுகிற சண்டிகர்-அம்பாலா, சண்டிகர்-சிம்லா பசுமைவழிச் சாலைத் திட்டங்களும் பஞ்சாபை பேரிடரில் தள்ளி வருகின்றன.
அதேபோல், இமாச்சலப் பிரதேசத்தில் “பீஸ்” ஆற்றுப் படுகையை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள அரசுக் கட்டடங்களும், எல்லையின்றி விரிவாக்கப்படும் தேசிய-உள்ளூர் நெடுஞ்சாலைகளும் நீர்வழிப்பாதைகளை ஆக்கிரமித்திருப்பதால் வெள்ளம் வடிவதற்கான வடிகாலின்றி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது.
மேலும், உலகின் மிக இளமையான மலையான இமயமலையில் பெரும் கட்டுமானத் திட்டங்களை மேற்கொள்ளக் கூடாது என்ற சூழலியலாளர்களின் எச்சரிக்கையையும் மீறி ஒன்றிய மோடி அரசு பெரும் கட்டுமானத் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.
அதேபோல், 2013-இல் உத்தராகண்டில் ஏற்பட்ட பெருவெள்ளத்திற்குப் பிறகு, அம்மாநிலத்தில் ஓடும் ஆற்றுப் பகுதிகளை சூழலியல் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்றும், அம்மாநிலத்தில் பெரும் கட்டுமானத் திட்டங்களை அறிவிக்கக் கூடாது என்றும் உத்தராகண்டின் வெள்ளம் குறித்தான ஆய்வுக் குழு 2014-இல் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் கூறியுள்ளது. ஆனால், இதனையெல்லாம் மீறிதான், ‘வளர்ச்சி’ மற்றும் ‘சுற்றுலா’ என்ற பெயரில் விமானநிலைய விரிவாக்கம், ரிஷிகேஷ்-ஹரித்துவார் ஆன்மீகப் பாதைத் திட்டம், சார் தாம் சாலைத் திட்டம் (Char Dham Road Project) போன்ற நாசகார திட்டங்கள் பா.ஜ.க. அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கார்ப்பரேட் மற்றும் காவி கும்பலின் நலனுக்காக மேற்கொள்ளப்படும் இத்தகைய திட்டங்கள்தான் உத்தராகண்ட் மாநிலத்தை பெருந்துயரில் தள்ளியிருக்கின்றன. ஆனால், இவற்றையெல்லாம் மூடிமறைத்துவிட்டு இந்த காவி ஓநாய்களே மக்கள் பாதிக்கப்பட்டுவிட்டதாக கண்ணீர் வடிக்கின்றன.
அதேபோல், இதுபோன்ற பேரிடர்களால் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் பாதிக்கப்படும்போது அதற்கு நிவாரணம் வழங்காமல் மக்களை வஞ்சிக்கும் போக்கையும் பாசிச மோடி அரசு கொண்டுள்ளது.
புவி வெப்பமயமாதலும் கேள்விக்குள்ளாகும் உயிர்க்கோளமும்!
காலநிலை மாற்றத்திற்கு முதன்மை காரணமாக இருப்பது புவி வெப்பமயமாதலே. புவி வெப்பமயமாதல் என்றவுடன், இதற்குக் காரணமாக ஒட்டுமொத்த மனிதகுலத்தையும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றிவிடுவார்கள் முதலாளித்துவ சிந்தனையாளர்கள்.
புவி வெப்பமயமாவதற்கு புதைபடிவ எரிபொருட்களை பயன்படுத்துவதும், அதிலிருந்து வெளியேறுகிற பசுமை இல்ல வாயுக்களும்தான் காரணம் என்று அறிவியல் விளக்கமளிக்கிறது. இந்த பசுமை இல்ல வாயுக்களை அதிகளவில் வெளியேற்றுவது யார்?
குறிப்பாக, தொழிற்துறைப் புரட்சிக்குப் பின்னரே புவி வெப்பமயமாதல் அதிகரிக்கத் தொடங்கியது. மேற்கத்திய, தொழிற்துறையில் முன்னேறிய நாடுகள்தான் புவிவெப்பமடைவதற்கு உண்மையான காரணமாகும். அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், ரஷ்யா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகள்தான் 67 சதவிகித கார்பன் உமிழ்விற்குக் காரணமாகும். இதில் அமெரிக்கா 15 சதவிகித கார்பனை உமிழ்கிறது. இந்நாடுகள் தங்கள் கார்பன் உழிழ்வைக் குறைத்துக் கொண்டாலே புவி வெப்பமடைவதைக் குறைக்க முடியும்.
பூமியின் சராசரி வெப்பநிலையைவிட 2 டிகிரி செல்சியஸ் அதிகரித்தாலே பூமியில் எந்த உயிரினங்களும் வாழ முடியாது என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். இதிலிருந்துதான் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, பருவநிலை மாற்றத்திற்கான பாரீஸ் உடன்படிக்கை 2015-இல் கையெழுத்திடப்பட்டு, 2016 நவம்பரில் நடைமுறைக்கு வந்தது. பூமியின் வெப்பநிலை உயர்வை 1.5 டிகிரி செல்சியஸ்க்குள் கட்டுப்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
எனவே, பாரீஸ் ஒப்பந்தத்தின்படி உலக நாடுகள் கார்பன் உமிழ்வைக் குறைக்க வேண்டும். ஆனால், டிரம்ப் இரண்டாவது முறையாக அமெரிக்காவின் அதிபரான பிறகு, இரண்டாவது முறையாக பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறியிருக்கிறது. இது ஏகாதிபத்திய நாடுகள் கார்பன் உமிழ்வை ஒருபோதும் குறைக்கப் போவதில்லை என்பதையே காட்டுகிறது.
அதுமட்டுமின்றி, அண்மையில் நடைபெற்ற ஜ.நா. மன்றத்தில் உரையாற்றிய டிரம்ப், புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பது, காலநிலை மாற்றத்தைக் குறைக்க ஏழை நாடுகளுக்கு நிதி உதவி செய்வதை கேடுகெட்ட வேலை என்று வன்மத்துடன் கூறியிருக்கிறார்.
அதேபோல், காலநிலை மாற்றத்தைக் குறைக்க, காலநிலை மாற்றத்திற்கான ஐக்கிய நாடுகளின் உச்சி மாநாடு ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இதுவரை 29 மாநாடுகள் நடைபெற்றிருக்கின்றன. இறுதியாக நடந்த 29-வது மாநாட்டில், 2035-ஆம் ஆண்டு வரை ஏழை நாடுகளுக்கு ஆண்டுக்கு 300 பில்லியன் டாலர் நிதியுதவி வழங்குவது மற்றும் புதுப்பிக்கத்தக்க வளங்களைப் பயன்படுத்துவது போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டன. ஏழை நாடுகளுக்கான நிதியுதவியை வளர்ந்த நாடுகள் பகிர்ந்து கொள்வதை, அமெரிக்க முதலாளிகள் விரும்பவில்லை. இதைத்தான் டிரம்ப் அமெரிக்க வரிக் கட்டுபவர்களுக்கு எதற்காக சுமையை ஏற்ற வேண்டும் என்று கேள்வியெழுப்பி, பாரீஸ் உடன்பாட்டிலிருந்து வெளியேறியிருக்கிறார்.
மேலும், இம்மாநாடுகளில் எடுக்கப்பட்ட எந்த முடிவுகளும் நடைமுறைக்குச் சென்றதில்லை; செல்லப்போவதும் இல்லை என்பதையே டிரம்பின் வன்மம் நிறைந்த பேச்சுக் காட்டுகிறது.
இம்மாநாட்டில் இந்தியாவும் கலந்து கொண்டிருக்கிறது. பிரதமர் மோடி கார்பன் உமிழ்வை குறைப்பது என்ற பெயரில் அவரது எஜமான் அதானிக்கு சூரிய ஒளி மின் திட்டங்களுக்கு ஏற்பாடு செய்து கொடுத்தாலும், கார்பன் உமிழ்வைக் குறைக்க முடியவில்லை. 2024-ஆம் ஆண்டு இந்தியாவில் 0.8 சதவிகிதம் கார்பன் உமிழ்வு அதிகரித்திருக்கிறது. கார்பன் உமிழ்வைக் குறைப்பது, மின்சார வாகனங்களை அதிகரிப்பது என்ற பெயரில் மின்சார வாகன உற்பத்தியில் எலான் மஸ்க்கிற்கு கம்பளம் விரிக்கவும், காஷ்மீரின் லித்தியத்தை கார்ப்பரேட்டுகள் கொள்ளையடிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதுமே மோடி அரசின் நோக்கமாக உள்ளது. அதேசமயம் அம்பானி கொள்ளையடிக்க ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதையும் குறைக்கவில்லை. ஆக, உச்சி மாநாட்டுத் தீர்மானங்கள் அனைத்தும் கண் துடைப்பிற்கானவையே.
அதுமட்டுமின்றி புதைபடிவ எரிபொருளுக்கு மாற்றாக முன்வைக்கப்படும் மின்சார வாகனங்கள், அரிய வகைக் கனிமங்களுக்காக ஏகாதிபத்தியங்கள் தங்களுக்கிடையே சண்டையிடுவதையே துரிதப்படுத்துகிறது. இவை ஒருபுறம் போரையும் மறுபுறம் காடுகள் அழிவை நோக்கியுமே இட்டுச் செல்லும். இது மேலும் புவிக்கோளத்தின் இருப்பை கேள்விக்குள்ளாகும். எனவே முதலாளித்துவக் கண்ணோட்டத்தில், அதாவது லாப நோக்கில் முன்வைக்கப்படும் தீர்வுகள் சமூகத்தையும் பூமியையும் மேலும் மேலும் மீள முடியாத புதை குழிக்குள்ளே இட்டுச் செல்லும்.
எனினும், உடனடியாக, தற்காலிகமாக புவிவெப்பமடைவதைக் குறைக்க வேண்டுமானால் புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும். நமது நாட்டில் பொதுப் போக்குவரத்தை அதிகரிக்க வேண்டும். தொழிற்சாலைகள், சிறுநிறுவனங்கள் நகரங்களில் குவிக்கப்படுவதைத் தடுக்க வேண்டும். மக்கள்தொகை பரவலாக்கப்பட வேண்டும், மறுசுழற்சிக்கு முதலீடு செய்யப்பட வேண்டும். மறுசுழற்சி செய்யப்பட முடியாத நெகிழிகள் உற்பத்திக்குத் தடை விதிக்க வேண்டும். இயற்கைக்கும், மக்களின் வாழ்வாதாரத்திற்கும் எதிராக இமயமலைப் பகுதியில் நடைபெறும் கட்டுமானங்கள் மற்றும் எட்டுவழிச்சாலை, பரந்தூர் விமான நிலையம், மீத்தேன் எடுப்பு, பெட்ரோலியம் எடுப்பு, கனிமவளக் கொள்ளை, மணற்கொள்ளை, சட்டவிரோத கல்குவாரி போன்ற அனைத்தும் தடைசெய்யப்பட வேண்டும்.
மேலும், அரசால் உருவாக்கப்படும் திட்டங்கள் அனைத்தும் சூழலியல் கண்ணோட்டத்தில் சூழலியலாளர்களுடன் இணைந்து உருவாக்கப்பட வேண்டும். இவற்றையெல்லாம், பன்னாட்டு – உள்நாட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சேவை செய்யக்கூடிய மோடி-ஷா கும்பலோ அல்லது எதிர்க்கட்சிகளோ செய்யாது. எனவே, பாசிச சூழலில் ஜனநாயகத்திற்காகப் போராடிக் கொண்டிருக்கும் புரட்சிகர-ஜனநாயக சக்திகள் தங்களது அரசியல் போராட்டத்துடன், சூழலியல் கண்ணோட்டத்தையும் வரித்துக்கொண்டு போராட்டங்களைக் கட்டியமைப்பது இன்றைய அத்தியாவசிய கடமையாகும்.
![]()
வாகைசூடி
(புதிய ஜனநாயகம் – அக்டோபர் 2025 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











