நெல்லை கருத்துக் கேட்புக் கூட்டம்: தாக்குதல் நடத்திய கல்குவாரி குண்டர்கள்

அறப்போர் இயக்கம் நடத்திய இந்த கருத்துக் கேட்புக் கூட்டத்தில் அடாவடியாக வன்முறையில் ஈடுபட்டவர்களைத் தடுக்காமல் போலீஸ் வேடிக்கை பார்த்துள்ளது. போலீஸ், அரசு அதிகாரிகள், மாவட்ட நிர்வாகம், அரசியல்வாதிகள் என அனைவருமே இந்த கொள்ளையில் ஒன்றிணைகின்றனர்.

நெல்லையில் 03.11.2025 அன்று அறப்போர் இயக்கம் சார்பில், கல்குவாரிகளால் பாதிக்கப்பட்ட மக்களிடம் நடத்தப்பட்ட கருத்துக் கேட்புக் கூட்டத்தில் 25க்கும் மேற்பட்டோரைக் கொண்ட கும்பல் புகுந்து, வன்முறையில் ஈடுபட்டு, தாக்கியுள்ளது. இத்தாக்குதலில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சுரேஷ் உள்ளிட்ட பகுதி மக்கள் காயமடைந்துள்ளனர்.

இக்கூட்டத்தில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் டாக்டர் V. சுரேஷ் தலைமையிலான குழு மக்கள் கருத்துகளைக் கேட்டறிந்தது. இந்தக் குழுவில் டாக்டர் சுரேஷ் தவிர தன்னாட்சி அமைப்பு கிராம சபை வல்லுநர் திரு நந்தகுமார், நீர் மேலாண்மை நிபுணர் திரு உதயகுமார், சுற்றுச்சூழல் நிபுணர் திரு தணிகைவேல் , விவசாய மேலாண்மை நிபுணர் திருமதி நந்தினி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இந்த நிகழ்வில் 100க்கும் மேற்பட்ட மக்கள் பங்கெடுத்து தாங்கள் சந்தித்து வரும் பாதிப்புகள் குறித்துத் தெரிவித்தனர்.

அதிகமான கல்குவாரிகள் இருக்கக்கூடிய ராதாபுரம் பகுதியிலிருந்து பெரும்பான்மையான மக்கள் வந்து தாங்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்துத் தெரிவித்தனர். முக்கியமாக அதிகப்படியான வெடி வெடிப்பதால் வீடுகள் அதிர்வது, நிலத்தடி நீர் பாதிப்பு ஏற்படுவது, குவாரி வேலைகளால் ராதாபுரம் வாய்க்காலில் தண்ணீர் வராதது மற்றும் விவசாய பாதிப்பு குறித்து மக்கள் பேசினர். மேலும் ஆலங்குளம், பொன்னாக்குடி, கயத்தாறு, தாதநூத்து, அடைமிதிப்பான்குளம், ரெட்டியார்பெட்டி, தாழையூத்து, தச்சநல்லூர், திருவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, திசையன்விளை, அம்பாசமுத்திரம் போன்ற பல இடங்களிலிருந்தும் குவாரிகளால் தங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் மக்கள் தெரிவித்தனர்.

கடந்த 2022- ஆம் ஆண்டு நெல்லை அடைமிதிப்பான்குளம் என்ற ஊரில் செயல்பட்ட குவாரியில் ஏற்பட்ட விபத்தில் அங்கு பணிபுரிந்த 4 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். இந்த விபத்திற்குப் பின் நெல்லை மாவட்டத்தில் இயங்கிய 54 குவாரிகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் 53 குவாரிகள் சட்டவிரோதமாக லட்சக்கணக்கான க்யூபிக் மீட்டர் கனிம வளங்களை கொள்ளை அடித்துக் கொண்டிருக்கின்றன என்ற உண்மை வெளிவந்து பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்போது நெல்லை மாவட்ட கலெக்டராக இருந்த விஷ்ணு இந்த 53 குவாரிகளையும் தற்காலிகமாக மூட உத்தரவிட்டார். சேரன்மகாதேவி சப் கலெக்டர் இதில் 24 குவாரிகளுக்கு 262 கோடி அபராதம் விதித்தார். சட்டவிரோதமாக இயங்கிய இந்த 53 குவாரிகளையும் முறையாக ஆய்வு செய்து அபராதம் விதித்தால் அது இன்னும் பலமடங்கு தொகையாக இருக்கும். ஆனால் அதன்பின் புவியியல் மற்றும் சுரங்கத்துறை (geology and mining) இயக்குநராக இருந்த நிர்மல் குமார் மாற்றப்பட்டு, அந்த பதவிக்கு ஜெயகாந்தன் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டார். பதவிக்கு வந்த சில நாட்களிலேயே இவர் 262 கோடி ருபாய் அபராதத்தை வெறும் 14 கோடியாக குறைத்ததோடு இந்த குவாரிகள் சட்டவிரோதமாகச் செயல்படவில்லை எனக் கூறி, கலெக்டர் விஷ்ணு மூட உத்தரவிட்ட அனைத்து குவாரிகளையும் இயங்குவதற்குச் சட்டவிரோதமாக உத்தரவிட்டார். மேலும் குவாரிகளுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையையும் தவணை முறையில் கட்டிக் கொள்ளலாம் எனவும் சலுகை வழங்கினார்.

நெல்லை மாவட்டத்தில் கல்குவாரி மாஃபியா கும்பல்கள், அரசு அதிகாரிகள் துணையோடு இந்த கனிமவளக் கொள்ளைகளைத் தொடர்ச்சியாக இன்றளவும் நடத்திக் கொண்டு வருகின்றன.

மாவட்ட நிர்வாகம் இந்த கொள்ளையர்களுக்கு ஆதரவாக நடந்து கொள்கிறது. முறையின்றி சட்டவிரோதமாக கல்குவாரிகள் இயங்குவது தெரிந்திருந்தும் அதைத் தெரிந்தே அனுமதிப்பது என்பதாக உள்ளது.

இந்த கருத்துக் கேட்புக் கூட்டத்தில் அடாவடியாக வன்முறையில் ஈடுபட்டவர்களைத் தடுக்காமல் போலீஸ் வேடிக்கை பார்த்துள்ளது. போலீஸ், அரசு அதிகாரிகள், மாவட்ட நிர்வாகம், அரசியல்வாதிகள் என அனைவருமே இந்த கொள்ளையில் ஒன்றிணைகின்றனர். தற்போது இந்த கருத்துக் கேட்புக் கூட்டத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்களில் தி.மு.க-வின் வழக்கறிஞர்கள், 24-ஆவது வார்டு வட்டச் செயலாளர் என்று அறியப்படுகிற வினோத்குமார், ஆரோக்கியசாமி ஆகியோர் முக்கியமானவர்களாக உள்ளதாக அறப்போர் இயக்கம் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் தி.மு.க நிர்வாகிகளுக்கும் இதில் சம்பந்தம் இருப்பது தெரிய வருகிறது. தி.மு.க-வின் நெல்லை கிழக்கு மாவட்ட அவைத்தலைவர், வள்ளியூர் வடக்கு ஒன்றியத் தலைவராக உள்ள கிரகாம்பெல் குடும்பத்திற்கு சொந்தமான எஸ்.ஏ.வி ப்ளூ மெட்டல், தி.மு.க எம்பி ஞானதிரவியம் மகன் தினகரனுக்கு சொந்தமான அன்னை ப்ளூ மெட்டல் உள்ளிட்ட கல்குவாரிகளுக்கு ஏற்கெனவே சட்டவிரோதமாகச் செயல்பட்டதற்காக அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால் அவை இன்றும் தொடர்ந்து இயங்குகின்றன.

மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பெரும்பான்மை கல்குவாரிகள் ராதாபுரத்தில் இயங்குகின்றன. ராதாபுரத்தில் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் சபாநாயகர் அப்பாவு. தி.மு.க-வின் மக்கள் பிரதிநிதியான இவர் இத்தாக்குதல் குறித்து, கல்குவாரிகளால் மக்கள் பாதிக்கப்படுவது குறித்து, இந்த கல்குவாரிகள் முறைகேடாக இயங்குவது குறித்து எந்த கருத்தையும் இதுவரை சொல்லவில்லை.

தமிழ்நாடு முழுவதும் கனிமவளக் கொள்ளைகள் நடைபெறுகிறது. புதுக்கோட்டை ஜகபர் அலி இதே போன்று கனிமவளக் கொள்ளையை வெளிக் கொண்டு வந்ததற்காக லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டார். மணல் கடத்தலைத் தடுக்க முயன்று பலர் கொல்லப்பட்டுள்ளனர்.

மாநிலத்தில் ஆளும் ‘திராவிட மாடல்’ அரசு கண்டும், காணாமல் இருந்து இந்த கொள்ளைகளை அனுமதிக்கிறது. பாசிசத்தை எதிர்ப்பதாகச் சொல்லிக் கொண்டு இயற்கை வளங்கள் கொள்ளையடிப்பதற்கு எதிரான உறுதியான நடவடிக்கைகள் எடுக்காமல் இக்கொள்ளைக்குத் துணை போகிறது. பாதிக்கப்படும் மக்கள் தங்களது கருத்துகளைச் சொல்வதற்குக் கூட ஜனநாயகம் இல்லை என்கிற நிலையை உருவாக்கி விட்டு பாசிசத்தை எதிர்ப்பதால் ஓட்டுப் போடுங்கள் என்று கோருவதை மக்கள் நம்ப மாட்டார்கள். இது பாசிசக் கும்பல்களுக்குச் சாதகமாகவே அமையும்.

1990-களில் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற மறுகாலனியாக்க கொள்கைகள் அமல்படுத்தப்பட்ட பின் கல்வி, மருத்துவம், சுகாதாரம், பொதுத்துறை நிறுவனங்கள், இயற்கை மற்றும் கனிம வளங்கள் அனைத்தும் கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்கப்படுகிறது. ஒன்றியத்தில் ஆளும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிச கும்பல் கார்ப்பரேட் பெருமுதலாளிகளுக்காகச் சட்டங்களைத் திருத்துகிறது. காடுகள், மலைகள், இயற்கை வளங்களை கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்கிறது. சத்தீஸ்கர், ஜார்க்கண்டில் பழங்குடி மக்களை வாழ்விடங்களிலிருந்து துரத்தியடிக்கிறது. மாவோயிஸ்ட் என்ற பெயரில் அப்பாவி பழங்குடி மக்களைக் கொலை செய்கிறது. மணிப்பூரில் இனக் கலவரங்களைத் தூண்டிவிட்டு இயற்கை வளங்களை கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்கிறது. இயற்கை மற்றும் கனிம வளங்களைக் காப்பதற்கான போராட்டத்தில் இந்த பாசிசக் கும்பலை எதிர்த்து நாம் களமிறங்க வேண்டியதும் அவசியமானதாகும்.

கல்குவாரிகளால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து தமிழ்நாடு அரசு பாதிக்கப்பட்ட மக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்த வேண்டும். அதில் மக்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் கணக்கிட்டு இழப்பீடு வழங்க வேண்டும். சட்ட விரோதமாக இயங்கும் கல்குவாரிகளுக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும். முறைகேடாக இயங்கிய, இழப்புகள் ஏற்படுத்திய கல்குவாரி முதலாளிகளுக்கு அபராதம் விதிப்பதோடு, சட்டவிரோதமாக குவாரியை இயக்கிய குற்றத்திற்காக, விபத்துகளை ஏற்படுத்தி தொழிலாளர்களைக் கொலை செய்த குற்றத்திற்காகக் கொலை வழக்கு பதிவு செய்து தண்டனை அளிக்க வேண்டும். இக்குற்றத்திற்கு உடந்தையாக இருந்த அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகளின் சொத்துக்களை நட்ட ஈடு இன்றி பறிமுதல் செய்து, சிறையில் அடைக்க வேண்டும்.

தகவல்
மக்கள் அதிகாரக் கழகம்,
நெல்லை மாவட்டம்.
93853 53605

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க