நவம்பர் 20 : மாவீரன் திப்பு சுல்தான் – 276 ஆம் ஆண்டு பிறந்தநாள்
திப்பு எங்கள் தோழன்!
பரப்புரை இயக்கம்
அன்பார்ந்த உழைக்கும் மக்களே, ஜனநாயக சக்திகளே!
மாவீரன் திப்பு சுல்தானின் பெயரை நமது பாடப்புத்தகங்களின் மூலம்தான் அதிகமானோர் கேள்விப்பட்டிருப்போம். பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தை எதிர்த்த ஒரு சுதந்திரப் போராட்ட வீரராக, ஈகியாக திப்புவை பாடப்புத்தகங்கள் நமக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளன.
ஆனால், ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி காவி கும்பல், திப்புவை மதவெறியர் என்றும், இந்துக்களின் எதிரி என்றும் தொடர்ச்சியாக அவதூறு செய்து வருகிறது. குறிப்பாக, கர்நாடகாவில், கடந்த பி.ஜே.பி ஆட்சிக் காலத்தில் 1 ம் வகுப்பு முதல் 10 ம் வகுப்பு வரையுள்ள மாநிலப் பாடத்திட்ட புத்தகங்களில் திப்புசுல்தானின் வரலாற்றை நீக்க முயற்சித்தது அப்போதைய எடியூரப்பா தலைமையிலான கர்நாடக பா.ஜ.க அரசு. இதற்கெல்லாம் உச்சமாக, கடந்த 2019 ம் ஆண்டு, அப்போது ஆட்சியில் இருந்த காவிக்கும்பல் கர்நாடகாவில் திப்பு சுல்தானின் பிறந்தநாளை அரசு விழாவாகக் கொண்டாடுவதை இரத்து செய்து உத்தரவிட்டது. திப்புவின் வரலாற்றை எப்படியாவது இருட்டடிப்பு செய்து விட வேண்டும் என்று காவிக் கும்பல் தொடர்ச்சியாக முயற்சித்து வருகிறது.
ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி கும்பலின் நடவடிக்கையை வெறுமனே திப்பு எதிர்ப்பு நடவடிக்கை என்று மட்டும் சுருக்கிப் பார்க்க முடியாது. அது, இஸ்லாமிய மக்கள் உள்ளிட்டு அனைத்து சிறுபான்மை மக்களுக்கு எதிரான நடவடிக்கையாகும். உழைக்கும் மக்களின் பார்ப்பனிய எதிர்ப்பு, பாசிச எதிர்ப்பு போராட்டங்கள், கார்ப்பரேட் சுரண்டலுக்கு எதிரான போராட்டங்களை திசை திருப்பும் நடவடிக்கையாகவே இதனைப் பார்க்க வேண்டும்.
எனவே, மாவீரன் திப்புவின் உண்மையான வீர வரலாற்றை உயர்த்திப் பிடிப்பது நமது கடமை.
திப்பு யார்?
திப்புவைப் பற்றிப் பேசுவதென்றால், அவரது தந்தை ஹைதர் அலியைப் பற்றிப் பேசாமல் கடந்து செல்ல முடியாது. எளிய குடும்பத்தில் பிறந்து, மைசூர் உடையார் மன்னனின் படையில் ஒரு குதிரைப்படை வீரனாகத் தொடங்கி, தனது போர்த்திறத்தாலும், அறிவுக்கூர்மையாலும் மைசூரின் மன்னனாக உயர்ந்தவர். மன்னர்கள் பலரும் காலனிய அடிமைகளாக சேவகம் செய்து கொண்டிருந்த சூழலில், ஆங்கிலேயக் காலனியாதிக்கவாதிகளுக்கு எதிராக, தனது குதிரைப்படைத் தளபதியான மராட்டியத்தின் தூந்தாஜி வாக் துணையோடு சமரசமின்றி போர் நடத்திய தீரர். ஆங்கிலேயக் காலனியாதிக்கவாதிகளின் நெஞ்சைப் பிளக்கும் ஈட்டி முனையாக மைசூர் விளங்க வேண்டும் என்பதே திப்புவுக்கு அவர் விட்டுச் சென்ற உயில். அப்படிப்பட்ட வீரனின் வாரிசான திப்பு தனது தந்தையைப் போல மகத்தான தலைவனாகத்தானே இருக்க முடியும்?
திப்புவின் காலகட்டம் என்பது, பிரிட்டிஷ், பிரெஞ்சு, போர்த்துக்கீசிய காலனியாதிக்கவாதிகளால் நமது நாடு ஆக்கிரமிப்புக்கு உள்ளான ஆரம்பக் காலகட்டம். இந்தியாவை ஆண்டு கொண்டிருந்த பல்வேறு பேரரசுகளும் ஓய்ந்த காலகட்டம். சிறு, குறு நில மன்னர்களில் பலரும் காலனியாதிக்கவாதிகளுக்கு சேவை செய்து, இந்திய மக்களுக்கு துரோகம் செய்து கொண்டிருந்த காலகட்டம். இத்தகைய சூழலில்தான் திப்பு மைசூரின் மன்னனாக இளம் வயதிலேயே பொறுப்பேற்றார். இந்த இளைஞன்தான் பிறகு, பிரிட்டிஷ் காலனியாதிக்கத்திற்கு குலை நடுக்கமாக மாறுவார் என கனவில் கூட பரங்கியர்கள் யோசித்திருக்க மாட்டார்கள்.
தன் வாழ்நாள் முழுக்க பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தை எதிர்த்து வீரச்சமர் புரிந்தான் மரணத்துக்கும் அஞ்சாத அந்த மாவீரன். “திப்பு நாமறிந்த மற்ற இந்திய மன்னர்களைப் போன்றவன் அல்லன். மற்ற மன்னர்கள் மத்தியில் திப்பு ஏற்படுத்தும் முன்னுதாரணத்தைக் கண்டு நான் அஞ்சுகிறேன்” என்று அன்றைய கவர்னர் ஜெனரல் மார்க்வெஸ் வெல்லெஸ்லி பதறுவதில் இருந்தே திப்புவின் தீரத்தை உணர முடியும்.
திப்புவின் வீரம் செறிந்த காலனியாதிக்க எதிர்ப்புப் போர் மட்டுமல்ல, திப்புவின் ஆட்சியில் உழைக்கும் மக்களுக்கு அவர் செய்த நன்மைகளும் என்றென்றும் நினைவுகூரப் படவேண்டியவை.
திப்பு : உழைக்கும் மக்களின் உற்ற தோழன்
- எந்தச் சாதி மதத்தைச் சேர்ந்தவரானாலும் சரி, உழுபவர்களுக்குத்தான் நிலம் சொந்தமாக இருக்க வேண்டும் என்று அறிவித்தார்.
- மைசூர் அரசில் தலித் மக்களுக்கு நிலங்கள் வழங்கி, சுயமரியாதை பெறச் செய்தார்.
- பார்ப்பனர்களின் நிலங்களுக்கு வழங்கப்பட்ட வரிவிலக்கை இரத்து செய்தார்.
- திப்புவின் ஆட்சியில் ”ஏழைகளையும், விவசாயிகளையும் சொல்லாலோ செயலாலோ துன்புறுத்த மாட்டோம்” என்று அதிகாரிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். 1792 போருக்குப் பின் வேலூர் தாலுக்காவிலிருந்து ஆங்கிலேயே அரசின் வரிக்கொடுமை பொறுக்க முடியாமல் 4000 விவசாயிகள் மைசூருக்குக் குடிபெயர்ந்தனர் என்ற செய்தியே திப்புவின் நல்லாட்சியை உணர்த்தும்.
- உள்நாட்டு வணிக்தை ஊக்குவித்தார். விவசாயத்துக்கான பாசன வளத்தை விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்தினார்.
- பனியா, மார்வாடி, பார்ஸி வணிகர்கள் பிரிட்டிஷ்காரனுக்கு நிதியுதவி செய்து இந்திய மக்களுக்கு துரோகம் செய்து கொண்டிருந்தபோது, திப்புவோ வணிகத்தையே மக்களை ஈடுபடுத்தும் காலனிய எதிர்ப்புப் போராக மாற்ற முயற்சித்தார்.
- மது விற்பனை, கஞ்சாவை தடை செய்தார். பாலியல் தொழிலில் பெண்களை ஈடுபடுத்துவதையும், ஆதரவற்ற சிறுமிகள் கோயிலுக்கு தேவதாசிகளாக விற்கப்படுவதையும் தடை செய்தார்.
- போர்களின் போது அப்பாவி மக்களை துன்புறுத்தக் கூடாது, பெண்களை கண்ணியமாக நடத்த வேண்டும், மக்களின் மதநம்பிக்கைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும், குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று தனது இராணுவத்துக்கு ஆணையிட்ட மனிதநேயர் திப்பு.

இவையெல்லாம் அவரின் சாதனைகளில் சில சான்றுகள் மட்டுமே. உழைக்கும் மக்களையும், ஒடுக்கப்பட்ட மக்களையும் நேசிப்பவராக அவர் இருந்ததனால்தான் பிரிட்டிஷாருக்கு எதிராக வலிமையாக நிற்க முடிந்தது.
இப்படிப்பட்ட அந்த மக்களின் மன்னன், 1799 ல் நடந்த, ஆங்கிலேயருக்கு எதிரான நான்காவது மைசூர்ப்போரில் துரோகிகளின் காலனிய அடிமைச் சேவை காரணமாக தோல்வியடைந்தார். ஆர்.எஸ்.எஸ் சின் மூதாதையர்களான மராட்டிய பேஷ்வா மன்னர்கள் (சித்பவன் பார்ப்பனர்கள்), திப்புவின் அமைச்சர்களான பூர்ணய்யா, மீர் சதக் ஆகியோரே அந்த துரோகிகள். தன்னுடன் சேர்ந்து போரிட்ட 11,000 வீரர்களுடன் தானும் ஒரு வீரனாக சீரங்கப்பட்டணம் போர்க்களத்தில் உயிர் துறந்தார் திப்பு.
திப்பு கொல்லப்பட்டார் என்ற செய்தி, தென்னிந்தியா முழுவதும் காலனியாதிக்கத்துக்கு எதிரான கொந்தளிப்பை உருவாக்கியது. அவர் பற்ற வைத்த காலனியாதிக்க எதிர்ப்புப் போர் முதல் இந்திய சுதந்திரப் போர் என்றழைக்கப்படும் வேலூர்ப்புரட்சியாக வெடித்தது என்பதே வரலாறாகும்.
சாதி, மதம் கடந்து எல்லோருக்காகவும் வாழ்ந்த, பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தை வீழ்த்துவதையே தன் வாழ்நாள் இலட்சியமாகக் கொண்ட மாவீரன் திப்புவை மதவெறியர் என்றும், இந்துக்களின் எதிரி என்றும் ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க, சங்கிக் கும்பல் கூசாமல் அவதூறு செய்கிறது.
ஆனால் காலனியாதிக்கத்திற்கு அடிமைச் சேவகம் செய்து, மக்களுக்குத் துரோகம் செய்த ஆற்காடு நவாப், வங்காள நவாப், ஹைதராபாத் நிஜாம், எட்டப்பன்களைப் பற்றி ஒரு வார்த்தை கூட சங்கிக் கூட்டம் பேசுவதில்லை. ஏனென்றால் ஆர்.எஸ்.எஸ் கும்பலின் மூதாதையர்களும் பிரிட்டிஷ் அடிவருடிகளாக இருந்தனர் என்பதே அதற்கான காரணமாகும்.
சொந்த நாட்டு மக்களுக்குத் துரோகமிழைத்த வரலாற்றைத் தவிர ஆர்.எஸ்.எஸ் க்கும் விடுதலைப் போராட்டத்திற்கும் துளியும் தொடர்பில்லை. ஆர்.எஸ்.எஸ் சின் தலைவரான சாவர்க்கர், அடக்குமுறைக்குப் பயந்து பிரிட்டிஷாரிடம் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்து மண்டியிட்டவர்; ஆர்.எஸ்.எஸ் தலைவர்களின் வரலாறு அனைத்தும் இத்தகைய துரோக வரலாறுதான்.
அதாவது, தங்களின் சுரண்டலை உத்தரவாதப்படுத்தும் பார்ப்பனிய கொடுங்கோன்மையை நிலைநாட்ட எத்தகைய கேடுகளையும் மக்களுக்குச் செய்யலாம் என்ற தத்துவத்தை வழிகாட்டியாக கொண்டு செயல்படும் இழிந்த பிறவிகள்தான் ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க கும்பல். அதைத்தான் வரலாறு நெடுக செய்து வந்துள்ளார்கள்.
இன்று, ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் இந்த ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க – அதானி, அம்பானி பாசிசக் கும்பலானது பார்ப்பன, பனியா, சிந்தி, மார்வாடி கார்ப்பரேட் கும்பல் மற்றும் ஏகாதிபத்திய கும்பலின் நலனுக்காக உழைக்கும் மக்களை ஒட்டச் சுரண்டி வருகிறது. கனிமவளக் கொள்ளைக்காக, நாட்டின் இயற்கை வளங்களை வரைமுறையின்றி அழித்து வருகிறது.
இதிலிருந்து திசை திருப்ப, இஸ்லாமிய மக்களுக்கெதிராக நாடு முழுக்க கலவரங்களை உருவாக்கி வருகிறது. மிலாடி நபி பண்டிகையில் ஐ லவ் முகம்மது என்ற முழக்கத்தை எதிர்த்து இஸ்லாமியர்களுக்கு எதிராக நடத்திய கலவரம், மேற்கு வங்கத்தில் சத்பூஜையை வைத்து கலவரத்தைத் தூண்டுவது, தமிழ்நாட்டில் திருப்பரங்குன்றத்தில் மதக் கலவரத்தை உருவாக்க முனைவது என சங்கிக் கும்பல் தொடர்ச்சியாக நாடு முழுக்க மக்களிடையே மோதலை உருவாக்க முயற்சித்து வருகிறது.
அவர்களை இரண்டாந்தர குடிமக்களாக ஆக்குவதற்கு அதிகாரத்தைப் பயன்படுத்தி பல்வேறு சட்டங்களை நிறைவேற்றி வருகிறது. இஸ்லாமியர்களையும், ஏழை எளிய மக்களையும் வாக்காளர் பட்டியலில் இருந்து அகற்றும் நோக்கோடும், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை கொல்லைப்புறத்தில் அமல்படுத்தும் வகையிலும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர மறு ஆய்வு பிஜேபியின் கிளையாக செயல்படும் தேர்தல் ஆணையத்தின் துணையோடு, தற்போது நடத்தப்பட்டு வருகிறது. இவை சமகால அபாயங்கள் ஆகும்.
ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க – அதானி, அம்பானி பாசிசக் கும்பல், பாசிச சர்வாதிகாரத்தை நம் மீது நிலைநாட்டுவதற்காக சட்டப்பூர்வமாகவும், சட்டவிரோதமாகவும் எல்லா வகையிலும் முயற்சித்து வருகிறது. ஆனால், இந்த அடக்குமுறைகளைத் தாண்டி, உழைக்கும் மக்கள் போராட்டக் களத்தில் நிற்கின்றனர்.
இது பாசிச எதிர்ப்புக் காலகட்டம். ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி – அதானி, அம்பானி பாசிசக் கும்பலால் ஒடுக்கப்படும் அனைத்துப் பிரிவு மக்களும் ஒன்றிணைந்து, பாசிச எதிர்ப்பு மக்கள் எழுச்சியை உருவாக்க வேண்டும். அத்தகைய பாசிச எதிர்ப்புப் போரில் உறுதியோடு களத்தில் நிற்பதற்கு திப்புவின் வீரஞ்செறிந்த வரலாறு நமக்கு வழிகாட்டுகிறது.
மாவீரன் திப்புவை நெஞ்சிலேந்துவோம்!
ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி – அதானி, அம்பானி பாசிசக் கும்பலுக்கு எதிராக பாசிச எதிர்ப்பு மக்கள் எழுச்சியை உருவாக்குவோம்!
பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசைக் கட்டியமைப்போம்!
வேண்டும் ஜனநாயகம் என முழங்குவோம்!
வேண்டும் ஜனநாயகம்!
- வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர மறு ஆய்வை (SIR) ரத்து செய்!
- வக்ஃப் திருத்தச் சட்டம் 2025 யை ரத்து செய்!
- இஸ்லாமியர்கள் உள்ளிட்டு அனைத்து அரசியல் சிறைவாசிகளையும் விடுதலை செய்!
- காஷ்மீரின் சிறப்புரிமைக்கான சட்டப்பிரிவு 370 ஐ மீண்டும் அமல்படுத்து!
- கனிமவளக் கொள்ளைக்காக பழங்குடி மக்கள் மீது நடத்தும் போரை (ஆபரேசன் ககர்) உடனே நிறுத்து!
- காசா மக்கள் மீதான இனவெறி இஸ்ரேலின் போருக்குத் துணைபோகாதே! இஸ்ரேலுடனான அனைத்து உறவுகளையும் இரத்து செய்!
- கார்ப்பரேட் கொள்ளைக்காக விவசாய நிலங்களைப் பறிக்காதே!
- அமெரிக்காவுக்கு நாட்டை அடிமையாக்கும் பாசிச மோடி அரசை முறியடிப்போம்!
மக்கள் அதிகாரக் கழகம்
மற்றும்
வீரத்தியாகி திப்பு சுல்தான் பேரவை,
கிருஷ்ணகிரி மாவட்டம்.
தொடர்புக்கு : 8754674757, 9042627576
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











