எச்சரிக்கை: புனைவுக் கதைகளை வரலாறாக்கும் காவிக் கும்பல்!

மக்களிடம் வேரூன்றுவதற்காக புனைவு நாயகர்களை உருவாக்கும் பாசிச கும்பல், அவர்களுக்கு சாதிய அடையாளங்களை கற்பித்து ’சாதித் தலைவர்’களாக மாற்றுகிறது. பின்பு, சாதிவெறியை மதவெறியோடு ஒன்றுகலக்கச் செய்கிறது.

0

காவி பாசிச கும்பல் தனக்கான மக்கள் அடித்தளத்தை நிறுவிக்கொள்ள பல வழிமுறைகளைக் கையாண்டு வருகிறது. அதில் ஒன்றுதான் வரலாற்றைத் திரிப்பதும், புனைவுக் கதைகளைக் கொண்டு போலி வரலாற்றைக் கட்டமைப்பதுமாகும். தனது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள பாசிச‌ கும்பல் பல கட்டுக்கதைகளை இட்டுக்கட்டுகிறது. கட்டுக் கதைகளின் மூலம் பல்வேறு ’வரலாற்று நாயகர்’களை உருவாக்குகிறது இந்த பாசிச கும்பல். அப்படி உருவாக்கிய புனைவு நாயகர்களை தமது அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்திக் கொள்கிறது.

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடம் மன்னிப்பு கோரிய சாவர்க்கர், வாஜ்பாய் போன்றவர்களை தேசிய விடுதலைக்காக போராடியவர்களாகவும் ‘தேச பக்தி’யின் சின்னங்களாகவும் முன்னிறுத்துகிறது காவிக் கும்பல். அவர்களை ‘இந்து’க்களின் தலைவர்களாக காட்டுகிறது. அதே சமயம், ஏகாதிபத்தியத்தை எதிர்த்து உயிர்நீத்த திப்பு சுல்தானை இஸ்லாமிய மன்னர் என்ற காரணத்திற்காக ‘இந்து’க்களை ஒடுக்கிய கோரமுகம் கொண்டவராக சித்தரித்து அதன்மூலம் இஸ்லாமிய வெறுப்பை ஊட்டி ‘இந்து ஒற்றுமையை’ ஏற்படுத்த முயற்சிக்கிறது. மேலும் பகத்சிங், பிர்சா முண்டா, அம்பேத்கர், திருவள்ளுவர் போன்றவர்களுக்கு காவிச் சாயம் பூசி விழுங்கிக் கொள்ள எத்தனிக்கிறது. இதன் மூலமும் தனது மக்கள் அடித்தளத்தை விரிவுபடுத்திக் கொள்ள முற்படுகிறது.

ஒக்கலிகர் தலைவர்களின் உருவாக்கம்

கடந்த மார்ச் 12 அன்று பெங்களூர் – மைசூர் நெடுஞ்சாலை திறப்பிற்காக கர்நாடகாவின் மாண்டியா மாவட்டத்திற்கு வரவிருந்த பிரதமர் மோடியை வரவேற்க, வரவேற்பு நுழைவாயில் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அதில் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்ததாக கருதப்படும் ஒக்கலிகர் தலைவர்களான உரி கவுடா மற்றும் நஞ்சே கவுடா மகாத்வாரா ஆகிய இருவரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.

அந்த ஒக்கலிகர் தலைவர்கள்தான் மைசூரை ஆட்சி செய்த திப்பு சுல்தானை கொன்றவர்கள் என்று ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க காவிக் கும்பலால் பிரச்சாரம் செய்யப்படுகிறது. ஆனால், திப்புவோ பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வீர மரணம் அடைந்தவர் என்பது வரலாற்று உண்மை.

ஒக்கலிகர் சமூகம் பெரும்பான்மையாக வகிக்கும் மாண்டியா மாவட்டத்தில் காவிக் கும்பலால் வரவேற்பு நுழைவாயிலில் பயன்படுத்தப்பட்ட ஒக்கலிகர் தலைவர்கள் எனக் கூறப்பட்டவர்களின் பெயர்களும் புகைப்படங்களும் போலியானவை என விமர்சனத்திற்கு உள்ளாகின. ஆரம்பத்தில் காவிக் கும்பல் அதை ஏற்க மறுத்தது.


படிக்க: மக்களைக் கொல்லும் வாட்சப் வதந்திகளின் முன்னோடி பாரதிய ஜனதா !


உரி கவுடா, நஞ்சே கவுடா ஆகியோருக்கு உருவம் கொடுக்க தமிழ்நாட்டில் மருது பாண்டியர்களை சித்தரிக்கப் பயன்படுத்தப்படும் படங்களைப் பயன்படுத்தியது இந்த காவிக் கும்பல். தங்களது புரட்டுகள் அம்பலப்பட்டுப் போனதும் வரவேற்பு நுழைவாயிலையே மாற்றிவிட்டது.

மேலும், காவி பாசிச கும்பல்  திப்பு சுல்தானை இந்து விரோதியாக சித்தரிக்க முயன்றது. கர்நாடகா மாநில பா.ஜ.க அரசு ஆண்டுதோறும் நடத்தப்படும் திப்பு ஜெயந்தி விழாவை ரத்து செய்தது; ”திப்பு எக்ஸ்பிரஸ்” ரயிலின் பெயரை ”உடையார் எக்ஸ்பிரஸ்” என மாற்றியது. பள்ளி பாடப்புத்தகங்களில் வரும் திப்பு பற்றிய பாடங்களை நீக்கியது; சிலவற்றை தங்களின் இந்துத்துவா கதையாடலுக்கு ஏற்ப மாற்றிவிட்டது.

வரலாற்று ஆசிரியர்களோ உரி கவுடா மற்றும் நஞ்சே கவுடா ஆகியோர் உண்மையில் இருந்ததற்கான ஆதாரங்கள் எதுவுமில்லை என்றும் ஒக்கலிகர் சமூக மக்களின் வாக்குகளை கவருவதற்காக காவிகளால் உருவாக்கப்பட்ட கதாபாத்திரங்கள்தான் என்றும் கூறுகின்றனர். மேலும், திப்பு சுல்தான் நான்காவது ஆங்கிலோ-மைசூர் போரின் போது (1799) பிரிட்டிஷால் கொல்லப்பட்டார் என்பது வரலாற்றுப்பூர்வமாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது என்றும் கூறுகின்றனர்.

கர்நாடகாவில் மட்டுமல்ல, உத்தரப்பிரதேசத்தில் ராஜா சுஹேல்தேவ் மற்றும் ராம்பியாரி குஜ்ஜார் ஆகியோரை பல கட்டுக்கதைகள் மூலம் முன்னிலை படுத்துகிறது ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிச கும்பல். ஆனால்,  இவர்கள் கூறும் வரலாற்று நாயகர்களின்‌ இருப்பே கேள்விக்குரியதாகும். இவர்கள் கூறும் கதைகளில் வரும் பாத்திரங்களின் இருப்பே சந்தேகத்திற்குரியது அல்லது கட்டுக்கதை என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.

பழம்பெரும் குஜ்ஜார் போராளி

அதேபோல, கடந்த மார்ச் 11 அன்று முன்னால் பா.ஜ.க தலைவரும், தற்போதைய துணை குடியரசுத் தலைவருமான ஜக்தீப் தன்கர், துருக்கிய படையெடுப்பாளர் தைமூர்-ஐ வெற்றி கொள்வதற்காக ராம்பியாரி குஜ்ஜார் (Rampyari Gurjar) 40,000 பெண் போராளிகளை திரட்டிப் போரிட்டார் என்று உத்தரப் பிரதேசத்தின் மீரட் நகரில் நடந்த ஒரு நிகழ்வில் கூறினார்.

தன்கருக்கு முன்னதாக கடந்த ஜனவரியில் குஜ்ஜார் சமூகத்தை புகழும் பொருட்டு ராம்பியாரி குஜ்ஜாரின் வீரத்தைப் புகழ்ந்து பேசினார் மோடி. மேலும், வரலாற்றில் அவர்களுக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றும், புதிய இந்தியா அத்தவறுகளை சரி செய்து வருகிறது என்றும் கூறினார்.

ராம்பியாரி குஜ்ஜாரின் வீரம் பற்றிய இக்கதை, 1398 ஆம் ஆண்டு துருக்கிய படையெடுப்பாளர் தைமூருடன் நடந்த போரின் போது நடந்த நிகழ்வாக சித்தரிக்கப்படுகிறது.  ராம்பியாரி குஜ்ஜாரின் ஈட்டி தைமூரைத் தாக்கி, அதனால் ஏற்பட்ட தொற்றினால் தைமூர் மரணித்ததாக கூறப்படுகிறது.

ஆனால், வரலாற்றாய்வாளர்களோ 1405-ஆம் ஆண்டில் சீனாவின் மிங் சாம்ராஜ்யத்திற்கு எதிரான படையெடுப்பின் போது கடுமையான குளிர்காலத்தில் நோய்வாய்ப்பட்டதால் தைமூர் இறந்தார் என்று கூறுகின்றனர்.

“1398 போரில் தைமூர் காயம் அடைந்ததாலும் வீரர்கள் சோர்வுற்று பல இறப்புகள் நிகழ்ந்ததாலும், தைமூர் அப்பகுதியை விட்டு நகர்ந்தார் என்பதை நாங்கள் அறிவோம். ஆனால், அந்த போரில் ஏற்பட்ட காயங்கள் தைமூர் மரணத்திற்கு பங்களித்திருக்க சாத்தியமில்லை; ஏனெனில் அவர் இடைப்பட்ட காலத்தில் மிகவும் சுறுசுறுப்பாக இருந்தார்” என டெல்லி பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியர் மனிஷா சௌத்ரி கூறுகிறார்.

ராஜா சுஹேல்தேவ் கதை

உத்தரப்பிரதேசத்தின் பிற பகுதிகளான பஹ்ரைச் (Bahraich) போன்றவற்றில் முன்பே மக்களிடையே கதையாடல் மூலம் நன்கு அறியப்பட்ட பதினொன்றாம் நூற்றாண்டின் ஆட்சியாளர் ராஜா சுஹேல்தேவ்-ஐ (Raja Suheldev) பா.ஜ.க பயன்படுத்திக் கொண்டது. கதையாடலின் படி, சுஹெல்தேவ் 1034-ஆம் ஆண்டில் காசி சையத் சலர் மசூத் (Ghazi Saiyyad Salar Masud) என்ற முஸ்லீம் போர்வீரரைக் கொன்றவர் என கூறப்படுகிறது. மசூத் துருக்கிய படையெடுப்பாளரான முகமது கஜினியின் மருமகன் என்று கூறப்படுகிறது.

ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங்க பரிவார குழுக்கள் 1034 பஹ்ரைச் போரின் வெற்றியை “இந்து விஜய் உத்சவம்” (Hindu Vijay Utsav) என்று கொண்டாடின. இதன்மூலம், சுஹேல்தேவை ஒரு முஸ்லீம் படையெடுப்பாளரை தோற்கடித்து இந்து நம்பிக்கையை பாதுகாத்த பாதுகாவலராக முன்னிறுத்தியது பாசிசக் கும்பல்.

2016-ஆம் ஆண்டில், பஹ்ரைச்சில் சுஹேல்தேவ் சிலையை பா.ஜ.க தலைவர் அமித்ஷா திறந்து வைத்தார். 2018-ஆம்‌ ஆண்டில், ராஜா சுஹேல்தேவ் நினைவாக ஒரு தபால் தலையை மோடி வெளியிட்டார். யோகி ஆதித்யநாத் அரசு, மசூத்-ஐ சுஹேல்தேவ் கொன்றதாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தது.

உத்தரப்பிரதேசத்தின் பல பகுதிகளில் இருக்கும் ஓ.பி.சி பிரிவைச் சேர்ந்த ராஜ்பார் (Rajbhar) சாதியினரும் தலித் பிரிவைச் சேர்ந்த பாசி (Pasi) சாதியினரும் சுஹேல்தேவ் தங்கள் சாதியைச் சேர்ந்தவர் என்று உரிமை கொண்டாடி வருகின்றனர். இந்த இரு சாதியினரின் வாக்குகளை கவர்வதற்காகவே பா.ஜ.க சுஹேல்தேவை முன்னிறுத்துகிறது.

சுஹேல்தேவ் குறித்து கூறப்படும் வரலாற்றின் உண்மைத்தன்மையை பற்றி உறுதியாக கூற இயலவில்லை என்றும் அரசியல் காரணங்களுக்காக தற்போது உருவாக்கப்படுகிறார் என்றும் வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.


படிக்க: பொய், பித்தலாட்டம், கலவரம் இவைதான் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.வின் அரசியல் ! | ரவி வீடியோ


இவ்வாறு இஸ்லாமிய வெறுப்பு மூலம் ‘இந்து’ மதவெறி ஊட்டி தனது இந்துத்துவா படைக்கு அடியாட்களை சேர்த்து வருகிறது இக்கும்பல். மக்களிடம் வேரூன்றுவதற்காக புனைவு நாயகர்களை உருவாக்கும் பாசிசக் கும்பல், அவர்களுக்கு சாதிய அடையாளங்களை கற்பித்து ’சாதித் தலைவர்’களாக மாற்றுகிறது. பின்பு, அந்த ’சாதித் தலைவர்’கள் இஸ்லாமிய படையெடுப்பாளர்களிடமிருந்து இந்து மதத்தை பாதுகாத்தவர்கள் என்று கதைகளை பரப்பி சாதிவெறியை மதவெறியோடு ஒன்றுகலக்கச் செய்கிறது. இதன்மூலம், சாதிய மனநிலைக்கு ஆட்பட்டிருக்கும் ஒரு குறிப்பிட்ட சாதியை சேர்ந்த பெருந்திரளானோரை தமது படைகளில் திரட்டி கொள்ள முயற்சி செய்கிறது. காவிக்கும்பலின் இந்த யுக்தியை அம்பலப்படுத்தி முறியடிக்க வேண்டியது நமது கடமை.

பொம்மி
செய்தி ஆதாரம்: ஸ்கிரால்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க