”தோழர்களே, வடுகன் ராமசாமி நாயக்கன் ஒரு ஆங்கிலேய அடிவருடி என்பதற்கு ஏதாவது நல்ல ஆதாரம் கிடைக்குமா?” எனக் கேட்டார் ஒரு தம்பி. அது சீமானின் தம்பிகள் கொண்ட வாட்சப் குழுமம். உடனடியாக தனது ஐரோப்பா பயணத்தின் போது நிர்வாண சங்கத்திற்கு பெரியார் சென்ற சமயம் எடுத்த புகைப்படங்களை எங்கிருந்தோ பீறாய்ந்து வந்து பதிவிட்ட இன்னொரு தம்பி, “இதை விடப் பெரிய ஆதாரம் தேவையில்லை” என பதில் கொடுத்தார்.
”அதுக்கு இது பதில் இல்லையே” என தலை சுற்றியது. உற்ற நண்பர்கள் சிலருடைய ’சதியின்’ விளைவாக எனது தொலைபேசி எண் மேற்படி வாட்சப் குழுமத்தில் சேர்க்கப்பட்டிருந்தது. பெரும்பான்மையான வாட்சப் குழுமங்கள் இவ்வாறு எந்த அடிப்படையோ, ஆதாரமோ அற்ற தகவல்களாலேயே நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது. திருநள்ளாரு சனீஸ்வரன் கோவிலின் மேல் சுழல மறுக்கும் செயற்கைக்கோளில் துவங்கி ஹீலர் பாஸ்கர் வகையறாக்களின் இலுமினாட்டி சதிக் கோட்பாடுகள் வரை வாட்சப்பில் அலசப்படாத இகலோக மற்றும் பரலோக விசயங்கள் ஏதும் இல்லை.
இவையெல்லாம் வெறும் முட்டாள்தனங்கள் என சிரித்துக் கடந்து கொண்டிருந்த வாட்சப் பொய் தொழிற்சாலை தற்போது அபாயகரமான எல்லைகளைத் தொட்டிருக்கிறது. வாட்சப் வதந்திகளின் விளைவாய் நாடெங்கும் கடந்த சில மாதங்களில் சுமார் 29 பேர் படுகொலை செய்யப்பட்டிருக்கும் செய்தி துணுக்குற வைக்கிறது.
***
“உங்கள் குழந்தைகளை வீட்டை விட்டுத் தனியே அனுப்பாதீர்கள். இது வரை இம்மாவட்டத்தில் 52 குழந்தைகளைக் கடத்தியிருக்கிறார்கள். போலீசார் அந்தப் புகார்களைப் பற்றி வெளிப்படையாகத் தெரிவிக்காமல் மறைக்கிறார்கள்”
“ராஜஸ்தானில் இருந்து வந்த குழந்தைக் கொள்ளையர்கள் வந்தவாசிக்கு பக்கத்தில் குழந்தைகளைக் கடத்தும் போது போலீசாரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்”
”ஆந்திராவில் இருந்து குழந்தைகளைக் கடந்த 400 பேர் கொண்ட கும்பல் ஒன்று வந்துள்ளது”
- இவையெல்லாம் வாட்சப்பில் பரவி வரும் வதந்திகளின் மாதிரிகள்.

சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்தவர் ருக்மணி. வயது 65. கடந்த மே மாதம் மலேசியாவில் இருந்து வந்த உறவினர்களுடன் குலதெய்வக் கோயிலைத் தேடி திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே உள்ள அதிராமூர் கிராமத்துக்கு காரில் சென்றுள்ளார். குலதெய்வக் கோவிலுக்குச் சென்று பல வருடங்கள் ஆகி விட்டபடியால் பாதையை மறந்து விட்ட அந்தக் குடும்பம் கிராமத்தைச் சேர்ந்தவர்களிடம் வழி விசாரித்துள்ளனர். அப்போது அருகே விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளுக்கு சாக்லேட் கொடுத்துள்ளார் ருக்மணி. இதைக் கண்ட பெண் ஒருவர் குழந்தைக் கடத்தல் கும்பல் என சந்தேகப்பட்டு கூச்சலிட்டுள்ளார்.
உடனே கிராமத்தைச் சேர்ந்த சுமார் 200 பேர் கொண்ட கும்பல் அந்தக் குடும்பத்தைச் சூழ்ந்து கொண்டு அடித்துத் துவைத்துள்ளது. தாக்குதலில் ருக்மணி அதே இடத்தில் மரணமடைந்துள்ளார். அவரோடு சென்ற குடும்பத்தினரும் கார் ஓட்டுனரும் படு மோசமாக காயமடைந்துள்ளனர். பின்னர் போலீசார் விசாரித்த போது குழந்தைக் கடத்தல் கும்பல் குறித்து வாட்சப் மூலம் வதந்திகள் பரவியதையும் அதை நம்பிய கிராமவாசிகள் இக்குடும்பத்தின் மீது தாக்குதல் நடத்தியதையும் கண்டறிந்து சிலரைக் கைது செய்துள்ளனர்.
திருவண்ணாமலையை அடுத்து வேலூரிலும் இதே போன்ற சம்பவம் நடந்துள்ளது. ஆந்திராவில் இருந்து ‘பிள்ளை பிடிக்கும்’ கும்பல் வந்துள்ளதாக வாட்சப் மூலம் பரவிய வதந்தியை அடுத்து வேலூரை அடுத்த கிராமம் ஒன்றில் இளைஞர்கள் கொண்ட கண்காணிப்புக் குழுக்கள் அமைத்து இரவு நேரங்களில் ரோந்து சுற்றி வந்துள்ளனர். அப்போது அந்தப் பகுதியில் நடமாடிய வட இந்தியர் ஒருவரைப் பிடித்து விசாரித்துள்ளனர். தமிழ் தெரியாமல் இந்தியில் பதிலளித்தவரை ’பிள்ளை பிடிப்பவன்’ என சந்தேகப்பட்டு தாக்கியுள்ளனர். படுகாயமடைந்த அப்பாவி இளைஞர் போலீசாரால் மீட்கப்பட்டு பின்னர் சி.எம்.சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.
கோவையை அடுத்த வடவள்ளி பகுதியில் சில மாதங்களுக்கு முன் வட இந்திய கொள்ளையர்கள் வீடு புகுந்து திருடுகின்றனர் என்றும், ஏ.டி.எம் இயந்திரங்களைக் கொள்ளையடிக்கிறார்கள் என்றும் பரவிய வதந்தியை அடுத்து அப்பகுதியில் வாடகைக்கு அறையெடுத்துத் தங்கியிருந்த வடமாநில கூலித் தொழிலாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.
***

தமிழகத்தில் இந்த நிலை என்றால், கும்பல் கொலைகளுக்கு பெயர்பெற்ற வடமாநிலங்களில் இதே போன்ற சம்பவங்கள் சமீப காலத்தில் புயல் வேகத்தில் அதிகரித்து வருகின்றன. மராட்டிய மாநிலம் தூலே மாவட்டத்தை அடுத்த சாக்ரி எனும் சிறு நகரத்தில் நாடோடி இனத்தைச் சேர்ந்த ஐந்து பேரை குழந்தைகளைக் கடத்த வந்தவர்கள் என சந்தேகித்து அடித்தே கொன்றுள்ளனர். இதைத் தடுக்கச் சென்ற போலீசாரையும் அக் கும்பல் தாக்கியதில் இரண்டு போலீசார் படுகாயமடைந்துள்ளனர். சிறுநீரகங்களுக்காக குழந்தைகளைக் கடத்தும் கும்பல் ஒன்று ஊருக்குள் புகுந்திருப்பதாக வாட்சப் மூலம் பரவிய வதந்தியை அடுத்தே இச்சம்பவம் நடந்துள்ளது.
அது போலவே மகாராஷ்டிர மாநிலம் மாலேகானில், கடந்த சில வாரங்களாக வீடியோ ஒன்று வாட்சப் மூலம் பரவி வந்துள்ளது. பெங்களூருவில் எடுக்கப்பட்ட அந்த வீடியோவில், சாதாரண உடையில் வரும் பெண் ஒருவர் அந்த உடைக்கு மேல் இசுலாமியர்கள் அணியும் புர்காவை அணிகிறார். இவர்கள் குழந்தைக் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் என மராத்தியில் எழுதப்பட்ட வாசகங்களோடு இந்த வீடியோ பரவியுள்ளது. இதே போன்ற மற்றொரு வீடியோ உருது வாசகங்களோடு இசுலாமியர்கள் மத்தியில் பரவியுள்ளது.
இந்நிலையில் கடந்த ஜூலை 1-ம் தேதி மாலேகானுக்கு ஐந்து பேர் கொண்ட குடும்பம் ஒன்று வந்துள்ளது. கூலித் தொழிலாளர்களான இவர்களை குழந்தைக் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் என சந்தேகித்த உள்ளூர்வாசிகள் ஆயிரக்கணக்கில் திரண்டு சுற்றிவளைத்து தாக்கியுள்ளனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசாரின் மேலும் தாக்குதல் தொடுத்த கும்பல், போலீசாரின் வாகனங்களையும் உடைத்து தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர். அதிர்ஷ்டவசமாக படுகாயங்களோடு சம்பந்தப்பட்ட குடும்பம் காப்பாற்றப்பட்டுள்ளது.

அசாம் மாநிலம் கவுகாத்தியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் விடுமுறையைக் கழிக்க கார்பி அங்லோங் எனும் பகுதிக்குச் சென்ற போது ‘சந்தேகத்துக்குரிய’ தோற்றத்தில் இருந்ததால் உள்ளூர்வாசிகளின் கும்பலால் தாக்கப்பட்டுள்ளனர். கடந்த மாதம் 28-ம் தேதி திரிபுராவில் மூன்று பேர் இதே போல் தாக்கி கொல்லப்பட்டுள்ளனர். வதந்திகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த திரிபுரா அரசு தெரு நாடக கலைஞர்களை ஏற்பாடு செய்திருந்தது; அதன்படி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யச் சென்ற நாடகக் கலைஞர் ஒருவரையே ‘குழந்தைக் கடத்தல் பேர்வழி’ என சந்தேகித்து தாக்கியுள்ளனர்.
***
சமூக வலைத்தள வதந்திகளால் ஒரு அரசையே அமைக்க முடியும் என்பதற்கு இந்தியாவே உதாரணம். இந்தியா படிப்பறிவற்றவர்கள் நிரம்பிய ஒரு மூன்றாம் உலக நாடு என்றால், ’படித்தவர்கள்’ நிறைந்த முதலாம் உலக நாடான அமெரிக்கத் தேர்தலின் முடிவுகளையே கூட இத்தகைய வதந்திகளால் திருத்த முடியும் என்பது நிரூபணமாகியுள்ளது.
அரசியல் அரங்கில் பெரும் தலைக்குடைச்சலாக இருந்த சமூக வலைத்தள வதந்திகளுக்கு சாதாரண மக்களை பலியாக்கும் வல்லமை இருப்பதையே மேற்படி நிகழ்வுகள் எடுத்துக் காட்டுகின்றன.
கல்வியறிவும் விழிப்புணர்வும் குறைவாக இருப்பதே இதற்கெல்லாம் காரணம் எனவும், மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டினால் இது போன்ற சம்பவங்களைத் தவிர்க்க முடியும் எனவும் சில என்.ஜி.ஓ அறிவுஜீவிகள் முன்வைக்கின்றனர். ஆனால், வதந்திகளுக்கும் பொய்களுக்கும் பலியாவது கல்வியறிவு தொடர்புடைய பிரச்சினை அல்ல. கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது திருவாளர் மோடி அவர்களால் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நினைவுள்ளதா? ”15 லட்சம்” “2 கோடி” ”1ரூபாய் = 1 டாலர்” “மலிவு விலைப் பெட்ரோல்” ”கருப்புப் பண மீட்பு”… இவற்றையெல்லாம் கேள்விகளே இல்லாமல் ஆதரித்தவர்களில் பெரும்பாலானோர் ‘படித்தவர்கள்’ தாம்.

ஏன் நம்பினார்கள்? அன்றைக்கு மோடி எதைச் சொன்னாலும் நம்புவதற்கு தோதான ஒரு அரசியல் பொருளாதார சூழல் நிலவியது. தொடர்ச்சியாக வெளி வந்து கொண்டிருந்த காங்கிரசின் ஊழல்கள் குறித்த செய்திகள், கருப்புப் பண மீட்புக்காக ராம்தேவும் – லோக்பாலுக்காக அன்னா ஹசாரேவும் நடத்திய ‘போராட்டங்கள்’, வேலை வாய்ப்புகள் அருகி வந்த நிலைமை – இவை எல்லாமுமாகச் சேர்ந்து ஒருவிதமான நம்பிக்கையற்ற விரக்தியான அதிருப்தி மனநிலை மக்களிடையே உருவாகியிருந்தது. மக்களிடம் ஏற்பட்டிருந்த அதிருப்தியை மேலும் மேலும் கொழுந்து விட்டு எரியச் செய்யும் வேலையை ஊடகங்களின் மூலம் வெற்றிகரமாக நடத்தியது பாரதிய ஜனதா.
அந்தத் தேர்தலில் பாரதிய ஜனதா அடைந்த மாபெரும் வெற்றிக்குப் பின்னே சமூக வலைத்தளங்களுக்கும், அதில் பரப்பப்பட்ட வதந்திகளுக்கும் மிக முக்கிய பங்கிருந்தது என்பதை இன்று பலரும் ஒப்புக் கொள்கின்றனர்; அகமதாபாத்தில் உதித்த சீன மேம்பாலத்தை மறக்க முடியுமா என்ன? அதே நேரம் அந்த வதந்திகளுக்குப் பலியாகத் தயாராக இருந்த சமூகச் சூழலையும் நாம் கருத்தில் கொண்டாக வேண்டும். எப்படியிருந்தாலும், இந்தியாவைப் பொறுத்தவரை சமூக வலைத்தளங்களை முதன் முறையாக வெற்றிகரமான பிரச்சார ஆயுதமாக பயன்படுத்திய கட்சி என்கிற பெருமை பாரதிய ஜனதாவையே சாரும்.
திண்ணை அரட்டைக் கச்சேரிகளின் மெய்நிகர் வடிவமான சமூக வலைத்தளங்களின் பரவலும், வதந்திகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் பிரமிக்கத்தக்க முறையில் வேகமெடுத்த நிகழ்வும் ஏறத்தாழ அக்கம் பக்கமாகவே நடந்தேறின. இதில் கோழி முதலா முட்டை முதலா என்கிற ஆய்வுகளுக்குள் நாம் செல்ல வேண்டியதில்லை. நான்காண்டுகள் கழித்து இப்போது நிலைமை ஒரு புதிய கட்டத்தை அடைந்துள்ளது. மோடியின் வாக்குறுதிகள் அனைத்தும் வாயைப் பிளந்து விட்ட நிலையில் நான்காண்டுகளுக்கு முன்பிருந்த அதே விரக்தி மனப்பான்மையின் வீரியம் கூடியுள்ளது. தோற்றுப் போன பொருளாதாரம் வேலையற்றவர்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ள நிலையில், வண்டியின் அச்சு முறிவதற்கான கடைசி மயிலிறகுகளாக பணமதிப்பழிப்பும், ஜி.எஸ்.டியும் வந்து சேர்ந்தன.

இப்போதும், தனது தோல்விகளை சமூக வலைத்தளங்களின் மூலம் பரவ விடும் பொய்களின் மூலமே பாரதிய ஜனதா எதிர்கொண்டு வருகிறது. அவுரங்கசீப்பில் இருந்து ஜவகர்லால் நேரு வரை அனைவரையும் வில்லன்கள் பட்டியலில் அடைத்து விட்ட பாரதிய ஜனதாவின் இணையப் போராளிகள், கேள்வி கேட்கும் அனைவருக்கும் ‘நக்சலைட்டுகள்’ என ஞானஸ்நானம் வழங்கி வருகின்றனர். உண்மை எது பொய் எது என்று பிரித்துப் பார்க்க முடியாத ஒரு சமூகம் உருவாகியிருப்பதில் பாரதிய ஜனதாவின் பங்கு கணிசமானது.
***
வாட்சப் வதந்திகளின் விளைவாய் நடக்கும் கும்பல் படுகொலைகளை பாரதிய ஜனதாவின் கணக்கில் எழுதுவதல்ல எமது நோக்கம். ஆனால், வதந்திகளை சரளமாக ஏற்றுக் கொள்ளும் படிக்கு இந்தியச் சமூகத்தை ‘கட்டமைத்த’ பெருமையை மட்டும் அக்கட்சிக்கு விட்டுத் தருவதுதான் முறை.
தோழர் ஒருவரிடம் சமூக வலைத்தளங்களில் வதந்திகள் குறித்து சில வருடங்களுக்கு முன் பேசியது நினைவுக்கு வருகிறது. பல்லாண்டுகளாய் நிலபிரபுத்துவ மதிப்பீடுகளில் மூழ்கிக் கிடந்த பிற்போக்கான இந்திய சமூகத்திற்கு இணையத்தின் பயனாய் திடீரெனக் கிடைத்துள்ள சுதந்திரத்தை எப்படிக் கையாள்வதெனத் தெரியவில்லை என்றவர், எப்படியும் அதை எதிர்கொண்டு மேற்குலகைப் போல் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவதைக் கற்று கொள்ள சில காலம் பிடிக்கும் என்றார்.
இப்போதைக்கு அந்த சில காலத்திற்காக காத்திருப்பதைத் தவிற வேறென்ன செய்வதெனத் தெரியவில்லை.
– சாக்கியன்
செய்தி மூலம் :
- How A Video From Karnataka Spurred A Mob Attack In Malegaon
- 23 Arrested for Lynching 5 Persons Over WhatsApp Rumour in Dhule
- TN horror: Mob mistakes 65-year-old woman for child trafficker, lynches her to death
- As mob lynchings fueled by WhatsApp messages sweep India, authorities struggle to combat fake news
- A single WhatsApp rumour has killed 29 people in India and nobody cares