மாவீரன் திப்பு சுல்தான் 275 ஆம் ஆண்டு
வேண்டும் திப்பு
பரப்புரை இயக்கம்
அன்பார்ந்த உழைக்கும் மக்களே!
விவசாயிகளின் டெல்லி சலோ போராட்டம், சி.ஏ.ஏ வுக்கு எதிரான இஸ்லாமியர்கள் உள்ளிட்ட உழைக்கும் மக்களின் போராட்டம், நீட் தேர்வுக்கெதிரான மாணவர்களின் போராட்டம், வேலையின்மைக்கெதிரான இளைஞர்களின் போராட்டம், கார்ப்பரேட்டுகளிடமிருந்து காடுகளைப் பாதுகாப்பதற்கான பழங்குடி மக்களின் போராட்டம்,மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம், தனது நிலத்தைப் பாதுகாக்க குக்கி மக்கள் நடத்தும் போராட்டம் என இவை அனைத்தும் கடந்த காலத்திலும், நிகழ்காலத்திலும் ஆர்.எஸ்.எஸ், பிஜேபி – அம்பானி, அதானி பாசிச கும்பலுக்கெதிராக கோடிக்கணக்கான மக்களை வீதிகளில் திரளச் செய்துள்ளன.
உழைக்கும் மக்களின் இத்தகையை போராட்டங்கள்தான் பாசிசக் கும்பலை குலைநடுங்கச் செய்து வருகின்றது. பாசிசக் கும்பலுக்கெதிரான போராட்டங்கள் நாடு முழுக்க பல்வேறு முனைகளில் நெருப்புக் கனலாக பரவிக் கொண்டிருக்கும் ஒரு வரலாற்றுக் காலகட்டத்தில் நாம் திப்புவை நினைவு கூர்கிறோம் என்பது முக்கியமானது.
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் குலைநடுக்கம்
1782 டிசம்பரில், ஹைதர் அலி இறந்த பின்னர், இளம் வயதிலேயே அரசுரிமையைப் பெறுகிறார், திப்பு. 1782 – 84 ஆங்கிலேயர்களுடனான போரில் வீரத்துடன் போரிட்டு ஆங்கிலேயச் சிப்பாய்களையும், தளபதியையும் சிறைப்பிடிக்கிறார்.
அதன் பின்னர், மூன்றாவது மைசூர்ப் போர் என்று அழைக்கப்படும் காலனியாதிக்க எதிர்ப்புப் போர் 1790-92 காலகட்டத்தில் நடைபெற்றது. ஆற்காடு நவாப், தொண்டைமான், ஐதராபாத் நிஜாம் உள்ளிட்ட துரோகிகள் ஆங்கிலேயன் பின்னால் அணிவகுக்கின்றனர். இப்போரில் திப்புவின் சீரங்கப்பட்டினம் கோட்டை 30 நாட்களுக்கு மேல் எதிரிகளின் முற்றுகைக்கு இலக்கான போதிலும் எதிரிகளால் கோட்டைக்குள் நுழைய முடியவில்லை. இப்போரில் திப்பு தோல்வியுற்றாலும், ஆங்கிலேயர்கள் திப்புவின் துணிவை கண்டு அஞ்சினர்.
இதன்பின், முன்னிலும் வலிமையாகத் தனது பொருளாதாரத்தையும், இராணுவத்தையும் கட்டியமைக்கிறார், திப்பு. 1799 ல் தொடங்குகிறது இறுதிக்கட்டப் போர். நாடு தழுவிய அளவில் ஆங்கிலேய எதிர்ப்பு முன்னணி அமைக்க திப்பு எடுத்த முயற்சி தோல்வியடைகிறது. தன்னந்தனியாக ஆங்கிலேயரை எதிர்கொள்கிறார் திப்பு. ஆர்.எஸ்.எஸ் சின் மூதாதையார்களான மராட்டியத்தின் பேஷ்வா மன்னர்கள் (சித்பவன் பார்ப்பனர்கள்) போரில் இருந்து ஒதுங்கிக் கொண்டு துரோகமிழைக்கின்றனர். திப்புவின் அமைச்சர்களான மீர் சதக்கும், பூர்ணய்யாவும் செய்த துரோகத்தினால் சீரங்கப்பட்டினத்தின் கோட்டைக் கதவுகள் ஆங்கிலேயருக்குத் திறந்து விடப்பட்டன.
தன்னுடன் சேர்ந்து போரிட்ட 11,000 வீரர்களுடன் தானும் ஒரு வீரனாகப் போர்க்களத்தில் உயிர் துறந்தார் திப்பு.
தன்னுடைய சாம்ராச்சியத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று மட்டும் சிந்திக்காமல், ஆங்கிலேயரை விரட்ட வேண்டுமென்பதை தன் வாழ்நாள் இலட்சியமாகக் கொண்டிருந்த ஒரு மன்னனை அவர்கள் இதற்கு முன் கண்டதில்லை.
துருக்கி, ஆப்கன், ஈரான் நாடுகளுக்கு தூது அனுப்பி ஆங்கிலேயருக்கு எதிராக உலகளாவிய எதிர்ப்பு முன்னணியை உருவாக்க முயன்றது, பிரெஞ்சுப் புரட்சியாளர்களான ஜாகோபின்களுக்கு தஞ்சம் அளித்தது , அமெரிக்க சுதந்திரப் போராட்டத்துக்கு ஆதரவு இவையெல்லாம் திப்புவின் பரந்து விரிந்த பார்வையை உணர்த்துகின்றன.
திப்பு: உழைக்கும் மக்களின் உற்ற நண்பன், பார்ப்பனியத்தின் எதிரி
சாதி, மத வேறுபாடுகள் கடந்து அனைவரையும் நேசித்த, முன்னுதாரணமாக வாழ்ந்த மகத்தான தலைவன் திப்புவை மதவாதியாக சித்தரிக்கிறது ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி கும்பல். ஆனால் வரலாறு என்ன சொல்கிறது தெரியுமா?
”எந்தச் சாதி மதத்தைச் சேர்ந்தவரானாலும் சரி, உழுபவர்களுக்குத்தான் நிலம் சொந்தமாக இருக்க வேண்டும்” என்று பிரகடனம் செய்கிறார். பார்ப்பனர்களின் நிலங்களுக்கு வழங்கப்பட்ட வரிவிலக்கை இரத்து செய்கிறார். இராணுவம் மற்றும் துணை இராணுவப் படையினர் 3 லட்சம் பேருக்கு நிலம் வழங்கியிருக்கிறார். சென்னை மாகாணத்தைப் போல அல்லாமல் மைசூர் அரசில் தலித் மக்களுக்கு பல இடங்களில் நில உடைமை இருந்ததாக ஆய்வாளர் எட்கர் தர்ஸ்டன் கூறுகிறார்.
திப்புவின் ஆட்சியில் “ஏழைகளையும் விவசாயிகளையும் சொல்லாலோ செயலாலோ துன்புறுத்த மாட்டோம்” என்று வருவாய்த்துறை ஊழியர்கள் பதவியேற்கும் முன் உறுதிமொழி ஏற்க வேண்டியிருந்தது. 1792 போருக்குப் பின் வேலூர் தாலுக்காவிலிருந்து ஆங்கிலேய அரசின் வரிக்கொடுமை தாளாமல் 4000 விவசாயிகள் மைசூருக்குக் குடிபெயர்ந்தனர் என்கிறது வரலாறு.
உள்நாட்டு வணிகர்களை ஊக்குவித்திருக்கிறார். விவசாயத்தை பிற உற்பத்தித் துறைகளுடன் இணைப்பதிலும் பாசன வளத்தைப் பெருக்கி விவசாயத்தை விரிவுபடுத்துவதிலும் கவனம் செலுத்தியுள்ளார். 1911 ல் கிருஷ்ணராஜசாகர் அணையைக் கட்டுவதற்கான பணிகளைத் துவக்கியபோது, 1798 லேயே திப்பு அதற்கான அடிக்கல்லை நாட்டியிருந்தார் என்பது கண்டறியப்பட்டது. இது அவரின் தொலைநோக்குக்கு ஓர் உதாரணம்.
மது விற்பனை, கஞ்சாவை தடை செய்திருக்கிறார். பாலியல் தொழிலில் பெண்களை ஈடுபடுத்துவதையும், அநாதைச் சிறுமிகளை கோயிலுக்கு தேவதாசிகளாக விற்பதையும் தடை செய்துள்ளார்.
“போர்களை போர்க்களத்துடன் முடித்துக் கொள்ளுங்கள். அப்பாவி மக்கள் மீது போர் தொடுக்காதீர்கள். பெண்களைக் கவுரமாக நடத்துங்கள். அவர்களது மத நம்பிக்கைக்கு மதிப்புக் கொடுங்கள். குழந்தைகளுக்கும் முதியோர்களுக்கும் பாதுகாப்பு கொடுங்கள்” என்று இராணுவத்துக்கு எழுத்துப்பூர்வமாக ஆணையிட்ட மனிதாபிமானம் திப்புவிற்கே உரியது.
குண்டுக் காயங்களுடன் கோட்டை வாயிலில் திப்பு சரிந்து கிடக்கும்போது “மன்னா, யாரேனும் ஆங்கிலேய அதிகாரியை அழைக்கட்டுமா, சரணடைந்து விடலாம்” என்று பதறுகிறான் அவருடைய பணியாள். “முட்டாள்… வாயை மூடு” என்று உறுமுகிறார் திப்பு. ஆம்! “ஆடுகளைப் போல 200 ஆண்டுகள் பிழைப்பதை விட புலியைப் போல் 2 நாட்கள் வாழ்ந்து மடியலாம்” என்று பிரகடனம் செய்த அந்தப் புலி போர்க்களத்திலேயே மரணத்தைத் தழுவியது.
நகரமே சூறையாடப்பட்டுத் தீக்கிரையாக்கப்பட்டுப் புகைந்து கொண்டிருக்கிறது. தமது வீடுகள் கொள்ளையடிக்கப்படுவதைப் பற்றிக் கவலைப்படாமல், திப்புவின் உடலை நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்குகிறார்கள் மக்கள். அடக்க முடியாமல் நெஞ்சம் வெடித்துக் கதறுகிறார்கள்.” என்று திப்புவின் மரணக் காட்சியை பதிவு செய்கிறான் ஒரு ஆங்கிலேய அதிகாரி.
திப்புவை நெஞ்சில் ஏந்துவோம்!
தன் இறுதி மூச்சுவரை காலனியாதிக்கத்தை வீழ்த்துவதை இலட்சியமாகப் பற்றி நின்றார், திப்பு. இன்றோ, ஏகாதிபத்தியக் கும்பலுக்கும், அம்பானி, அதானிக்கும் சேவை செய்வதையே உயிர்மூச்சாக கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது காவிக் கும்பல்.
அன்று, உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்று அறைகூவினார் திப்பு. இன்றோ நாட்டின் வளமெல்லாம் அம்பானி, அதானிக்குத்தான், கார்ப்பரேட் கும்பலுக்குத்தான் சொந்தம் என்று கொக்கரிக்கிறார்கள் பாசிஸ்டுகள்.
உள்நாட்டு வணிகத்தை திப்பு ஊக்குவித்தார் என்பது ஒளிவுமறைவற்ற வரலாறு. இன்று கார்ப்பரேட்களின் கொள்ளைக்காக சிறு, குறு வணிகம் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
தலித் மக்களின், விவசாயிகளின் உற்ற தோழனாக உடன் நின்றார், திப்பு. இன்று, தலித் மக்களையும், வாழ்வுரிமைக்காக போராடும் விவசாயிகளையும் ஒடுக்கிக் கொண்டிருக்கிறது காவிக் கும்பல்.
காவிக் கும்பலின் ஐந்தாம்படையாக இன்று யாரெல்லாம் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் அறிவோம். இவர்களையெல்லாம் பார்த்து காறி உமிழ்கிறார் திப்பு.
திப்பு விட்டுச் சென்ற வரலாறு இன்னும் முடிவடையவில்லை.
திப்புவின் வாரிசுகளாக களம் இறங்குவோம்! உழைக்கும் மக்களின் எதிரிகளான ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி – அதானி, அம்பானி பாசிசக் கும்பலை வீழ்த்துவோம்!
மக்கள் அதிகாரம்,
கிருஷ்ணகிரி மாவட்டம்,
8754674757
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram