திப்பு சுல்தானை கண்டு அஞ்சி நடுங்கிய வெள்ளை ஏகாதிபத்தியம்!

தன்னுடன் போரிட்டு மடிந்த 11,000 வீரர்களுடன் தானும் ஒரு வீரனாகப் போர்க்களத்தில் உயிர் துறந்தார் மாவீரன் திப்பு.

இந்திய வரலாற்றின் இணையில்லா வீரர் மைசூர்ப் புலி திப்பு சுல்தான், ஆங்கில கிழக்கிந்திய கம்பெனிக்கெதிரான நான்காவது ஆங்கில – மைசூர்ப் போரில் சிப்பாய்களுடன் இணைந்து போரிட்டு மே 4, 1799 அன்று வீரமரணமடைந்த மாவீரன்.

***

திப்புவைப் போரிட்டு வெல்ல முடியாது என்ற முடிவுக்கு வந்த வெள்ளையர்கள், ‘பிளாசிப் போரில்’ பயன்படுத்திய லஞ்சம் எனும் ஆயுதத்தையும் ஐந்தாம் படையையும் ஆயத்தப்படுத்தத் தொடங்கினார்கள். அடுத்த ஓராண்டிற்குள் திப்புவின் முதன்மையான அமைச்சர்களும் அதிகாரிகளும் தளபதிகளும் விலைக்கு வாங்கப்பட்டார்கள். இதைக் குறிப்பிட்டு, “இப்போது நாம் ‘தைரியமாக’ திப்புவின் மீது படையெடுக்கலாம்” என்று 1799-இல் கும்பினியின் தலைமைக்குக் கடிதம் எழுதுகிறான் வெல்லெஸ்லி.

திப்பு சுல்தான்
போர் வீரர்களின் பிணக்குவியல்களுக்கு மத்தியில் திப்பு

இதுதான் திப்புவின் இறுதிப்போர். நாடு தழுவிய அளவில் ஒரு ஆங்கிலேய எதிர்ப்பு முன்னணியை உருவாக்க முயன்று தோற்று, பிரான்சிலிருந்து நெப்போலியனின் உதவியும் கிடைக்காத நிலையிலும், தன்னந்தனியாக ஆங்கிலேயரை எதிர்கொண்டார் திப்பு. 3வது போரின்போது ஆங்கிலேயனுக்குத் துணை நின்ற துரோகிகள் அனைவரும் இந்தப்போரிலும் திப்புவுக்கு எதிராக அணிவகுத்தனர். மராத்தியர்களோ, கண்டுகொள்ளாமல் ஒதுங்கிக் கொண்டனர்.

அனைத்துக்கும் மேலாக, திப்புவின் அமைச்சர்களான மீர் சதக்கும், பூர்ணய்யாவும் செய்த ஐந்தாம்படை வேலை காரணமாக சீரங்கப்பட்டினத்தின் கோட்டைக் கதவுகள் ஆங்கிலேயருக்குத் திறந்து விடப்பட்டன. தன்னுடன் போரிட்டு மடிந்த 11,000 வீரர்களுடன் தானும் ஒரு வீரனாகப் போர்க்களத்தில் உயிர் துறந்தார் மாவீரன் திப்பு. ஆங்கிலேயப் பேரரசின் காலனியாதிக்கத்துக்குத் தடையாகத் தென்னிந்தியாவிலிருந்து எழுந்து நின்ற அந்த மையம் வீழ்ந்தது.

திப்புவைக் கண்டு ஆங்கிலேயர்கள் அஞ்சி நடுங்கியதற்குக் காரணம் அவருடைய இராணுவ வல்லமையோ, போர்த்திறனோ மட்டுமல்ல; தன்னுடைய சாம்ராச்சியத்தைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டுமென்று மட்டும் சிந்திக்காமல், ஆங்கிலேயரை விரட்டவேண்டுமென்பதையே தன் வாழ்க்கை இலட்சியமாகக் கொண்டிருந்த ஒரு மன்னனை, கனவிலும் நனவிலும் அதே சிந்தனையாக வாழ்ந்த ஒரு மன்னனை, அவர்கள் கண்டதில்லை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க