பாசிச பா.ஜ.க. ஆட்சி செய்து வருகின்ற குஜராத்தில் பசுவைக் கொன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூன்று இஸ்லாமிய ஆண்களுக்கு அம்ரேலி மாவட்ட அமர்வு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. இக்கொடுமையான தீர்ப்பு இஸ்லாமியர்கள் மற்றும் தலித் மக்களிடையே அச்சத்தைத் தீவிரப்படுத்தியுள்ளது.
கடந்த 2023-ஆம் ஆண்டு நவம்பர் 6 அன்று அம்ரேலி மாவட்டத்தின் காட்கிவாட்டின் பகுதியில் உள்ள பஹர்பாராவில், ஒரு பசுவைக் கொன்று அதனுடைய கழிவுகள் கால்வாயில் வீசப்பட்டதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில், மூன்று இஸ்லாமிய ஆண்களைக் கைது செய்த போலீசு, ஒரு வீட்டைச் சோதனை செய்து 40 கிலோ மாட்டிறைச்சியையும், கத்தி, தராசுகளையும் ‘கண்டுபிடித்தது’. பின்னர் உடற்கூறாய்வு மருத்துவர் மூலம் அது மாட்டிறைச்சிதான் என்பது உறுதி செய்யப்பட்டது என்று ஊடகங்களிலும் இணையதளங்களிலும் செய்திகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான வழக்கு விசாரணை இரண்டு வருடங்களாக நடைபெற்று வந்தது.
இந்நிலையில், நவம்பர் 11-ஆம் தேதியன்று அம்ரேலி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தின் நீதிபதி ரிஸ்வானா புகாரி காசிம் சோலங்கி, சத்தார் சோலங்கி, அக்ரம் சோலங்கி ஆகிய மூன்று பேரை குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தார். மேலும், குஜராத் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின்படி மூன்று பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்ததுடன், மூன்று பேருக்கும் தலா ஆறு லட்சம் வீதம் மொத்தம் ரூ.18 லட்சம் அபராதமும் விதித்துள்ளது. மாட்டிறைச்சி வைத்திருந்ததற்காக ஆயுள் தண்டனை விதிப்பதென்பது இதுவே முதன்முறை. இத்தீர்ப்பு மனிதநேயமற்ற இரத்தவெறிப்பிடித்த மிருகங்களின் மதவெறியைத்தான் பிரதிபலிக்கின்றது.
இத்தீர்ப்பை “வரலாற்றுச் சிறப்புமிக்கது” என்று பாராட்டிய குஜராத் மாநில அமைச்சர் ஜிது வகானி, “இந்து உணர்வுகளைப் புண்படுத்துபவர்களுக்கு இது ஒரு வலுவான எச்சரிக்கை” என்றும் “பசுக்கள் இந்திய கலாச்சாரம் மற்றும் நம்பிக்கையின் மையமாக உள்ளது” என்றும் “இதுபோன்ற குற்றங்களில் குஜராத் அரசு கருணை காட்டாது” என்றும் தன்னுடைய மதவெறியை வெளிப்படுத்தியிருக்கிறார்.
குறிப்பாக, 2011-ஆம் ஆண்டு குஜராத்தின் முதல்வரும் தற்போதைய பிரதமருமான நரேந்திர மோடியின் ஆட்சியில் ‘பசுவதை’க்கு எதிரான குஜராத் விலங்குகள் பாதுகாப்பு சட்டம் 1954 கடுமையாக்கப்பட்டது. பின்னர் 2017-ஆம் ஆண்டு ‘பசுவதை’யை கொலைக்குச் சமமான குற்றமாகக் கருதி அதற்கு நீதிமன்றங்கள் ஆயுள் தண்டனை விதிக்க இச்சட்டத்தைத் திருத்தியது குறிப்பிடத்தக்கது.
படிக்க: ஹரியானா: முஸ்லீம் பசு வியாபாரியை அடித்துக் கொன்ற காவிக் கும்பல்
பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி ஆட்சி நடைபெறுகின்ற மாநிலங்களில் இஸ்லாமிய மக்கள் மற்றும் தலித் மக்களைக் குறிவைத்து மாட்டிறைச்சி வைத்திருப்பதற்கும், விற்பனை செய்வதற்கும், தடை, ஆயுள் தண்டனை, ரூ.5 லட்சம் வரை அபராதம் உள்ளிட்ட கடுமையான தண்டனைகளை விதிப்பதற்கு பசு பாதுகாப்பு சட்டங்களை அம்மாநில அரசுகள் திருத்தியுள்ளன. உதாரணமாக, மகாராஷ்டிராவில் 2015-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட திருத்தம் பசுக்கள் மற்றும் காளைகளை வெட்டுவதைத் தடை செய்தது, மாட்டிறைச்சி வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றம் அதற்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று அறிவித்தது.
மேலும், உத்தரப்பிரதேசத்தில் 2017-ஆம் ஆண்டு யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. அரசு, இஸ்லாமியர்களால் நடத்தப்படும் நூற்றுக்கணக்கான இறைச்சிக் கூடங்களையும், கடைகளையும் மூடியது. அசாமில் 2021-ஆம் ஆண்டு கோயில்களுக்கு அருகிலும், மாட்டிறைச்சி அதிகம் சாப்பிடாத பகுதிகளிலும் மாட்டிறைச்சி விற்பனையைத் தடை செய்தது போன்றவற்றின் மூலம் பாசிச கும்பல் ஆட்சி செய்கின்ற மாநிலங்களில் இஸ்லாமிய மக்கள் மீதான தாக்குதல்கள், சட்டப்பூர்வமாக்கப்பட்டு வருகிறது என்பதை தற்போதைய குஜராத் நீதிமன்ற தீர்ப்புடன் பொருத்திப் பார்க்க வேண்டியுள்ளது.
ஒருபுறம் பசு பாதுகாவலர்கள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் காவி குண்டர்கள் இஸ்லாமியர்கள், தலித் மக்களைக் குறிவைத்து கொடூரத் தாக்குதல்களையும் கும்பல் படுகொலைகளையும் அரங்கேற்றி வருகின்றனர். காவி பயங்கரவாதி பிரக்யா சிங் தாக்கூர் இஸ்லாமிய ஆண்களை இரண்டாக வெட்ட வேண்டும் என்று வெளிப்படையாகப் படுகொலைக்கு அழைப்பு விடுத்தது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால், இக்கொடூரக் கொலைகாரர்கள் யாரும் கைது செய்யப்படுவதில்லை, மீறி கைது செய்யப்பட்டாலும் ஜாமீனில் விடுதலை செய்யப்படுகின்றனர்.
மறுபுறம், தங்களின் வாழ்வாதாரத்திற்காக மாடுகளை விற்பதற்கும், வளர்ப்பதற்கும் வாகனங்களில் ஏற்றிச் செல்லும் இஸ்லாமியர்கள், தலித் மக்கள் கைது செய்யப்படுகின்றனர். மேலும், தனக்குப் பிடித்த இறைச்சியைச் சாப்பிடுவதற்கான உரிமையைப் பறிப்பதுடன் அதனை தன்னுடைய வீட்டில் வைத்திருந்தால் அதற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது. இதுதான் இந்துராஷ்டிரத்தின் இரட்டை நீதி.
பாசிச கும்பல் இஸ்லாமியர்கள், தலித் மக்களை, உரிமைகள், உடைமைகள் ஏதுமற்ற, அதாவது இந்நாட்டின் இரண்டாந்தர குடிமக்களாக்க மாற்றுவதற்காக அனைத்து ஒடுக்குமுறை நடவடிக்கைகளையும் சட்டத்தின் மூலமாக தீவிரமாக நடைமுறைப்படுத்தி வருகின்றது. எனவே, இதற்கு மாற்றாக இஸ்லாமிய, தலித் மக்களுக்கு அனைத்து ஜனநாயக உரிமைகளையும் பாதுகாப்பினையும் வழங்குகின்ற பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசை அமைப்பதே புரட்சிகர அமைப்புகள், ஜனநாயக சக்திகளின் உடனடி கடமையாகும்.
![]()
இன்குலாப்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram










