உ.பி. குழந்தையின் வெட்டுக் காயத்திற்கு ஃபெவி-குவிக் தடவிய கொடூரம்!

மருத்துவர் குழந்தையின் காயத்தைச் சுத்தம் செய்து தையல் போடுவதற்குப் பதிலாக, வலியில் துடித்துக் கொண்டிருந்த குழந்தையின் காயத்தில் ஃபெபி-குவிக்கை வைத்துத் தடவியுள்ளார். இதுகுறித்து பெற்றோர் கேட்டதற்கு உடனடியாக வலியும், பதற்றமும் குறைந்துவிடும் என்று தெரிவித்திருக்கிறார்.

0

பாசிச பா.ஜ.க. ஆளும் உத்தரப்பிரதேசத்தின் மீரட் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில், குழந்தையின் நெற்றியில் ஏற்பட்ட வெட்டுக் காயத்திற்குத் தையல் போடுவதற்குப் பதிலாக, உடைந்த பொருட்களை ஒட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் ஃபெவி-குவிக் (Fevi kwik) வைத்து ஒட்டிய கொடூரம் அரங்கேறியுள்ளது.

நவம்பர் 20 அன்று மாலை ஜக்ரிதி விஹார் பகுதியைச் சேர்ந்த சர்தார் ஜஸ்பிந்தர் சிங் என்பவரது இரண்டு வயது ஆண் குழந்தை மன் ராஜ் சிங் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்துள்ளான். அப்போது அங்கிருந்த மேசையில் மோதியதில் குழந்தையின் இடது கண்ணுக்கு அருகில் ஆழமான வெட்டுக்காயம் ஏற்பட்டு, இரத்தம் வழிந்தோடி வலியில் துடித்துள்ளான்.

பெற்றோர் உடனடியாக அருகில் உள்ள பாக்யஸ்ரீ தனியார் மருத்துவமனைக்கு குழந்தையைச் சிகிச்சைக்காகத் தூக்கிக்கொண்டு சென்றுள்ளனர். அங்கிருந்த மருத்துவர் குழந்தையின் காயத்தைச் சுத்தம் செய்து தையல் போடுவதற்குப் பதிலாக, வலியில் துடித்துக் கொண்டிருந்த குழந்தையின் காயத்தில் ஃபெபி-குவிக்கை வைத்துத் தடவியுள்ளார். இதுகுறித்து பெற்றோர் கேட்டதற்கு உடனடியாக வலியும், பதற்றமும் குறைந்துவிடும் என்று தெரிவித்திருக்கிறார்.

வீட்டுக்குத் திரும்பி வந்த பிறகு இரவு முழுவதும் குழந்தை வலியால் துடித்துள்ளது. மறுநாள் காலை குழந்தையை லோக்பிரியா என்கிற மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றுள்ளனர். அங்கே குழந்தையின் காயத்தில் ஃபெபிகுவிக் ஒட்டியிருப்பதைப் பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். மூன்று மணிநேரப் போராட்டத்திற்குப் பிறகு குழந்தையின் காயத்தில் ஒட்டியிருந்த பிசினை முற்றிலுமாக அகற்றி விட்டு, காயத்தில் நான்கு தையல்கள் போட்டுள்ளனர். அதன் பிறகே குழந்தையின் வலி ஓரளவிற்குக் குறைந்துள்ளது.

காயம் கண்ணிற்கு அருகில் உள்ளதால் ஃபெபி-குவிக் குழந்தையின் கண்ணில் பட்டிருந்தால் கண்பார்வை பாதிப்பு உள்ளிட்ட மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்பட்டிருக்கும் என்று பெற்றோரிடம் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து குழந்தையின் பெற்றோர் மீரட் தலைமை மருத்துவ அதிகாரி அசோக் கட்டாரியாவிடம் புகார் அளித்துள்ளனர். விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தலைமை மருத்துவ அதிகாரி பதிலளித்துள்ளார்.


படிக்க: ம.பி. மருத்துவமனையில் எலி கடித்துக் கொல்லப்பட்ட குழந்தைகள்: பா.ஜ.க. அரசின் பச்சை படுகொலை!


சமீப காலமாகவே, குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய அல்லது அவர்களின் உயிரை எடுக்கக்கூடிய இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.

கடந்த செப்டம்பர் மாதத்தில் பா.ஜ.க. ஆளும் மத்தியப்பிரதேசத்தின் தலைநகர் இந்தூரில் உள்ள மகாராஜா யஷ்வந்த்ராவ் அரசு மருத்துவமனையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த  இரண்டு பச்சிளம் குழந்தைகள் எலிகள் கடித்துக் கொல்லப்பட்ட கொடூரம் அரங்கேறியது. இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியது.

இந்தியா முழுவதுமே மருத்துவத்துறையை கார்ப்பரேட் மயமாக்குவதற்காக, ஒன்றிய-மாநில அரசுகள் அரசு மருத்துவமனைகளைத் திட்டமிட்டு ஒழித்துக்கட்டி வருகின்றன. குறிப்பாக, பாசிச பா.ஜ.க. கும்பல் ஆட்சி செய்யும் மாநிலங்களில், அரசு மருத்துவமனைகளை முற்றிலும் ஒழித்துக்கட்டிவிட்டு, மக்களுக்குக் கிடைக்கும் சொற்ப அளவிலான இலவச சிகிச்சையையும் பறித்து, லாப வெறிபிடித்த தனியார் – கார்ப்பரேட் மருத்துவமனைகளுக்கு மக்களை இரையாக்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல், தனியார் மருத்துவமனைகளை அரசு முறையாகக் கண்காணிப்பதும் இல்லை. இவ்வாறு ஒட்டுமொத்த மருத்துவத்துறையும் சீரழிக்கப்பட்டு வருவதன் விளைவே மேற்குறிப்பிட்ட சம்பவங்கள்.

எனவே, மருத்துவத்துறை கார்ப்பரேட் மயமாக்கப்படுவதற்கு எதிராகவும், அலட்சியமாகச் செயல்பட்டு குழந்தைகள் உள்ளிட்டு மக்களின் உயிரைப் பறிக்கின்ற தனியார்-கார்ப்பரேட் மருத்துவமனைகள், மருத்துவர்களின் உரிமத்தை இரத்து செய்ய வலியுறுத்தியும் மக்கள் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். அதன் மூலமே மருத்துவத்துறையையும் மக்களின் உயிரையும் பாதுகாக்க முடியும்.


இன்குலாப்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க