நியூயார்க் மேயர் தேர்தலில் மம்தானியின் வெற்றி: போலி சோசலிசத்திற்கான ஆதரவல்ல!

மம்தானி தன்னை “ஜனநாயகவாத சோசலிஸ்ட்” என்று அழைத்துக் கொள்வதைக் கொண்டோ, டிரம்ப் அவரை, ‘கம்யூனிஸ்ட்” என்று குற்றஞ்சாட்டி விமர்சிப்பதை வைத்துக் கொண்டோ, மம்தானியின் வெற்றியை மதிப்பிட முடியாது. மாறாக, கடந்த ஓராண்டில் அமெரிக்காவில் அரங்கேறியிருக்கும் டிரம்ப்-மஸ்க் கும்பலாட்சியின் பாசிச சர்வாதிகார அடக்குமுறைகள் மற்றும் அதற்கு எதிராக வளர்ந்துவரும் மக்களின் போராட்ட உணர்விலிருந்துதான் இதனை மதிப்பிட வேண்டும்.

சென்ற நவம்பர் மாதத் தொடக்கத்தில், அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்தின் தலைநகரான நியூயார்க் பெருநகர மேயர் தேர்தல் நடைபெற்றது. இதில் ஜனநாயகக் கட்சி வேட்பாளரான, 34 வயது கொண்ட, ஆசியாவைப் (குஜராத்தை) பூர்வீகமாகக் கொண்ட, இசுலாமியரான சோரன் மம்தானி வெற்றி பெற்றார்.

இவர் ஜனநாயகக் கட்சியின் மேயர் வேட்பாளராகத் தேர்வாவதற்கு முன்பிருந்தே, டிரம்ப்பின் பாசிச நடவடிக்கைகளைத் தீவிரமாக எதிர்த்து வந்தார். “அமெரிக்க ஜனநாயகவாத சோசலிஸ்ட்” என்ற இயக்கத்தைச் சேர்ந்த இவர், பாசிஸ்ட் டிரம்ப்பினால் ‘கம்யூனிஸ்ட்’ என்று குற்றம் சாட்டப்பட்டதுடன், இவர் டிரம்ப்பிடம் இருந்து கடுமையான எதிர்ப்புகளையும் எதிர்கொண்டார். இதனால், இவரது வெற்றியானது, டிரம்ப்பின் சர்வாதிகாரப் போக்கிற்கு எதிராக போராடுபவர்களுக்கு நம்பிக்கைக்குரிய விசயமாகப் பார்க்கப்படுகிறது.

இந்த வெற்றியைத் தொடர்ந்து, வாஷிங்டன் மாநிலத்தின் சியாட்டில் நகரத்தில் நடந்த மேயர் தேர்தலிலும் ஜனநாயகக் கட்சியின் பெண் வேட்பாளரான கேட்டி வில்சன் வெற்றி பெற்றார். டிரம்ப்பின் பாசிச அடக்குமுறைகளுக்கு எதிராக, அடுத்தடுத்து இரண்டு மேயர் தேர்தல்களில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றதையடுத்து, பல மேற்கத்திய நாடுகளில் “ஜனநாயகவாத சோசலிசம்” என்ற முழக்கம் முன்வைக்கப்படுகிறது.

எனினும், மம்தானி தன்னை “ஜனநாயகவாத சோசலிஸ்ட்” என்று அழைத்துக் கொள்வதைக் கொண்டோ, டிரம்ப் அவரை, ‘கம்யூனிஸ்ட்’ என்று குற்றஞ்சாட்டி விமர்சிப்பதை வைத்துக் கொண்டோ, மம்தானியின் வெற்றியை மதிப்பிட முடியாது. மாறாக, கடந்த ஓராண்டில் அமெரிக்காவில் அரங்கேறியிருக்கும் டிரம்ப்-மஸ்க் கும்பலாட்சியின் பாசிச சர்வாதிகார அடக்குமுறைகள் மற்றும் அதற்கு எதிராக வளர்ந்துவரும் மக்களின் போராட்ட உணர்விலிருந்துதான் இதனை மதிப்பிட வேண்டும்.

அதேவேளையில், மம்தானி தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு மேற்கொள்ளும் முயற்சிகள், தோல்வியைத் தழுவும் என்பதுடன், அது போராடுகின்ற அமெரிக்க மக்களுக்கு, உண்மையான சோசலிசத்தை நோக்கி முன்னேற வேண்டிய தேவையை மேலும் அழுத்தமாக உணர்த்தும்.

டிரம்ப்பின் பாசிச நடவடிக்கைகளும்
அதற்கெதிரான மக்களின் எதிர்ப்புகளும்

அமெரிக்காவில் பைடன் தலைமையிலான ஆட்சி முடிவுற்று, கடந்த ஓராண்டாக, டொனால்ட் டிரம்ப் – எலான் மஸ்க் பாசிச கும்பலின் ஆட்சி அரங்கேறி ஆட்டம் போட்டுவருவதை நாம் பார்த்து வருகிறோம். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் புதிய டிஜிட்டல் ஆதிக்கக் கும்பலுக்காக, அமெரிக்காவில் இதுவரை பின்பற்றிவந்த அனைத்து ஜனநாயகத் தன்மைகளையும் தூக்கி வீசிவிட்டு, பாசிச சர்வாதிகார நடவடிக்கைகளை அப்பட்டமாக டொனால்ட் டிரம்ப் மேற்கொண்டு வருகிறார்.

குறிப்பாக, அமெரிக்காவில் புலம்பெயர்ந்துள்ள மக்களை ‘சட்டவிரோத குடியேறிகள்’ என்ற பெயரில் கைது செய்து நாட்டை விட்டு வெளியேற்றும் பாசிச நடவடிக்கையை மேற்கொண்டார். இதற்காக, குடியேற்ற மற்றும் சுங்க அமலாக்கத்துறை (ICE) மூலமாக மிகப்பெரிய அளவிலான அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டார். இராணுவத்தின் துணை கொண்டு, பள்ளிகள், அலுவலகங்கள், வாகனங்களை நிறுத்துமிடங்கள், குடியிருப்புகள் என எல்லா இடங்களிலும் தீவிர தேடுதல் வேட்டை மேற்கொள்ளப்பட்டது; இராணுவத்தினர் அடையாளமில்லாத வாகனங்களில் வந்தது மட்டுமின்றி, முகமூடிகளை அணிந்து கொண்டிருந்தனர்; அதுமட்டுமின்றி, உள்ளூர் போலீசு போல ஏமாற்றி நீதிமன்ற அனுமதியில்லாமல், வீடுகளில் நுழைந்தனர்.

அமெரிக்க ஜனநாயகத்தில் இதுவரை சொல்லப்பட்ட மேன்மையை எல்லாம் இந்த இராணுவ நடவடிக்கை கேள்விக்குறியாக்கிவிட்டது; மாநில அரசுகளுக்கு இருக்கும் உரிமைகள் கடுமையாக அத்துமீறப்பட்டது; அமெரிக்க ஜனநாயகத்தை வியந்தோதிக் கொண்டிருந்த “ஜனநாயகக் கட்சி”யினர் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

மேலும், பால் புதுமையினருக்கு (LGBTQ+), குறிப்பாக திருநர்களுக்கு (Transgenders) எதிராக வெறுப்புணர்வை பரப்புவது டிரம்ப்பின் இன்னொரு பாசிச நடவடிக்கையாகும். இதற்கேற்றவாறு அவர்களது உரிமைகளைப் பறிக்கும் வகையில் பல்வேறு நிர்வாக உத்தரவுகளை பிறப்பித்தார். அரசுத் துறைகள் அனைத்திலிருந்தும் அவர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து, குடியரசுக் கட்சி அதிகாரத்திலுள்ள பல மாநிலங்கள் திருநர்களுக்கு மருத்துவம் உள்ளிட்ட சேவைகளை மறுப்பது, பொது கழிப்பறையை பயன்படுத்தினால் அபராதம் விதிப்பது உள்ளிட்ட மனிதத்தன்மையற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கின.

இவற்றையெல்லாம் விட முக்கியமாக, டிரம்ப் ஆட்சிக்கு வந்த பிறகு, உலகின் பெரும் பணக்காரரும் இனவெறி பாசிஸ்டுமான எலான் மஸ்க் தலைமையில், “அரசு செயல்திறன் துறை” (DOGE) என்னும் துறை உருவாக்கப்பட்டது. இத்துறையானது அரசின் செலவீனங்களை ஆண்டுக்கு ஒரு ட்ரில்லியன் (ஒரு இலட்சம் கோடி) டாலர் வரை குறைக்கும் திட்டத்தை முன்வைத்தது.

இதனடிப்படையில், ஆலைகள் மற்றும் அரசாங்க நிறுவனங்களில் மிகப்பெரிய ஆட்குறைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தொழிலாளர்களுக்கான ஓய்வூதியம் வெட்டப்பட்டது. வெப்பமயமாதல் காரணமாக வாழ்க்கைச் செலவினங்கள் அதிகரித்திருக்கும் நிலையில், இந்த ஆட்குறைப்பு நடவடிக்கைகள் மேலும் மக்களை வாட்டி வருகிறது. இவற்றுடன் சேர்ந்து “தீவிர வேலையின்மை” முதன்மையான பிரச்சினையாக மாறியுள்ளது.

இவை மட்டுமின்றி, மக்களில் பெரும்பான்மையினருக்கு குடியிருப்பு வசதி கிடையாது. வாடகை வீடுகளில்தான் மக்கள் தங்கி வாழும் நிலைமை உள்ளது. குடியிருப்பு வாடகையானது விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துவிட்டது. இதனால், வீடுகளில் குடியிருப்பதைவிட, கார்களை நிறுத்துமிடங்கள், சுரங்கப் பாதைகள், குப்பைக் கூலங்களை கொட்டும் இடங்கள் போன்ற இடங்களில் தங்கிக் கொள்ளுதல், இரவு நேரத்தைப் பயணங்களில் கழித்துவிட்டு, பகலில் வேலைக்குச் செல்லுதல் போன்ற அவலநிலை மக்களிடையே அதிகரித்துள்ளது.

டிரம்ப்பின் இந்த பாசிச நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்திகளை உருவாக்கிவிட்டன. மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிக்கும் போக்குகளும் அதிகரித்துவிட்டன. சொல்லிக்கொள்ளப்படும் முதலாளித்துவ ஜனநாயக நிறுவனங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக செயலிழக்கச் செய்யும் வேலைகளில் டிரம்ப் இறங்கியுள்ளார். பாசிச எதிர்ப்பு இயக்கமான “ஆண்டிஃபா”வைத் (Antifa) தடை செய்தார். தனது கையில் முழு அதிகாரத்தையும் குவித்துக்கொள்ள, “நிறைவேற்று அதிகாரத்தை” தனது தலைமையின் கீழ் கொண்டுவரும் வேலையில் இறங்கியுள்ளார்.

“அமெரிக்கா முதன்மை” (MAGA – Make America Great Again) என்ற ஏகபோக ஆதிக்க முழக்கத்தை முன்தள்ளி, உலகின் பிற நாடுகள் மீது வரித் தாக்குதலை மேற்கொண்டு வருகிறார். இத்துடன், பாலஸ்தீனத்தின் மீதான இசுரேலின் இன அழிப்புப் போருக்கும் ரசியாவுக்கு எதிரான உக்ரைன் பதிலிப் போருக்கும் தொடர்ந்து இராணுவ செலவினங்கள் அதிகரித்து வருகின்றன. இவை மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை உருவாக்குகின்றன.

டிரம்ப் ஆட்சிக்கு வந்தால் வேலைவாய்ப்புப் பெருகும் என்ற பிரச்சாரம் எல்லாம் ஓட்டு வாங்குவதற்காக செய்யப்பட்ட பொய்ப் பிரச்சாரம் என்பதை மக்கள் தமது சொந்த அனுபவங்களின் மூலமாக இந்த ஓராண்டிற்குள் உணர்ந்துவிட்டனர். இதனால், டிரம்ப்பின் பாசிச சர்வாதிகார அடக்குமுறைகளுக்கு எதிராக, அமெரிக்காவில் தொடர்ந்து போராட்டங்கள் வெடித்த வண்ணமே உள்ளன. கட்டாய கருக்கலைப்புக்கு எதிரான போராட்டங்கள், காசா மீதான தாக்குதலுக்கு ஆயுதங்களை வழங்குவதற்கு எதிரான போராட்டங்கள் போன்றவை வளர்ந்து, அக்டோபரில், “அரசர் வேண்டாம்” (NO KINGS) என்ற முழக்கத்தோடு, மிகப்பெரிய கிளர்ச்சிகர போராட்டங்களில் அமெரிக்க மக்கள் ஈடுபட்டனர்.

நெருக்கடியின் குவிமையமாக நியூயார்க் நகரமும்
மம்தானியின் கவர்ச்சிகர முழக்கமும்

அமெரிக்கா முழுவதற்குமான டிரம்ப்பின் மேற்கண்ட பாசிச அடக்குமுறைகள் மட்டுமின்றி, பாசிச மோடி அரசைப் போலவே, தமது கொள்கைக்கு எதிரான மாநிலங்களுக்கு தேவையான நிதியை டிரம்ப் அரசு வழங்குவதில்லை.

நியூயார்க் மாநிலத்தின் மொத்த மக்கள்தொகையில் 45 சதவிகித மக்கள் நியூயார்க் பெருநகரத்தில் குவிந்துள்ளனர். சென்னையைவிட மக்கள் நெருக்கம் மிக அதிகமாக உள்ள நகரமாகும். ஆனால், அமெரிக்காவின் ஆகப் பெரிய நகரத்தைக் கொண்ட நியூயார்க்தான் மிகக் குறைவான பொதுநிதியைப் பெரும் மாநிலமாகும். உலகத்தின் பல நாடுகளில் இருந்து குடியேறிய மக்கள் இங்கு வாழ்கின்றனர். இம்மாநிலத்திற்கு உரிய நிதியை வழங்காததால், இந்த சுமையெல்லாம், நியூயார்க் பெருநகர மக்கள் மீது சுமத்தப்படுகிறது.

அதேவேளையில், பெரிய வர்த்தக நிறுவனங்கள் செயல்படும் வால் ஸ்ட்ரீட் போன்ற வர்த்தக மையங்களை கொண்டதாகவும் நியூயார்க் பெருநகரம் விளங்குகிறது. இந்த வர்த்தக நிறுவனங்கள் தொடர்ந்து முன்னணியாக செயல்பட்டு வருகின்றன. நியூயார்க் நகரத்தைப் போன்ற மிகப்பெரிய பெருநகரமாக சியாட்டில் இல்லையென்றாலும், அங்குதான் அதிக டிஜிட்டல் டெக் நிறுவனங்கள் குவிந்துள்ளன.

ஒருபக்கம், உலகத்தையே ஆதிக்கம் செய்யும் பெரும் வர்த்தக நிறுவனங்கள், டிஜிட்டல் டெக் நிறுவனங்கள், இன்னொரு பக்கம், முதலாளித்துவத்தின் நெருக்கடி, டிரம்ப் நிர்வாகத்தின் பாசிச அடக்குமுறைகளை நேரடியாக சுமக்கும் உலகத்தின் பல்வேறு நாடுகளில் இருந்து குடிபெயர்ந்த மக்கள் என, முதலாளித்துவ வர்க்க முரண்பாடு கூர்மையாக வெளிப்படும் இடமாக நியூயார்க் பெருநகரமும் சியாட்டிலும் அமைந்துள்ளன.

இது மட்டுமின்றி, வீட்டு வாடகை குறைக்கப்படுவது, வரி குறைக்கப்படுவது, போக்குவரத்துக் கட்டணங்களைக் குறைப்பது போன்றவை மக்களின் உடனடி கோரிக்கைகளாக உள்ளன. அமெரிக்க அரசோ பொது நிதியிலிருந்து நியூயார்க் மாநிலத்திற்கு குறைவான நிதியையே கொடுப்பதால், டிரம்ப் அரசிடம் போராடி அந்த நிதியைப் பெற முடியாது என்பது ஜனநாயகக் கட்சிக்கு நன்கு தெரியும்.

மாநிலங்களுக்கான நிதியைக் குறைத்தல், ஊதிய வெட்டு, பி.எஃப். வட்டிவிகித குறைப்பு, மக்களுக்கான அரசு செலவினங்களைக் குறைத்தல் போன்ற சிக்கன நடவடிக்கைகள், அனைத்துத் துறைகளிலும் ஆட்குறைப்பைத் தீவிரப்படுத்துதல் போன்றவற்றின் மூலம் நிதி வருவாயைப் பெருக்குதல் போன்றவற்றை உள்ளடக்கிய டிரம்ப் பின்பற்றும் நிதிக்கொள்கை, “நவீனதாராளவாதப் பொது நிதி” (NPF) என்று குறிப்பிடப்படுகிறது. இது, “அமெரிக்கா முதன்மை” என்ற டிஜிட்டல் மேலாதிக்கக் கும்பல்களின் கட்டற்ற கொள்ளையின் அங்கமாகும்.

இதற்கு மாறாக, “ஜனநாயகவாதப் பொது நிதி” (DPF) என்ற முழக்கத்தை “ஜனநாயகவாத சோசலிஸ்டுகள்” முன்வைக்கின்றனர். அதாவது, உயர்வருவாய் பெறும் பணக்காரர்களுக்கு கூடுதல் வரி (இதனை, “ஜனநாயக வரிவிதிப்பு” என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர்) விதிப்பதன் மூலம், கிடைக்கும் நிதியை உழைக்கும் மக்களுக்கு வழங்கப் போவதாகக் குறிப்பிடுகின்றனர். இதன் மூலமாக, ஏழை-பணக்காரர் வேறுபாடு அதிகரிப்பதைக் குறைக்கப் போகிறார்களாம். அதாவது, இந்த முதலாளித்துவக் கட்டமைப்புக்குள்ளேயே, அது வழங்கியிருக்கும் ‘ஜனநாயக’ அதிகாரங்களைப் பயன்படுத்தியே, முதலாளித்துவ வர்க்க முரண்பாடு கூர்மையடைவதைத் தடுப்பதுதான் “ஜனநாயகவாத சோசலிசம்” என்று மம்தானியின் ஆதரவாளர்கள் முழங்குகிறார்கள்.

”ஜனநாயகவாதப் பொது நிதி”க் கொள்கையைப் பின்பற்றுவதன் மூலம், இலவசப் பேருந்து பயணம், இலவசக் குழந்தைப் பாமரிப்பு மற்றும் வாடகைக் குறைப்பு போன்ற வாக்குறுதிகளை நிறைவேற்றப் போவதாக ஜனநாயகக் கட்சியினர் குறிப்பிடுகின்றனர்.

ஆகையால், மம்தானியின் இந்தத் தேர்தல் வெற்றியானது, டிரம்ப் அரசின் பாசிச அடக்குமுறைகளுக்கு எதிரான மக்களின் உணர்வாக இருப்பது மட்டுமன்றி, அதிகரித்துவரும் வர்க்க ஏற்றத்தாழ்வு, மக்களுக்கான வாழ்வாதார நெருக்கடிக்கு எதிராக, இந்தக் கட்டமைப்புக்குள்ளேயே தீர்வை வழங்குவதாக, மம்தானி அடித்த சவடாலுக்கான ஆதரவாகவும் அமைந்துள்ளது.

போலி சோசலிசத்தின் கவர்ச்சிகர முழக்கம்

பணக்காரர்களுக்கு வரி விதிப்பை அதிகப்படுத்துவதன் மூலம் பொது நிதியை வலுப்படுத்துவது, மக்களுக்கான நல உதவிகளை மேற்கொள்வது என்பது ஒரு ஜனநாயகமான கோரிக்கையாகும். ஆனால், இதனை கவர்ச்சிகரமான முழக்கமாக மாற்றுவதைத் தவிர மம்தானியும் ஜனநாயகக் கட்சியும் வேறெதையும் செய்யவில்லை.

ஏனெனில், அமெரிக்க ஏகாதிபத்தியம் கடுமையான நெருக்கடியில் வீழ்ந்து கிடக்கிறது. பல பத்தாண்டுகளாக அமெரிக்க ஏகாதிபத்திய கார்ப்பரேட் நிறுவனங்களின் இலாப விகிதம் படுத்துக்கிடக்கிறது. அமெரிக்காவிலேயே புதிய வேலைவாய்ப்புகளுக்கான சூழல்கள் குறைந்து வருகின்றன.

பல பத்தாண்டுகளுக்கு முன்பே தொழில்துறை படுத்துவிட்டது. தனியார்மயம் – தாராளமயம் – உலகமயத்தின் தொடக்கத்தில் உருவான சேவைத்துறையிலும், பல்வேறு திறன்களுக்கு வழிவகை செய்து கொடுக்கும் திரைத்துறை, ஐ.டி. துறைகளிலும், தற்போதைய செயற்கை தொழில்நுட்பம், டிஜிட்டல்மயமாக்கம் போன்ற நவீனமயமாக்க நடவடிக்கைகளால் வேலைப் பறிப்பு தீவிரமாக நடந்து வருகிறது. அமேசான், வால்மார்ட், ஆப்பிள் என அனைத்து கார்ப்பரேட் நிறுவனங்களும் இதனை மேற்கொள்கின்றன.

இந்த வேலைப்பறிப்பு நடவடிக்கைகளின் உச்சமாக, டிரம்ப் ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே அமெரிக்கப் பாதுகாப்புத் துறையின் தலைமையகமான பெண்டகனிலேயே (Pentagon) 60,000 பேரை ஆட்குறைப்பு செய்தார்.

தனது நாட்டில் நடக்கும் இந்தப் பட்டவர்த்தனமான கொள்ளையை மறைக்க, குடியேறியவர்கள் மீது இனவெறியைக் கிளப்புவது, பின்தங்கிய நாடுகளுக்கு வழங்கிவந்த நிதி உதவிகளை நிறுத்துவது, சொந்த நாட்டு மக்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை தருவதாகக் கூறி, ஐ.டி. சேவைத்துறையில் மேற்கொள்ளப்பட்டுவந்த இந்தியா போன்ற நாடுகளுக்கான “அயலகப் பணிகளுக்கு” (அவுட்சோர்சிங்) தடைவிதிப்பது, வெளிநாட்டில் இருந்து வந்து தங்கி வேலை செய்பவர்களுக்கான விசா தொகையை பல மடங்கு அதிகரிப்பது போன்ற கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

எனினும், டிரம்ப் ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே அவரது சர்வாதிகார பாசிச நடவடிக்கைகளுக்கு எதிரான மக்கள் போராட்டங்கள் அதிகரிக்கத் தொடங்கின. மக்கள் மத்தியில் அவர் மதிப்பிழந்துவிட்டார்.

இவை அனைத்தும் உணர்த்துவதென்னவெனில், அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடி என்பது உலகளாவிய தேக்க வீக்க நெருக்கடியின் அங்கமாக உள்ளது. தற்போது பின்பற்றிவரும் முதலாளித்துவக் கொள்கையைப் பின்பற்றிக்கொண்டே, இந்த நெருக்கடியில் இருந்து மீள முடியாது.

மேலும், அமெரிக்காவில் ஆளும் வர்க்கத்தின் எந்தப் பிரிவாக இருந்தாலும், முதலாளித்துவ நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக மக்களை ஒட்டச் சுரண்டுவது, சரிந்துவரும் உலக மேலாதிக்கத்தை ஈடுகட்ட இராணுவச் செலவினங்களை மேலும் அதிகப்படுத்துவது என்ற போக்கையே தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன.

இந்த உலக மேலாதிக்க நோக்கத்தைக் கைவிடாமல், முதலாளித்துவ நெருக்கடிகளுக்கு மாற்றான – உண்மையான சோசலிசத்தை சாதிக்கும் நோக்கத்திலான திட்டங்களை மேற்கொள்ளாமல், உள்நாட்டில் சீர்திருத்தங்களைச் செய்துவிடலாம், “ஜனநாயகவாத சோசலிச”க் கொள்கைகளை நடைமுறைப்படுத்திவிடலாம் என்று சொல்வதன் மூலமாக, பணக்காரர்களுக்கான கூடுதல் வரிவிதிப்பை, கவர்ச்சிகர முழக்கமாக்கிவிட்டது ஜனநாயகக் கட்சி.

அமெரிக்க ஆளும் வர்க்கங்களுக்குள் சில வேறுபாடுகள் இருந்தாலும், எலான் மஸ்க் போன்ற டிஜிட்டல் மேலாதிக்கக் கும்பல்களின் பட்டவர்த்தனமான சுரண்டலை டிரம்ப் கும்பல் மேற்கொண்டாலும், டிரம்ப்பின் குடியரசுக் கட்சிக்கு எதிரான ஜனநாயகக் கட்சியும் கவர்ச்சிகரத் திட்டங்களை முன்வைப்பதைத் தவிர வேறெதையும் இதுவரை செய்ததில்லை. தற்போது, “ஜனநாயகவாத சோசலிஸ்டுகள்” ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்களாக வெற்றிப் பெற்றாலும், பணக்காரர்களுக்கு வரிவிதிப்பை அதிகப்படுத்தி அதன் மூலம் ஏற்றத்தாழ்வைக் குறைக்கப் போவதாகக் கூறுவதை ஜனநாயகக் கட்சியினரே ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.

தற்போது, மம்தானி தனக்கு துணை மேயராக டீன் ஃபுலைஹான் என்ற வால் ஸ்ட்ரீட் முதலாளிகளுக்கு உற்ற சேவகரை நியமித்துக் கொண்டிருக்கிறார். தனக்கு ஆலோசகர்களாக நியமித்துக்கொண்ட ஐந்து பேரும் கார்ப்பரேட் நிறுவனங்களில் தீவிர சேவை செய்த ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்களாவர். கார்ப்பரேட் ஆதிக்கத்திற்கு குந்தகம் விளையாமல், மம்தானி அவர் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான முயற்சியில் இறங்கியிருப்பதைத்தான் மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகள் உணர்த்துகின்றன. இப்போக்கானது, மிக விரைவில் தோல்வியைத் தழுவும், மம்தானியின் “ஜனநாயகவாத சோசலிசம்” வெற்றுக் கவர்ச்சிகர முழக்கம் என்று மக்கள் உணரும் நிலைமை ஏற்படும் என்று நாம் எதிர்பார்க்கலாம்.

அறிவியல்பூர்வ சோசலிசத்தை முன்னிலைக்கு கொண்டுவருவோம்!

ஆகையால், மம்தானி தன்னை “ஜனநாயகவாத சோசலிஸ்ட்” என்று அழைத்துக் கொள்வதைக் கொண்டோ, அல்லது அவரை “கம்யூனிஸ்ட்” என்று பாசிச டிரம்ப் சாடுவதை வைத்துக் கொண்டோ, மம்தானியின் தேர்தல் வெற்றியையும் அதனைத் தொடர்ந்த அவரது நடவடிக்கைகளையும் மதிப்பிடக் கூடாது.

உண்மையில், தன்னைச் சுற்றி, ஆளும் வர்க்கத்தின் தீவிர சேவகர்களை வைத்துக் கொண்டு, “பணக்காரர்களுக்கு அதிக வரி” போன்ற ஜனரஞ்சகமான (கவர்ச்சிகரமான) முழக்கங்களை சவடாலாக முன்வைத்து, தீவிரமடையும் வர்க்க முரண்பாட்டினால் எழும் மக்கள் கோபத்தைத் தணிக்க மம்தானி முயற்சிக்கிறார். “ஜனநாயகவாத சோசலிசம்” என்ற முழக்கத்தின் போலித்தனத்தை மக்கள் உணர்வதற்கு இது பயன்படுமே அன்றி, முதலாளித்துவ நெருக்கடிக்கும் பாசிச அடக்குமுறைகளுக்கும் எந்தவகையிலும் தீர்வாகிவிடப் போவதில்லை.

எனினும், பலவகை போலி சோசலிசங்கள் அனைத்து வகைகளிலும் அம்பலப்பட்டு நிற்பது, உண்மையான சோசலிச சிந்தனையை மக்கள் அடைவதற்கு ஒரு படிநிலையாக அமைகிறது. எனவே, “ஜனநாயகவாத சோசலிசம்” விவாதப் பொருளாகும் இத்தருணமானது, உண்மையான சோசலிசச் சிந்தனைகளை அரசியல் அரங்கில் முன்னிலைக்குக் கொண்டுவருவதற்கு உகந்ததாகும்.

இச்சூழலில், உண்மையான சோசலிசச் சிந்தனைகளையும் அதனை சாதிப்பதற்கான புரட்சிகரக் கட்சியைக் கட்டும் அவசியத்தையும் மக்கள் மத்தியில் கொண்டு சென்று, மக்களை அணிதிரட்டுவது, சோசலிசத்திற்காகப் போராடும் புரட்சிகர கம்யூனிஸ்டுகளின் கடமையாகும்.


தங்கம்

(புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2025 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க